நாமே வீட்டில் பெரிடோனியல் டயலிசிஸ் செய்துகொள்ளும் போது பின்பற்ற வேண்டிய/தவிர்க்க வேண்டிய (Dos and Don’ts) சில விதிமுறைகள் பற்றி விளக்கமாக அறிவுறுத்தினார்கள். பெரிடோனியல் டயலிசிஸ் தோல்வியடையக் கிருமித்தொற்றே (Peritonitis) முக்கியக் காரணம். எனவே கிருமித்தொற்று ஏற்படாமலிருக்க இவற்றைப் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

1. பெரிடோனியல் டயலிசிஸ் ஆரம்பிக்கு முன் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். நாம் இருமும் போதோ தும்மும் போதோ டயலிசிஸ் இணைப்பு வழியே கிருமி வயிற்றுக்குள் போய்விடும்,

2. ஒவ்வொரு முறையும் கைகளை நன்றாகச் சுத்தமாகக் கழுவி, காய்ந்ததும் கிருமிநாசினி திரவத்தைக் (Sterilizing liquid) கைகளில் நன்றாகத் தடவிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை டயலிசிஸ் இணைப்பைத் தொடுவதற்கு முன் கிருமிநாசினி திரவத்தைக் கையில் நன்றாகத் தேய்த்துக் கொள்ள வேண்டும்.    

3. டயலிசிஸ் செய்யும் அறை மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும். இது மிகவும் முக்கியம். சன்னல்கள் மூடியிருக்க வேண்டும். டயலிசிஸ் செய்யும் போது மின்விசிறியைப் போடக் கூடாது. (டயலிசிஸ் இணைப்பைத் திறந்து மூடும் போது வேகமாகக் காற்று வீசினால் அதன் வழியே கிருமி வயிற்றுக்குள் சென்றுவிடும்). ஏசி பயன்படுத்தலாம்.

4.கதீட்டர் குழாயின் முனைப்பகுதி வயிற்றுக்குள் இருக்கும்                      peritoneal cavity-யில் இருக்கும். அதன் வெளிப்புறமுனை வயிற்றுக்கு வெளியே இருக்கும். அந்த வெளியிடத்தை (Catheter exit site) மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த இடத்தில் சீழ் இருக்கிறதா, சிவந்திருக்கிறதா என்பதைத் தினமும் கவனிக்க வேண்டும். அந்த இடம் சிவந்து வீங்கியிருந்தால் தொற்று ஏற்பட்டிருக்கிறதென்று அர்த்தம்.

5. டயலிசிஸ் கரைசல் பையைத் (PD fluid bag) திறப்பதற்கு முன், அதன் நிறம், முடிவு தேதி, எங்கேனும் ஒழுகுகிறதா என்பதைப் பரிசோதித்த பிறகே பயன்படுத்த வேண்டும்.

6. கரைசலின் நிறம் தெளிவாக இல்லாமல் மங்கலாகவோ கலங்கியோ இருந்தால் அந்தப் பையைப் பயன்படுத்தக் கூடாது. அது (transparent) பிளாஸ்டிக் பை என்பதால் உள்ளேயிருக்கும் கரைசலின் நிறத்தை நாம் தெளிவாகப் பார்க்க முடியும்.

7. வயிற்றிலிருந்து வெளியே வரும் கழிவுடன் கூடிய திரவமும் கலங்கலாக இல்லாமல் தெளிவாக இருக்க வேண்டும். அந்தத் திரவப் பையின் அடியில் ஒரு செய்தித்தாளை வைத்தால் எழுத்துகள் நாம் தெளிவாக வாசிக்கக்கூடிய அளவுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும். அப்படி வாசிக்க முடியாமல் அந்தத் திரவம் கலங்கியிருந்தால் வயிற்றுக்குள் தொற்று ஏற்பட்டிருக்கிறதென்று அர்த்தம். 

8. ஒவ்வொரு முறையும் (exchange) உள்ளே சென்ற திரவ அளவு (volume), வெளியே வந்த திரவ அளவு ஆகியவற்றை ஒரு நோட்டில் பதிவு செய்து வைப்பது நல்லது. பெரிடோனியல் டயலிசிஸ் நமக்கு நன்றாகச்  செயல்படுகிறதா என்பதைக் கணக்கிட மருத்துவருக்கு இது உதவும்.

9. மருத்துவர் சொன்ன அளவுப்படி உணவில் உப்பு, தண்ணீர், பொட்டாசியம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

10. வயிற்றுக்கு வெளியே தொங்கும் குழாய் எதிலும் மாட்டி இழுக்காமல் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

11. மருத்துவர் சொல்லாமல் அவர் பரிந்துரைத்த கரைசலை (dialysis fluid concentration-1.5%, 2.5%, 4.25%,7.5%) நம் இஷ்டத்துக்கு மாற்றக் கூடாது.

12. வயிற்று வலி, நடுக்கத்துடன் கூடிய குளிர்க்காய்ச்சல், வயிற்றின் வெளிப்புற இணைப்பு இடத்தில் (Catheter exit site) சிவப்பு, வீக்கம், வலி அல்லது சீழ், சரியான அளவில் கழிவு நீக்கப்பட்ட திரவம் வெளியேறாமலிருப்பது, திடீரென எடை அதிகரித்தல், முகம்/கால்களில் வீக்கம், மூச்சுத்திணறல், வெளியே வரும் திரவம் (PD fluid) தெளிவாக இல்லாமல் கலங்கலாக இருப்பது ஆகியவை தொற்று ஏற்பட்டதன் (peritonitis) முக்கிய அறிகுறிகள் என்பதால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.  

13. டயலிசிஸ் செய்யும் போது கிருமிநீக்கம் செய்யப்பட்ட சல்லடைத்துணியை மட்டுமே (sterilized gauze) பயன்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் இந்தத் துணியைக் கடையில் வாங்கிப் பயன்படுத்தினோம். ஒவ்வொரு முறையும் துடைக்கவும் சுத்தம் செய்யவும் நிறைய துணி தேவைப்பட்டது. கடையில் இதன் விலை எக்கச்சக்கம் என்பதால் வாங்கிக் கட்டுப்படியாகவில்லை. பிறகு எவர்சில்வரில் கிடைக்கும் பாத்திரத்தை (Stainless Steel Dressing Drum- Surgical Sterilization Container) வாங்கி வீட்டிலேயே பெரிய குக்கருக்குள் நீண்ட நேரம் வைத்து ஸ்டெரிலைஸ் செய்து கொண்டோம். சல்லடைத் துணியைப் பெரிதாக வாங்கி நமக்குத் தேவைப்படும் அளவில் சின்னதாகச் சதுரமாக வெட்டி இந்தப் பாத்திரத்துக்குள் வைத்து ஸ்டெரிலைஸ் செய்து பயன்படுத்தினோம்.

ஏற்கெனவே ஃபிஸ்டுலா, கிராப்ட் வழியே செய்யப்படும் ஹீமோ டயலிசிஸ் எங்களுக்குத் தோல்வியடைந்ததால், இதில் அதிகக் கவனம் எடுத்துக் கொண்டோம். பிரச்சினையில்லாமல் பெரிடோனியல் டயலிசிஸ் சில காலம் தொடர்ந்தது.

மாற்றுச் சிறுநீரகம் கிடைக்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தோம்…

(தொடரும்)

படைப்பாளர்:

ஞா.கலையரசி

புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஸ்டேட்பாங்க் ஆஃப் இந்தியாவில்  வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சென்னையில் வசிக்கிறார். சிறார்களுக்காக இதுவரை 20 நூல்களை எழுதியிருக்கிறார். வானம், பாரதி புத்தகாலயம், நிவேதிதா, தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக நூல்கள் வெளிவந்துள்ளன. வானதி பதிப்பகம் வரலாற்று நாவலை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்க ‘சுட்டி உலகம்’ எனும் வலைத்தளத்தை நடத்துகிறார். ‘பூஞ்சிட்டு’ எனும் குழந்தைகள் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்.