விகாரமகாதேவி பூங்கா (Viharamahadevi Park)

கொழும்பு நகரின் நடுப்பகுதியில், கொழும்பு நகர மன்றக் கட்டிடத்திற்கு (Colombo Town Hall) எதிரே அமைந்துள்ளது விகாரமகாதேவி பூங்கா (Viharamahadevi Park).

கொழும்பு நகரின் பழமையானதும் பெரியதுமான பொது பூங்காக்களில் இதுவும் ஒன்று. பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இப்பூங்கா, முதலில் விக்டோரியா பூங்கா (Victoria Park) என்று அழைக்கப்பட்டது. பின்னர் இலங்கை வரலாற்றில் புகழ்பெற்ற அரசி விகாரமகாதேவியின் பெயர் சூட்டப்பட்டது. கொழும்பு நகர சபையின் தகவலின்படி, இப்பூங்கா இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சீரமைக்கப்பட்டு 1951ஆம் ஆண்டு மீண்டும் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.

விகாரமகாதேவி, அனுராதபுரத்தை ஆண்ட மன்னர் துட்டகாமினியின் (Dutugamunu) தாயார். துட்டகாமினி கி.மு. 2ஆம் நூற்றாண்டில் அனுராதபுரத்தை ஆண்ட முக்கியமான இலங்கை அரசர். அவருக்கும் தமிழ் அரசன் எல்லாளனுக்கும் (King Elara) இடையிலான போர் இலங்கை வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரலாற்றைப் பற்றிய விரிவான செய்திகளை நாம் யாழ்ப்பாணம் பகுதியில் பார்க்கலாம்.

பூங்காவின் நுழைவாயிலில் காணப்படும் தங்க நிற உருவம் அனகாரிக தர்மபாலவின் சிலை ஆகும். இது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பௌத்த மதத்தை உலகளவில் பரப்புவதில் பெரும் பங்காற்றியவர். 

பூங்காவின் நடுப்பகுதியில், முன்பு விக்டோரியா அரசியின் சிலை இருந்த இடத்தில் இப்போது பெரிய புத்தர் சிலை அமைந்துள்ளது. 

பூங்காவினுள் விகாரமகாதேவியின் சிலையும் உள்ளது. நீண்ட நடைபாதைகள், பெரிய மரங்கள், நீரூற்றுகள், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள் போன்றவற்றால் இது குடும்பத்தினருடன் நேரம் செலவிட ஏற்ற அழகான பசுமைப் பகுதியாகத் தோன்றியது. பூங்காவின் குழந்தைகள் பகுதிக்கு தனியான வசதிகளும் உள்ளன. எனது கவனத்தை ஈர்த்த ஒன்று “துவிச்சக்கரப் பாதை” என்ற அழகான தமிழ்ச் சொல். மிதிவண்டிப் பாதை என்பதற்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டிருந்த அந்தச் சொல், பார்த்தவுடன் உள்ளத்தில் பதிந்துவிட்டது.

கொழும்பு கலங்கரை விளக்கம்

விகாரமகாதேவி பூங்காவிலிருந்து வேறொரு இடத்திற்குச் செல்லும் வழியில், கொழும்பின் கடற்கரையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள கொழும்பு கலங்கரை விளக்கத்தையும் (Colombo Lighthouse) பார்க்கச் சென்றோம்.

கொழும்பிலிருந்த பழைய கலங்கரை விளக்கத்தின் ஒளி, நகரம் வளர்ந்தபோது புதிதாக எழுந்த கட்டிடங்களால் மறைக்கப்பட்டதால், புதிய கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. தற்போதைய கலங்கரை விளக்கம் 1952ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதன் உயரம் 29 மீட்டர்; அது 12 மீட்டர் உயரமான அடித்தள மேடையின் மீது அமைந்துள்ளது. அந்த மேடையின் நான்கு மூலைகளிலும் சிங்கச் சிற்பங்கள் உள்ளன. இலங்கையின் முதலாவது பிரதமரான டி. எஸ். சேனநாயக்கா (D. S. Senanayake) இதைத் திறந்து வைத்தார்.

25 பீரங்கி வேட்டுகளின் வரலாறு

இலங்கையின் விடுதலை நாள் பிப்ரவரி 4 அன்று 25 பீரங்கி வேட்டுகள் முழங்கும் மரபு உள்ளது. 1948ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது விடுதலை நாளில் காலி ஃபேஸ் பகுதியில் 15 பீரங்கி வேட்டுகள் முழங்கப்பட்டன. பின்னர் இந்த மரபு கடற்படைக் கப்பல்களுடன் தொடர்ந்தது. அதன் பின்னர் பீரங்கிகள் கொழும்பு துறைமுகத்தின் காலி பக் விரிகுடா (Galle Buck Bay) பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டன. துறைமுக விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு அவை 2000ஆம் ஆண்டில் கலங்கரை விளக்கத்தின் அடிப்பகுதிக்கு மாற்றப்பட்டன.

இந்த பீரங்கிகளின் வரலாற்றில் இன்னொரு நிகழ்வும் உள்ளது. 1952ஆம் ஆண்டு இளவரசி எலிசபெத் இலங்கைக்கு வரவிருந்தார். அவரது வருகைக்காகக் கொண்டு வரப்பட்ட பீரங்கிகள் காலி பக் விரிகுடா பகுதியில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவரது தந்தையான ஆறாம் ஜார்ஜ் மன்னர் (King George VI) திடீரென இறந்ததால் அந்தப் பயணம் நடைபெறவில்லை. பின்னர் மன்னரின் இறுதிச்சடங்கையொட்டி 56 பீரங்கி வேட்டுகள் முழங்கப்பட்டன. 

2000ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையால் வழங்கப்பட்ட மூன்று 52 மி.மீ. பீரங்கிகள் கலங்கரை விளக்கத்தின் அடிப்பகுதியில் நிறுவப்பட்டன. அவை 2020ஆம் ஆண்டு வரை விடுதலை நாள் பீரங்கி முழக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்டன. 2020 பிப்ரவரி 4ஆம் தேதி கூட கலங்கரை விளக்க வளாகத்திலிருந்தே 25 பீரங்கி வேட்டுகள் முழங்கப்பட்டதாக இலங்கை கடற்படையின் பதிவில் உள்ளது. ஆனால் அதன்பிறகு நிலை மாறியது. 

கொழும்பு போர்ட் சிட்டி (Colombo Port City) திட்டத்தின் கீழ் கடலுக்குள் புதிய நிலப்பரப்பு உருவாக்கப்பட்டதால், கலங்கரை விளக்கம் முன்பிருந்தபடி கடலை நேரடியாக எதிர்கொள்ளும் நிலையில் இல்லாமல் போனது. இதனால் 2021ஆம் ஆண்டிலிருந்து விடுதலை நாள் பீரங்கி முழக்கம் கலங்கரை விளக்கத்திலிருந்து நடத்தப்படாமல், கடலில் நிறுத்தப்பட்ட கடற்படைக் கப்பலிலிருந்து நடத்தப்படுகிறது.

எளிமையான ஒரு வரலாற்றுச் சின்னம்

நாங்கள் சென்றபோது அங்குப் பெரிய கூட்டம் எதுவும் இல்லை. ஒரு இளைஞர் மட்டும் காவலுக்காக நின்றுகொண்டிருந்தார். அவ்வப்போது ஓரிருவர் வந்து கலங்கரை விளக்கத்தைப் பார்த்துவிட்டுச் சென்றனர்.

கலங்கரை விளக்கம் அமைந்துள்ள மேடை வரையிலும் நாம் ஏறிச் சென்று பார்க்க முடிந்தது. அருகிலிருந்த ஆமணக்குச் செடி, தொலைவில் தெரிந்த துறைமுகம், இடையில் தெரிந்த கொழும்பு நகரப் பகுதி, இவை அனைத்தையும் ஒரே இடத்திலிருந்து பார்க்க முடிந்தது.

கொழும்பு துறைமுக நகரம் (Port City Colombo)

துறைமுக நகரத்தின் தொடர்ச்சியாக, இன்று கடலுக்குள் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் நவீன நகரப் பகுதியே கொழும்பு துறைமுக நகரம் (Port City Colombo).

அன்று பிற்பகலில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, மாலை வேளையில் நாங்கள் சென்ற இடம் இதுதான். காலி முகத்திலிருந்து (Galle Face) பார்த்தபோது, கடலுக்குள் வெண்ணிறப் பாலத்துடன் புதுமையான ஒரு பகுதி தெரிந்தது. அதுதான் துறைமுக நகரம். கடலிலிருந்து நிலத்தை உருவாக்கி உருவாக்கப்பட்ட இந்தப் புதிய நகரப் பகுதி, பழைய கொழும்பின் தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. கடலின் நீலத்தோற்றத்துக்கிடையில் வெண்ணிறப் பாலமும், அதற்கப்பால் எழுந்து நிற்கும் உயரமான கட்டடங்களும் சேர்ந்து, எதிர்கால நகரம் ஒன்றை நோக்கிப் பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தன.

எங்களை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர், Port City என்று எழுதப்பட்டிருந்த முகப்புப் பகுதியின் அருகில் எங்களை இறக்கிவிட்டுச் சென்றார். அங்கிருந்து உள்ளே செல்ல வேண்டிய வழியைப் பற்றி அப்போது எங்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை. பின்னர்தான், உள்ளே செல்ல Shuttle வண்டி வசதியும் இருப்பதை அறிந்துகொண்டோம். ஆனால், நடந்து செல்வதே சிறந்த அனுபவமாக இருக்கும் என்று தோன்றியது. எனவே முகப்புப் பகுதியிலிருந்து நாங்கள் நடக்கத் தொடங்கினோம். கடலை ஒட்டி, திறந்த வெளியில், மாலை நேரக் காற்றை அனுபவித்தபடி நடந்த அந்த நடை மிகவும் இனிமையாக இருந்தது.

இந்தப் பாலத்தின் அமைப்புதான் எங்களுடைய கவனத்தை முதலில் ஈர்த்தது. பாலத்தின் ஒரு பக்கத்தில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதை அமைந்திருந்தது. அதைத் தாங்கும் பெரிய தூண்கள் மறுபக்கத்தில் அமைந்திருந்தன. வழக்கமாக நாம் காணும் பாலங்களிலிருந்து சற்றே மாறுபட்ட இந்த அமைப்பு, கட்டுமானத் தொழில்நுட்பத்தின் புதிய முயற்சியைப் பார்க்கிறோம் என்ற உணர்வைத் தந்தது.

நடைபாதையின் இருபுறங்களிலும் பெரிய பெரிய தொட்டிகளில் பூஞ்செடிகள் வைத்து அழகுபடுத்தியிருந்தார்கள். கடலின் பின்னணியில் பசுமையான செடிகளும், தொலைவில் உயர்ந்து நிற்கும் நகரக் கட்டடங்களும் சேர்ந்து அந்தப் பாதைக்குத் தனித்துவமான அழகைக் கொடுத்தன.

பறக்கும் பட்டங்கள் நம் கற்பனையையும் பறக்க வைக்கின்றன.

பாலத்தைக் கடந்து மறுபுறம் சென்றபோது, அங்கிருந்த சூழல் இன்னும் உயிர்ப்பாக இருந்தது. உணவகங்கள், சிற்றுண்டி இடங்கள், கடலைச் சார்ந்த விளையாட்டுகள் போன்றவை இருந்ததால், குழந்தைகளுடன் வந்த குடும்பங்களை அதிகமாகக் காண முடிந்தது. மாலை நேரம் என்பதால் அந்தப் பகுதி மெதுவாகக் கூட்டம் பெறத் தொடங்கியிருந்தது. அப்பகுதியைப் பார்த்தபோது, மும்பையின் ஜூஹூ கடற்கரை (Juhu Beach) நினைவிற்கு வந்தது. தூரத்தில் கொழும்பின் உயரமான கட்டடங்கள் தெரிந்தன. 

அங்கிருந்து Shuttle வண்டியைப் பிடித்து முகப்புப் பகுதிக்குத் திரும்பினோம். பின்னர் அங்கிருந்து ஆட்டோ பிடித்து நாங்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றோம்.

அந்த மாலைப் பயணத்தில், கொழும்பின் பழைய வரலாற்றையும் அதன் புதிய முகத்தையும் ஒரே நாளில் பார்த்த அனுபவம் கிடைத்தது. ஒருபுறம் பழைய கலங்கரை விளக்கம், காலி முகம், வரலாற்றுச் சின்னங்கள்; மறுபுறம் கடலுக்குள் புதிதாக உருவாகும் துறைமுக நகரம். கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் கடல் இணைத்துக் கொண்டிருக்கும் நகரமாகக் கொழும்பு அந்த மாலை எங்களுக்குத் தோன்றியது.

***

பயணம் செய்ய விரும்புபவர்களுக்கான குறிப்புகள்

கொழும்பில் நாங்கள் தங்கியிருந்தது ஒன்றரை நாள்தான். இப்போது திரும்பிப் பார்த்தால், கொஞ்சம் திட்டமிட்டு வேகமாகச் சென்றிருந்தால் இன்னும் சில இடங்களைப் பார்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. குறிப்பாகப் போக்குவரத்து முறையை முதலிலேயே தெரிந்து கொண்டிருந்தால், எங்களுடைய நேரமும் செலவும் இன்னும் குறைந்திருக்கலாம்.

கொழும்பில் PickMe என்ற செயலி (App) மூலம் ஆட்டோ எளிதாகப் பிடிக்கலாம். ஆனால் அங்கு ஒரு முக்கியமான வசதி இருக்கிறது. நகரத்தில் மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோக்களும் நிறைய ஓடுகின்றன. அவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினால் ஒவ்வொரு முறையும் செயலி மூலம் வண்டி அழைக்க வேண்டியதில்லை.

எங்கள் பயணம் முடியும் நேரத்தில்தான் இன்னொரு நடைமுறை எங்களுக்குத் தெரிய வந்தது. பொதுவாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை கொடுத்தால் பல ஆட்டோக்காரர்கள் வர ஆயத்தமாக இருந்தார்கள். இதை முதலிலேயே தெரிந்து வைத்திருந்தால், இன்னும் சில இடங்களுக்குச் சென்றிருக்கலாம்.

இருவருக்கான செலவு

கொழும்பில் இருவர் இரண்டு நாட்கள் சுற்றிப் பார்த்ததற்கான எங்களுடைய செலவை நினைவில் வைத்துக் கொண்டு கணக்கிட்டால், ஏறக்குறைய இந்திய மதிப்பில் ரூ.40,000 முதல் ரூ.45,000 வரை வந்தது. 

காலையில் பலவிதமான சிற்றுண்டிகள் கிடைக்கும். இரண்டு வகை வடை, சுசியம், கொழுக்கட்டை, ரோல், சமோசா, முட்டை ரொட்டி என்று பல பொருட்கள் விற்கப்படுகின்றன. ஒவ்வொன்றிலும் ஆளுக்கொன்று வாங்கிக் கொண்டு பயணத்தைத் தொடர்வோம். எங்களுக்கான காலை உணவு பெரும்பாலும் ரூ.200க்குள் முடிந்துவிடும்.

வழியில் இளநீர் கிடைத்தால் ஒன்றை வாங்கிக் குடிப்போம். ஒரு இளநீர் சுமார் ரூ.200. தண்ணீரைக் குடித்துவிட்டு, தேங்காயை வீணாக்காமல் ஒரு Ziplock பையில் வைத்துக் கொள்வோம். பசி எடுக்கும்போது அதைச் சாப்பிடுவோம்.

இட்லி, தோசை போன்ற உணவு எடுத்துக் கொண்டால் ஒருவருக்கு ரூ.300 ஆகும். இரவு நேரங்களில் சில முறை சாப்பிட்டிருக்கிறோம். மதிய சைவ உணவு ஒருவருக்கு ரூ.400 என்ற அளவில் கிடைத்தது. ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.100.

இப்படி தண்ணீர், இளநீர், காலைச் சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு என எல்லாவற்றையும் சேர்த்தாலும், எங்களுடைய இரண்டு நாள் உணவுச் செலவு இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,000க்குள் வைத்துக் கொள்ள முடிந்தது. பெரிய உணவகத்திற்குச் சென்றால் நிலை வேறு. அங்கு ஒருவருக்கு ஒரு வேளை உணவுக்கே 1,600 முதல் 2,000 இலங்கை ரூபாய் வரை செலவாகலாம். 

சில இடங்களில் கழிவறையைப் பயன்படுத்துவதற்குப் பணம் கேட்கிறார்கள். பொதுவாக ரூ.20 முதல் ரூ.50 வரை இருக்கலாம். ஆகவே சிறிய நோட்டுகளாகவும் சில்லறையாகவும் பணம் வைத்திருப்பது வசதியாக இருக்கும்.

நாங்கள் மிகவும் அடிப்படைத் தேவையான பொருட்களை மட்டும் எடுத்துச் சென்றோம். ஆளுக்கொரு கைப்பை தான். அதனால் எந்த வாகனத்திலும் செல்லலாம். துணி காய வைப்பதற்கென அமைப்பு எல்லா அறைகளிலும் இருக்கிறது. தேவையென்றால் துவைத்து உடுத்திக் கொள்ளலாம். 

இலங்கை செல்ல மொழி தடையா?

வெளிநாடு செல்ல வேண்டும் என்ற கனவு இருப்பவர்களுக்கு இலங்கை ஒரு எளிதான தொடக்கப் பயணமாக இருக்கலாம் என்று எங்களுடைய அனுபவம் உணர்த்தியது. விசா தொடர்பான பெரிய அலைச்சல் இல்லாமல் பயணம் செய்ய முடிவது ஒரு வசதி. அதைவிடச் சிறப்பு, பல இடங்களில் தமிழ் மொழியிலேயே சமாளிக்க முடிகிறது. தமிழும் ஆங்கிலமும் தெரியாத ஒருவரைச் சந்தித்தாலும் கூட, அருகில் தமிழ் தெரிந்த ஒருவரை அழைத்து வந்து பேச வைக்கும் அளவிற்கு மக்கள் உதவியாக இருந்தார்கள். 

பெண்கள் மட்டும் பயணம் செய்யலாமா?

எங்களுடைய அனுபவத்தில் கொழும்பு பாதுகாப்பான நகரமாகவே தோன்றியது. பொதுவான பயணங்களில் கடைப்பிடிக்க வேண்டிய எச்சரிக்கைகளைப் பின்பற்றி, பெண்கள் மட்டும் சேர்ந்தும் கொழும்புக்குப் பயணம் செய்யலாம்.

வெளிநாடு செல்ல வேண்டும் என்ற கனவு இருக்கிறதா?

விசா பற்றிய பெரிய அலைச்சல் இல்லாமல், தமிழ் பேசிக்கொண்டே, எளிய செலவில் ஒரு புதிய நாட்டைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? 

அப்படியானால்…

என்ன, நீங்களும் புறப்பட்டுவிட்டீர்களா?

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா ? – 1, 2 & 3’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கின்றன. இவை தவிர ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’, ‘நகர்தல் என்றும் நன்று’, ‘கேட்டல் என்றும் நன்று’, ‘ஒரு தாய் மக்கள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து இந்து தமிழ் திசை உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதிவருகிறார். இவரது நூல்கள் கவிதை உறவு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளன. ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.