கஜா கேட்ட கேள்விக்கான பதிலை அவளால் உடனடியாகச் சொல்ல இயலவில்லை. பொருத்தமான பதிலைப் புனையச் சிறிது அவகாசம் தேவைப்பட்டது. 

அவனைத் திசைதிருப்ப, “ஆமாம்… நீ என்ன இந்த நேரத்திலே இங்க வந்திருக்க?” என வாயில் வந்ததைக் கேட்டுவைத்தாள் அமுதா.

“நான் உன்னைக் கேள்வி கேட்டா, நீயென்ன என்னைக் குறுக்கு விசாரணை செய்ற? கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல மாட்டியா?”

“சரி… சரி… கோவிச்சுக்காத. ரஞ்சனா அக்கா, அவங்க ஆஃபிஸுக்கு என்னை நேர்ல வரச் சொன்னாங்க. இங்கதானே இருக்கு? அதான் வந்தேன்.”

“பெரிய அக்காவாம் அக்கா! ஹேய்… அவங்ககிட்டெல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருன்னு உங்கிட்ட நேத்தே சொன்னேன்ல? திரும்பவும் இங்கே வந்து நிக்கிறியே!”

“இல்லல்ல… இதுதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட். இனிமேல் வர மாட்டேன். வீடியோலாம் எப்படிப் போடணும், எப்படி அப்லோட் பண்ணா மக்கள்கிட்ட அதிகமா ரீச் ஆகும்னு நேர்ல சொல்லித்தர்றேன்னு சொன்னாங்க. அதனாலதான்.”

“பேப்பர்ல வேற கையெழுத்து ஏதாவது போட்டியா?”

என்னதான் சமாளித்தாலும், இப்படி விடாக்கொண்டனாகக் கேள்வி கேட்பவன், உண்மையைச் சொன்னால் அவளை லேசில் விடமாட்டான் என்பதை உணர்ந்து, “ஐயோ, இல்ல… அதெல்லாம் நான் செய்வேனா?” என்று கேட்டுவிட்டு, “ஆமாம், நீ என்ன இந்த நேரத்துல இங்க வந்திருக்க?” என்று கேட்டாள்.

“இதுதான் நான் ரெகுலரா வேலைக்கு வர டைம்.”

“ஓ.”

“அது சரி, மூஞ்சி எல்லாம் ஏன் இவ்வளவு டல்லா இருக்கு? லஞ்ச் சாப்பிட்டியா, இல்லையா?”

“சாப்பாடு சாப்பிடல. அவங்க ஆபிஸ்ல சமோசாவும் டீயும் கொடுத்தாங்க. அவ்ளவுதான்.”

“கஞ்சப் பிசினாரிங்க, கொள்ளை அடிக்கற துட்டுல ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல இருந்தே லஞ்ச் வரவழைக்கலாம்.”

“பரவால்ல, விடு, இதையாவது வாங்கிக் கொடுத்தாங்களே!”

“அங்க, பார்ல பார்ட்டின்னு கும்பல் கூடுற அன்னைக்கு வந்து பாரு, சரக்கோட சேர்ந்து என்னலாம் ஆர்டர் பண்ணிக் கொட்டிக்குவாங்கன்னு. அன்னைக்கு அங்க வேலை செய்யறவன் பாடு அதோகதிதான்.”

“பணம் இருக்கு, அனுபவிக்கறாங்க.”

“பொய்ப் பித்தலாட்டம் செஞ்சு. எத்தன பேர் வயித்துல அடிச்சு சம்பாதிக்கறாங்கன்னு உனக்குச் சொன்னா புரியாது. உங்கிட்ட வாங்கற வட்டியே எடுத்துக்க, கொஞ்சமா நஞ்சமா? இதுல லேட் ஆனா வட்டிக்கு வட்டி போட்டு உசுரையே எடுத்துவானுங்க, இன்னும் என்னென்ன ஃப்ராடுத்தனமெல்லாம் பண்றானுங்களோ, யாருக்குத் தெரியும்?”

“ரொம்ப யோசிக்காத. தேவைக்குத்தான வாங்கி இருக்கேன்? லேட் ஆகாம திருப்பிக் குடுத்துடலாம். அதுக்கப்பறம் அவங்க யாரோ, நாம யாரோ, விடு.”

“உனகெல்லாம் பட்டாதான் புத்தி வரும். சரி, வா… சாப்பிட ஏதாவது வாங்கித் தர்றேன்” என்று சொல்லி, அவளை அருகிலிருந்த ரோட்டுக் கடைக்கு அழைத்துச் சென்று சால்னாவுடன் பரோட்டாவும் தேநீரும் வாங்கிக் கொடுத்தான். ருசித்து, வயிறார உண்டாள்.

‘தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாருமே ஏதோ ஒரு விதத்தில் தன் நலனில் அக்கறை கொண்டிருக்கிறார்கள். ஆனால், தான்தான் யாருக்குமே உண்மையானவளாக இல்லை’ என்கிற குற்றவுணர்வு அவளைக் குத்திக் கிழிக்காமல் இல்லை. இருந்தாலும், எதிர்காலத்தில் வெற்றிபெற்று சாதித்த பிறகு, தன்னைச் சுற்றியிருக்கும் அனைவருக்கும் தன்னாலான நன்மையைச் செய்ய வேண்டும் என்று மனதார எண்ணினாள்.

சாப்பிட்டு முடித்ததும், அவனே அவளை மீண்டும் பேருந்து நிறுத்தத்துக்கு அழைத்துவந்தான். அவள் பேருந்தில் ஏறும் வரை அருகிலேயே நின்றிருந்தான். ஏறியதும், அவனை நோக்கிக் கையசைத்துவிட்டு பேருந்துக்குள் சென்று அமர்ந்தாள்.

வீடு வந்ததும், ‘அடுத்து என்ன?’ என்ற கேள்வி மீண்டும் மீண்டும் அவளது மனதிற்குள் உருளத் தொடங்கியது.

*

“ஒரே நாள்ல ஐம்பதாயிரம் ஷார்ட்ஸ் வியூஸ் ஏத்தினா, உன் சேனலுக்கு ஏதாவது பிரச்னை வரலாம். அதனால கொஞ்சம் கொஞ்சமா ஏத்திக்கலாம்” என்று ரஞ்சனா சொல்லியிருந்தாள்.

அவள் சொன்னதை வைத்து, அந்த ஐம்பதாயிரம் வியூஸை எட்டுவதற்கு ஒரு வாரம் ஆகலாம் என்று இவள் நினைத்திருந்தாள். ஆனால் பத்து நாள்கள் எடுத்துக்கொண்டனர்.

அதுமட்டுமல்லாமல், புதிதாக நிறையபேர் சேனலை சப்ஸ்கிரைப் செய்திருந்தார்கள். சிறு சிறு கமெண்டுகளும் வரத் தொடங்கின.

சில கமெண்டுகள் அவளைப் பாராட்டியிருந்தாலும், சில கமெண்டுகள் அவளை மட்டம்தட்டவும் செய்திருந்தன. குறிப்பாக அவளின் நிறத்தையும் ஒப்பனையையும் கிண்டல் செய்திருந்தனர். “அரைச்ச மாவையே அரைக்கிறியே… இதெல்லாம் உனக்குத் தேவையா?” என்றனர்.

பரவாயில்லை என்று மென்று விழுங்கி, அவற்றையெல்லாம் கடந்து போக முயன்றாள். சமயத்தில் சலித்துப்போய், “அக்கா, என்னக்கா… பெருசா எந்தச் சேஞ்சஸும் இல்ல… அப்படியே இருக்கு” என்று போன் செய்து ரஞ்சனாவிடம் புலம்புவாள்.

“அதுக்குள்ள டவுனாகாத. இங்க கன்சிஸ்டன்ஸிதான் ரொம்ப முக்கியம். அதனால மனம் தளராம டெய்லி வீடியோஸ் போடு. ஒரு நாளைக்கு ரெண்டு, மூணு வீடியோஸ் அப்லோட் பண்ணாலும் தப்பில்லை” என்று ரஞ்சனா சொல்வாள்.

அவளும் அதைக் கேட்டு மீண்டும் மீண்டும் வீடியோக்களைப் பதிவேற்றுவாள். ஆயிரம், இரண்டாயிரம் என்று மட்டுமே வியூஸ் போகும். மீண்டும் மனம் சோர்ந்து, ரஞ்சனாவுக்கு அழைப்பாள்.

ஒரு முறை, “ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டுட்டுத் திரும்பத் திரும்ப ரீல்ஸ் பண்ணினா, யாரும் பெருசா பார்க்க மாட்டாங்க. ஸ்க்ரோல் பண்ணிட்டுப் போயிடுவாங்க. அதனால புதுசு புதுசா ட்ரெஸ் போட்டு ட்ரை பண்ணு” என்றாள் ரஞ்சனா.

“ஐயோக்கா… அதுக்குக் காசுக்கு நான் எங்கே போவேன்?” என்று பதறினாள்.

“ஆன்லைன்ல கம்மி ரேட்டுல டிரெஸ்லாம் கிடைக்குது. பாக்கவும் நல்லா பளபளன்னு இருக்கும். அதை ஆர்டர் பண்ணி வாங்கி, ஒரு தடவை யூஸ் பண்ணு. அதுக்கப்புறம் ரிட்டர்ன் பண்ணிடு. இதே மாதிரி ஒரே வெப்சைட்ல வாங்காம, மாத்தி மாத்தி ட்ரை பண்ணு. உனக்கு ஓரளவுக்குக் கட்டுப்படியாகும்” என்று ஒரு தந்திரத்தையே ரஞ்சனா அவளுக்குச் சொல்லிக் கொடுத்தாள்.

அவள் சொன்னதை வேத வாக்காக ஏற்று, அதைத் தட்டாமல் செய்தாள் அமுதா. பார்க்கத்தான் அந்த உடைகள் பளபளப்பாக இருக்குமே தவிர, அணிந்தால் கொஞ்சம்கூட வசதியாக இருக்காது. ஆனாலும், காணொளிக்கு அவை நன்றாகவே இருக்கும்.

அப்படிப்பட்ட உடைகளை வாங்கி, ஒருமுறை அணிந்து இரண்டு, மூன்று காணொளிகளையும் எடுத்துவிடுவாள். காணொளியைப் பதிவு செய்து முடித்ததும் உடையை உடனே கழற்றி, முடிந்தவரை பயன்படுத்திய தடயம் தெரியாதபடி பார்த்துக்கொள்வாள். சில நேரம் வியர்வையில் நனைந்திருந்தால், நிழலில் காயவைத்து, அழுத்தமாக மடித்து, மீண்டும் ரிட்டர்ன் செய்துவிடுவாள்.

அப்படிச் செய்வது தவறு என்பது அவளுக்குத் தெரியாமலில்லை. ஒவ்வொரு முறையும் ‘இதுதான் கடைசி’ என்று மனதுக்குள் சொல்லிக்கொள்வாள். ஆனால், அடுத்த வீடியோவுக்குப் புதுத் துணி தேவைப்படும்போது, அந்தக் குற்றவுணர்வை மீண்டும் விழுங்கிவிடுவாள்.

நாள்கள் வாரங்களாகி, இரண்டு மாதங்களும் கடந்திருக்கும் நிலையில், அவளுடைய சேனலுக்கு ஒன்றரை லட்சம் வியூஸ் வந்திருந்தது.

இருந்தாலும், மானிட்டைஸ் ஆவதற்கு அது போதுமானதாக இல்லை. மனம் மீண்டும் முரண்டு பிடிக்கத் தொடங்க, அவள் மறுபடியும் ரஞ்சனாவுக்கு அழைத்தாள். இந்த முறை, ரஞ்சனா அவளுக்கு வேறோர் அறிவுரையை வழங்கினாள்.

“ஷார்ட் வீடியோஸ் ஒரு வேள கிளிக் ஆகலன்னா, லாங் வீடியோஸ் ட்ரை பண்ணிப் பாரேன். அதுல ஓரளவுக்கு வாட்ச் டைம் கிடைக்கும். உன் சேனல் மானிட்டைஸ் ஆக வாய்ப்பு இருக்கு” என்றாள்.

“எப்படிக்கா? நீங்க சொல்ற மாதிரியே என்னால பெரிய வீடியோஸ்லாம் போட முடியுமா?” என்று நம்பிக்கையின்றிக் கேட்டாள்.

“அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல” என்று சொன்ன ரஞ்சனா, சில காணொளிகளை மாதிரிக்காக அவளுக்கு அனுப்பிவிட்டாள்.

அவற்றைப் பார்த்ததும், “இதே போல நானும் செய்யலாமா?” என்று அவள் கேட்க, ரஞ்சனாவும் அதற்கு வழிகாட்டினாள். அதன்பிறகு, அவளும் அதுபோல செய்யத் தொடங்கினாள்.

காலையில் கண் விழித்தது முதல், பல் துலக்குவதில் தொடங்கி, அக்கா கடைக்குப் போய்ச் சிற்றுண்டி வாங்கி வருவது, டீயைச் சுடவைத்து குடிப்பது, துணி துவைப்பது என அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் காணொளியாகப் பதிவுசெய்யத் தொடங்கினாள். அதோடு, வாங்கும் உடைகளைப் பிரிக்கும்போது ‘அன்பாக்சிங் வீடியோ’ என அவற்றையும் உபயோகித்தாள்.

பிறகு, கடைக்கு வேலைக்குச் செல்லும் சமயங்களில் அங்கிருந்தபடியே அன்றைய நிகழ்வுகளை ஒரு கதையைப் போல மக்களிடம் சொல்லத் தொடங்கினாள்.

‘பிளூப்பர்ஸ்’ என வீடியோ எடுக்கும்போது தவறிப்போன காட்சிகளையும் விட்டுவைக்காமல் அவற்றையும் பதிவேற்றம் செய்தாள்.

இப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய நீண்ட காணொளிகளுக்குச் சற்றே நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. அப்படி அடுத்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவளுக்கு நான்காயிரம் மணி நேரப் பார்வை நேரம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, அவளுடைய சேனலும் மானிடைஸ் ஆனது.

“அப்பாடா…” என்று நிம்மதியாக மூச்சுவிட்டாலும், முழுமையான நிம்மதி மட்டும் அவளுக்குக் கிடைக்கவில்லை. வருவாய் மிக மிகக் குறைவாகவே இருந்தது. ஒரு நாளைக்குப் பூஜ்யம் புள்ளி இரண்டு அல்லது மூன்று டாலர்கள் மட்டுமே வருவாயாகக் கிடைத்தது.

ஏற்கெனவே கடையில் கிடைக்கும் ஆறாயிரம் ரூபாய் சம்பளத்தில், ஐந்தாயிரம் ரூபாயைத் தங்கராஜுக்கான மாதத் தவணையாகக் கொடுத்துவிடுகிறாள். மேற்கொண்டு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயை கஜாதான் கொடுத்து உதவுகிறான். ‘பிறகு அவனுக்குத் திருப்பிக் கொடுத்துவிடலாம்’ என்று நினைத்ததால், அதைப் பெரிதாக அவள் பொருட்படுத்தவில்லை.

ஆனால், இப்படியே போனால் பிழைக்க முடியாது என்று தோன்றியதும், மீண்டும் ரஞ்சனாவிடமே வந்து நின்றாள்.

“இவ்வளவு செஞ்சும் பெருசா இன்கம் வரலன்னா, கடைசியா ஒரே ஒரு வழிதான் இருக்கு” என்று சொன்னாள் ரஞ்சனா.

“அது என்னன்னு சொல்லுங்கக்கா”

“அதுதான் அட்டென்ஷன் சீக்கிங்… நெகட்டிவ் பப்ளிசிட்டி.”

“அப்படின்னா?”

“இப்ப யாருமே பெருசா உன்னைக் கண்டுக்கல இல்ல?”

“ஆமாம்.”

“அப்ப மத்தவங்க கவனத்த உன் பக்கம் எப்படித் திருப்புவ?”

“அதான் தெரியலியே.”

“இப்படி ஒரே மாதிரி செய்யாம, கசமுசான்னு எதையாவது செஞ்சு நம்மளைக் கவனிக்க வைக்கிறது. அதுதான் அட்டென்ஷன் சீக்கிங்.”

“ஐயையோ… கசமுசான்னா, கம்மியா ட்ரெஸ் போட்டுட்டு சில பேர் டான்ஸ் பண்றாங்களே, அப்படியா?”

“இதுல என்ன ஐயையோ… டிஸ்கோ மணி இப்படிச் செய்ய ஆரம்பிச்ச பிறகுதான், சில்வர் பிளே பட்டன், கோல்டன் பிளே பட்டன் எல்லாம் அவளுக்குக் கிடைச்சது. இப்ப ஆடி காரே வாங்கியிருக்கா.”

“வேணாம்க்கா, வேற ஐடியா இருந்தா சொல்லுங்க.”

“அப்ப, யாரையாவது டார்கெட் பண்ணி, அவங்கள அசிங்கமா பேசி, வம்புக்கு இழுத்து வீடியோ போடு.”

“புரியல, அசிங்கமான்னா?”

“அதுக்கு ஓ, ஊன்னு தொடங்கற வார்த்தைகள் வெச்சு சோசியல் மீடியால பெரிய அகராதியே இருக்கு. எக்ஸாம்பிளா… லேடிஸா இருந்தா, தே**யா, ஆம்பளையா இருந்தா… கூட மகன்னு சேர்த்துக்கணும்” என ரஞ்சனா சொல்ல, உடல் கூசிப் போனது.

“ஐயோ, இதெல்லாம் சகஜமா பலரும் பேசறாங்கதான்க்கா… ஆனா ஒரு பொதுவெளியில இப்படிப் பேசினா தப்பில்லையா? பதிலுக்கு அவங்களும் செய்வாங்கல்ல?”

“ஆமாம், செய்வாங்கதான். அதுதான் நமக்கும் தேவ. இது ரெண்டு பேருக்குமே பிரொமோஷன் மாதிரிதான். ரெண்டு பேருமா பேசி வெச்சுக்கிட்டேகூடச் செய்யலாம், இங்க எதுவும் தப்பில்ல. ஏன், வேணும்னா டிஸ்கோ மணிகிட்ட கூட பேசிட்டுச் சொல்றேன். அவளே சிறப்பா ஆரம்பிச்சு வெப்பா…” என்றாள் ரஞ்சனா பெருமை பொங்க.

இந்த டிஸ்கோ மணி எனும் மணிமேகலைக்கும், ‘ட்ரோல் மெட்டீரியல்’ எனப் பெயர்பெற்ற ஸ்டீல் குமரனுக்கும், ரஞ்சனா சொல்வது போன்ற ஓர் ஆபாச சமூக வலைத்தளச் சண்டைதான் ஏற்கனவே கொடிகட்டிப் பறக்கிறதே! அதை நினைக்கும்போதே குமட்டிக்கொண்டு வந்தது அமுதாவுக்கு. 

(தொடரும்)

படைப்பாளர்

எழுத்தாளர் கிருஷ்ணப்பிரியா நாராயணன். தமிழ் நாவலாசிரியர் மற்றும் பதிப்பாளர். சென்னையில் வசிக்கிறார். சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவரது பதினாறு நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. ஹெர் ஸ்டோரிஸ் வலைதளத்தில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறாருக்கும்
நூல்களும் எழுதி வருகிறார்.