ஆறு மாதங்கழித்துச் காசநோய்க்கான சிகிச்சை முடிந்தவுடன் மீண்டும் சில மருத்துவச் சோதனைகளைச் செய்துவிட்டுச் சிறுநீரகக் காத்திருப்புப் பட்டியலில் இவர் பெயரை ‘ஆக்டிவ்’ என மாற்றினர். ‘அப்பாடா! மாற்றுச் சிறுநீரகம் கிடைக்கும் வரை ஏவி கிராப்ட் வேலை செய்துவிட்டால் போதும்’ என்று கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள் அடுத்த  பிரச்சினை ஆரம்பித்தது.

அப்போது ஏ.வி.கிராப்ட் மூலம் டயலிசிஸ் தொடங்கி ஏழு மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தது. ஒரு நாள் மதியம் டயலிசிஸ் செய்யத் தேவையான ரத்தம் (Blood flow) கிராப்ஃட் மூலம் வராததால் டயலிசிஸ் செய்ய முடியவில்லை என்று புதுவை மருத்துவமனையில் கைவிரித்துவிட்டார்கள். கிராஃப்ட் வேலை செய்யாமல் போகப் பல காரணங்கள் உண்டென்று முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்ததால் விதியை நொந்து கொண்டு உடனே சென்னைக்குச் சென்று கிராஃப்ட் அறுவை சிகிச்சை செய்த சர்ஜனைச் சந்தித்தோம்.

கிராப்ஃடில் ரத்தக் கட்டி உருவாகி, ரத்த ஓட்டத்தைத் தடை செய்திருக்கலாமென்று சொன்னவர், மறுநாள் அடைப்பை நீக்கும் முயற்சியில் இறங்கினார். கிராஃப்டிலுள்ள அடைப்பை நீக்கி மீண்டும் குழாயில் ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும் சிகிச்சைக்கு Graft Embolectomy என்று பெயர்.

“அடைப்பை நீக்கிவிட்டேன்; இப்போது ரத்த ஓட்டம் நன்றாகயிருக்கிறது; டயலிசிஸ் செய்வதில் இனிமேல் பிரச்னையில்லை” என்று அவர் அறுவை சிகிச்சை முடிந்து சொன்னபோது, “அப்பாடா! நிம்மதி. இனிப் பிரச்சினையில்லை” என்று மகிழ்ந்தோம். ஆனால் அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. அன்று மாலையே டயலிசிஸ் செய்ய முடியாமல் மீண்டும் கிராஃப்ட்டில் அடைப்பேற்பட்டது.  

அடுத்த நாள் அவர் மீண்டும் அதே அடைப்பு நீக்கும் சிகிச்சையைச் செய்தார். அன்று மாலை மீண்டும் அடைத்துக் கொண்டு டயலிசிஸ் செய்ய முடியவில்லை. இனி அந்த கிராப்ஃட் மூலம் டயலிசிஸ் செய்ய முடியாதென்று தெரிந்துவிட்டது.

“இன்னொரு கையில் புதிதாகக் கிராப்ஃட் அறுவை சிகிச்சை செய்யலாமா? அதிலும் ரத்தம் கட்டியாகி அடைப்பேற்பட்டால் என்ன செய்வது?” என்று சர்ஜனும், நாங்கள் வழக்கமாகப் பார்க்கும் மருத்துவரும் வெகுநேரம் கலந்தாலோசித்தனர். முடிவில், “இவருடைய ரத்தத்தில் எளிதில் உறைந்து கட்டியாகும் தன்மை இருப்பதால் இனிமேல் ஹீமோடயலிசிஸ் வேண்டாம்; பெரிடோனியல் டயலிசிஸ் (CAPD – Continuous Ambulatory Peritoneal Dialysis) ஆரம்பிக்கலாம்” என்றனர். ஏவி ஃபிஸ்டுலா, ஏவி கிராஃப்ட் இரண்டும் செயலிழந்து மூன்றாவதாகப் பெரிடோனியல் டயலிசிஸ் நோக்கி நகர்ந்தோம்.   

நம் வயிற்றில் இயற்கையாகவே அமைந்துள்ள பெரிட்டோனியம் (peritoneum) என்கிற மெல்லிய சவ்வை வடிகட்டியாகப் பயன்படுத்தி ரத்தத்தில் உள்ள கழிவுகளையும் அதிகப்படியான நீரையும் வெளியேற்றும் முறைக்குப் பெரிடோனியல் டயலிசிஸ் என்று பெயர். இதில் மெஷின் மூலம் செய்வது, நாமே செய்வது என இரு வழிகளுண்டு.   

இரவில் ஒரு தானியங்கி மெஷின் டயலிசிஸ் கரைசலைத் தானாகவே உள்ளே செலுத்திக் கழிவை வெளியேற்றும் முறைக்கு APD (Automated Peritoneal Dialysis) என்று பெயர். இரவில் நாம் தூங்க ஆரம்பிக்கும்போது மெஷினுடன் இணைத்துக் கொண்டால், காலையில் விழிக்கும் போது டயலிசிஸ் முடிந்துவிடும். இரவில் தூக்கத்தின் போதே டயலிசிஸ் நடந்து முடிந்துவிடுவதால் நேரம் மிச்சம். பகலில் செய்யத் தேவையில்லை. அப்போது இந்த மெஷினின் விலை ஒரு லட்சத்துக்கு மேலிருந்தது. நடுத்தரக் குடும்பத்துக்குக் கட்டுப்படியாகாத விலை.

நாமே டயலிசிஸ் கரைசலை உள்ளே அனுப்பிச் செய்யும் இன்னொரு முறைக்கு CAPD என்று பெயர். இதற்கு மெஷின் வாங்க வேண்டாம். ஆனால், இதைத் தொடங்குவதற்கு முன் அடிவயிற்றில் ஒரு கதீட்டரை வைத்துச் செய்யும் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. இவர் வயிற்றில் துளை போட்டு அதன் வழியே ஒரு மென்மையான குழாயை அடிவயிற்றில் (peritoneal cavity) வைக்கும் அறுவை சிகிச்சை நடந்தது.

அந்தக் குழாயின் முனைப்பகுதி வயிற்றுக்குள் இருக்கும். அதன் வெளிப்புற முனை வயிற்றை ஒட்டி வெளியே தொங்கும். அந்த வெளிப்புற முனையில்தான் டயலிசிஸ் குழாய் (PD dialysis tubing) இணைக்கப்பட்டு அதன் வழியே சுத்தமான கரைசல் உள்ளே அனுப்பப்படுவதும், கழிவுடன் கூடிய அசுத்தக்கரைசல் வெளியே எடுக்கப்படுவதும் நடக்கும்.

அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்கள் ஆன பிறகு கதீட்டர் வழியே பெரிடோனியல் டயலிசிஸ் செய்ய ஆரம்பித்தனர். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு நாமே வீட்டில் எப்படி பெரிடோனியல் டயலிசிஸ் செய்து கொள்வதென்று ஒரு வாரம் பயிற்சி கொடுத்தனர். ஹீமோடயலிஸ் செய்யும் போது ரத்தம் உடலுக்கு வெளியே மெஷின் மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. ஆனால் பெரிடோனியல் டயலிசிஸில் நம் வயிற்றுக்குள் இருக்கும் பெரிடோனியம் ஜவ்வே (Peritoneum Membrane) வடிகட்டியாகச் செயல்பட்டுக் கழிவை நீக்குகிறது.

ஹீமோடயலிசிஸ் வாரம் மூன்று முறையென்றால், இது தினமும் மூன்று வேளை செய்ய வேண்டிவந்தது. ஒரு தடவைக்கு (அதை Exchange என்பர்) 40 நிமிடமாகும். காலை 7, மதியம் 2, இரவு 9 மணி என நேரத்தை அமைத்துக் கொண்டதால் முன்பு போல வங்கிப் பணி நேரத்தில் பிரச்னையேதும் ஏற்படவில்லை. மதியச் சாப்பாட்டு வேளையின் போது இரண்டாவது டயலிசிஸ் செய்து கொள்ள முடிந்தது.

இவருக்குக் கரைசல் (PD Fluid) பகலில் இரண்டு வேளை Baxter DIANEAL- 2.5% என்றும் இரவில் ஒரு முறை EXTRANEAL-7.5% என்றும் எழுதிக் கொடுத்தார் மருத்துவர். அக்காலத்தில் ஹீமோவுக்கு மாதம் 24,000 ரூபாய் என்றால் இந்தக் கரைசல் பைகளை வாங்க மாதம் 40,000 ரூபாய் செலவானது. இது ஹீமோவைவிட அதிகச் செலவு பிடிக்கும் முறை.

பாக்ஸ்டர் கம்பெனியில் மாதா மாதம் தேவைப்படும் கரைசல் பைகளை மொத்தமாக ஆர்டர் செய்து வாங்கி வைத்துக் கொண்டோம். ஹீமோ போல பெரிடோனியல் டயலிசிஸ் ஒவ்வொரு முறையும் ஊசி குத்தி ரத்தத்தில் செய்யப்படும் முறையில்லையென்பதால் வலியோ வேதனையோ ஏற்படவில்லை என்பது சிறு ஆறுதல்.

வயிற்றுக்குள் தொற்று (peritonitis) ஏற்படாமலிருக்கச் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை (Dos and Don’ts) பற்றி விளக்கமாக அறிவுறுத்தினார்கள். அவை அடுத்த கட்டுரையில்…

(தொடரும்)

படைப்பாளர்:

ஞா.கலையரசி

புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஸ்டேட்பாங்க் ஆஃப் இந்தியாவில்  வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சென்னையில் வசிக்கிறார். சிறார்களுக்காக இதுவரை 20 நூல்களை எழுதியிருக்கிறார். வானம், பாரதி புத்தகாலயம், நிவேதிதா, தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக நூல்கள் வெளிவந்துள்ளன. வானதி பதிப்பகம் வரலாற்று நாவலை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்க ‘சுட்டி உலகம்’ எனும் வலைத்தளத்தை நடத்துகிறார். ‘பூஞ்சிட்டு’ எனும் குழந்தைகள் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்.