ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கப் போனார் லாரி பேஜ். சுற்றிக்காட்ட வந்தவர் அங்கு ஏற்கெனவே படித்துக்கொண்டிருந்த செர்ஜி பிர்ன். ஆரம்பத்தில் ஒருவரை மற்றவருக்குப் பிடிக்கவில்லை என்றொரு கருத்துகூட இருக்கிறது. பார்த்தால் பிடிக்காது, பழகினால் பிடிக்கும் வகை நண்பர்கள் போல. ஒரு வருடத்துக்குப் பிறகு, தங்கள் விடுதி அறையில் வைத்து இவர்கள் இருவரும் இணைந்து ஒரு தேடுபொறியை உருவாக்கினார்கள்.

அப்போது இருந்த தேடுபொறிகள், ஒரு வார்த்தை அதிக முறை அந்த வலைத்தளத்தில் இருந்தால் அதை முதலில் காண்பிக்கும். புகைப்படம் சம்பந்தமான வலைத்தளம் ஒன்றில் சும்மா ஆயிரம் முறை சிறந்த புகைப்படம் எடுக்கப்படும் என எழுதி வைத்திருந்தால் அந்தத் தளத்தைத்தான் தேடுபதிலில் முதலில் காட்டும். இதனால் பயனருக்கு எந்தப் பலனுமில்லை. மாறாக லாரியும் செர்ஜியும் இணைந்து உருவாக்கிய தேடுபொறி வேர்ல்ட் வைட் வெப்பில் உள்ள வலைப்பக்கங்களில் உள்ள இணைப்புகளை ஆய்ந்து தனித் தனி பக்கங்களின் முக்கியத்துவத்தை முடிவு செய்யும். ஜஸ்ட்டயல், சுலேகா மாதிரி சில வலைத்தளங்களில் பதிந்துகொண்டு அங்கே ஒளிப்பட வலைத்தளத்துக்குச் சுட்டி கொடுத்தால், அந்தச் சுட்டியை பேக்லிங்க் (backlinks) என்பார்கள். இப்படி பேக்லிங்குகளை வைத்துப் பிரபலமான, பயனுள்ள, உண்மையான ஒளிப்பட வலைத்தளத்தைத் தேடுபதிலில் காண்பிப்பது இவர்கள் தேடுபொறியின் சிறப்பம்சம். பேக்லிங்களை ஆராய்வதால் பேக்ரப் (BackRub) எனப் பெயரிட்டார்கள்.

வலைப்பக்கங்களுக்கு ரேங்கிங் கொடுக்கும் இந்த யோசனை சிலிகன் பள்ளத்தாக்குவரை இவர்களைக் கவனிக்க வைத்தது. ஒரு லட்சம் டாலர் முதலீடும் கிடைத்தது. வாங்க நண்பர்களே எல்லாரும் ஒன்னா போகலாம் என டோரா, புஜ்ஜி, மேப்புடன் கிளம்வது போல கலிபோர்னியாவுக்குக் கிளம்பினார்கள். இன்னும் சில கணினி வல்லுநர்களைச் சேர்த்துக்கொண்டு கார் நிறுத்தும் இடம் ஒன்றை அலுவலகமாக மாற்றினார்கள். அன்றைக்கு அந்த இடத்துக்குச் சொந்தக்காரர் சூசன் வோஜ்சிக்கி (employee no.16) இன்றைய யூட்யூப் தலைமை நிர்வாகி.

நிறுவனத்துக்குப் பெயர் வைக்கும் போது ஒரு சிக்கல் வந்தது. கூகோள் என்னும் பெயரை வைக்க விரும்பினார்கள். கூகோள் என்பது பெரிய எண். பெரிய என்றால், பெரிய்ய்ய்ய 10,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000,​000. எண்ணிக் கொண்டிருக்காதீர்கள். 1க்கு பிறகு 100 சுழியங்கள். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்படிப் பெரிய எண்களைப் பெயரிட்டு அழைக்கும் வழக்கமில்லை. பெரியது எல்லாம் முடிவிலி என்பதாகக் கருதினார்கள். பெயர் வைத்தால் என்ன என யோசித்தார் கணிதவியலாளர் எட்வர் காஸ்னர். தன் சகோதரர் மகனிடம் ஆங்கில எழுத்து ஓ அதிகம் வரும்படி ஒரு வார்த்தையைக் கற்பனை செய்து சொல்லச் சொன்னார். அந்த 9 வயது குட்டிப்பையன் சொன்ன வார்த்தைதான் கூகோள் (Googol). அதுவே 1க்குப் பிறகு 100 சுழியம் வரும் எண்ணின் பெயராக எல்லாராலும் பயன்படுத்தப்பட்டது. உலகில் உள்ள எல்லாத் தகவல்களையும் ஒழுங்குபடுத்தி அதைப் பயனுள்ளதாகவும் உலகம் முழுவதிலும் அணுகக்கூடியதாகவும் ஆக்கும் திட்டம் கொண்ட இவர்கள் தேடுபொறி இப்படி அதிக எண்ணிக்கைப் பக்கங்களை ஆராய்வதால், இதையே பெயராக வைக்க நினைத்தனர் லாரியும் செர்ஜியும். ஆனால், அந்தப் பெயர் ஏற்கெனவே வேறொருவரால் பதிவு செய்யப்பட்டுவிட்டது. நாம் விரும்புவது கிடைக்கவில்லை என்றால் நமக்குக் கிடைக்குறதை விரும்ப வேண்டும் என யாராவது அவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கலாம். எழுத்துப்பிழையுடன் Googol என்பதை Google எனப் பதிவுசெய்து கூகுள் (Google) நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். அதன்பிறகு நடந்ததெல்லாமே வரலாறு.

பயனர் தேடுதல் தேவைக்கு முக்கியத்துவம் தருவதே கூகுளின் வெற்றிக்கு மூலக் காரணம். அதனால்தான் இன்றும்கூட மிக எளிமையாக இருக்கிறது இவர்கள் தளம். தேட நினைப்பதைத் தட்டச்சு செய்ய ஒரு பெட்டி, குரல் கட்டளை மூலம் தேட ஓர் ஒலிவாங்கி. அவ்வளவுதான். தேடுபொறியில் தேடு எனக் கட்டளை இட்டதும் தேடுபதில் அரை விநாடிக்கும் குறைவான நேரத்தில் வரும் வேகம் அடுத்த சிறப்பு. நாம் எதைத் தேடி வந்தோமோ அதைக் கொடுக்கிறது தேடுபொறி. நம் இணையரைவிட நம்மை அதிகம் புரிந்து வைத்திருக்கிறது கூகுள். எழுத்துப் பிழை, மொழி எதுவும் தடையில்லை.

கூகுள் தேடுபொறியால் எப்படி இது சாத்தியமாகிறது? தேடுதலின் அடிப்படையை மட்டும் தெரிந்துகொள்வோம். நாம் சில வார்த்தைகளைத் தட்டச்சு செய்து தேடு எனத் தட்டியதும் அந்தக் கட்டளை உலகின் எல்லா வலைப்பக்கங்களுக்கும் செல்லாது. தேடுதல் நடப்பது கூகுள் இன்டெக்ஸில். உலகின் எல்லா வலைப்பக்கங்களையும் ஆராய்ந்து தங்கள் கணினி நிரல் மூலம் தரம் பிரித்து ரேங்கிங் அடிப்படையில் அட்டவணைப்படுத்தி இருப்பதுதான் கூகுள் இன்டெக்ஸ்.

எப்படி இன்டெக்ஸ் செய்கிறார்கள்?

வெப்பில் உலாவ இவர்களிடம் ஸ்பைடர் இருக்கிறது. கணினி நிரல் மென்பொருட்களைத்தான் சிலந்திகள் என்கிறார்கள். இந்தச் சிலந்திகள் குறிப்பிட்ட சில வலைத்தளங்களில் தங்கள் வேலையைத் தொடங்குகிறது. அந்தத் தளங்கள் லிங்க் மூலம் வேறு சில தளங்கள், அந்தச் சில தளங்கள் லிங்க் மூலம் மேலும் பல தளங்கள் என இத்தொடர் செயல்பாடு மூலம் கிட்டதட்ட எல்லா வலைத்தளங்களுக்கும் செல்கின்றன இந்தச் சிலந்திகள். அவ்வப்போது இப்படி ஊர்ந்து சென்று (crawling) புதிய வலைத்தளங்கள் உருவாகி இருக்கிறதா? பழைய தளத்தில் புதிய செய்தி ஏதாவது சேர்க்கப்பட்டிருக்கிறதா என ஆய்வு செய்வதும் விவரம் சேகரிப்பதும் தொடர்ந்து நடக்கும்.

எதன் அடிப்படையில் இன்டெக்ஸ் ரேங்கிங் கிடைக்கிறது?

இந்தக் கேள்வியின் விடைதான் கூகுளின் ரகசியம். அரை விநாடிக்குள் நாம் தேடும் பதிலைத் தர 200க்கும் மேற்பட்ட கேள்விகள் மூலம் தரம்பார்த்து மதிப்பெண் வழங்கும் வேலை நடக்கிறது. எடுத்துக்காட்டாக, ‘ஆண்கள் நலம்’ என்ற வார்த்தைகளைத் தேடினால் ஆண்கள் உடல் நலம் பற்றிய கட்டுரைகள், மன நலம் பற்றிய கட்டுரைகள், இந்த வார்த்தைகள் உள்ள செய்திகள், கதைகள் எல்லாம் தேடுபதிலில் வரும். இந்தக் குறிப்பிட்ட வார்த்தைகள் ஹைப்பர் லிங்காக இருக்கிறதா? எத்தனை முறை இருக்கிறது? தலைப்பில் இருக்கிறதா? யூஆர்எல்-ல் இருக்கிறதா? உள்ளே இருக்கும் பத்தியில் இருக்கிறதா? பேஜ் ரேங்க் என்ன? உள்ளே நுழைபவர்கள் ஸ்க்ரால் செய்து படித்துப் பார்த்து பயன்பெறும் வகையில் உள்ள தரமான பக்கமா, பயனர் உள்ளே நுழைந்ததும் மூடிவிடும் டுபாக்கூர் பக்கமா என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகளை வைத்து ஹர்ஸ்டோரிஸ் தளத்துக்கு அதிக மதிப்பெண் கொடுத்து முதலில் காண்பிப்பது என்பதை முடிவு செய்கிறது.

ஒருவேளை நாம் ஆண்கள் உடல் நலம் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பி இருந்தால்? அதிகம் பேர் படிக்கிறார்கள், தரமாக இருக்கிறது என்பதற்காக முதலில் வந்திருக்கும் தீபாவின் கட்டுரையைப் படித்தால் எழுத்தாளருக்கு வேண்டுமானால் வெற்றியாக இருக்கலாம். ஆனால், தேடுபொறிக்குத் தோல்விதான். தவறாக வழி காட்டியதல்லவா? அதற்குதான் தேடுபதிலில் மூன்று விஷயங்கள் இருக்கின்றன. அந்த வார்த்தைகள் இருக்கும் தளத்தின் முகவரி. அந்தப் பக்கத்தின் சில வரிகள். தலைப்பு. இந்தத் துணுக்கைப் படித்ததும் முதலில் இருந்தாலும் ஹர்ஸ்டோரிஸ் பக்கத்தைத் தவிர்த்து பயனர் அடுத்திருக்கும் உடல் நலம் பற்றிய அவர் தேடிய கட்டுரைக்குச் செல்வார். இப்படி முதலில் வரவோ, சிறப்பு மதிப்பெண் கொடுக்கவோ பணம் பெறுவதில்லை கூகுள். முழுக்க முழுக்கப் பயனர் நல்ல பதிலைப் பெறுவது என்பதே நோக்கமாக வைத்திருக்கிறது கூகுள்.

அவ்வளவு நல்லவனாடா நீ என ஆச்சரியப்படவேண்டாம். அந்த நேர்மைக்குப் பரிசாக நாம் எப்போதும் கூகுளை நாடியே செல்கிறோம். அப்போது ஓரத்திலும் தேடுபதிலுக்கு மேலும் காசு கொடுத்து செய்யப்படும் விளம்பரங்களைக் காட்டுகிறது கூகுள். இவர்கள் இப்படித்தான் நம் வருகையை வைத்துப் பணம் சம்பாதிக்கிறார்கள். அதிகப் பணம் கொடுத்தால் அந்த விளம்பரத்தை முதலில் காண்பிக்கும் தவறை கூகுள் செய்வதில்லை. அதிலும்கூட நேர்மையைக் கடைப்பிடித்து பயனரின் தேடுதலுக்கு மிகப் பொருத்தமான விளம்பரத்தையே காண்பிக்கிறது. ஒருவேளை பயனருக்கு உதவும்படியான விளம்பரம் இல்லை என்றால் தேடுபதில் பக்கத்தில் வெறுமனே வலைத்தளங்களின் பட்டியல் மட்டுமே வரும். சும்மா ஓர் உபயோகமில்லாத விளம்பரத்தை கூகுள் காண்பிப்பதில்லை.

நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதான் நிஜம். கூகுள் அலுவலகத்தின் பணிச்சூழலிலும் பலவித நிறம், இனம், மதம், நாடு, பாலினம், மாற்றுத்திறனாளிகள் என எல்லாரையும் உள்ளடக்கியதாக இருப்பதில் அக்கறை செலுத்துகிறது கூகுள். ஆனால், எவ்வளவு நாளைக்கு என்பதில்தான் எல்லாமே இருக்கிறது. பெருந்தொற்றுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றத்தால் மற்ற மென்பொருள் நிறுவனங்களைப் போலவே கூகுளும் பெரும் எண்ணிக்கையில் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. செலவுகளைக் கட்டுப்படுத்த இத்தனை நாட்கள் கொடுத்து வந்த பல சலுகைகளை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. நொறுக்குத் தீனி, காப்பி உள்ளிட்டவை அதிகம் பயன்படுத்தாத சில நாட்களில் மைக்ரோகிச்சன் எனப்படும் கூகுள் கேன்டீன்கள் மூடி வைக்கப்படும். சொந்த மடிக்கணினி, மசாஜ் எல்லாம் இனிமேல் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். கைப்பேசி, வாகனப்படி ரத்து. இப்படி ஏகப்பட்ட வெட்டுகள். இதற்காகச் சமீபத்தில் கூகுள் பணியாளர்கள் போராட்டம்கூட நடத்தினார்கள். மசாஜ்க்கு அலுவலகம் இத்தனை நாள் பணம் கொடுத்ததா எனச் சம்பளம்கூட சரியாகக் கொடுக்காத அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் அதிர்ச்சியானார்கள். உரையாடல் தேடுபொறியான சாட்ஜிபிடி வருகை கூகுளின் எதிர்காலத்தை அசைக்க முனைகிறது என்பது உண்மைதான். எனவேதான் இப்படி மிச்சம் பிடிக்கும் பணத்தை ஆய்வுகளில் முதலீடு செய்யப்போவதாக கூகுள் சொல்கிறது. இந்தப் போட்டியில் சாட்ஜிபிடியை வென்று மேலும் வெற்றி நடை போடுமா என்பது இன்னும் சில ஆண்டுகளில் தெரிந்துவிடும்.

சுந்தர் பிச்சை

1996இல் மாணவர்களின் ஆய்வுத்திட்டமாக இருந்து 1998இல் கூகுளாக மாறி 2005இல் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது கூகுள். லாபத்தில் பங்குக்கு ஈவுத்தொகை (divedend) எல்லாம் கொடுப்பதில்லை. ஈவுத்தொகையை நீங்கள் வெட்டி செலவோ வேறு வகையிலோ முதலீடோ செய்வீர்கள். அந்தப் பணத்தை நாங்கள் இதிலேயே முதலீடு செய்தால் உங்கள் பங்கு மதிப்பு பல மடங்கு உயரும் எனக் கெத்து காட்டுகிறார்கள். இதன் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் தலைமை நிர்வாகியாக இருப்பவர் இந்தியாவில் பிறந்த சுந்தர் பிச்சை. இந்த ஆல்ஃபாபெட் தாய் நிறுவனத்தில் கூகுள் தேடுபொறி மட்டுமின்றி, ஜிமெயில் மின்னஞ்சல், வேஸ், மேப்ஸ் வழிகாட்டிச் செயலிகள், க்ரோம் வலைத்தள உலாவி, யூட்யூப் காணாெலித்தளம், ஆன்ட்ராய்ட் எனும் திறன்பேசி இயங்குதளம், ட்ரைவ் சேமிப்பிடம், கூகுள் அஸிஸ்டெண்ட் செயற்கை நுண்ணறிவு உதவியாளர், பிக்ஸெல் திறன்பேசி எனப் பல உள்ளன. நெக்ஸஸ், கூகுள் ப்ளஸ், ப்ளே மியூஸிக், இன்பாக்ஸ் பை கூகுள், சில விளையாட்டுகள் என கூகுள் கைவிட்ட திட்டங்களும் நிறைய.

புகழ்வீச்சின் காரணமாக இச்சொல் ஆங்கில அகராதியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. கூகுள் என்ற பெயர்ச்சொல் வினைச்சொல்லாக அங்கீகாரம் பெற்றது 2006இல். ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி கூகுள் என்ற வார்த்தையை அகராதியில் இணைத்துக் கொண்டது. வார்த்தைகளைத் தட்டச்சு செய்து யாரைப் பற்றியோ அல்லது எதைப் பற்றியோ கூகுள் தளத்தில் தேடுதல் என்று பொருள் சொல்கிறது அகராதி. எதையும் மனப்பாடமாக அறிந்து வைத்திருக்கத் தேவையில்லை. தட்டினால் வந்துவிடும் என நம்மை கொஞ்சம் சோம்பேறிகளாகவும் ஆக்கிவிட்டது இந்தத் தேடுபொறி. எனினும் விரல் நுனியில் தகவல் என்பதைச் சாத்தியமாக்கியதில் கூகுளுக்குப் பெருமளவு பங்குள்ளது.

(தொடரும்)

படைப்பாளர்:

இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.