“When the agent tells me to go from my home, I hate him because I love my home and will not go from it… I say, we must not leave our homes and lands.”

— Osceola (Great warrior of seminole)

“அமெரிக்க அதிகாரி என்னை என் வீட்டை விட்டு வெளியேறச் சொல்லும்போது, நான் அவரை வெறுக்கிறேன்; ஏனென்றால் நான் என் வீட்டை நேசிக்கிறேன், அதைவிட்டு எங்கும் போகமாட்டேன்… நாம் நம்முடைய வீடுகளையும் நிலங்களையும் விட்டு ஒருபோதும் வெளியேறக் கூடாது என்று நான் கூறுகிறேன்.” ஆசியோலா  (செமினோல் பூர்வகுடிப் போராளி)

‘தெய்வ நீதியின் வெளிப்பாடு’ (Manifest Destiny) என்கிற மந்திரச் சொற்களுடன், மதத்தின் பெயரால் நடந்த அவல நாடகங்களின் அரங்கேற்றம்தான் இவ்வாறான அனைத்து நில அபகரிப்புகளும் என்றால், நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கும். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய நாகரிகத்தின் வளர்ச்சிக்காக, அனைத்தையும் அபகரிக்கலாமென்று ஐரோப்பியர்கள் முழுமையாக நம்பினர். 

புதிய பூமியில் வாழும் மக்கள் அறியாமைமிக்கவர்கள், அவர்களுக்கு நாகரிகமான வாழ்க்கை முறையை கற்றுத் தருவது நம் கடமையென்றும் அவர்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டது. அதன் விளைவுதான் பலநூறு பூர்வகுடி இனங்களின் அழிப்பும், பல்லாயிரக்கணக்கான பழங்குடியினரின் உயிரிழப்புமாக, வல்லரசு வலிமையடைந்த வரலாறு. 

அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியான ஃபுளோரிடாவையும் (Florida), அதைச் சுற்றியுள்ள சதுப்பு நிலப்பகுதிகளையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள் செமினோல் (Seminole) பூர்வகுடிகள். வேறு சில பழங்குடிகளைப்போல இவர்கள் ஐரோப்பியர்களிடம் எளிதில் அடிபணியவில்லை. தங்களின் உரிமைகளைக் காப்பாற்ற கடுமையாகப் போராடினர். இவர்களின் உக்கிரமான போராட்டங்கள் ஐரோப்பியர்களுக்கு எதிர்பாராத சவாலாக அமைந்தன. 

வரலாற்று ரீதியாக, ஜார்ஜியா (Georgia), அலபாமா (Alabama), ஃபுளோரிடா முதலிய பகுதிகளில் வாழ்ந்த க்ரீக் (Creek) உள்ளிட்ட பல்வேறு பழங்குடி இனக்குழுக்களும், அடிமை முறையிலிருந்து தப்பியோடிய ஆப்பிரிக்கக் கறுப்பினத்தவரும்  இணைந்து உருவானவர்களே செமினோல் மக்களாவர். ‘செமினோல்’ என்ற சொல்லுக்குப் ‘பிரிந்து சென்றவர்கள்’ அல்லது ‘நாடோடிகள்’ என்பது பொருள். ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் இருந்த ஃபுளோரிடாவின் சதுப்புநிலச் சூழலுக்கேற்ப தங்களை அவர்கள் மாற்றிக் கொண்டு, தங்களுக்கென தனித்துவமான மொழி (Mikasuki, Muskogee) கலாச்சாரம் மற்றும் சமூக அமைப்பினை உருவாக்கிக் கொண்டனர்.

செமினோல் மக்கள் 18-ஆம் நூற்றாண்டில் புதிதாக உருவானவர்களாகக் கருதப்பட்டாலும், அவர்களின் மரபு ஃபுளோரிடா பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வந்த காலுசா (Calusa), டெக்குஸ்டா (Tequesta), அப்பலாச்சி (Apalachee), ஐஸ் (Ais), மிக்கசூக்கி (Mikasuki), அலாச்சுவே (Alachua) போன்ற பழங்குடியினருடன் பின்னிப் பிணைந்துள்ளதென வரலாறு கூறுகின்றது.

அமெரிக்கக் குடியேறிகளுக்கும் செமினோல் மக்களுக்கும் இடையிலான இப்போர்கள் அமெரிக்க வரலாற்றிலேயே மிக நீண்டவையெனா வரலாற்றுத் தரவுகள் கூறுகின்றன. அமெரிக்க அரசாங்கத்திற்கு மிக அதிக செலவினத்தைத் தந்த இந்தியப் போர்களும் இவையேயாகும். இத்தொடர் போர்கள் அமெரிக்க ராணுவவாதத்தின் ஓயாத அடக்குமுறைக்கும் பூர்வகுடிகளின் அசாதாரணமான ராணுவ எதிர்ப்பிற்கும் மாபெரும் எடுத்துக்காட்டானவை. 

இப்பூர்வகுடிகள் அமெரிக்க இராணுவத்துடன் மூன்று பெரும் போர்களைச் சந்தித்தனர்; ஆனால் ‘கட்டாய இடமாற்றம்’ என்கிற வன்முறைக்கு முழுமையாக அடிபணியவில்லை. தங்களின் நிலத்தை விட்டுக்கொடுக்காமல், ஃபுளோரிடாவின் சதுப்பு நிலங்களிலேயே தலைமறைவாக வாழ்ந்து மீண்டெழுந்த வரலாறு இவர்களுக்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பாகும்.

இன்றைய ஜார்ஜியா மாகாணப் பகுதி 1700-களின் தொடக்கத்தில் ஐரோப்பியர்களின் ஆளுகைக்கு வரவில்லை. பூர்வகுடிகளுக்குரிய அப்பகுதிகளைக் கைப்பற்றி காலனிகளை அமைக்க இங்கிலாந்தும், ஸ்பெயினும் போட்டி போட்டுக்கொண்டிருந்தன. 1732-ஆம் ஆண்டு இங்கிலாந்து அந்நிலப்பரப்பை தனதாக்கிக் கொண்டது. அதைத் தொடர்ந்து, ஜார்ஜியாவிலும் அலபாமாவிலும் ஆங்கிலேயக் குடியேற்றங்கள் பெருகின. அவர்களின் நில ஆக்கிரமிப்பும் அழுத்தமும் கூடின. அதனால் அங்கு வாழ்ந்த க்ரீக் (Creek) பூர்வகுடிகளும், ஏனைய பூர்வகுடி இனக்குழுக்களும் ஸ்பெயின் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த ஃபுளோரிடா பகுதிக்கு நகர்ந்தனர். இந்தப் பெயர்வுதான் பிற்காலத்தில் ‘செமினோல்’ இனக்குழுக்கள் உருவாக மிக முக்கியக் காரணமாக அமைந்தது. 

ஆங்கிலேயரின் கவனம் இப்போது ஃபுளோரிடா பக்கமும் திரும்பத்தொடங்கியது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. ஒன்று, ஃபுளோரிடாவின் விவசாயத்திற்கு உகந்த வளமான நிலப்பகுதி; இரண்டாவது காரணம், பெருமளவிலான பண்ணைத் தோட்டத்து அடிமைகள் (Plantation slaves). அக்காலகட்டத்தில், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஆடு மாடுகளைப்போலக்  கறுப்பின மக்கள் கடத்திவரப்பட்டு, மாபெரும் பண்ணைத் தோட்டங்களில் பணிசெய்ய கொத்தடிமைகளாக விற்கப்பட்டனர். அடிமை வணிகம் கொடிகட்டிப் பறந்துவந்தது. பண்ணை முதலாளிகளின் கொடுமை தாங்கமுடியாமல் அடிமைத் தொழிலாளர்கள் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் இருந்த ஃபுளோரிடா பகுதிக்குள் தப்பியோடினர். இதனால், தங்கள் விவசாயத் தொழிலில் பெரும் நட்டமடைந்தனர் வெள்ளைக்கார (அடிமை உடமையாளர்கள்) பண்ணை முதலாளிகள். 

பண்ணை முதலாளிகள் ஆயிரக்கணக்கான அடிமைகளைத் தங்களின் முழுக்கட்டுப்பாட்டில் அடக்கி வைத்திருந்தனர். பண்ணைகளின் கொள்ளை லாபம் முழுமையும் அடிமைத் தொழிலாளிகளையே சார்ந்திருந்தது. இந்நிலையில், அடிமைகள் தப்பித்து சுதந்திரக்காற்றை அனுபவிப்பதும், செமினோல் பூர்வகுடிகளுடன் இணைந்து சமமான மனிதராக வாழ்வதையும் காண்பதற்கு வெள்ளையின முதலாளிகளின் மேட்டிமை மனம் விரும்பவில்லை. அத்துடன், தப்பியோடிய அடிமைகள் செமினோல் பூர்வகுடிகளுடன் இணைந்து கலகமூட்டும் கிளர்ச்சியாளர்களாகத் தோன்றினர். இவர்கள் மற்ற அடிமைகளுக்கும் தவறான முன்னுதாரணமாகி விடுவார்களோ என்பதும் முதலாளிகளுக்கு அச்சமளித்தது. அதனால், தங்களின் இருப்பும் வாழ்வாதாரமுமே கேள்விக்குறியாகிவிடுமோயென (ஆங்கிலேய  குடியேறிகளான) பண்ணை முதலாளிகள் கவலையடைந்தனர்.

மேற்கூறிய காரணங்களால் 1800களிலிருந்து ஜார்ஜியா-ஃபுளோரிடா எல்லைப்பகுதிகளில் பூர்வகுடிகளுக்கும் அமெரிக்கர்களுக்கும் (1776-ஆம் ஆண்டு தாங்கள் இனி இங்கிலாந்தின் காலனி அல்ல, அமெரிக்கா தனிநாடெனப் பிரகடனப்படுத்திக் கொண்டது.) மோதல்கள் வெடிக்கத் தொடங்கின. 1817 நவம்பரில் அமெரிக்கப்படைகள் ஜார்ஜியா எல்லைப்பகுதியில் செமினோல் பூர்வகுடிகளின் கிராமங்களின்மீது திடீர் தாக்குதலை நடத்தி, சூறையாடின. இதற்கு செமினோல் போராளிகள் கடுமையான பதிலடி கொடுத்தனர். ‘ஸ்காட் படுகொலை’ (The Scott Massacre) என்றழைக்கப்படும் இச்சம்பவமே, முதல் செமினோல் போர் அதிகாரப்பூர்வமாக வெடிக்கக்  காரணமாயிற்று.

1818-ஆம் ஆண்டில் அமெரிக்கா ஃபுளோரிடாவைக் கைப்பற்றத் திட்டமிட்டு, செமினோல் கிராமங்களை அதிரடியாகத்தாக்கி அழித்தது. செமினோல்களுக்கு உதவியதாகக் கூறப்பட்ட ஆங்கிலக் குடிமக்களுக்கு ராணுவ ஜெனரல் ஆண்ட்ரூ ஜாக்சன் மரண தண்டனையளித்து நிறைவேற்றினார். அது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போரின் விளைவாக ஸ்பெயின் பலவீனமடைந்தது. 1821ஆம் ஆண்டில் ஃபுளோரிடா அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆனால் இது அமெரிக்க வரலாற்றில் ஒரு கறைபடிந்த போராகவே வரலாறு குறித்து வைத்துள்ளது.

1821-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஃபுளோரிடாவின் வடக்கு எல்லையில் வாழ்ந்த செமினோல் பூர்வகுடிகளை வெளியேற்ற, அமெரிக்க அரசு நெருக்கத்தொடங்கியது. இருதரப்புக்கிடையேயான விடாத மோதல்களுக்கு முடிவுகட்ட  1823-ல் மவுல்ட்ரீ க்ரீக் (Treaty of Moultrie Creek – 1823) ஒப்பந்தம் கையெழுத்தானது. வழக்கம் போலவே, பூர்வகுடிகளை வளமான நிலங்களைவிட்டு விரட்டுவதே அதன் சாராம்சமாக இருந்தது. அவர்கள் சதுப்பு நிலங்களும் வறண்ட பகுதிகளும் கொண்ட ஃபுளோரிடாவின் மத்தியப் பகுதியிலுள்ள  ஒதுக்கீட்டுப் பகுதிக்குப் (Reservation) பலவந்தமாக அனுப்பப்பட்டனர். அதனால், பூர்வகுடிகளின் பொருளாதாரம் முழுமையாக முடங்கியது. 

இதற்கிடையில், 1830-ல் இயற்றப்பட்ட ‘இந்திய அகற்றுதல் சட்டம்’ (Indian Removal Act), செமினோல் மக்களை ஃபுளோரிடாவிலிருந்து வெளியேற்றி மேற்குப் பகுதிக்கு (தற்போதைய ஓக்லஹோமா) அனுப்ப முனைந்தது. அதன் தொடர்ச்சியாக, 1832 ல் பெய்ன்ஸ் லாண்டிங் ஒப்பந்தம் (Treaty of Payne’s Landing)  மூலமாக செமினோல் தலைவர்கள் சிலருக்குக் கடுமையான அழுத்தங்கள் தரப்பட்டன. வேறு வழியின்றி அவர்கள் ஃபுளோரிடாவைவிட்டு வெளியேற ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பெரும்பான்மையான செமினோல்களும் கறுப்பின செமினோல்களும் இதை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கினர். இந்தக் கட்டாய இடமாற்றத்தாலும்,  ஒருதலைப்பட்சமான ஒப்பந்தங்களாலும் மிக உக்கிரமான இரண்டாம் செமினோல் போர்(1835) மூளத் தொடங்கியது.  

‘பெய்ன்ஸ் லாண்டிங் ஒப்பந்தத்தின்’ அடிப்படையில் செமினோல்களின் எதிர்ப்பையும் மீறி அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன் விளைவு, டிசம்பர் 28, 1835 அன்று ‘டேட் படுகொலையாக’ (Dade Massacre) வெடித்தது. செமினோல் தலைவர் ஆசியோலா (Osceola) தலைமையில் பூர்வகுடிகளும், கறுப்பின செமினோல்களும் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்களை அதிரடியாகக் கொன்றனர். இதுவே இரண்டாம் செமினோல் போர் அதிகாரப்பூர்வமாக வெடிக்கக் காரணமாக அமைந்தது. அதன் நீட்சியாக, ஜனவரி மாதத்தில் அப்பகுதியின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக  இருந்த அனைத்துக்  கரும்புத் தோட்டங்களும் அழிக்கப்பட்டன; அங்கிருந்த அடிமைத் தொழிலாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

1836-37களில், போரின் தீவிரத்தால் அறமற்ற தந்திரங்கள் வலுக்கத்தொடங்கின. கொடூரமான இப்போரில், ஃபுளோரிடாவின் சதுப்பு நிலங்களில் மறைந்திருந்து போராடிய பூர்வகுடிகளை வெளியே கொண்டவர அமெரிக்க ராணுவம் அழித்தொழிப்பு (Scorched Earth) முறையைத் தீவிரமாகக் கையாண்டது. உணவுப் பயிர்களைத்  தீயிட்டுக் கொளுத்தி, கிராமங்களை சூறையாடிச் சாம்பலாக்கின.  பூர்வகுடிகள் கடுங்குளிரில் உணவும் உறைவிடமும் இல்லாததால் அஞ்சிச்  சரணடைவார்கள் எனத் திட்டமிட்டது. ஆனால் அதில் பெருமளவில் வெற்றியடையவில்லை என்பதுதான் உண்மை. 

அமெரிக்க அரசு சாமானியப் பூர்வகுடி மக்களுக்கு இவ்வாறு இடர்களைத்  தந்ததென்றால், வீரமிக்க போராட்டத் தலைவர்களை வஞ்சக வலையால் வீழ்த்தியது. ஜெனரல் ஜெசுப் பல்வேறு பழங்குடி இனக்குழுக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஓக்லஹோமா பகுதிக்கு இடமாற்றம் செய்ய தீவிரமாக முயன்றுவந்தார். ஆனால் அனைத்தும் தோல்வியைத் தழுவின. பல்வேறு போர்களிலும் உடன்படிக்கை பேச்சு வார்த்தைகளிலும் அமெரிக்க அரசாங்கத்தை முடக்கி வைத்தனர்  செமினோல் பூர்வகுடிகள். இதற்கெல்லாம் பின்புலமாக இருந்தவர் மாவீரன் ஆசியோலா. அவர் சமாதானப்பேச்சிற்கு அழைக்கப்பட்டார். சமாதானக் கொடியுடன் வந்த அவரையும், அவர் குழுவினரையும் அமெரிக்க படைவீரர்கள் சுற்றிவளைத்து கைதுசெய்தனர். வஞ்சனை வென்றது. அமெரிக்க வரலாற்றின் கரும்புள்ளியென உலக அரங்கு இதை எதிரொலித்தது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால், இப்போரில்தான்  அமெரிக்க ராணுவத் தரப்பிலிருந்து போர் நெறிமுறைகளும் சர்வதேச விதிகளும் பலமுறை மீறப்பட்டன. 

1838-ஆம் ஆண்டு ஜெனரல் ஜெசுப் ஒரு புதிய தந்திரத்தைக் கையாண்டார். அமெரிக்கப் படைகளை விட்டு விலகிச் சரணடையும் கறுப்பின செமினோல்களுக்குச் சுதந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனால் பூர்வகுடிகளுக்கும் கறுப்பின மக்களுக்கும் இடையே பிளவு ஏற்பட்டு, அவர்களின் பெரும்பலமாக இருந்த ஒற்றுமை குலைந்தது. ஆனாலும், ஃபுளோரிடாவின் சதுப்பு நிலங்களில், அமெரிக்கப் படைகளின் நவீன ஆயுதங்கள் செமினோல் மக்களின் கொரில்லாப் போரில் தோற்றுப்போயின. ஏறத்தாழ  40,000 வீரர்களையும், சில பில்லியன் டாலர்களைப்  போரில் இழந்தும் அமெரிக்க அரசால் செமினோல்களைக் கட்டுப்படுத்துவது சிம்ம சொப்பனமாகியது. 

ஆகஸ்ட் 14, 1842-ஆம் நாளன்று, ஆறு ஆண்டுகள், ஏழு மாதங்களுக்கு மேல் நீடித்த இந்தப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. முறையான சமாதான ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 4,000 செமினோல் மக்கள் மேற்குப்பகுதிக்கு (இன்றைய ஓக்லஹோமா) பலவந்தமாக நாடுகடத்தப்பட்டனர். சில நூறு செமினோல் மக்கள்மட்டும் யாருக்கும் தெரியாமல் புளோரிடாவின் ஆழமான சதுப்பு நிலங்களில் தப்பியோடித் தலைமறைவாக வாழத்தொடங்கினர்.

அமெரிக்க அரசு,  ஃபுளோரிடாவில் எஞ்சியிருந்த செமினோல் மக்களையும்  முற்றிலுமாகத் துடைத்தெறிய வேண்டுமென்பதில் (Final U.S. expulsion efforts) தீவிரமாக இருந்தது. அதனால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் மூன்றாம் செமினோல் போராக வெடித்தது. முந்தைய போர்களைப் போலவே, இதுவும் அமெரிக்க இராணுவத்திற்குச் சவாலாகவும் மிகவும் செலவு தருவதாகவும் அமைந்தது. சில செமினோல் தலைவர்கள், அமெரிக்காவின் நெருக்குதலால் கணிசமான இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்டு ஓக்லஹோமாவிற்கு இடம்பெயர ஒப்புக்கொண்டனர்.

ஆனால் வயதில் மூத்த ஆன்மிக அறிவும் போர் அனுபவமும் மிக்க தலைவராக விளங்கிய சாம் ஜோன்ஸ் ( Sam Jones) / அபியாகா (Abiaka), அமெரிக்கப் படைகளிடம் ஒருபோதும் அடிபணியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.  ஃபுளோரிடாவின் ஆழமான சதுப்பு நிலங்களான ‘எவர்க்ளேட்ஸ்க்குப் பின்வாங்குதல்’ (Pulling into the Everglades) என்ற நடவடிக்கையை மேற்கொள்ளமுடிவெடுத்தார். மனிதர்கள் நுழைய முடியாத அடர்ந்த உட்பகுதிகளுக்குப் பூர்வகுடிகளை வெற்றிகரமாக அழைத்துச்சென்றார். அவர்கள் அமெரிக்க இராணுவத்தின் கடுமையான முற்றுகைகளை எதிர்கொண்டனர்.  தங்களை வெளியேற்றும் முயற்சிகளை முறியடித்துத்  தங்களின் நிலத்தைப் பாதுகாத்துத் திண்மையுடன் நிலைத்துநின்றனர். 

அமெரிக்க அரசு பூர்வகுடிகள் சரணடைந்தால் தருவதாகக்கூறிய இழப்பீட்டுத் தொகையையோ, நிலத்தையோ அவர்கள் பொருட்படுத்தவேயில்லை. வெளியேற்ற ஒப்பந்த முயற்சிகளையும் சலுகைகளையும் அபியாகாவும் அவரது மக்களும் முற்றிலுமாகப் புறக்கணித்தனர். எந்தவொரு சூழ்நிலையிலும் தங்கள் தாயகத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்தனர்.  இறுதிவரை போராடித் தங்களின் சுதந்திரத்தைத் தக்க வைத்துக்கொண்டனர். இச்சிறு குழுவின் உறுதிப்பாடுதான் ‘வெல்லப்படாதவர்கள்’ (The Unconquered) என்ற செமினோல் மக்களின் அடையாளத்திற்கான தொடக்கமாகவும் அமைந்தது. 

நீண்ட போராட்ட வாழ்க்கைக்குப் பின்னர், இன்று செமினோல் கேமிங் (Seminole Gaming) எனப்படும் சூதாட்ட விடுதிகள் மற்றும் சுற்றுலாத் துறை (Tourism) வளர்ச்சி ஆகியவை நவீன செமினோல் சமூகங்களின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகின்றன. இந்தத் தொழில்துறை வளர்ச்சி அவர்களுக்குப்  பொருளாதாரச் சுதந்திரத்தையும் தன்னாட்சியையும் கல்வித்துறைகளிலும் நலத்திட்டங்களை மேம்படுத்தும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது.

சவால்களுக்குச் சற்றும் சளைக்காத செமினோல் சமூகம் சரித்திரத்தில் என்றும் நிலைத்து நிற்கும் என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சியங்கள் வேண்டும்? 

பெட்டிச் செய்தி 

ஃப்ளோரிடாவில் நிலைத்து நின்ற   செமினோல் மக்கள் 1950-60களில் அமெரிக்க அரசின் அங்கீகாரத்தைப் பெற்றனர். பழங்குடி மக்களின் பொருளாதாரச் சுதந்திரத்தில் ஒரு வரலாற்றுச் சாதனையாக, 2007-ஆம் ஆண்டு புகழ்பெற்ற ‘ஹார்ட் ராக் இன்டர்நேஷனல்’ (Hard Rock International) என்ற உணவு விடுதிகள், சூதாட்ட விடுதிகள், தங்கும் விடுதியெனப் பல்முகம் கொண்ட மாபெரும் வணிக நிறுவனத்தை விலைக்கு வாங்கியது உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. 

படைப்பாளர்

ராஜி வாஞ்சி ( ராஜஶ்ரீ வாஞ்சிநாதன்) 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டனில் வசிக்கும் ராஜி, கட்டுரையாளர், கவிஞர். இவரது ‘நீளிடைக் கங்குல்’ 2020ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை வழங்கும் சிறந்த நூலுக்கான விருது வென்றுள்ளது. கவிஞர் அமிர்தகணேசனுடன் இணைந்து, ‘ஏன் விரட்டினீர்கள், எங்களை?’ என்கிற அமெரிக்கப் பூர்வகுடிகள் பற்றிய வரலாற்றுக் கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார். ‘குறிஞ்சி பூத்த வேலி’, ‘ஜன்னல் உரசும் வண்ணத்துப்பூச்சி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். குழுவாக இணைந்து பல படைப்புகளைத் தந்துள்ளார். இவரது பல படைப்புகள் தொகுப்பு நூல்களில் வெளியாகியுள்ளன. இவரது ஹைக்கூ, சிவகாசி அய்யாநாடார் ஜானகிஅம்மாள் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கப் பேரவையின் FeTNA கவியரங்கங்களில் இடம் பெற்றுள்ளார்; கவியரங்க ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மகாகவி ஈரோடு தமிழன்பன் 80 விருது, Women Achievement Award 2022 for exemplary service to the community, வெளிநாடு வாழ் பெண் கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்தின் இலக்கிய இயக்குநராகப் பணியாற்றியவர், அதன் ‘தமிழ்ச்சாரல்’ இதழ் ஆசிரியராகவும் செயல்பட்டுள்ளார். ஹூஸ்டன் பாரதி கலைமன்றத்தின் ‘நாளைய பாரதி’ என்கிற வடஅமெரிக்க அளவிலான, அனைத்து வயதினருக்குமான இலக்கியப் பேச்சுப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகவும், நிகழ்ச்சி வடிவமைப்பில் முக்கிய பங்கும் வகித்துவருகிறார். இவரின் படைப்புகள் பல இதழ்களில் வெளியாகியுள்ளன.