‘We shall not sleep, but abide as living people, as long as the sun rises.’ – Iroquois Confederacy
‘நாங்கள் உறங்கமாட்டோம்; சூரியன் உள்ளவரை, வாழும் மக்களாக நிலைத்திருப்போம்.’- இரொக்வய் கூட்டமைப்பு
இன்று உலகின் வல்லரசாக, ஜனநாயகத்தின் கோட்டையாகத் திகழும் அமெரிக்காவின் அடித்தளம் அதன் ஆட்சியியல் அமைப்பு, அதன் மூலம் எவை? நாகரிகம் அறியாத நாடோடிகள், மூடப்பழக்கங்களின் முதன்மையிடமென எள்ளி நகையாடப்பட்ட அமெரிக்கப் பூர்வகுடி மக்களின் வாழ்வியலிலிருந்து முளைத்தவை என்றால், வரலாற்றின் விசித்திரத்தை என்னவென்பது?
இரு துருவங்களுக்கு இடையிலான இந்த வியத்தகு வரலாற்று உண்மை, அதிகாரத்தின் பின்னால் மறைந்திருக்கும் ஒரு பெரும் அறத்தின் குரல். அது மட்டுமா? பெண்ணியம் என்பது பண்பாட்டுக்கூறாகவே இருந்த இனக்குழுக்களை எப்படி நாம் பின்தங்கியவர்கள் என வகைப்படுத்தமுடியும்?
நியூயார்க் மாநிலத்தின் வடக்குப்பகுதியிலிருந்த ஐந்து பூர்வகுடிகளின் கூட்டணி ‘இரொக்வய் கூட்டமைப்பு’ (Iroquois Confederacy) என்றழைக்கப்பட்டது. இக்கூட்டமைப்பின் ஜனநாயகக் கொள்கைகள், அமெரிக்கா முதல் 13 காலனிகளுடன் தன்னாட்சி பெறும் திசையை நோக்கி பயணிக்கத் தொடங்கிய காலகட்டத்தில், அரசாங்கத்தை உருவாக்க முனைந்த அடித்தள அமைப்புத் தலைவர்களை (Founding Fathers) வெகுவாக ஈர்த்தனவென்று வரலாற்றுச் சான்றுகளைத் தருகிறார் வரலாற்றாளர் ஜோஷ்வா ஜே. மார்க் (Joshua J. Mark).
நிலத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் பூர்வகுடி இனங்களிடையே நடந்த குருதிப் போர்கள் வடகிழக்குப் பகுதியையே சிதைத்தன. இந்த அழிவைத் தடுக்க, ‘The Great Peace Makers’ – பெரும் சமாதான தூதர்கள் என்றழைக்கப்படும் தேகனவிதா ((Deganawida) மற்றும் ஹியாவாதா (Hiawatha) என்கிற முக்கியத் தலைவர்களின் அமைதி முயற்சியுடன், ‘மூத்தகுலத்தாய்’ ஜிகான்சாசியின் ராஜதந்திரம் இணைந்தது.

ரத்தத்தின் வழி வீரத்தை சுவைத்து வந்த வீரக் குடிகளுக்கு, ‘அமைதி என்கிற ஆழ்ந்த மகிழ்வை’ அறிமுகம் செய்துவைத்தவர் ஜிகான்சாசி (Jigonhsasee) என்ற மூத்தகுலத்தாய் (Clan Mother). அங்கு வாழ்ந்திருந்த இனக்குழுக்களுக்கிடையே ‘உன்னத அமைதிச் சட்டம்’ (The Great Law of Peace) என்கிற ஆக்கபூர்வமான எண்ணத்தை முதன்முதலில் ஏற்றுக்கொண்டவர் அவரே. பதிலுக்கு அவர் முன்வைத்த கோரிக்கைதான் வரலாற்றின் பக்கங்களையே சிலிர்க்கவைத்தது: ஆட்சியதிகாரத்தில் பெண்களுக்கும் சமமான, நிரந்தரமான குரல் வேண்டும்! அந்த ஒரு கோரிக்கையே ‘குலத் தாய்மார்களின்’ (Clan Mothers) அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டி, பிற்கால ஜனநாயகத்திற்கு முன்னோடியாக அமைந்தது.
குலத்தாய் (Clan Mother) என்றழைக்கப்பட்ட மூத்தப் பெண்மணிதான் தங்கள் இனத்திற்கான தலைவரையும், ஆட்சிக்குழு உறுப்பினர்களையும் தேர்தெடுக்கமுடியும் என்று ‘மூத்தகுலத்தாய்’ ஜிகான்சாசியின் அறிவுறுத்தலால் வரையறுக்கப்பட்டது. பதவி காலத்தில் தவறு செய்யும் தலைவர்களை நீக்கும் அதிகாரமும் அப்பெண்களிடமே இருந்தது.
‘இரொக்வய்’ என்பது இவர்களின் பெயரல்ல; எதிரிகளான அல்கோன்க்யன் இனக்குழு இவர்களை ‘பாம்பு’ (Iroqu) என அழைத்ததை, பிரெஞ்சுக்காரர்கள் ‘இரொக்வய்’ என மாற்றினர். தங்களை ‘ஹோடெனோஷோனீ’ என்று அழைப்பதையே இவர்கள் பெருமிதமாகக் கருதுகின்றனர்.
ஏறத்தாழ 1200ஆம் ஆண்டில் (கி.பி/ CE) செனெகா, கயுகா, ஆனாண்டகா, ஒனிடா, மொஹாக் (Seneca, Cayuga, Onondaga, Oneida, and Mohawk) முதலிய ஐந்து பூர்வகுடிகள் ஒன்றிணைந்தனர்; ‘ஹோடெனோஷோனீ’ என்று அந்த கூட்டமைப்பிற்குப் பெயரிட்டனர். அச்சொல், ‘நீண்ட வீட்டை உருவாக்குபவர்கள்’ என பொருள் தரும். ஐந்து பழங்குடியினரும் சகோதரர்களாக தங்களிடையே போரின்றி ஒரே குடும்பம்போல வாழ வேண்டுமென்ற அமைதி உடன்படிக்கையின் குறியீடாகத்தான் இவ்வாறு அழைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, அமைதிக்கான ‘பெரும் வெள்ளை பைன் மரத்தின்’ (Great White Pine) அடியில், இக்கூட்டமைப்பில் இணைந்த ஐந்து நாடுகளும் தங்கள் போர் கோடாரிகளை (Tomahawks) புதைத்தன. இது அவர்களின் தத்துவத்தில், ‘இனிமேல் நாம் ஒருவருக்கொருவர் சண்டையிடமாட்டோம்; நம்முடைய ஆயுதங்கள் ஒழிந்துவிட்டன’ என்பதைக் குறிக்கும் மிக உயர்ந்த குறியீடாகும். அத்துடன் வாம்பம் மணிகளாலான பட்டை (Wampum Belt) இரொக்வய் கூட்டமைப்பின் சட்டங்கள், வரலாற்றைப் பறைசாற்றும் புனிதமான ஆவணங்களாகத் திகழ்ந்தன. இவற்றை ஆட்சிக்குழு கூட்டங்களிலும் சடங்குகளிலும் கையில் ஏந்துவது, பேசுபவரின் நேர்மையையும் அதிகாரத்தையும் உறுதிப்படுத்தும் சான்றாக அமைகிறது.

இவ்வாறு ஆளுமையுடன் வீரமும் செறிந்த கிடந்த பழங்குடியினர்கள், அரசு வரையறுத்த ஓரிடத்தில் (ரிசர்வேஷன்) அடைபடக் காரணமாக பீவர் ( Beaver) என்கிற விலங்குத்தோலின் வர்த்தகம் முக்கிய காரணமானது என்றால் எப்படித்தான் நம்புவது? அமெரிக்க மண்ணின் மேல் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பல காரணங்களுக்காக கவனம் செலுத்திய போது, பிரெஞ்சு நாட்டினர் விலங்குத்தோல் (Fur trade) வியாபாரத்தில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.


ஐரோப்பிய சந்தைகளில், குறிப்பாக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் பீவர் தோலால் செய்யப்பட்ட தொப்பிகளுக்கு (Beaver felt hats) நிலவிய அதீத மோகம், வட அமெரிக்காவின் அமைதியான நிலப்பரப்பை ஒரு பெரும் பொருளாதார வேட்டைக்களமாக மாற்றியது. இதன் நீர் புகாததன்மையும், மென்மையும் அக்கால ஐரோப்பிய சமூக அந்தஸ்தின் அடையாளமானது. இதுதான் பூர்வகுடிகளை வர்த்தகரீதியான வேட்டைக்குக் கட்டாயப்படுத்தியது. ஒட்டுமொத்த கண்டத்தின் பொருளாதாரத்தையே மாற்றியமைத்து, போர்களுக்கு வித்திட்டது.
ஆதிகாலத்தில் பூர்வகுடிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மட்டுமே வேட்டையாடி வந்தனர். ஆனால், பீவர் வேட்டை, லாப வேட்டை என்றானதால் சூழலியல் சமநிலையை முற்றிலுமாகச் சிதைத்தது. ஐரோப்பியர்களின் பேராசை பழங்குடியினரையும் தொற்றி, நிலவுடைமை மோதல்களுக்கும் அடித்தளமானது.
பல பழங்குடியினங்கள் வெள்ளையினத்தவர்களுடன் வர்த்தகம் செய்வதே அதிக லாபகரமானதாகக் கருதின. பயிரிடுவதை நிறுத்தியதால் விளைநிலங்கள் தரிசாகிக் களைகள் படர்ந்தன. அத்துடன் ஐரோப்பியர்களின் ஆதிக்கம் கலந்த வருகையால், தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பழங்குடியினரின் திறனும் பலவீனமடைந்தது.
1600-களின் தொடக்கத்தில், டச்சுக்காரர்கள் (Dutch) இரொக்வய் மக்களுடன் நேரடி வர்த்தக உறவை ஏற்படுத்திய முதல் ஐரோப்பியர்கள் ஆனார்கள். அவர்கள் டூ-ரோ-வம்பெம் (Two Row Wampum) அமைதி ஒப்பந்தத்தால் இணக்கமாக இருந்தனர். டச்சுக்காரர்கள் வழங்கிய துப்பாக்கிகள் மற்றும் உலோகக் கருவிகள், ‘பீவர் போர்களின்’ போது இரொக்வய் அதிகாரத்தை வலுப்படுத்தின.

1670-களில் இங்கிலாந்து ஹட்சன் பே நிறுவனத்தை உருவாக்கியதால், பொருளாதாரப் போட்டி தீவிரமடைந்தது. அதன் பிரதிபலிப்பாக, 17-ஆம் நூற்றாண்டில் தோல் வர்த்தகத்தில் (Fur Trade) ஏகபோக உரிமையை அடையப் பழங்குடியினரிடையே போட்டிகள் நிலவின. அத்துடன் ஏனைய ஐரோப்பிய நாடுகள் அதிகமாக குடியேற்றங்களை அமைக்க முனைப்பு காட்டவில்லை, ஆனால் ஆங்கிலேயர்கள் நிரந்தர குடியேற்றங்களை அமைத்தனர். விவசாயக் குடியேறிகளால் பாரம்பரிய வேட்டை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.
இவ்வாறு ஆரம்பகால காலனித்துவ மோதல்கள் — குறிப்பாக பீவர் போர்கள் (1628–1701), பிரெஞ்சு-இந்தியப் போர் (1754–1763) மற்றும் அமெரிக்கப் புரட்சி (1775–1783) — இரொக்வய் (ஹோடெனோஷோனீ) கூட்டமைப்பின் விழுமியங்களை ஊடுருவி மாற்றின.

தோல் வர்த்தக ஏக போகப் பேராசையால், 17-ஆம் நூற்றாண்டின் பீவர் போர்களில் இரொக்வய்கள் தங்களின் பூர்வீக நிலமான வடக்கு நியூயார்க்கில் பீவர் இனத்தை அளவிற்கதிகமாக வேட்டையாடினர். தங்களின் வர்த்தகத் தொடர்புகளைத் தக்கவைக்க, அவர்கள் புதிய வேட்டை நிலங்களைக் கைப்பற்ற மேற்கு மற்றும் வடதிசைகளை நோக்கி ஆக்ரோஷமாக முன்னேறினர்.
ஐரோப்பிய துப்பாக்கிகளை ஏந்திய இரொக்வய் ‘கிரேட் லேக்ஸ்’ (இன்றைய விஸ்கான்சின், மிச்சிகன் போன்ற) பகுதியையும் வெற்றிகரமாகக் கைப்பற்றினர். இந்த பிரம்மாண்டமான விரிவாக்கம், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயப் பேரரசுகளுக்கு இடையிலான புவிசார் அரசியல் சமநிலையைக் கட்டுப்படுத்தும் ஒரு வல்லரசாக இரொக்வய் கூட்டமைப்பை மாற்றியது. இக்கூட்டமைப்பின் கட்டுக்கடங்காத அதிகாரமும் ஆற்றலும் இவர்களுடன் போட்டியிட்ட பிற பூர்வகுடியினங்களுக்குப் பேரழிவைத் தந்தன. பிற பூர்வகுடி இனங்கள் சொந்த மண்ணைவிட்டு வாழ்வாதாரத்தைத் தேடி வெற்றிடத்திற்கு புலம்பெயரவேண்டிய சூழலையும் ஏற்படுத்தியது. சொந்த விரலால் தன் கண்ணைக் குத்திக் கொள்வதுபோல, போரைத் தவிர்த்து அமைதியாக வாழவேண்டுமென்ற அமைதிக்கோட்பாட்டுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த இரொக்வய் மற்ற பூர்வகுடி இனங்கள் நலிவுறக் காரணமானது.
இரொக்வய் ஹியூரான் (Huron) கிராமங்கள் மீது மிகக் கொடூரமான தாக்குதல்களைத் தொடுத்து, ஹியூரான் கூட்டமைப்பைச் சிதைத்து சிதறடித்தனர். இதேபோல், எர்ரி (Erie), நியூட்ரல் (Neutral), பெட்டன் (Petun), மஹிகான் (Mahican) மற்றும் சஸ்க்வெஹன்னா (Susquehannock) ஆகிய கூட்டமைப்புகளையும் தோற்கடித்துச் சிதறடித்தனர். பொட்டாவடோமி (Potawatomi), ஒஜிப்வே (Ojibwe) மற்றும் ஒட்டாவா (Ottawa) போன்றவர்கள் விரட்டப்பட்டனர். வட அமெரிக்க பழங்குடியினரின் புவியியல் அமைப்பையே அடியோடு மாற்றியது.
ஐரோப்பிய நோய்களாலும் போர்களாலும் சரிந்த மக்கள் தொகையை மீட்டெடுக்க, இரொக்வய் மக்கள் ‘துக்கப் போர்கள்’ மூலம் எதிரிகளைச் சிறைபிடித்துத் தத்தெடுத்தனர். துக்கப் போர் (Mourning War) என்பது போரில் இழந்த தங்கள் இன மக்களின் எண்ணிக்கையை ஈடுகட்டவும் துயரத்தைப் போக்கவும் எதிரி இனத்தவரைச் சிறைபிடித்துத் தங்கள் குடும்பங்களில் தத்தெடுத்துக்கொள்ளும் நோக்கில் நடத்தப்பட்ட ஒரு பாரம்பரியப் பழங்குடியினப் போர் முறையாகும். ஹியூரான், எர்ரி உள்ளிட்ட பிற இனத்தவர்களை கைதிகளாக்கி இணைத்துக் கொண்டதால், அவர்களது மக்கள் கட்டமைப்பில் ஆழமான மாற்றங்கள் நிகழ்ந்தன.
‘மகா அமைதிச் சட்டம்’ மூலம் மோஹாக், ஒனிடா, ஒனோண்டாகா, கயுகா, செனெகா மற்றும் டஸ்கரோரா ஆகிய பூர்வகுடி மக்களை ஒன்றிணைத்த இரொக்வய் கூட்டமைப்பு, பல நூற்றாண்டுகளாக ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்ந்தது. ஆனால், வட அமெரிக்காவைக் கைப்பற்ற ஐரோப்பிய வல்லரசுகளுக்கு இடையே நடந்த பிரெஞ்சு-இந்தியப் போர் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த அமெரிக்கப் புரட்சி, இக்கூட்டமைப்பின் வரலாற்றையே மாற்றியமைத்தது.
பிரெஞ்சு-இந்தியப் போரின்போது, நடுநிலைமை காக்க முயன்ற பூர்வகுடி மக்கள், தவிர்க்க முடியாமல் இரு தரப்பிலும் கூட்டணி வைக்க நிர்பந்திக்கப்பட்டனர். இறுதியில் இங்கிலாந்து வெற்றிபெற்று நிலங்களைக் கைப்பற்றியது. இப்போரால் இங்கிலாந்துக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் அமெரிக்கக் காலனிகள் மீது சுமத்தப்பட்ட வரிகள், அமெரிக்கச் சுதந்திரப் போருக்கு வித்திட்டன.
அமெரிக்கப் புரட்சியின்போது, இரொக்வய் மக்கள் தங்கள் கொள்கையில் பிளவுபட்டனர். ஜோசப் பிராண்ட் தலைமையிலான மோஹாக், செனெகா, கயுகா மற்றும் ஒனோண்டாகா இனத்தவர் நிலங்களைப் பாதுகாக்க ஆங்கிலேயருடன் இணைந்தனர். ஒனிடா மற்றும் டஸ்கரோரா இனத்தவர் அமெரிக்கக் கிளர்ச்சியாளர்களை ஆதரித்தனர். இந்த அரசியல் பிளவு, பழங்கால வன்முறையற்ற ஒப்பந்தத்தைச் சிதைத்து, அவர்களை ஒரு பேரழிவுகரமான உள்நாட்டுப் போரில் தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்ள வைத்தது.
1779-ல், ஆங்கிலேய ஆதரவு இரொக்வய் படைகளை ஒடுக்கும் நோக்கில், ஜார்ஜ் வாஷிங்டனின் உத்தரவின் பேரில் ‘சுல்லிவன் பயணம்’ (Sullivan Expedition) மேற்கொள்ளப்பட்டது. மேஜர் ஜெனரல் சுல்லிவன் தலைமையில் 4,000 துருப்புக்கள், 40-க்கும் மேற்பட்ட இரொக்வய் கிராமங்களையும் பயிர்களையும் அழித்துச் சாம்பலாக்கினர். வீடிழந்த ஆயிரக்கணக்கான மக்கள், அகதிகளாகத் தப்பிச்சென்று, உணவுப் பற்றாக்குறையாலும் கடுங்குளிராலும் உயிரிழந்தனர்.
1783-ல் பாரிஸ் உடன்படிக்கையுடன் போர் முடிவுக்கு வந்தபோது, ஆங்கிலேயர் தங்கள் பூர்வகுடி கூட்டாளிகளைப் புறக்கணித்துவிட்டு, அவர்களின் நிலங்களை அமெரிக்காவிடம் ஒப்படைத்தனர். நிலமற்றவர்களான இரொக்வய் மக்கள், தங்கள் பூர்வீக நிலங்களிலிருந்து கனடாவிலுள்ள ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு இடம்பெயர கட்டாயப்படுத்தப்பட்டனர்.
அங்கிருந்த அகதி முகாம்களில், ஐரோப்பிய வரவால் நிலமிழந்த நான்டிகோக்ஸ், சபோனிஸ், பிஸ்காடவேஸ், ஷாவ்னீஸ், மஹிகன்ஸ், டுடேலோஸ் உள்ளிட்ட பல பூர்வகுடியினரின் துயரக்குரல்கள் எதிரொலித்தன. ‘உன்னத அமைதிச் சட்டத்தின்’ கீழ் நிலைத்திருந்த ஒற்றுமை, ஐரோப்பிய ஏகாதிபத்திய அதிகாரப் போட்டிகளாலும் போர்களாலும் நிரந்தரமாகச் சிதைக்கப்பட்டது.
வாஷிங்டனுக்கு உதவிய ஒனிடா பூர்வகுடிகள்கூட, அமெரிக்க நில அபகரிப்புக் கொள்கைகளால், நிலங்களை இழந்து விஸ்கான்சினுக்கு இடம்பெயர்ந்தனர்; எஞ்சிய செனெகா, ஒனோண்டாகா, டஸ்கரோரா மற்றும் கயுகா மக்கள் தங்களின் பல மில்லியன் ஏக்கர் நிலங்கள் சிறிய பகுதிகளாகச் சுருங்குவதைக் கண்டனர் . இறுதியில் நியூயார்க்கில் வரையறுக்கப்பட்ட (ரிசர்வ்) நிலங்களுக்குள் சுருக்கப்பட்டனர்.
இரொக்வய் கூட்டமைப்பின் அரசியல் ஒற்றுமை, பிராந்திய ஆதிக்கம் முதலியன அமெரிக்கப் புரட்சி காலத்தில் சிதைக்கப்பட்டாலும், கூட்டமைப்பு ஒருபோதும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. இன்றும், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளிலும், ஆறு நாடுகள் தங்கள் பாரம்பரிய குல அமைப்புகள், இறையாண்மை கொண்ட அரசாங்கங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பேணி, தொடர்ந்து செயல்படும் தேசங்களாகத் திகழ்கின்றன. ஒனோண்டாகா நிலத்தில் ‘மகா சபை’ (Grand Council) கூடுகிறது; 1,25,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்கள் கலாச்சாரத்தைப் பாதுகாத்து, பாரம்பரியத்தைப் போற்றி, ‘பெரும் அமைதிச் சட்டக்’ (Great Law of Peace) கொள்கைகளைத் தொடர்ந்து கடைபிடித்துவருகின்றனர்.
தொடரும் குரல் …
- பெட்டிச் செய்தி

அம்புகளின் கட்டு: 1744-ல் நடைபெற்ற உடன்படிக்கைக் கூட்டங்களின் போது, ஒனோண்டாகா (Onondaga) தலைவரான கனசட்டேகோ (Canassatego), ஒரு அம்பை உடைப்பது எளிது என்றும், ஆனால் ஒன்றாகக் கட்டப்பட்ட அம்புகளைப் பிரிக்க முடியாது என்றும் விளக்கினார். பெஞ்சமின் பிராங்க்ளின் இந்த உருவகத்தைத் தத்தெடுத்துக்கொண்டார். இதுவே அமெரிக்காவின் அரசு முத்திரையில் (Great Seal) கழுகின் பிடியில் இருக்கும் 13 அம்புகளின் கட்டு உருவாவதற்கு ஊக்கமளித்தது.
படைப்பாளர்

ராஜி வாஞ்சி ( ராஜஶ்ரீ வாஞ்சிநாதன்)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டனில் வசிக்கும் ராஜி, கட்டுரையாளர், கவிஞர். இவரது ‘நீளிடைக் கங்குல்’ 2020ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை வழங்கும் சிறந்த நூலுக்கான விருது வென்றுள்ளது. கவிஞர் அமிர்தகணேசனுடன் இணைந்து, ‘ஏன் விரட்டினீர்கள், எங்களை?’ என்கிற அமெரிக்கப் பூர்வகுடிகள் பற்றிய வரலாற்றுக் கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார். ‘குறிஞ்சி பூத்த வேலி’, ‘ஜன்னல் உரசும் வண்ணத்துப்பூச்சி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். குழுவாக இணைந்து பல படைப்புகளைத் தந்துள்ளார். இவரது பல படைப்புகள் தொகுப்பு நூல்களில் வெளியாகியுள்ளன. இவரது ஹைக்கூ, சிவகாசி அய்யாநாடார் ஜானகிஅம்மாள் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கப் பேரவையின் FeTNA கவியரங்கங்களில் இடம் பெற்றுள்ளார்; கவியரங்க ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மகாகவி ஈரோடு தமிழன்பன் 80 விருது, Women Achievement Award 2022 for exemplary service to the community, வெளிநாடு வாழ் பெண் கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.
ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்தின் இலக்கிய இயக்குநராகப் பணியாற்றியவர், அதன் ‘தமிழ்ச்சாரல்’ இதழ் ஆசிரியராகவும் செயல்பட்டுள்ளார். ஹூஸ்டன் பாரதி கலைமன்றத்தின் ‘நாளைய பாரதி’ என்கிற வடஅமெரிக்க அளவிலான, அனைத்து வயதினருக்குமான இலக்கியப் பேச்சுப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகவும், நிகழ்ச்சி வடிவமைப்பில் முக்கிய பங்கும் வகித்துவருகிறார். இவரின் படைப்புகள் பல இதழ்களில் வெளியாகியுள்ளன.





