இவ்வளவு விஷயங்களைத் தெரிந்துகொண்டபின் நாமும் தேர்ந்த கனடாவாசிதான். முக்கியமாக உணவு, பொழுபோக்கு விஷயங்களில் நம் பழக்கத்தை அதிகம் மாற்றிக்கொள்ளாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தெளிந்து தேர்ந்த பின்பு, கனடா கனவு தேசமாக மாறும்.

ஒருநாள் நம் ஊர் சேனல் ஒன்றில், ’சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா’, என்ற பாடல் ஒலித்தது. முன்னர் எப்படியோ, இப்பொழுது எனக்கு அந்தப் பாடலில் முழுவதுமாக உடன்பாடில்லை. குளிர் காலத்தில் மைனஸ் 30 டிகிரி எப்படி இருக்குமென்பது நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயம். ஸ்னோ பார்ப்பதற்கு எவ்வளவு அழகோ, அவ்வளவு அசௌகரியம்!

சுமார் 6 மாதங்களுக்கு, வெளியே எங்கே கிளம்பினாலும் வின்டர் ஜாக்கெட், ரோமத்தால் செய்யப்பட்ட நைலான் கோட் கண்டிப்பாகத் தேவை. அதை வாங்கப் போகும்போது, அனுபவஸ்தர்களின் ஆலோசனையைக் கேட்டுச் சென்றோம். லூஸாக இருந்தால் காற்று உள்ளே புகுந்து குளிரடிக்கும். கொஞ்சம் அதிக நீளம் இருந்தால் கால்களைக் குளிரில் இருந்து காப்பாற்ற உதவும். ஹூட் எனப்படும் துணியாலான தலைக் கவசம் கோட்டுடன் இணைந்திருக்கும், அது கழுத்தை முழுவதுமாக மூடிக்கொள்ளும் வகையில் இருப்பது அவசியம். அப்பொழுதுதான், தேவைப்படும் நேரம் லேசாகக் கழுத்தைக் குனிந்து வாயையும் மூக்கையும் குளிரிலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும்.

எல்லா கோட்டிலும் கையை உள்ளே வைத்துக்கொள்ள பாக்கெட் இருக்கும். ஆனாலும் கையுறை கண்டிப்பாகத் தேவை. அதில் இன்னொரு சிக்கல், கையுறை அணிந்திருந்தால் டச் போன் உபயோகிக்க முடியாது. அதற்குப் பிரத்யேகமான கையுறை உண்டு. ஆனால், அது அதிகக் குளிரைத் தாங்காது. எதற்கு அவ்வளவு சிரமத்துடன் வெளியில் போன் உபயோகிக்க வேண்டும் என்று கேட்காதீர்கள். பஸ் வருவதை, அதன் நேரத்தை, காலதாமதத்தைப் பற்றி மட்டுமல்லாமல், வழி பார்க்க என்று எல்லாவற்றுக்குமே மொபைல் ஆப், கூகிள் மேப் தேவை.

இவ்வளவு பந்தோபஸ்து பண்ணியிருந்தாலும், முழங்காலுக்குக் கீழே கால்களுக்கு கோட் பாதுகாப்பு இருக்காது. முழுவதும் கோட் போட்டால் நடப்பது எப்படி? அதனால் கண்டிப்பாக ஜீன்ஸ் பாண்ட் மாதிரி திக்கான உடைதான் போட வேண்டும். அதற்கு உள்ளே தெர்மல் என்று சொல்லப்படும் உள்ளாடையும் தேவைப்படும், நம் உடல் சூட்டைப் பாதுகாக்க. இதில் எப்படி நம் ஊர் உடை அணிய முடியும்?

6 மாதங்கள் ஒரே மாதிரி கோட்டுடன் சுற்றுவது சலிப்பாக இருக்கும். வெயில் காலத்தில் பல வண்ண உடைகளில் இங்கு பெண்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கும்.

இன்னொரு மிக முக்கியமான தேவை ஸ்னோ பூட். ஸ்னோ இல்லாத நாட்களில் சாக்ஸ், ஓரளவு தடிமனான ஷூ போதுமானது. பனி பெய்யும்பொழுது குளிர் அதிகம் தெரியாது, அதன் மேல் ஸ்னோ பூட் போட்டுக்கொண்டு சுலபமாக நடக்கலாம். அப்பொழுது வழுக்கவும் செய்யாது. ஆனால், பனி பொழிந்து சாலையில் உறைய ஆரம்பிக்கும்போது தான் நிஜமான பிரச்னை ஆரம்பிக்கும். குளிர் கடுமையாக இருக்கும், அதில் காற்றும் வீசினால் முடிந்தது கதை. பனி உறைந்து கெட்டியாகக் கல் மாதிரி ஆகிவிடும். அதில் விழுந்தால் எலும்பு உடைந்துவிடும். பின்னர் பனி உருக ஆரம்பிக்கும்போது, வெள்ளை நிறம் கறுப்பாக மாறி, கண்ணுக்கும் தெரியாது, கால் வைத்தால் சறுக்கிவிடும். ஐஸ் ஸ்கேட்டிங் அனைவருக்கும் இலவசம், தடுமாறி விழுந்தால் எலும்பு முறிவுக்கு அரசாங்கம் பொறுப்பல்ல. கணவன், மனைவி கைகளைப் பிடித்துக்கொண்டு காதலர்கள்போல் நடப்பது இங்கே தவிர்க்க இயலாது!

அரசாங்கத்துக்கு எவ்வளவு வேலை இருக்கிறது? பனி பெய்தவுடன் வண்டிகள் செல்ல சாலையைச் சுத்தம் செய்ய வேண்டும். நடைபாதையைச் சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் என்னதான் கார்களில் வின்டர் டயர் போட்டிருந்தாலும், பிரேக் பிடிக்காமல், விபத்துக்குள்ளாக நேரிடும். நடக்கும்பொழுது ஸ்னோ பூட் உள்ளே தண்ணீர் இறங்கி, கால் விரல்கள் குளிரில் விறைத்து, ரத்தம் உறைந்து, வலி உயிர் போய்விடும். பனியைச் சுத்தம் செய்ய மனிதர்களுடன் இயந்திரங்களும் வேலை செய்யும்.

பெரிய அபார்ட்மெண்ட்களில் பராமரிப்புக்குப் பணம் செலுத்திவிட்டால், வீட்டைச் சுற்றி இருக்கும் பொது இடங்களில், ஆள் வைத்து துப்பரவு வேலைகளைச் செய்வார்கள். அரசாங்கத்தால் சாலையை மட்டும்தான் பராமரிக்க முடியும். தனிப்பட்ட வீடுகளைச் சுற்றி இருக்கும் பொது இடத்தைச் சுத்தம் செய்யும் பொறுப்பு அந்தந்த வீட்டு உரிமையாளரைச் சார்ந்தது. தவறினால் கடுமையான அபராதம் உண்டு. இந்த மாதிரி நாடுகளுக்குச் சுற்றுலாவாகச் செல்வது சுகம். ஆனால், அங்கேயே வாழ்வது அசௌகரியம்தான். ஆனால், எங்குதான் அசெளகரியம் இல்லை! கனடாவில் இயற்கையால் விளையும் அசெளகரியத்தைப் பொறுத்துக்கொள்ளவும் ரசிக்கவும் நம்மால் முடியும் என்பதுதான் உண்மை.

(தொடரும்)

தொடரின் முந்தைய பகுதிகள்:

கட்டுரையாளர்

பிருந்தா செந்தில்குமார்

பிருந்தா தமிழ்நாட்டில் பிறந்து, சென்னையில் படித்த இளங்கலை வணிகவியல் பட்டதாரி. ஐடி துறையில் சுமார் 20 வருட காலமாக பணிபுரிந்து வருகிறார். தற்போது வேலை நிமித்தமாக 21/2 வருடங்களாக கனடா மிசிசாகா என்னும் நகரத்தில் வசித்து வருகிறார்.

படிக்கும்போதும், வேலை செய்யும் இடத்திலும் தெளிவாக கருத்துகளை பகிர்ந்து கொள்வதாக கிடைத்த பாராட்டுகள் மற்றும் கோவிட் காலத்தில் உறவினர்கள் அளித்த ஊக்கத்தில், முதன்முதலாக தன் கனடா அனுபவத்தை எழுத்தில் பதிவிட்டிருக்கிறார்.