முன் குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல, வெளிநாடுவாழ் தமிழரின் அனுபவப் பதிவு.

ஐடி துறையில் வேலை செய்பவர்களிடையே அமெரிக்கக் கனவு மிகவும் பிரபலம். அவ்வப்போது அந்தக் கனவிற்கு இடையூறு ஏற்படும்போதெல்லாம் அத்தகையோரின் அடுத்த புகலிடம் கனடா.

குளிர் அதிகம். மக்கள்தொகை குறைவு. அதிலும் இளைஞர்களின் விகிதம் குறைவு. ஏனென்றால் பிறப்பு, இறப்பு இரண்டுமே குறைவு. அதனால் வேலை, படிப்பு, தொழில், அகதிகளாக என மக்கள் எப்படி வந்தாலும் இரு கரம் நீட்டி வவேற்கிறது தற்போதைய லிபரல் கட்சி அரசாங்கம். நான் நடுத்தர வயதில் வேலை நிமித்தமாக தமிழ்நாட்டிலிருந்து கனடாவிற்கு வந்தேன் என்று சொன்னால், நான் ஐடி துறையில் அமெரிக்க கிளையண்ட்டுக்கு வேலை செய்கிறேன் என்று நீங்கள் யூகிக்க உங்களுக்கு ஆரூடம் தெரிய வேண்டியதில்லை.

PC: Wallpapercave

முதல் முறை கனடா போகிறீர்கள் என்றால் கோடைக்காலமாகப் பார்த்துச் செல்ல வேண்டும் என்று பலரும் சொன்னார்கள். அதெல்லாம் நம் கைகளிலா இருக்கிறது? இழுத்தடித்து விசா வந்தாலும் ஆபிஸில் ஆயிரத்தி எட்டு ஃபார்மலிட்டீஸ். இதில் கொடுமை என்னவென்றால் போவோமா, இல்லை கடைசி நிமிடத்தில் கேன்சல் ஆகிவிடுமா என்று தெரியாது. சில லட்சத்துக்கு ஷாப்பிங் செய்துவிட்டு, கனடா போகிறேன் என்று ஊர் முழுவதும் சொல்லிவிட்டு, ஃப்ளைட் ஏறப் போகும் அன்று பயணம் ரத்தான கதைகள் ஏராளம். அதனால் யாரிடமும் சொல்லாமல் ஊரை விட்டு ஓடுவது போல் கிளம்ப வேண்டியதாகிவிட்டது!அதுவும் கடுங்குளிர்காலம் எங்களை வரவேற்கக் காத்திருந்தது!

2018அக்டோபர். முதன்முதலில் மேற்கத்திய நாட்டிற்கு நீண்ட தூர விமானப் பயணம். உயரம் என்றால் பயம் என்பதற்காக அதிகம் வெஸ்டர்ன் டாய்லெட் கூட உபயோகித்ததில்லை நாங்கள். விமானப் பயணம் புதிதில்லை என்றாலும் கண்ணை மூடிப் பார்த்தால் அப்பத்தாவும் நாரதரும் கைகோத்துச் செல்லும் காட்சி தோன்றவே, அருகே இருக்கிறது என்று இப்படியே உன்னிடம் அழைத்துவிடாதே கடவுளே என்று வேண்டிக்கொண்டு புறப்பட்டோம்.

எப்படி இவ்வளவு நேரம் தொடர்ந்து ஒரே இருக்கையிலேயே உட்கார்ந்து அல்லது படுத்தே இருப்பது? இவ்வளவு சிறிய கழிப்பறையை எப்படி உபயோகப்படுத்துவது? தண்ணீர் என்பது மருந்துக்கும் இல்லாதபோதும் வாஷ்ரூம் என்கிறார்களே ஏன்? முக்கியமான டாகுமெண்ட்கள் இருக்கும் ஹேண்ட் லக்கேஜை யாரும் மாற்றி எடுத்துவிடமாட்டார்களா? சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களில்கூட நம் சாப்பாடு ஏன் கொடுப்பதில்லை… என்று பேரழகன் படத்தில் வரும் சின்னா கேரக்டர் மாதிரி விடாமல் கேள்விகள். ஆனால், முகத்தை மட்டும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் வைத்துக்கொண்டு, ஒருவழியாக வந்து சேர்ந்துவிட்டோம்.

பிரம்மாண்டமான ஏர்போர்ட், ஏராளமான விமானங்கள், எல்லாக் கலாச்சாரங்களிலும் முகங்கள். யாரைப் பார்த்தாலும் கனடாவைப் பற்றி நன்கு அறிந்தவர் போன்று தோன்றியது. எங்களைப் போல யாருமே முதல்முறை வருபவர்கள் இல்லையோ! யாரும் திருதிருவென்று விழிக்கவே இல்லை. எனக்கு முன்பு இங்கே வந்த என் அலுவலக நண்பர் , எல்லா விவரங்களையும் தெளிவாகச் சொல்லியிருந்தார். எல்லா இடங்களிலும் சைன்போர்டுகளும் இருந்தன. ஆனாலும் குழப்பத்துக்குப் பஞ்சமேயில்லை. யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொண்டால்தான் எளிதாகப் புரியும். அப்படியே பழகிவிட்டோம். இங்கே அப்படி யாரிடமும் கேட்க முடியாது. கேட்டாலும் சைன் போர்டைப் படிக்கச் சொல்வார்கள். அல்லது வெப்சைட்களிலும், கையிலும் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்களை பார்க்கச் சொல்வார்கள். (முதல் பல்பு!)

டொரொன்டோ விமான நிலையம்

வேலை நாட்களில் வந்தால் முக்கியமான குடியேற்ற டாகுமெண்ட்டை ஏர்போர்ட்டிலேயே பெற்றுக்கொள்ளலாம் என்று வந்துவிட்டோம். அதனால் எங்களை அழைத்துச் செல்ல நண்பரால் வர இயலவில்லை. விடுமுறை நாட்களில் பெரும்பாலும் எந்த டிபார்ட்மெண்ட்டும் இயங்குவதில்லை என்பது ஒரு பெரிய சோதனையாகத் தோன்றும், இங்கு வந்த புதிதில். ஒரு வழியாகப் பெட்டிகளைத் தேடி எடுத்து, ஃபார்மாலிட்டீஸ் முடித்து, வெளியே வந்தோம்.

டாக்ஸி நிற்கும் இடத்தில் வரிசையாக வண்டிகள், எங்களுக்கு முன்னே வந்து நின்ற ஒரு வண்டியில் எறினோம். பெரிய பெட்டிகளை பின்னால் ஏற்ற மட்டும் டிரைவர் உதவி செய்தார். மற்றவற்றை நாங்களே ஏற்றி, சீட் பெல்ட் போட்டுவிட்டு அமர்ந்தோம். இங்கே பேரம் பேசுவதற்கு இடம் இல்லை என்பதால், அலுவலகம் ஏற்பாடு செய்து கொடுத்த ஹோட்டலின் முகவரியைச் சொன்னவுடன் கார் கிளம்பியது.

மேப்பில் முகவரி போட்டு, அது காட்டும் வழியில் கொண்டுவந்து சேர்த்துவிட்டால், மீட்டரில் காட்டும் பணத்தை கார்டில் செலுத்திவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும். குளிர்காலம் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டிருந்தபடியால், மரங்கள் எல்லாம் திருப்பதிக்கு போய்விட்டு வந்த மாதிரி மொட்டையாக நின்றுகொண்டிருந்தன. மேகமூட்டத்தால் நண்பகல் நேரம் குறைவான வெளிச்சத்துடன் இருந்தது.

மிசிசாகா பனிக்காலம்

பிரம்மாண்டமான ஹைவேயில் சரசரவென்று சீறிப் பாயும் கார்களை வாய் பிளந்தபடியே பார்க்க ஆரம்பித்து 10 நிமிடங்கள்தான் ஆகியிருக்கும். அதற்குள் வந்துவிட்டது ஹோட்டல். இவ்வளவு பக்கமா என்று ஆச்சரியத்துடன் மீட்டரைப் பார்த்தால், 50 டாலர்களைக் காட்டியது. 20 கிலோமீட்டருக்கும் குறைவு. ஹைவேயில் குறைந்தபட்ச வேகம் மணிக்கு 80 கி.மீ. அதனால் 15 நிமிடங்களுக்குள் வந்துவிடலாம். நகர வீதிகளில் இருந்து தனியாக இருக்கும் ஹைவே. ஒருவழிப் பாதைக்கு மட்டும் 3-4 வழித்தடங்கள் இருக்கும், சந்திப்புகளில் மட்டுமே சிக்னல். அதனால் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் போவதெல்லாம் சர்வ சாதாரணம். கார் மற்றும் சாமான்களின் அளவு, செல்லும் வழி பொறுத்து 40-50 டாலர்கள் ஆகும் இந்தத் தூரத்திற்கு. இது இந்திய மதிப்பில் சுமார் 2750 ரூபாய். இப்படிக் கணக்கு போட்டே மலைத்துப் போவதும் சகஜமான ஒன்று, இங்கு வந்த புதிதில்!

தங்கும் அறை மிகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முதலில் நேரே ரெஸ்ட்ரூமிற்குள் நுழைந்தேன். முன்பே அறிந்திருந்தாலும், தண்ணீர்விட்டுக் கழுவ முடியாது டிஷ்யூ பேப்பரில்தான் துடைத்துக்கொள்ள வேண்டும் என்ற சங்கடம் காத்திருந்தது. இனி இதையெல்லாம் பழகிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.

அடுத்தது ஜெட்லாக். சுமார் 13,000 கி.மீ. தூரத்தைக் கடந்து வந்திருக்கிறோம். கற்பனைக்கு மட்டுப்படாத தூரம். என் ஆச்சி ஒருமுறை, “சின்ன வயசுல உன் மாமாகிட்ட எந்த ஊருக்குப் போவேன்னு கேட்டால், மெட்ரா…….ஸ்ன்னு ரொம்ப நீட்டிச் சொல்வான். அவ்ளோ தூரம் என்ற தொனியில்” என்று சொல்லியிருக்கிறார். எங்கள் ஊர் வைகை ஆற்றங்கரையில் இருக்கும் மானாமதுரை. அங்கிருந்து இரவு ரயில் ஏறி ஒரு தூக்கம் போட்டால், அதிகாலை சென்னை வந்துவிடலாம். சுமார் 500 கி.மீ. அதைப் போல் கனடா சுமார் 28 மடங்கு அதிக தூரம். ஆனால், சுமார் 21 மணி நேரத்தில் வந்துவிட முடிகிறது.

இதற்கு முன் ஒருமுறை ஜப்பானுக்குப் போன போது சுமார் 11 மணிநேரப் பயணம், மூன்றரை மணிநேரக் காலமாறுபாடு ஒரு பெரிய குழப்பமாக இல்லை. ஆனாலும் நள்ளிரவில் பிரயாணம் என்பதால், பகலில் தூக்கம் தூக்கமாக வந்தது. இப்பொழுது (நல்லவேளையாக ஹாங்காங் வழியாக வங்காளவிரிகுடாவுக்கு மேலே குறுக்குவழியில் வந்ததால்) 21 மணிநேரப் பயணம் மற்றும் 10.5 மணிநேர காலமாறுபாடு, நள்ளிரவு 1 மணிக்கு புறப்பட்ட விமானம், கேட்கவா வேண்டும்!

பயாலஜிகல் க்ளாக் சாப்பாடு, தூக்கத்துக்கு வேளாவேளைக்கு டான்டானென்று மணியடித்ததா இல்லை வேளை புரியாமல் குழம்பியதா என்று நினைவில்லை. விமானத்தில் அவர்கள் கொடுக்கும் நேரத்தில், சாப்பிட முடிந்ததைச் சாப்பிட்டுத் தூங்கியதில், ஒன்றும் புரியவில்லை. ஜெட்லாக் குறித்த அறிவு எவ்விதத்திலும் குழப்பத்தைத் தீர்க்க உதவவில்லை, முதல்முறை அதை அனுபவிக்கும்போது. பயணநேரக் கணக்குப்படி பார்த்தால் இரவு ஆகியிருக்க வேண்டும். ஆனால், சுமார் அரை நாள் அதிகரிப்பதாலும் பிற்பகலில் வந்து சேர்ந்ததாலும் வேளைக்கணக்கில் குழப்பம். அறிவுக்கும் ஐம்புலன்களுக்கும் நடக்கும் சண்டையைக் கண்டுகொள்ளாமல், இரவு வரை காத்திருந்து, கொஞ்சமாகச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கலாம் என்றால் தூக்கம் வராது. அது பாவம், விடிந்துவிட்டது என்று திருதிருவென்று விழித்திருக்கும். பகலில் தூக்கம் வரும்போது, ஒரு வாரத்துக்குக் கட்டுப்படுத்திக்கொண்டால், பிறகு நம் பயாலஜிகல் க்ளாக்கும் கனடா நேரத்துக்கு டியூன் ஆகிவிடும்.

அனுபவங்களை அலசுவோம்!

கட்டுரையாளர் குறிப்பு

பிருந்தா தமிழ்நாட்டில் பிறந்து, சென்னையில் படித்த இளங்கலை வணிகவியல் பட்டதாரி. ஐடி துறையில் சுமார் 20 வருட காலமாக பணிபுரிந்து வருகிறார். தற்போது வேலை நிமித்தமாக 21/2 வருடங்களாக கனடா மிசிசாகா என்னும் நகரத்தில் வசித்து வருகிறார்.

படிக்கும்போதும், வேலை செய்யும் இடத்திலும் தெளிவாக கருத்துகளை பகிர்ந்து கொள்வதாக கிடைத்த பாராட்டுகள் மற்றும் கோவிட் காலத்தில் உறவினர்கள் அளித்த ஊக்கத்தில், முதன்முதலாக தன் கனடா அனுபவத்தை எழுத்தில் பதிவிட்டிருக்கிறார்.