Decision Making

சிறுவன் ஒருவன் தந்தையுடன் பிரபலமான சாக்லேட் கடைக்குச் சென்றான். அங்கு பலதரப்பட்ட சாக்லேட்கள் விற்பனைக்கு வைக்கபட்டு இருந்தன. தந்தை அவனுக்கு ஒரு நிபந்தனை விதித்தார், ஒரு நுழைவாயிலில் நுழைந்து அடுத்த நுழைவாயில் வழியாக வெளியேற வேண்டும், கடந்து போன இடத்திற்கு மறுபடியும் வரக் கூடாது. அவனுக்கு மிகவும் பிடித்த வகை சாக்லேட்டை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

சிறுவனுக்கோ ஒரே சந்தோஷம், துள்ளலுடன் கடைக்குள் சென்றான். முதல் பிரிவில் பார்த்த சாக்லேட் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனாலும் இதைவிடச் சிறப்பாக ஏதும் இருக்கும் என்கிற எண்ணத்தில் அடுத்த பிரிவுக்குச் சென்றான். அங்கு அதைவிடச் சிறந்த வகைகள் இருந்தன. ஆனாலும் சிறுவனால் முடிவெடுக்க இயலவில்லை, இன்னும் சிறப்பானது கிடைக்கலாம் எனத் தேடித் தேடி, கடைசியில் வெளியேறும் வாயிலுக்கே வந்துவிட்டான். ஆனால், தந்தையின் நிபந்தனையின் காரணமாக அவனால் ஒரு சாக்லேட்கூட வாங்க முடியவில்லை.

அந்தக் கடைதான் நம் வாழ்வு, ஒரு போதும் கடந்து போன நாள்களைத் திரும்பிப் போய் வாழ முடியாது. அந்த அந்த தருணத்திற்கு ஏற்றவாறு நாம் எடுக்கும் முடிவுகள் நம் வாழ்வின் பாதையைத் தீர்மானிக்கும்.

காலையில் கண் விழித்ததில் இருந்து நாள் முடியும் வரை நாம் பல சிறிய பெரிய முடிவுகளை எடுக்கிறோம். சிறிதோ பெரிதோ ஒவ்வொரு முடிவுக்கும் விளைவுகள் இருக்கும்.

எப்படி அந்தச் சிறுவனைப் போல முடிவே எடுக்காதது நன்மை செய்யவில்லையோ, அதேபோல் அவசர முடிவெடுப்பதும் பிரச்னைதான். சரியான முடிகளைச் சரியான நேரத்தில் எடுப்பதே வாழ்வின் வெற்றியைத் தீர்மானிக்கும்.

அதிலும் முடிவு சரியானதா, இல்லையா என்பது அதை எடுக்கும் நேரத்தில் நமக்குத் தெரியாது. கையில் இருக்கும் தகவல்களின் அடிப்படையில், நம் விருப்பம், குறிக்கோளின் அடிப்படையில்தான் நாம் செயல்பட முடியும்.

சரியான முடிவு வெற்றியைத் தரும், அது அல்லாத முடிவு அனுபவத்தைத் தரும் என்கிற மனநிலையும் அவசியம்.

முடிவெடுக்கும் திறன் என்பது ஆராய்ந்து, போதுமான தகவல்களைத் திரட்டி, அனைத்து தீர்வுகளையும் அலசி, சரியான ஓன்றைச் சரியான நேரத்தில் எடுப்பது.

இங்கு முதல் கேள்வி நம் முடிவுகளை நாம் எடுக்கிறோமா என்பது. நாம் எடுக்கும் முடிவிற்கே நாம் பொறுப்பேற்க முடியும். அது தவறாகும்பட்சத்தில் மாற்று வழியைச் சிந்திக்க முடியும். பெற்றவர்கள், அறிஞர்கள், கற்றவர்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள் ஆலோசனைகள் சொல்லலாம். ஆனால், அனைத்தையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியவர்கள் நாம்தான். இதைச் சின்னச் சின்ன முடிவுகளில் பழகும்போதுதான் வாழ்வை மாற்றக் கூடிய விஷயங்களில் நாம் தடுமாற்றமின்றி செயல்பட முடியும்.

அடுத்த கேள்வி எதன் அடிப்படையில் நாம் முடிவெடுக்கிறோம்?

பிறரின் அறிவுரை?

நமது விருப்பம்?

தகவல்களின் அடிப்படையில்?

இவை எல்லாமே சிறிய முடிவுகளுக்குப் பொருந்தலாம். ஆனால், வாழ்வின் போக்கை மாற்றக்கூடிய முக்கிய முடிவுக்கு மேற்கூறிய அத்தனையையும் உபயோகபடுத்துதல் நலம்.

இப்படி அனைத்து வழிமுறையையும் கையாளும்போது எப்போதும் சரியான முடிவுதான் எடுப்போமா என்றால் சிலநேரம் அதுவும் இல்லை. ஆனால், குறைந்தபட்சம் தவறாகப் போனால் எப்படிச் சரி செய்வது என்கிற தெளிவு இருக்கும்.

எப்போதும் சரியான முடிவெடுக்க…

  1. கூர்சிந்தனைத் திறன் (Critical thinking)
  2. ஆராய்ச்சி மனப்பான்மை (Research Mentality)
  3. உணர்வுசார் நுண்ணறிவு (Emotional Intelligence) மிகவும் அவசியம்.

எப்போதும் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யும் திறந்த மனமும், அவ்வப்போது நாம் நினைத்த பாதையில்தான் வாழ்க்கை செல்கிறதா என எடை போடும் அறிவும் ஒருவேளை அப்படி இல்லையெனில் மாற்றுவழியைக் கையாளும் மன திண்மையும் வெற்றியைத் தரும்.

சரியாக முடிவெடுக்கப் பல வழிமுறைகள் இருந்தாலும் PMI (Plus Minus Interesting, நன்மை, தீமை, சுவாரசியம்) வழிமுறை எளியது, பயனுள்ளது. எந்த ஒரு முடிவெடுக்கும் தருணத்திலும் இருக்கும் அத்தனை தேர்விற்கும் (options) நன்மை, தீமை, சுவாரசியமான விஷயம் என்ன என்று பட்டியலிடும்போது உங்களின் தேவைக்கு எந்த முடிவு சரிய என்பது புலப்படும்.

வாங்க சரியான நேரத்தில், சரியான முடிவை எடுக்கலாம், வாழ்வை ஜெயிக்கலாம்!

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.