அன்புள்ள அண்ணா,

என் நண்பன் சிரிலும் நானும் இணை பிரியாத நண்பர்கள். சிறு வயது முதலே மிகவும் நெருக்கமாக இருப்போம். எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்வோம். யாராவது ஒருவர் வீட்டில் இருவரும் சேர்ந்து சாப்பிடுவது, படிப்பது, உறங்குவது என்று ஒன்றாகவே இருப்போம்.

சிரிலுக்கு அண்மையில் திருமணமாகிப் புகுந்த வீட்டுக்குச் சென்றுவிட்டான். இதே ஊரில்தான் இருக்கிறான் என்றாலும் அவனைப் பார்க்கவே முடியவில்லை. அவனைக் காணச் சென்றால் அவனது மாமனார், மாமியார் எல்லாரும் புடைசூழ அமர்ந்துகொள்கின்றனர். அவன் பதவிசாக காபி கொண்டுவந்து கொடுத்துவிட்டுச் சம்பிரதாயமாகப் பேசுகிறான். இது பற்றி அவனிடம் போனில் கேட்டாலும், இனிமேல் இப்படித்தான் இருக்கும். உனக்கும் கல்யாணம் ஆனா புரியும் என்கிறான். “அவங்களுக்கு ரொம்ப நேரம் நான் ப்ரெண்ட்ஸ் கிட்ட பேசுனா பிடிக்காது” என்று தன் மனைவியைக் காரணம் காட்டி போன்கூட அதிகம் செய்வதில்லை.

என் நண்பனை இழந்துவிட்டேனா?

வருத்தத்துடன்

விஷால்

அன்புள்ள விஷால்.

வாழ்க்கையின் யதார்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய வயதில் இருக்கிறீர்கள். உங்கள் நண்பருக்குத் திருமணமாகி ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்துள்ளது. அவரது மகிழ்ச்சியைத் தள்ளி நின்று வாழ்த்துங்கள். ஒரு வீட்டுக்கு வாழப் போய்விட்ட அவருக்கு இனி மனைவியையும் மாமனார், மாமியாரையும் வீட்டையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்புகள்தாம் அதிகம் இருக்கும். அதை நீங்கள்தான் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை எனும் ஆதங்கத்தில்தான் இப்படி நண்பரைப் போட்டுப் பிடுங்குகிறீர்கள்.

வாரமொரு முறை உப்பில்லாமல் விரதமிருந்து ஜலபுலஜங்கி ஜாய்பாபாவை வழிபட்டு வாருங்கள். நிச்சயம் உங்களுக்கும் உங்கள் நண்பரைப் போன்று நல்ல வாழ்க்கை கிடைக்கும்.

அன்புடன் அண்ணா

அன்புள்ள அண்ணா,

எனக்குத் திருமணமாகி எட்டாண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. என் மாமனார், மாமியார் என்னை மட்டும் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். என்னைப் பரிசோதித்த மருத்துவர் பெரிதாக எந்தப் பிரச்னையும் இல்லை, ஆனால் விந்தணு இன்னும் அதிகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அந்த ஒரு வார்த்தையைப் பிடித்துக்கொண்டு என் மாமனாரும் மாமியாரும் என்னைத் தினந்தோறும் கேவலமாகப் பேசி மனம் நோகச் செய்கின்றனர்.

போதாக்குறைக்கு, அந்தக் கோயில் இந்தக் கோயில் என்று இழுத்துச் செல்வதும், விரதம் இருக்க வைப்பதும் என்று கொடுமைப்படுத்துகின்றனர்.

பகல் முழுவதும் வேலை செய்து களைத்த எனக்கு இரவில் செயல்படச் சோர்வாக இருக்கிறதென்று சொல்வதை மனைவையும் கேலி செய்து இழிவுபடுத்துகிறார். அவர் இது வரை மருத்துவப் பரிசோதனையே செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை லேசாகச் சுட்டிக் காட்டினேன். ருத்ர தாண்டவமே ஆடிவிட்டார்கள் அவளும் அவள் அப்பா, அம்மாவும்.

மகளிடம் எந்தக் குறையும் இருக்காது என்று தீர்மானமாக நம்பி என்னைத் தள்ளி வைத்துவிட்டு, என் மனைவிக்கு இன்னொரு திருமணம் செய்யும் ஏற்பாட்டில் இறங்கி இருக்கிறார்கள்.

உதவி ப்ளீஸ்.

ராதாகிருஷ்ணன்,

மைலாப்பூர்

அன்புள்ள ராதாகிருஷ்ணா,

உங்கள் நிலைமை கண்ணீரையே வரவழைக்கிறது. இக்காலத்து ஆண்கள் பலருக்கும் உங்கள் பிரச்னை இருக்கிறது. சிலருக்குத் தயிர்சாதம் அதிகம் சாப்பிடுவதால் இப்பிரச்னை இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளார்கள்.

அதிகப் பிரசங்கித்தனமாக உங்கள் மனைவியை மருத்துவப் பரிசோதனை செய்யச் சொல்லி நீங்கள் சொன்னது இமாலயத் தவறு. தன் மகளிடம் குறை என்றால் எந்தப் பெற்றோரால் அதைத் தாங்கிக்கொள்ள முடியும்? அப்படி அவசியம் என்றால் உங்கள் வீட்டுப் பெரியவர்கள் மூலம் அழைத்துச் சொல்லிக் காட்டி இருக்க வேண்டுமே ஒழிய, வீட்டின் மாப்பிள்ளை அடக்கமில்லாமல் இப்படிப் பேசி விட்டீர்களே.

சில விஷயங்களில் இந்த அண்ணாமலை சொல்வதை நம்புவதைவிட, அந்த ஆண்டவள் மீது பாரத்தைப் போட்டு விடுவது மேல். கடுமையான விரதங்களையும் வழிபாடுகளையும் மேற்கொள்ளுங்கள். கடவுள் கண் திறக்க வழியுண்டு.

அனுதாபங்களுடன்

அண்ணா

அன்புள்ள அண்ணா,

என் மனைவி மிகவும் நல்லவர். ஆனால், சமையலில் சிறு குறைகள் இருந்தாலும் மிகவும் கோபம் வந்துவிடுகிறது. என்னைத் திட்டுவதோ அடிப்பதோ கிடையாது. ஆனால், மௌனமாகச் சாப்பாட்டை அப்படியே வைத்துவிடுகிறார்.

நான் நன்றாகவே சமைப்பேன். ஆனால், சில நேரம் முருங்கைக்காய்த் துண்டில் நார் ஒட்டி இருந்தாலோ, முட்டைகோஸ் பொரியலில் பெரிய துண்டுகள் இருந்தாலோ அளவில்லாத கோபம் வந்துவிடுகிறது. இன்று காலை தோசைக்கு வைத்த சட்னியில் ஒரு துண்டு தேங்காய் கிடந்ததென்று சாப்பிடாமல் போய்விட்டார்.

என் துயர் தீர்க்க வழி சொல்லுங்கள் அண்ணா.

அன்புடன் ஜாஃபர்

அன்புள்ள ஜாஃபர்,

சமையல் செய்தால் மட்டும் போதாது. அதில் அன்பும் அக்கறையும் கலந்து செய்தால்தான் குறையில்லாமல் செய்ய முடியும். உங்கள் மனைவி மிகவும் நல்லவர் என்பதால் தனது மனக்குறையை மௌனமாகவே உங்களுக்குப் புரிய வைக்கிறார்.

உப்பு சற்றுக் குறைந்தாலே தட்டைத் தூக்கி வீசும் மனைவியர் இருக்கும் சமூகத்தில்தான் வாழ்கிறோம் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

இன்னும் சற்றுச் சீக்கிரம் எழுந்து சிரத்தையுடன் சமையல் செய்யப் பழகுங்கள். சித்திரமும் கைப்பழக்கம்.

அன்புடன் அண்ணா

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.