அடுக்களை டூ ஐநா- 16
வாழ்க்கையில் முதன்முறையா 102 மாடிக்கு ஏறின பிரமிப்பு மாறாம, மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி உறங்காநகர்ல இரவு உலா வந்தாச்சு. எங்கூர்ல எட்டு நாள் வீரபாண்டித் திருவிழா இப்படித்தான் விடிய விடிய களைகட்டும். மாரியாத்தாவும், மேரியம்மாவும் ஒண்ணுதாங்கற நம்பிக்கையோட மத வேறுபாடு இல்லாம லட்சக்கணக்கான கூட்டம் அள்ளும். ஓ ஜீஸஸ்னு சொல்லிக்கிட்டே கும்பல்ல இடிபடற அக்காக்களையும், முகம் காட்டாத பர்தா போட்ட மாமிகளையும் பார்க்கலாம்.
அடுத்த வருசத் திருவிழா வரைக்கும் அந்த கூட்டமும், நெரிசலும், மல்லிகைப்பூ வாசமும் , தூங்காமக் கொள்ளாம வேடிக்கை பார்த்த கரகாட்டமும், ராட்டினமும், மரணக் கிணறும், கடல்கன்னியும், மேஜிக்கும் மனசுக்குள்ள கெறங்கடிக்க, அடுத்த வருசத் திருவிழாவுக்கு மனசு ஏங்கிப் போய்க் கெடக்கும். ‘இங்க வருசம் பூரா வீரபாண்டித் திருவிழா கூட்டம் போல இருக்கே, அலுத்துப் போயிடாது?’ன்னு நெனச்சுக்கிட்டே ரூமுக்கு வந்திட்டோம். சாமக்கோழி போல முழிச்சிட்டு இருக்கிற மன்ஹட்டன் காலங்கார்த்தால எப்படி இருக்கும்? அதையும் பார்த்திடலாம்னு மறுநாள் காலைல அஞ்சு மணிக்கெல்லாம் நானும், சசி மேடமும் மட்டும் வாக்கிங் கிளம்பிட்டோம்.

விடிய விடிய கும்மாளமிட்ட களைப்பில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது நகரம். மனசோரத்தில லேசா எட்டிப் பார்த்த பயத்தை, இந்த ரிஸ்க்கெல்லாம் நமக்கு ரஸ்க்கு தானன்னு சமாதானப்படுத்திட்டு நடக்கிறோம். அந்த நேரத்துக்கே தெருக்கள் அவ்வளவு சுத்தமாக இருந்தது. ஒரு தூசி, தும்பு பார்க்க முடியல. இரவே எல்லாரும் கறுப்புநிற பாலிதீன் பைகளில் குப்பைகளை பேக் பண்ணி வீட்டுக்கு வெளியே வைச்சிடறாங்க. சாலை துப்புரவுப்பணிகளை இரவுப் பணியாளர்கள் செய்து முடிச்சிடுவாங்களாம். அதனால அதிகாலையில் சுத்தமான சாலைகளைப் பார்க்கமுடியுது. (சென்னையில் பரபரக்கும் பீக் அவர்ல, ஓரிடத்தில் வாரி தெருவெங்கும் குப்பைகளை விதைத்துச் செல்லும் குப்பை லாரிகள் கண்ணுக்குள்ள பளிச்சினு வந்திட்டுப் போச்சு)
செப்டம்பர் மாதத்திய பனி வீட்டு வாசல்களில் விதவிதமாய் வித்தை காட்டியிருந்தது. திருவல்லிக்கேணி தெருக்கள் போல அகல அகலமான தெருக்களில் ரசனையோடு கட்டப்பட்ட அழகான வீடுகளை ரசிச்சிக்கிட்டே போய்…போய்….போய்… பாதை மாறிட்டோம். ஒண்ணும் புரிபடல. ஆள் நடமாட்டமும் இல்லை. திருதிருனு முழிச்சிகிட்டே, ஒரே தெருவை சுத்தி சுத்தி வர்றோம்.
தூரத்தில் ஒருத்தர் வர நான் வேகமாப் போய், ‘எக்ஸ்க்யூஸ்மி சார்’ னு வழிகேட்பதற்காக கூப்பிட, திரும்பிப்பார்த்தவர் அடுத்தகணம் பேயைப் பார்த்தவர் போல விருட்டென பின்னால் நகர, அவர் முகத்தில் ஒரு வெறுப்பு தெரியுது. தூள் பட ஜோதிகாக்கு போல நமக்கு முகத்தில யாரும் கோலம் போட்டுட்டாங்களோன்னு நான் குழம்ப, சசி மேடம், “ ரமா ரமா” னு பதறியடித்து என்னை பின்னால் இழுக்கறாங்க. எங்களைத் திரும்பிக்கூட பார்க்காமல் அந்த மனுசன் ஏதோ திட்டிகிட்டே போயிட்டாரு. கையை பிடித்து இழுத்த சசி மேம், “அமெரிக்கால சகஜமா யார்ட்டயும் போய் பேசிடக்கூடாது, நாம பேசறத அவங்க விரும்ப மாட்டாங்க” னு முட்டுக் கொடுக்க ஒரே குழப்பம் எனக்கு.
வழிகேட்கத் தானே போனேன் ? மொளகாயக் கடிச்சாப்பல மண்டையில உறைக்குது. அய்யோடீ..”கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரெல்லாம் தமிழ் சினிமா ஹீரோக்களுக்குத்தான் (கவனிக்க…ஹீரோயின்கள் தமன்னா கலர்ல இருக்கணும்ங்கறது தான் ஒலக நியதி ). ஆனா, அமெரிக்காவோட வரலாறே நிறவெறியால் எழுதப் பட்டதுதான்.
‘நேஷனல் பப்ளிக் ரேடியோ’ எடுத்த ஆய்வின்படி அமெரிக்காவில் இப்பவும் 45 சதவீத ஆப்ரிக்க அமெரிக்கர்களும் 18 சதவீத ஆசிய அமெரிக்கர்களும் போலீஸ், பணியிடம், ஊதியம், வாடகைவீடு, மருத்துவமனைகள் போன்ற இடங்களில் இனப் பாகுபாட்டால் பாதிக்கப்படறாங்களாம்.

1960கள் வரை ஹோட்டல், தியேட்டர், நீச்சல்குளம் னு மக்கள் கூடும் பொது இடங்களில் Whites only வெள்ளையர்கள் மட்டும்ங்கற போர்டே இருந்துச்சாம். ( ஞாபகம் வருதா..ஞாபகம் வருதா…தமிழ் நாட்டிலிலும் ‘ப்ராமணாள் மட்டும்’ அறிவிப்பு பலகை ஞாபகம் வருதா??)
அன்று, வெள்ளை அமெரிக்கர்களுக்கு பல்வேறு சலுகைகள் சட்டப்பூர்வமாக வழங்கப்பட, சிறுபான்மை குழுக்களுக்கு அச்சலுகைகள் மறுக்கப்பட்டன. இன்று காட்சிகள் மாறினாலும், புதிய சட்டங்களின் கீழ் வெள்ளை நீதிபதிகள் வெள்ளை நிறவெறிக்கு ஆதரவாகத்தான் இடம்சுட்டி, பொருள்விளக்கி நீதி வழங்குகிறார்களாம். ஆனால் தங்கள் நாட்டின் உல வணிகம் கொழிக்க எதையும் செய்யத் துணியும் அமெரிக்காவின் புஜபல பராக்கிரம ராஜ தந்திரங்கள் எல்லாருக்கும் தெரிஞ்சது தான?
அரசன் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழி… அதனால்தான், அங்கிருக்கும் அத்தனை ஊடகங்களுக்கும் முதலாளிகளாகக் கோலோச்சும் வெள்ளையர்கள், தங்கள் ஊடகங்கள் மூலம் ஒபாமாவை டார்லிங் ஆகக் கொண்டாடி அதிபராக்கியதும் கூட நிற அரசியல் மட்டுமல்ல, காசு, பணம், துட்டு, மால் அரசியலும் கூட.
“ஏழைநாடுகளின் மனதில் பதியும் ஒரு நெருக்கமான முகத்தை அதிபராக்கி விட்டுத்தான் இன்றைக்கு (2014) அமெரிக்காவிலும், தென் ஆப்பிரிக்காவிலும் கறுப்பர்கள் ஆண்டு கொண்டிருக்க, வெள்ளை முதலாளிகள் சொத்துக்களை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள்” அப்படினு நான் சொல்லலங்க; மெத்தப் படிச்ச எக்கனாமிஸ்ட்டும் , சர்வதேச அரசியல் தெரிஞ்ச சமூகவியலாளர்களும் சொல்றாங்க. அதுமட்டுமல்ல, ஊரும் சேரியுமாய் பிரிந்து வாழும் அநாகரிக வழக்கம் இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் உண்டு. அதனால, (நிற) ‘வெறிபிடிச்ச’ “ அமெரிக்காவுல இதெல்லாம் சகஜமப்பா”ன்னு போக வேண்டியதுதான்.
ஆனா, ரஜினி கலர்ல இருக்கிற நானும், கமல் கலர்ல தகதகன்னு மின்னுற சசி மேமும் இவங்க கண்ணுக்கு ப்ரௌன் தானாம். ஆசியர்கள் எல்லோருமே ஒரே இனம் தானாம். “சரி, சரி காந்திக்கு தென்னாப்ரிக்காவுல நடந்தது நமக்கு அமெரிக்கால நடந்திருக்குனு வரலாறு சொல்லட்டும்”னு , உள்ள பொங்கி வந்த அவமானத்தை சிரிச்சுகிட்டே ரெண்டு பேரும் தொடைச்சிப் போட்டுட்டோம். சரி இப்போ எப்படி ரூமுக்கு போறது?
‘எங்கே செல்லும் இந்த ப்பாஆஆதை னு’ பாடிட்டே இலக்கின்றி நடக்க, ” குட்மார்னிங் லேடீஸ்”னு குரல் கேட்டு திரும்பினால், மீண்டும் ஒரு அமெரிக்கர். அவரைப் பார்த்ததும் நான் சூடு கண்ட பூனையாகப் பதுங்க, “ டு யூ வான்ட் எனி ஹெல்ப்”னு சிரிச்சிக்கிட்டே அவர் கேட்க, அவரிடம் நாங்க தொலைந்து போன கதையைக் கூற, “கம், லெட்ஸ் கோ”னு சிரிச்சுகிட்டே எங்களை ஹோட்டல் வரை வந்து விட்டுட்டுப் போனார் . ஐயோ…நிறவெறி பற்றி மூச்சு பிடிக்க யோசிச்சது வீணாப் போச்சேனு நினைச்சிகிட்டே ரூமுக்கு வந்து மீண்டும் ஏழுமணிக்கு கிளம்பியாச்சு.
எனக்கு இன்றைக்கு மாலையும், சசி மேடமுக்கு நடு இரவும் ப்ளைட் என்பதால் காலையில் சென்ட்ரல் பார்க் மட்டும் மூவரும் ( நான், சசி மேம், ஜாகூர் ) சேர்ந்து போவதென்றும், அதன்பிறகு என்னைக் கழற்றி விட்டுட்டு அவங்க ரெண்டு பேர் மட்டும் சுதந்திரா தேவி சிலை பார்க்கப் போறதாகவும் மாஸ்டர் ப்ளான் போட்டோம். சுதந்திரா தேவி சிலை தான் என்னோட முதல் சாய்ஸ் ஆக இருந்தாலும், அது 11 மணிக்குப் பிறகுதான் திறக்கப்படும் என்பதால் என்னோட ஆசையை புத்த பிரான் வழியில் துறந்திட்டு, மூணு பேரும் கிளம்பி அங்கங்கே வேடிக்கை பார்த்திட்டு, குட்டி குட்டியா பைனல் ஷாப்பிங்கை முடிச்சிட்டு ஐந்தாவது அவென்யூவுல நுழையறோம்.
மிகப் பிரம்மாண்டமாக ஒரு கட்டிடம். முகப்பே கண்ணைப் பறிக்குது. ஒரு கிலோ ஆப்பிள் வாங்கவே ஆயிரம் ரோசனை பண்ற எங்கண்ணு முன்னால ஆப்பிள் நிறுவனத்தோட ஷோ ரூம், என்னா அழகு… முன்புறமிருக்கும் கண்ணாடியிலாலான க்ளாஸ் க்யூப், வாயிலின் ஒவ்வொரு பக்கமும் 32 அடியாம். அந்த பிரம்மாண்டமும், கண்ணாடியிலுள்ள மிகப் பெரிய ஆப்பிள் லோகோவின் அழகும் தெருவில ச்செவனேன்னு பராக்கு பாத்திட்டு போறவங்களைக்கூட “வா வா”னு உள்ள இழுக்குது.

சில நாள்களுக்கு முன்பு- செப்டம்பர் 19 ல தான் ஐ போன் 6 மற்றும் 6 ப்ளஸ் அறிமுகப் படுத்தப் பட்டிருந்ததாலோ என்னமோ திருப்பதில லட்டுக்கு நிக்கறது போல அம்புட்டு கூட்டம். ம்ம்ம்ம்ம்…..ஐபோன் வாங்கறது, ஒங்களுக்கு மதுர பொருட்காட்சில பொம்ம போன் வாங்கறது போல ஆகிப் போச்சு. கெரகம்…. தம்பி கணேஷ்பாபு , அமெரிக்காவுல போன் வெல சல்லிசா இருக்கும், வாங்கிட்டு வாங்கனு காசு கொடுத்து விட்டுருந்தான். சரி வந்ததுக்கு பந்தாவா ஒரு போனை வாங்குவோம்னு வெலையை கேட்டா, இந்திய விலையை விட அதிகமா சொல்றான். .
எல்லாப் பொருளுமே உற்பத்தி செய்யுற இடத்தில ஏன் விலை அதிகமா இருக்குங்கற வியாபார ரகசியம் மட்டும் இன்னும் புரிய மாட்டேங்குது! கம்பெனிக்குக் கட்டுபடியாகாத விலைங்கறதால டாட்டா காட்டிட்டு வெளியே வந்திட்டோம். நியூயார்க்ல செல்பிப் புள்ளகளையும் போட்டோமேனியா, சீனியர் சிட்டிசன்களையும் அதிகமாகக் கவர்ந்த இடமாம் இது. ஆசை என்னவோ உள்ள போய் சிக்ஸ் ப்ளஸ் வாங்கத்தான் , ஆனா கொடுப்பினை என்னமோ வாசல்ல நின்னு போட்டோவுக்கு போஸ் கொடுக்கத்தான். நம்ம குலவழக்கம், பாரம்பர்யம், சம்பிரதாயம் மாறாம அந்த பிரம்மாண்ட படிகளில் உட்கார்ந்து நாங்களும் எங்களை டிஜிட்டல்ல பதிவு பண்ணி கடமையை ஆத்தியாச்சு.
அடுத்து, மன்ஹட்டனின் புகழ்பெற்ற சென்ட்ரல் பார்க் . 843 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. உலகிலேயே அதிக அளவு மக்கள் வருகை தரும் நகரப் பூங்கா…. உலகிலேயே அதிக படப்பிடிப்பு நடைபெற்ற பூங்கா.., வருடத்திற்கு 42 மில்லியன் மக்கள் வருகைதரும் பூங்கா… னு ஏகப்பட்ட கா…கா…கா கொண்டது.

மிகப் பெரிய ஏரி, இயற்கையாக உருவான சரணாலயம், நீர்த்தேக்கம், செம்மறியாட்டுப் புல்வெளி, மால், ஹோட்டல், தியேட்டர் னு இயற்கையும் , செயற்கையுமா கலந்து கெடந்தாலும் நம்ம கொடைக்கானல் ப்ரையண்ட் பார்க் போல மனசைக் கவரல. நாங்க போகும்போது ஏரியாவே பரபரப்பா இருந்திச்சு. ஏதோ மேடை போட்டுட்டு இருந்தாங்க. நாளை மறுநாள் அதாவது செப்டம்பர் 28 அன்று இந்தியப் பிரதமர் மோடி, பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனா, உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம், நார்வே, நேபாளப் பிரதமர்கள், ஆங்கில நடிகர்கள் ஹியூ ஜாக்மேன், ஆல்பா போன்ற இசையமைப்பாளர்கள், 60000 பொதுமக்கள் என ஒரு பிரம்மாண்டமான விழா (குளோபல் சிட்டிசன் பெஸ்டிவல்) நடக்கப் போகுதாம். 2030 க்குள் உலகிலிருந்து வறுமையை ஒழித்தல்ங்கற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கூட்டத்தில் நம்ம தல பேசினது தான் சூப்பர் டூப்பர் ஹைலைட்டுனு பிறகு தெரிஞ்சிகிட்டேன். (ம்ம்ம்ம்ம்ம்…அன்னிக்கு சுட ஆரம்பிச்ச வடை……).
அம்மாம் பெரிய பார்க்க சுத்திப் பார்க்க முடியாம கொஞ்ச நேரம் உலாத்திட்டு வெளியேறிட்டோம். பிறகென்ன..அவசர அவசரமா ரூமுக்கு ரிட்டர்னிங்…..அரைகுறை ஈட்டிங்…..மூட்டை முடிச்சு பேக்கிங்…..சசி மேம் ஹக்கிங்….ரெண்டு சொட்டு கண்ணீர் ட்ராப்பிங்…. ஏர்போர்ட் கிளம்பிங்…..தான்…. வழக்கம்போல ஏர்போர்ட் சடங்குகளை அட்சரம் பிசகாம முடிச்சிட்டு அதே AI001 ப்ளைட்…அதே வசீகரிக்கும் ஏர்ஹோஸ்டஸ்….(அன்னிக்கு வந்த க்ரூப் இன்னிக்குத்தான் திரும்பறாங்களாம்) என்னை அடையாளம் கண்டு ஆச்சரியமாகப் பார்த்து விசாரித்து கனிவுடன் அமரவைக்க, நான்கு நாள் ஓய்வில்லா ஓட்டமும், நடையுமான நிகழ்வுகளால் சோர்ந்து போயிருந்த உடலுக்கு ஓய்வைக் கொடுத்து, என் முன்னாலிருந்த ஸ்க்ரீனில் தமிழ்ப் பாடலை ஓடவிட்டேன். பஞ்சு மிட்டாய் கலர் சட்டையில் ராமராஜன் பாடிக் கொண்டிருந்தார்.
அமெரிக்காவே என்றாஆ ஆ லும், அட நம்ம ஊரு போல வருமா…….
- அடுத்த தொடரின் தொடர்வோம்!
தொடரின் முந்தைய பகுதி:
படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இந்தத் தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்!