அந்தக் குட்டிப் பொண்ணை மறக்க முடியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்திற்கு இணையருடன் சென்றிருந்தபோது அவளைப் பார்த்தேன். எங்கள் நண்பரின் வீட்டுக்கு வந்திருந்த ஒரு நண்பரின் மகள். ஏழெட்டு வயதுதான் இருக்கும். புத்திசாலி என்பது பேச்சில் தெரிந்தது. அந்த வயதுக்கே உரிய குழந்தைத்தனமும் துறுதுறுப்பும் சுட்டித்தனமும் மிஸ்ஸிங். ஒருவித அமரிக்கைத்தனத்துடன், கிட்டத்தட்ட மாடல் போல நிதானமான, ஒயிலான நடை. பேச்சில் தன்னம்பிக்கை இருந்தாலும் வயதுக்கு மீறிய நளினமும் முகபாவனைகளுமாக இருந்தாள்.

பேசிக்கொண்டிருக்கும்போது, ‘‘பெரியவளானதும் என்னவாகப் போகிறாய்?’’ என்ற அரதப்பழசான கேள்வியை அந்தக் குட்டிப் பெண்ணிடம் கேட்டேன். ‘‘எனக்கு கேத்ரினா கைஃபை ரொம்பப் பிடிக்கும். அவர் போல ஆக வேண்டும்” என்றாள். “ஓ. நடிகையாக ஆசையா உனக்கு?” என்றேன். “நடிகைதான் ஆகவேண்டும் என்பதில்லை. ஆனால், அவர் போல மென்மையான முகம், வழவழப்பான கை, கால்களுடன் இருக்கணுங்கறதுதான் என்னோட ஆசை” என்றாள். “அந்த மாதிரி ஆவதற்கு என்னென்ன க்ரீம் போடணும், எப்ப போடணும்? என்றெல்லாம் இப்பவே தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறாள்” என்று `பெருமையுடன்’ சொன்ன அவள் அம்மா, “இப்பவே வாங்கித்தரச் சொல்றா, நாந்தான் இன்னும் ரெண்டுமூணு வருஷம் போகட்டும்னு சொல்லியிருக்கிறேன்” என்றார். அவள் வயதுக்கு வந்தததும் வாங்கித் தருவாராக இருக்கும்.

‘நீ அழகாக இருக்க வேண்டும். முகமும் கை, கால்களும் பளபளவென்று ஜொலிக்க வேண்டும்’ என்பதைத்தானே டிவி விளம்பரங்களும் அச்சு ஊடகங்களும் திரைப்படங்களும் நம் பெண் குழந்தைகளிடம் சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஆணாதிக்க சமுதாயமும் குடும்பங்களும் அதை நூலிழை பிசகாமல் அப்படியே பிரதிபலிக்கின்றன. வயதுக்குவரும் வரை பெண் குழந்தை எப்படி இருக்கிறாள் என்பதைப் பற்றி யாரும் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. அதுவரை அந்தக் குழந்தை தன் விருப்பம் போல உடையணிந்து, விளையாடி, உடலைப் பற்றிப் பெரிய கவனம் இல்லாமல் சுதந்திரமாக இருக்கும். வயதுக்கு வந்தவுடன் எல்லோரும் அறிவுரை சொல்லத் தொடங்குவார்கள். ‘நாளைக்கு இன்னொருத்தன் வீட்டுக்குப் போற பொண்ணு’ என்று திரும்பத் திரும்பச் சொல்லி பியூட்டி பார்லர் போய் புருவத்தைத் திருத்திக்கொள்ளவும் கடலைமாவு, முல்தானி மட்டி, பாலேட்டை முகத்தில் அப்பிக்கொண்டு பளபளப்பாகவும் ஆலோசனை சொல்வார்கள். முடியை வளர்க்கச் சொல்லி அறிவுறுத்துவார்கள். தோல் கறுப்பாக இருக்கும் பெண் குழந்தைகள் என்றால், இன்னும் ஒருபடி மேலே போய் முகத்தைச் சிவப்பாக்கும் க்ரீம்களை வாங்கிக் கொடுத்து பூசிக்கொள்ளச் சொல்வார்கள். அடித்தட்டு பெண்களும் உழைக்கும் வர்க்கப் பெண்களும்தாம் இதிலிருந்து தப்பிப்பார்கள்.

வயதுக்கு வந்த பிறகு, பெண் குழந்தையின் அழகைக்கூட்ட விழுந்து விழுந்து கவனிப்பதெல்லாம், கல்யாணச் சந்தையில் அவள் ‘மதிப்பைக்’ கூட்டத்தான். அவள் படித்திருக்கிறாளா, வேலை பார்க்கிறாளா, ஆளுமை மிக்க தைரியமான பெண்ணா… இதெல்லாம் முக்கியமில்லை. அவள் அழகாக இருக்கிறாளா என்பதுதான் இங்கு மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது, கொண்டாடப்படுகிறது. இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தில், ஆணைக் கவரக்கூடிய அழகுடன் பெண் இருப்பதுதான், கல்யாணச் சந்தையில் முதல் தகுதியாகப் பார்க்கப்படுகிறது. அவள் அழகைக் கூட்ட என்னென்ன மேக்கப் சாதனங்கள் உண்டோ அத்தனையும் பயன்படுத்துவார்கள்.

கல்யாணம் வரைதான் இந்த மேக்கப் பொருட்களா என்றால் இல்லை அதற்குப் பிறகும் பயன்படுத்துவார்கள். மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று கணவரும், மருமகள் அழகாக இருக்க வேண்டும் என்று மாமியார், மாமனாரும், அம்மா அழகாக இருக்க வேண்டும் என்று குழந்தைகளும் ஆசைப்படுவதால், தன்னை அழகுபடுத்திக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் கிட்டத்தட்ட வாழ்நாள் முழுக்கப் பெண்ணுக்குத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

Indian woman putting on a lipstick

முடியிலிருந்து அடி வரை பெண்ணுக்கான மேக்கப் பொருட்கள்தாம் எத்தனை! கிட்டத்தட்ட அங்குலம் அங்குலமாக அலங்கரிக்க எத்தனைவிதமான பொருட்கள். தலைமுடிக்கு ஷாம்பு – அப்படிப் பொத்தம்பொதுவாகச் சொல்லக் கூடாது, வறண்ட கேசத்திற்கு ஒன்று, எண்ணெய் பிசுக்கான முடிக்கு வேறொன்று, பொடுகிருந்தால் தனிரகம் என்று பிரித்துப் பயன்படுத்த வேண்டுமாம். ஷாம்புக்குப் பிறகு முடியை மென்மையாக்க கண்டிஷனர், சிக்கு இல்லாமல் கேசம் பளபளக்க சீரம். முகத்திற்கு – சோப்பு கூடாது, தோல் வறண்டுவிடும் என்று ஃபேஸ் வாஷாம். இதிலும் தோலின் தன்மைக்கு ஏற்றவாறு பலவகைகள். முகம் கழுவியவுடன் மாய்ஸ்சரைசர் க்ரீம் (தோலை ஈரப்பதத்துடன் வைக்க), அதற்குப் பிறகு ஃபவுண்டேஷன், அதற்கு மேல், நிறத்திற்கு ஏற்ற பவுடர், கண்ணுக்கு ஐ-லைனர், ஐ-ஷேடோ, புருவத்தைத் திருத்த பென்சில், கன்னக் கதுப்பை சிவப்பாக்க தனி வஸ்து, மூக்கின் மேலுள்ள கருந்துளைகளை மறைக்க ஒன்று, உதட்டுக்கு லிப்ஸ்டிக்… வாசிக்கவே களைப்பாக இருக்கிறதா? இருங்க தோழர்களே, முகம் மட்டும்தான் முடிந்திருக்கிறது. அடுத்தது, முகத்தோடு சேரும் வகையில் கழுத்துக்கும் முதுகின் மேற்புறத்திற்கும் மேக்கப். அதற்குப் பிறகு கைகள், இவற்றிலுள்ள முடிகளை அகற்ற வேக்ஸ்சிங், பிறகு மாய்ஸ்சரைசர் (முகத்திற்குத் தனி, கைகால்களுக்குத் தனியாம்), நகங்களுக்கு நெயில் பாலிஷ் என்று தொடர்கிறது மேக்கப் பயணம். பிறகு கால்களுக்கு வேக்ஸ்சிங், மாய்ஸ்சரைசர், பாதங்களில் வெடிப்புகள் வராமல் இருக்க க்ரீம், கால்விரல் நகங்களுக்கு நெயில்பாலிஷ் என்று முடிகிறது. இதில் மேக்கப் பொருட்களை மட்டும்தான் சொல்லியிருக்கிறேன். முடிக்கு ஆயில்மசாஜ், முக அழகைக் கூட்ட ஃபேஷியல், ஃபேஸ்பேக், புருவத்தைத் திருத்த, உதட்டுக்கு மேலுள்ள பூனைமுடியை அகற்ற த்ரெட்டிங், கைகளுக்கு பெடிக்கியூர், கால்களுக்கு மேனிக்கியூர் என்று பியூட்டி பார்லரில் செய்யும் அழகூட்டல் முறைகள் தனி. மார்பு சிறிதாக இருந்தால் கூட்டிக் காட்ட பேடட் பிரா, துப்பட்டா இல்லாத குர்த்தி மற்றும் டி-ஷர்ட் அணியும் போது போடும் டி-ஷர்ட் பிரா (நிப்பிள் என்றழைக்கப்படும் மார்பின் முனை துருத்திக்கொண்டு தெரிவதைத் தவிர்க்க), வயிறு தெரிந்தால் அதை பின்னே தள்ளி இறுக்கிப்பிடிக்கும் டம்மி ஷேபர் என்று உடை தொடர்பான எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸ் வேறு.

மேக்கப் சாதனங்கள் உள்ளிட்ட பெண்ணின் உடலை முன்வைத்து நடத்தப்படும் வர்த்தகத்தின் மதிப்பு பல்லாயிரக்கணக்கான கோடிகள். இதில் பெண்கள் அணியும் தங்க நகைகள், செயற்கை நகைகளையும் அவர்கள் உடைகளையும் பாதணிகளையும் சேர்க்கவில்லை. கணக்குப் போட்டுப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. இவ்வளவும் பெண் அழகாகக் காட்சியளிப்பதற்கு மட்டும்தானா? அப்படி எனக்குத் தோன்றவில்லை. அவள் கவனத்தை அழகைப் பேணுவதில் திருப்பச் செய்து, தன் அறிவிலும் பணியிலும் ஆற்றலிலும் ஆளுமையிலும் முழுக்கவனத்தையும் செலுத்தவிடாமல் செய்வதுதான் ஆணாதிக்கச் சமுதாயத்தின் தந்திரமாக இருக்கிறது. தற்சார்புடைய சிந்திக்கும் பெண்ணால், சமுதாயத்தின் ஆணாதிக்கமும் ஒடுக்கும் மதமும் கொடுமையான ஜாதியக்கட்டமைப்பும் சிதைந்துவிடுமே என்ற பயம்தான் இதற்குக் காரணம்.

வயது வந்த ஆண் குழந்தைக்கோ வளர்ந்த ஆணுக்கோ அழகு என்பதற்கு எந்த அளவீட்டையும் பொதுப்புத்தி நிர்ணயிக்கவில்லை. அவனுக்கு எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அவன் தோல் கறுப்பாக இருந்தாலும் சிவப்பாக இருந்தாலும் குட்டையாக இருந்தாலும், நெடுநெடுவென உயரமாக இருந்தாலும் குண்டாக இருந்தாலும் ஒல்லியாக இருந்தாலும் எந்தப் பிரச்னையும் இல்லை. அவன் நன்கு படித்திருக்கிறானா, நல்ல வேலைக்குப் போகிறானா என்பது மட்டுமே கல்யாணச் சந்தையில் முதல் தகுதி. இந்தத் தகுதியை ஆண் தன் முயற்சியால் வளர்த்துக்கொள்ளலாம். ஆனால், பெண்ணுக்கு நிர்ணயிக்கப்படும் ‘அழகு’ என்ற தகுதியை அவள் தன் முயற்சியால் வளர்த்துக்கொள்வது கடினம். சமுதாயம் குறிப்பிடும் ‘அழகை’ பிறப்பிலேயே பெற்றிருப்பவர்களை விடுங்கள், அவர்கள் சிறுபான்மைதான். நமது மண்ணின் தன்மைக்கேற்ப, இங்குள்ள பெரும்பான்மை பெண்களின் நிறம் கறுப்புதான். நமது மூதாதையர்களின் மரபணுவின்படிதான் பெண்களின் உடலமைப்பு இருக்கிறது. அப்படி இருக்கக் கூடாது, அழகுப்போட்டி கலாச்சாரமும் மேக்கப் உலக சந்தையும் ஊடகங்களும் திரைப்படங்களும் முன்வைக்கும் அளவீடுகளின்படி ‘அழகாக’ இருக்க வேண்டும் என்று திணிக்கப்படும் நிர்ப்பந்தம், பெண்களின் மீது ஏவப்படுகிற மறைமுக வன்முறை தோழர்களே. இதற்குப் பலியாவது நமது பெண் குழந்தைகள் தாம்.

ஆண் குழந்தையை, எப்படி அழகு பற்றிச் செயற்கையான கற்பிதங்கள் இல்லாமல் சுதந்திரமாக வளர்க்கிறோமோ, அதே போல் பெண் குழந்தையையும் வளர்க்க வேண்டும். தனது அறிவை, ஆரோக்கியத்தை, ஆற்றலை வளர்த்துக்கொள்ள அவர்களுக்குச் சொல்லித்தர வேண்டும் தோழர்களே. இங்கு ஆண் உழைத்தால் மட்டும் போதும், பெண்ணோ உழைப்பதோடு ‘அழகாகவும்’ இருக்க வேண்டியுள்ளது. அவளுக்கு இது மிகப்பெரிய சுமை.

தோழர்களே, அழகை ஆராதித்துதான் ஆகவேண்டும் என்ற அவசியமில்லை. பெண்களை உள்ளவாறே ஏற்றுக்கொள்வோம். இன்னொன்றையும் கூற வேண்டும். பெண்கள் மேக்கப் போடுவதும் போடாமல் இருப்பதும் தனக்குப் பிடித்த ஆபரணங்களை அணிந்துகொள்வதும் அணிந்து கொள்ளாமல் இருப்பதும் அவர்களுடைய உரிமை, விருப்பம். இரண்டில் அவர்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும் நாம் அவர்களைப் பகடி (shame) செய்யக் கூடாது தோழிகளே.

(தொடரும்)

படைப்பாளர்:

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருந்த தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.

ஹெர் ஸ்டோரீஸ் இணையதளத்தில் ‘கீதா பக்கங்கள்’ பகுதியில் இவர் எழுதிய காத்திரமான கட்டுரைகள், ‘துப்பட்டா போடுங்க தோழி’ என்ற பெயரில் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீட்டில் புத்தகமாக வந்து, மிக முக்கியமான பெண்ணிய நூல் என்கிற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது!