அகமதாபாத்தில் இருந்தபோது ஒருநாள் மதியம் எங்களை அவரது அறைக்கு வரும்படி அழைத்திருந்தார் பேராசிரியர். அங்கு சென்ற எங்கள் கண்கள் முதலில் பார்த்தது செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருக்கும் அந்தச் சிறுவனைத்தான். அவனது தோற்றத்தைப் பார்த்தால் அவனுக்கு ஏதும் பிரச்னை இருப்பதாகத் தோன்றவில்லை. ஒருவேளை அவனுடைய பெற்றோரில் யாருக்காவது ஏதேனும் பிரச்னை இருக்கக்கூடும். ஆதலால் தங்களைப் பரிசோதித்துக் கொள்வதற்காக வந்திருப்பார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால், பிரச்னை அந்தக் குழந்தைக்குதான் என்பது எங்களுக்குப் போகப் போகதான் தெரிந்தது. உடலளவில் எந்தப் பிரச்னையும் அவனுக்கு இல்லை. பிற குழந்தைகளைப் போலவே அந்தக் குழந்தையும் பார்ப்பதற்கு ஆரோக்கியமாகதான் இருந்தான். அவன் பெற்றோரையும் சேர்த்து நாங்கள் மொத்தம் 16 பேர் அந்த அறையில் இருந்தோம். ஆனால், அவன் எங்கள் யாரையும் கவனித்ததாகத் தெரியவில்லை. எங்கள் யாரையும் பொருட்படுத்தாது அவன் கேம் விளையாடிக்கொண்டிருந்தது சற்று விசித்திரமாக இருந்தது. பொதுவாகவே குழந்தைகள் சிறு சத்தங்களைக்கூட உன்னிப்பாகக் கவனித்து அதற்கேற்றபடி உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியவர்கள். அதுவும் கூட்டமாக இருக்கும் இடங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது பெரும்பாலான குழந்தைகள் மிரண்டு அழத் தொடங்கிவிடும். இது குழந்தைகளின் இயல்பு. ஆனால், நாங்கள் பார்த்த குழந்தையோ எந்த ஆரவாரமுமின்றி தனி உலகில் விளையாடிக் கொண்டிருந்தது.

அவனைப் பற்றி விசாரித்தபோது, அவன் பெற்றோர் சில விஷயங்களை எங்களோடு பகிர்ந்துகொண்டனர். அவனுக்கு ஒரு வயது முடிந்ததும், மற்ற குழந்தைகளைப் போல் பெயர் சொல்லி அழைத்தால் பதிலளிக்கவில்லை என்றும் முகத்திலும் அவன் உடலிலும் எந்தவித மாற்றங்களும் ஏற்படவில்லை என்றும் கூறினர். ஒருவேளை குழந்தைக்குக் காதில் ஏதும் பிரச்னை இருக்குமோ என்று சந்தேகித்து, குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கின்றனர். குழந்தையைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர் குழந்தையின் காதுகளில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று கூறியிருக்கிறார். கொஞ்ச நாட்களில் குழந்தையின் நடவடிக்கைகளில் சில மாற்றங்களை அவன் பெற்றோர் கவனித்துள்ளனர். குழந்தை அடிக்கடி கைகளைத் தட்டுகிறது, தான் அமர்ந்திருக்கும் இடத்தைச் சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி சுற்றுவதைப் போல் வட்டமிடுகிறது, கதவையோ ஜன்னலையோ ஓங்கிச் சாத்தும் போது எழும் ஓசைக் கேட்டால் மட்டும் திரும்பிப் பார்க்கிறது, அம்மா அப்பாவின் முகத்தைப் பார்த்துப் பேச மறுக்கிறது, இந்த வயதில் பிற குழந்தைகள் செய்யும் சமிக்ஞைகள், அதாவது டாட்டா சொல்லும்போது கையாட்டுவது முதலியவற்றைச் செய்ய மறுக்கிறது என்று உன்னிப்பாகக் கவனித்து, எங்களிடம் தெரிவித்தனர். இவை அனைத்தையும் குறிப்பு எடுத்துக் கொண்டிருந்த எங்களிடம் எங்கள் பேராசிரியர் இவை அனைத்தும், “ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஸார்டர் (Autism Spectrum Disorder – ASD) என்னும் குறைபாட்டினுடைய அறிகுறிகள்” என்றார்.

இந்தக் குறைபாடு நிறைய காரணங்களால் ஏற்படலாம், அதில் மரபணு மாற்றங்களும் அடங்கும். இந்தக் குறைபாடு ஏற்படுவதற்கான வேறு சில காரணங்கள் என்று சொல்லப்படுபவை சுற்றுச்சூழலும் உயிரியல் காரணிகளும். அவர்களால் மற்ற குழந்தைகளைப் போல் பிறரிடம் நட்பு பாராட்டவோ சகஜமாகப் பேசிப் பழகவோ முடியாது. அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு அவர்களுக்கான தனிப்பட்ட உலகில் வாழ்வர். இந்தக் குறைபாடுள்ள குழந்தைகளை ஒரு வயதிற்குள்ளாகவே கண்டறிய முடியும். சில குழந்தைகளுக்கு இரண்டு வயதிற்கு மேல்தான் இந்த அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும். அதுவரை மற்ற குழந்தைகளைப் போல் அவர்களும் சாதரணமாகவே அந்தந்த நேரத்திற்குரிய வளர்ச்சியோடு இருப்பர்.

அவர்கள் வளர வளர அந்தக் குழந்தைகளிடம் தெரியும் அறிகுறிகள் அதிகரித்துக்கொண்டே போகும். ஆட்டிசம் குறைபாடுள்ள ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். ஒரு குழந்தைக்கு இருக்கும் அதே அறிகுறி மற்றொரு குழந்தைக்கும் இருக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை. இந்தக் குறைபாடுள்ள குழந்தைகளின் வளர்ச்சி தாமதமாகும். குழந்தை நடப்பது, பேசுவது போன்றவற்றில் தாமதம் ஏற்படும். சில குழந்தைகள் அடிக்கடி தங்கள் உடலை உட்கார்ந்தபடியே முன்னும் பின்னும் அசைத்து ஆடிக்கொண்டிருக்கும். சில குழந்தைகள் அசாதாரண சுறுசுறுப்போடு இருக்கும். அதைக் கட்டுப்படுத்துவது கடினம். இதைத்தான் ஹைப்பராக்டிவிட்டி என்பர். மற்ற குழந்தைகளோடு ஒப்பிடுகையில் சில குழந்தைகளின் உணர்ச்சிகளில் நிறைய மாற்றங்கள் காணப்படும்.

இது போன்ற ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளுக்கு முறையான சிகிச்சை அளித்தால் மற்றவர்களைப் போல இவர்களும் ஒரு சாதாரணமான வாழ்க்கையை வாழ முடியும். இந்தச் சிகிச்சை முறை பல விதங்களில் வழங்கப்படுகிறது. அந்தக் குழந்தைகளின் நடவடிக்கைகளை மாற்றுவதற்கான சிகிச்சை, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கான சிகிச்சை, சமுதாயத்தில் மற்றவர்களோடு சகஜமாக பேசிப் பழகுவதற்கான சிகிச்சை, உளவியல் ரீதியான சிகிச்சை, வளர்ச்சி சார்ந்த சிகிச்சை, பிசியோதெரபி போன்றவற்றை உள்ளடக்கியவைதான் இந்த ஆட்டிசம் குறைபாட்டிற்கான சிகிச்சை முறை. இது போக மருந்து சிகிச்சையும் வழங்கப்படுகிறது.

தற்போது இருக்கும் சூழலில் ஆட்டிசம் குறைபாடு குழந்தைகளிடம் அதிகமாகக் காணப்படுகிறது. முன்பு சொன்னது போலவே இதற்கு இதுதான் காரணம் என்று குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது. இந்தக் குறைபாடுடைய குழந்தைகள் சமூகத்தில் எப்படிப் பார்க்கப்படுகிறார்கள் என்பதில்தான் நம் பொறுப்பும் அக்கறையும் இருக்கிறது. ஏற்கெனவே ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தையை உடைய பெற்றோர் அடுத்த குழந்தைக்குத் தயாராகும் போதும், கருவுற்ற பிறகும் மரபியல் ஆலோசகர்களின் ஆலோசனையையும் பரிந்துரைகளையும் பின்பற்றுவது அவசியம். அடுத்த குழந்தை ஆரோக்கியமாகப் பிறப்பதற்கு இது முதல் படி. குழந்தை பிறந்த பிறகு அதன் வளர்ச்சியைக் கண்காணிப்பது மிக மிக அவசியம். குழந்தை உரிய வயதில் பேசுகிறதா, உரிய காலத்தில் நடக்கிறதா, அந்தந்த வயதிற்குண்டான வளர்ச்சி குழந்தையிடம் இருக்கிறதா, குழந்தையின் நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றங்கள் தெரிகிறதா, குழந்தை சமிக்ஞைகள் செய்கிறதா, மற்ற குழந்தைகளோடு விளையாடுகிறதா, முகத்தைப் பார்த்து உரையாடுகிறதா, நாம் சொல்லும் விஷயங்களை அதன் வயதிற்கேற்ப புரிந்து, அதன்படி நடந்துகொள்கிறதா என்பது போன்றவற்றைக் கண்காணிப்பது மிகவும் முக்கியம். இது போன்ற ஆட்டிசம் குறைபாடுகளை விரைவில் கண்டறிவதற்கு இதுவே சிறந்த வழி.

ஆட்டிசம் குழந்தைகளால் மற்ற குழந்தைகளைப் போல் சாதாரண பள்ளிகளில் படிக்க முடியாது. முறையான சிகிச்சையோடு, அவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளில் அவர்களால் கல்வி பயில முடியும். ஆட்டிசம் குறைபாடுடைய நிறைய பேர் பல்வேறு துறைகளில் சாதித்திருக்கிறார்கள்.

இது போன்ற குறைபாடுகளைப் பற்றிய புரிதலும் விழிப்புணர்வும் மக்களிடையே ஏற்பட வேண்டும்.

(தொடரும்)

படைப்பாளர்:

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார்.