அவளுக்கு அப்பொழுது வண்ணக் கனவுகள் மின்னும் இளம் பருவம். வாழ்க்கைக் குறித்த எத்தனையோ லட்சியங்கள் வந்து வந்து போயின. பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தவள் கையோடு ஆசிரியர் பயிற்சியையும் முடித்தாள். காதல் என்கிற ஒன்று வாழ்வில் வரவில்லை. வரன் ஒன்றுதான் வந்தது. பேச்சு வார்த்தை என்று பெரியவர்கள் கலந்துரையாடலில் இருதரப்புக்கும் கல்யாணம் ஒப்புதலில்லை. சில மாதங்கள் உருண்டோட மீண்டும் அதே வரன் பெண் வீட்டாரைத் தவிர்த்து பெண்ணையே தொடர்பு கொண்டார்கள். மாப்பிள்ளை என்ன பேசினாரோ என்னவோ? பெண் அவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று ஒற்றைக் காலில் நின்றாள்.

திருமணம் எளிமையாக நடந்தது. சரியாக மூன்றே மாதங்கள்தான் இல்வாழ்க்கை. அப்புறம்தான் மாப்பிள்ளை வீட்டாரின் சுயமுகம் தெரியவந்தது. பெண்ணின் சம்பளத்துக்காகத்தான் அவளைத் திருமணம் செய்திருக்கிறார் மாப்பிள்ளை. அவரும் அரசுப் பணியில் உயர்ந்த பதவியில் இருப்பவர்தான். ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியையான அவரது மனைவிக்கு அவரைவிடக் கூடுதல் சம்பளம். இது அவரது தாழ்வு மனப்பான்மையைத் தூண்டியது. மனைவியை அதட்டி, அடக்க ஆரம்பித்தார்.

அவள் ஏதாவது செய்தால், “ஏன் எங்கிட்டே பர்மிஷன் வாங்க மாட்டியா? உன் படிச்ச திமிரைக் காட்டுறியா?” என்று கடிந்துகொள்ள ஆரம்பித்தார். அவரைக் கேட்காமல் அவள் ஒரு சானிடரி நாப்கின்கூட வாங்க முடியாது. “என்னைவிட அதிகம் சம்பாதிக்கிற திமிரு” என்பார் விட்டத்தைப் பார்த்துக் கொண்டு. போதாக்குறைக்கு அவரது அம்மாவும், “நைட்டி போடாதே… சுடிதார் போடாதே… அதெல்லாம் குடும்பப் பொண்ணுங்க போடுற துணியா? லட்சணமா புடவையைக் கட்டு” என்பார். கூடவே மாப்பிள்ளையின் சகோதரி வேறு அவரது மகன் இங்கு வளர்வதால் அவனைப் பார்க்க வரும் சாக்கில் வாரத்துக்கு நான்கு நாட்கள் அம்மா வீட்டில்தான் டேரா போடுவாள்.

இப்படியான சூழலில் அவள் கரப்பமானாள். வீட்டில் நாளொரு சண்டையும் பொழுதொரு பிரச்னையும் அதிகரித்துக்கொண்டிருந்தன. திருமணம் முடிந்து எண்ணி மூன்றே மாதங்களில் ஒருநாள் அவளைத் தவிர்த்து வீட்டார் அனைவரும் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். சற்று நேரம் கழித்து என்ன ஏதென்ற ஒரு சிறிய விளக்கம்கூடத் தராமல் அவளை இரு சக்கர வண்டியில் அமரச் சொன்ன கணவர், கொண்டு போய் அவளது அம்மா வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டார். காரணம் கேட்ட அவளிடம், “இங்கேயே இரு… நானே வந்து கூப்பிட்டுப் போறேன்” என்றார். சில நாட்கள் ஓய்வில் இருக்க கர்ப்பமான பெண்ணை அனுப்பி வைத்திருக்கிறார் என்று பெண் வீட்டார் நினைத்தனர். நாட்கள் வாரங்களாக உருண்டோட, பெண் வீட்டாருக்கு ஏதோ பொறி தட்டியது.

மாப்பிள்ளையைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் சரியாகப் பேசாததோடு அவர்களது தொலைபேசி அழைப்புகளையும் புறக்கணித்தார். இந்தப் பெண் பதற்றமாகி கணவரின் வீட்டுக்குப் போனார். வாசலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த கணவர், “உன்னை வரச் சொல்லலியே நான், எதுக்கு வந்தே?” என்று அவளது முகம் பாராது கேட்டார். “என்னங்க இது? ஒண்ணுமே சொல்லாம எங்கம்மா வீட்ல கொண்டு போய் விட்டீங்க… நீங்களே வந்து கூப்பிடுவீங்கன்னு பார்த்தேன். வரலை. அதான் நானே வந்துட்டேன்” என்றாள்.

“ஓ… உனக்குத் தெரியாதா? நான் உன்னை வேண்டாம்னுதான் உங்க வீட்ல கொண்டு போய் விட்டுட்டு வந்தேன். எதுக்கு இங்க வந்தே?” என்று சொன்னதைக் கேட்டு இடிந்து போய்விட்டாள். அவள் என்ன தப்பு செய்தாள் என்று தெரியவில்லை. கேட்டதற்கு, “உன் மேல எந்தத் தப்பும் இல்லை. எனக்கு நீ செட்டாகலை”என்கிற பதிலே விதவிதமான வார்த்தைகளில் வந்திருக்கிறது. பெரியவர்கள் போய் பேசியதில் அந்தப் பெண் தனது வேலையைவிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் மாப்பிள்ளை. தனது தந்தையின் மருத்துவச் செலவுகள், தாயாரின் உடல்நிலை ஆகியவற்றைக் காரணம் காட்டி அந்தப் பெண் வேலையை ராஜினாமா செய்ய ஒத்துக் கொள்ளவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

மாதங்கள் கடக்க மகள் பிறந்தாள். பிறந்த அன்று ஒரே ஒருமுறை‌ மட்டுமே யாரோ போல, குழந்தைக்கு ஆடை, பரிசு எதுவுமே வாங்காமல் ஒப்புக்கு வந்து கணவன் வீட்டார் பார்த்துச் சென்றனர். மகள் வளர, வளர அந்தப் பெண் வங்கிக் கடன், அப்படி இப்படி என்று பணம் புரட்டி சிறியதாக இரு படுக்கையறை கொண்ட ஒரு வீட்டையும் வாங்கிவிட்டாள். அவளது தந்தையும் இறந்துவிட்டார். தாயாரும் மோசமான உடல்நிலையில் இருந்தார். விவாகரத்து செய்ய கணவன் நோட்டீஸ் கொடுத்த போது இந்தப் பெண் மறுத்துவிட்டார். மீண்டும் சேர்ந்து வாழப் பேச்சு வார்த்தை நடந்தது. ‘வீட்டை விற்றுவிட்டு, வேலையை விட்டுவிட்டு, அவளது அம்மாவையும் வெளியே அனுப்பிவிட்டு, வேண்டுமானால் தன் வீட்டில் வந்து வசிக்கலாம். ஆனால், மனைவி என்கிற உரிமை எதுவும் கிடையாது. வேலைக்காரியாக இருந்து கொள்ளலாம் என்றார் கணவர். அம்மாவை நிர்கதியாகவிட மனமின்றி மறுத்துவிட்டாள் இந்தப் பெண். இதனிடையே மன அழுத்தம் காரணமாக அவளது உடல்நிலையும் மிகவும் மோசமடைந்தது.

இதனிடையே மகள் வயதுக்கு வந்துவிட்டாள். செய்தியறிந்த கணவன் வீட்டார் உடனே பழம், பூ, புடவை சகிதம் வந்து இறங்கினர். எதற்கென்று சின்னப் பிள்ளைக்குக்கூடத் தெரியும். ஆனால், இந்தப் பெண்ணுக்குப் புரியவில்லை. வந்தவர்கள் சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்துவிட்டனர். அதாவது கணவனின் சகோதரி மகனுக்கு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று உத்தரவு போட்டனர். இந்தப் பெண்ணுக்கு ஒன்றுமே புரியாமல் தோழியிடம் ஆலோசனை கேட்டாள்.

ஆரம்பத்திலிருந்து எல்லா விஷயங்களையும் அறிந்திருந்த தோழி அழுத்தந்திருத்தமாக, “வேண்டாம்னு சொல்லிருடி… நீ பட்ட கஷடமெல்லாம் போதாதா? இந்த சைக்கோ குடும்பத்துல உன் மகளையும் சிக்க வெச்சுறாதே” என்றாள். இந்தப் பெண் மறுக்கவே மீண்டும் பாராமுகமாகச் சென்று விட்டனர் கணவன் வீட்டார். அந்தக் குழந்தைக்கு சிறு செலவுகூடச் செய்யவில்லை அவர். இதனிடையே அந்தப் பெண்ணின் அம்மாவும் காலமானார். இவர்கள் இருவர் மட்டும் அமைதியாக வாழ்ந்து வந்தார்கள். அதுவும் நெடுநாள் நீடிக்கவில்லை. அந்தக் குழந்தை கல்லூரிப் படிப்பை முடித்த உடனே மீண்டும் புகுந்த வீட்டார் படையெடுப்பு. அவரது சகோதரி மகனும் படிப்பை முடித்துவிட்டு வேலையில் அமர்ந்திருந்தான். அதைக் காரணம் காட்டி மீண்டும் திருமணப் பேச்சு ஆரம்பித்தது. மாமியார் இந்த முறை இந்தப் பெண்ணின் காலிலேயே விழுந்துவிட்டார்.

“இவனுக்கு எங்கெங்கியோ பொண்ணு பார்த்தோம்… ஆனா எதுவும் அமையலை. உன் பெண்ணைக் கட்டிக் கொடு. நீயும் அங்கே வந்து உன் புருஷன்கூடக் குடும்பம் நடத்தலாம். உன் வீட்டை வாடகைக்கு விட்டுட்டு வந்திரு. எல்லாரும் சேர்ந்து இருக்கலாம்” என்றெல்லாம் கூறியிருக்கிறார். தோழியோ, “இது ஏதோ ப்ளான் மாதிரி தெரியுது. உன்னை இப்படி நடத்தியிருக்காங்க, இப்ப உன் பொண்ணோட வாழ்க்கையையும் அழிக்கத் திட்டம் போட்ருக்காங்க போலத் தெரியுது. சந்தோஷமா வாழுற நாட்களையெல்லாம் வீணடிச்சிட்டு, இத்தனை வயசுக்கு மேல நீ அவன்கூட என்னத்தைக் குடும்பம் நடத்தப் போறே? அவங்கம்மாவுக்கு இப்ப வேலை செய்ய முடியலை. சம்பளம் இல்லாத வேலைக்காரிகளா உங்களைக் கூட்டிட்டுப் போகப் போறாங்கன்னு தோணுது. தயவுசெஞ்சு ஒத்துக்காதே” என்று எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் தன் மகளை, கணவனின் சகோதரி மகனுக்குத் திருமணம் செய்து வைத்தாள்.

சரியாக ஒரே மாதம். அந்தக் கணவன் தன் மனைவியை மீண்டும் அவளது வீட்டுக்கே அனுப்பிவிட்டான். கேட்ட மகளையும், “உங்கம்மா வேலையை விட்டுட்டு வந்தா ஏத்துக்கிறேன். இல்லைனா உன்னையும் அவகூடவே அனுப்பிடுவேன்”என்று அதட்டி அடக்கி விட்டான். மகளின் வாழ்க்கை பாழாகி (இதுக்கும் மேலயா?) விடக்கூடாதே என்று அந்தப் பெண் இறுதியில் ஒரு லட்சத்தி முப்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிய வேலையை ராஜினாமா செய்தே விட்டார். அந்தக் கணவனின் ஈகோவுக்குத்தான் தீனி போட்டாயிற்றே. அப்புறம் எல்லாரும் ஒன்றாக வாழ்ந்தார்கள் என்று தானே நினைக்கிறீர்கள்? அங்குதான் ட்விஸ்ட். அந்த சைக்கோ கணவன் தன் மகளையும் மருமகனிடமிருந்து பிரித்து அவளது அம்மா வீட்டுக்கே அனுப்பிவிட்டார்.

இந்தப் பெண் எத்தனை படித்தவள்? நாலு பேருக்கு அறிவைப் போதிக்கும் ஆசிரியர் பணியில் இருந்தவள். ஆனாலும் ஆணாதிக்க சமுதாயம் வடிவமைத்த பெண்ணடிமைப் பிம்பமாகவே தான் இருந்ததோடு, தன் மகளையும் அப்படியே வளர்த்திருக்கிறாள். ஆரம்பத்திலேயே தனது உரிமைகளை, விருப்பங்களை அறிந்து, சுயமாக முடிவெடுக்கத் தெரியாமல், எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்துவிட்டு, அறிவுரை சொன்ன தோழியின் நட்பையும் புறந்தள்ளி விட்டு, தன்னைக் கொஞ்சம்கூடப் புரிந்து கொள்ளாத கணவனின் கிடைக்காத அன்பை (?) வேண்டி, புராணக்காலப் பெண்கள் போல நடந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? திருமணம் ஆகி மூன்றே மாதங்கள் மட்டும் இல்வாழ்க்கை நடத்தி, இதர காலம் முழுக்கத் தனிமையிலே காலம் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் என்ன? விரும்பாத கணவனை விவாகரத்து செய்துவிட்டு, தனக்குப் பொருத்தமான, மனதுக்குப் பிடித்த ஓர் ஆடவனைத் திருமணம் செய்துகொள்ள அவளைத் தடுத்தது எது? இந்த அத்தனை கேள்விகளுக்கும் ஒரே விடை இந்தச் சமுதாயம் வகுத்து வைத்த கட்டமைப்புகள்தாம். அவைதான் அந்தப் பெண் எந்தக் காரியம் செய்யவும் தடைக்கல்லாக இருந்தன. எந்தப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கட்டிக் காக்க அந்தப் பெண் இவ்வளவு பாடுபட்டாரோ அவையே இன்று அவளைக் கைவிட்டுவிட்டன. இதுதான் நிதர்சனம்.

இன்னும் கணவன் வீட்டார் என்ன செய்தாலும், “கொஞ்சம் பொறுத்துப் போம்மா” என்கிற அறிவுரை பெண்ணுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. கல்யாணத்தின் போதே கணவன் வீட்டாரின் அலப்பறைகள் ஆரம்பமாகிவிடுகின்றன. குங்குமச் சிமிழ் முதல் வெள்ளிச் செம்பு வரை பிரச்னைகள் செய்யப் பயன்படுகின்றன. இவற்றைத் தட்டிக் கேட்கப் பெண் வீட்டார் தயங்குகிறார்கள். ஒருவேளை திருமணம் நின்றுவிட்டால் என்ன செய்வது என்கிற அச்சம் அவர்களைச் சூழ்ந்துகொள்கிறது. அப்படியாவது அந்தத் திருமணத்தை நடத்தி அவர்கள் என்னதான் சாதிக்கப் போகிறார்கள்?. அப்படி ஒரு திருமணம் தேவைதானா என்று இன்றைய பெண்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். திருமணம் ஒன்றே வாழ்க்கையின் லட்சியம் அல்ல என்கிற தெளிவுக்கு இன்னும் பெற்றோர் வர மறுக்கிறார்கள். “காலாகாலத்தில் பொண்ணை ஒருத்தன் கையில புடிச்சுக் கொடுத்துடணும்” என்கிற அரதப் பழசான வசனத்தை இன்றைய இளம் தாய்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சி. காலம் தோறும் மாறுதல்கள் வந்துகொண்டே இருக்கும். அவற்றை ஏற்றுக்கொண்டு, அவற்றோடு ஒட்டி வாழ்பவர்கள் கால வெள்ளத்தில் பிழைத்துக்கொள்வார்கள். மற்றவர்கள் காணாமல் போய்விடுவார்கள். இதுதான் உண்மை. இப்போது என் கவலையெல்லாம் அந்தப் பெண் தன் மகள் விஷயத்தில் என்ன செய்யப் போகிறாள் என்பதுதான்.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.