மதர்ஸ் கில்ட் (mother`s guilt) எனப்படும் `தாய்க்கு ஏற்படும் குற்றவுணர்வு’ பெரும்பான்மை பெண்களுக்கு உள்ளது. `என் குழந்தையை இன்னும் சரியாக கவனித்திருக்க வேண்டும்’ என்ற உணர்வு, அந்த குழந்தை வளர்ந்து பெரிதாகி நல்ல நிலைமையில் இருந்தாலும், முதிய தாயின் அடிமனதில் உறுத்திக் கொண்டே இருக்கிறது.

குறிப்பாக வேலைக்குப் போகும் பெண்களுக்கும், ஒற்றைப் பெற்றோராக இருக்கும் பெண்களுக்கும் இந்த குற்றவுணர்வு அதிகமாக இருக்கிறது.

எப்படி இது ஆரம்பித்திருக்கும் ? இந்த ஆண்மைய சமூகம், பெண் வீட்டை விட்டு வெளியே போய் வேலை பார்ப்பதை விரும்பவில்லை. வீடுதானே அவள் வெளி, அதைவிட்டு போனால், வீட்டுவேலைகள் பாதிக்குமே… எதைக் காட்டி முடக்கிப் போடலாம் என்று யோசித்து, குழந்தையைக் கையில் எடுத்திருக்கிறது. பெரும்பாலும் பெண் வேலைக்கு போக ஆரம்பித்ததில் இருந்துதான், இந்த மதர்ஸ் கில்ட் பற்றி மீடியா அதிகமாக பேச ஆரம்பித்திருக்கிறது.

தாய்மை என்பது உணர்வுப்பூர்வமான விசயம் என்பதால் `நீ நல்ல தாயில்லை’ என்ற குற்றச்சாட்டு பெண்களை வெகுவாக பாதிக்கிறது, மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக பல பெண்கள் வேலையை விடுகிறார்கள். அவர்களின் வெளி வீடாக சுருங்கிவிடுகிறது. ஆணாதிக்க சமூகம் எதிர்பார்ப்பதும் அதைத்தானே?

ஒற்றைப் பெற்றோராக இருக்கும் பெண்கள், ஆண்மைய சமூகத்தின் ஆணிவேரை அசைக்கிறார்கள். அவர்கள் வேலைபார்ப்பதும், தன் விருப்பப்படி சுதந்திரமாக வாழ்வதும் சமூகத்தை தொந்தரவு செய்கிறது. `நீ அப்பா இல்லாமல் குழந்தையை வளர்க்கிறாய், அது தான் இப்படி அடம் பிடிக்கிறது. நீ பிரிந்து வந்தது தப்பு. குழந்தையை உன்னால் ஒழுங்காக வளர்க்க முடியவில்லை’ என்று குற்றம் சாட்டுகிறது.

எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு, வேலை பார்க்கும் பெண்களை உளவியல்ரீதியாக வீழ்த்தும் ஆயுதம் தான் மதர்ஸ் கில்ட். தான் குழந்தையை சரியாக வளர்க்கவில்லையோ, இந்த சமுதாயம் சொல்வது சரிதானோ என்ற குற்றவுணர்வு, முழுவீச்சில் செயல்படவிடாமல் பெண்களை முடக்கிப் போடுகிறது. குழந்தைகளுக்காக, அளவுக்கதிகமாக மெனக்கெடுகிறார்கள். தமக்கான விருப்பங்களை, ஆசைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மாங்குமாங்கென்று உழைக்கிறார்கள். அப்படியாவது ` நல்ல தாய்’ பட்டம் கிடைக்குமா என்றால், அதுவும் சந்தேகம்தான். (`நீ என்னை தூக்கிக் கொஞ்சவில்லை, உனக்கு என்னைவிட அக்கா மீதுதான் பாசம் அதிகம்’ என்று அந்த குழந்தையேகூட குறை சொல்லும்).

தோழியரே, நல்ல தாய்க்கு என்று இலக்கணம் ஏதும் இருக்கிறதா ? கொஞ்சம் சொல்லச் சொல்லுங்கள். யாருக்கும் தெரியாது. அப்படியிருக்கும் போது எதற்காக இந்த குற்றவுணர்வு ? இதிலிருந்து வெளியே வாருங்கள்.

உங்களால் மகிழ்ச்சியாக செய்ய முடிந்த அளவு குழந்தைகளுக்கு செய்யுங்கள். முடியவில்லையென்றால், கணவரின் (இணையோடு இருக்கும் பெண்), குடும்பத்தினரின், நண்பர்களின் உதவி கேட்கலாம். எல்லாவற்றையும் நீங்களே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய வேண்டும் என்பதில்லை. (`என் குழந்தைக்கு நான்தான் பார்த்துப் பார்த்து செய்வேன்’ என்ற பெருமை வேறு). உங்கள் விருப்பங்களை, முன்னுரிமைகளை, மகிழ்ச்சியை பலிகொடுத்துவிட்டு எதுவும் செய்யாதீர்கள். தியாகம் செய்யும் தாய் வளர்க்கும் குழந்தையை விட, மனம் முழுக்க சந்தோசத்துடன் இருக்கும் தாய் வளர்க்கும் குழந்தை அதிக மனஆரோக்கியத்துடன் இருக்கும்.

யாராவது `நீ நல்லா வளர்க்கல’ என்று குற்றம் சொன்னால், குழந்தையே சொன்னாலும் கூட, இடது கையால் தட்டிவிட்டு, பதில் சொல்லாமல், புன்னகையுடன் செல்லுங்கள். யாரிடமும் சர்ட்பிகேட் வாங்குவதற்காக நீங்கள் இந்த உலகிற்கு வரவில்லை. உங்கள் வாழ்க்கையை வாழ வந்திருக்கிறீர்கள் ! நிறைய அன்பு ❤❤

பி.கு. இது ஹோம்மேக்கராக இருக்கும் பெண்களுக்கும் பொருந்தும்.

நிறைவு.

தொடரின் முந்தைய பகுதியை வாசிக்க:

படைப்பாளர்:

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.