2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற தலித் பெண் பஞ்சாயத்துத் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆய்வொன்றை நடத்தியது. இந்த ஆய்வின்போது விழுப்புரத்தை அடுத்த கிராமம் ஒன்றில் ஆதிக்க சாதி முதலாளியின் வீட்டில் பருப்பு புடைத்துக்கொண்டிருந்த தலித் பெண் பஞ்சாயத்துத் தலைவரைக் கண்டனர். இந்தப் பெண்ணின் சார்பாக ஆதிக்க சாதி முதலாளியே ஊர் நிர்வாகத்தை கவனித்து வந்துள்ளார். இது குறித்துப் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சங்கம் பதிவு செய்திருக்கிறது.

திருக்கோவிலூர் பகுதியில் வெற்றிபெற்ற பெண் வேட்பாளருக்கு பதிலாக, அவரின் மகனுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இந்த இரண்டு சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டவை. இவையல்லாமல் பல்வேறு சம்பவங்கள் தமிழகம் முழுக்க கடந்த உள்ளாட்சித் தேர்தலில் நடந்துள்ளன. வெற்றிபெற்ற பெண்களின் கணவர்களே அலுவலகத்தை நிர்வகிப்பது, அவர்கள் கைகாட்டும் இடங்களில் இப்பெண்கள் கையெழுத்திடுவது என ஆணின் கைப்பாவையாக இங்கு பல பெண்கள் பங்கெடுப்பதை மக்கள் கண்கூடாகக் காண்கின்றனர்.

2016ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு சட்டத்தை ஜெயலலிதா அமுல்படுத்தினார். வேறு வழியின்றி அதிகாரத்தைக் கைவிடும் சூழலுக்குத் தள்ளப்பட்ட ஆண்கள், தங்கள் வீட்டுப் பெண்களை அந்தப் பதவிகளில் அமர்த்தி அழகுபார்த்து, அதிகாரத்தை மீண்டும் தங்கள் கையிலேயே தக்கவைத்துக்கொண்டுள்ளனர். இம்முறையும் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், பெண் வேட்பாளர்கள் பலர் களமிறங்கியுள்ளனர். இது உண்மையில் பெருமைப்படவேண்டிய விஷயம் தானா? எண்ணிக்கை பெரிதா, மக்கள் பணியின் தரம் பெரிதா என்ற கேள்வியை கட்டாயம் நாம் கேட்டுப் பார்க்கவேண்டும்.

பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று இத்தனை நாள் நாம் செய்த சண்டைக்கு தீர்வு கிடைத்தது என இப்போது நாம் ஒதுங்கிவிட முடியாது. கிடைத்த உரிமையை பெண்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறோமா, நம் இடத்தை விட்டுத்தராமல் மக்கள் பணி செய்கிறோமா என்ற கேள்வியை முன்வைத்து சிந்திக்கவேண்டும்.

22 வயது இளம்பெண் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் என நேற்று ஊடகங்கள் பலவற்றில் சில காட்சிகளைக் காண நேர்ந்தது. அந்தப் பெண்ணின் தந்தையின் உடல்மொழி, தன் மகளுக்கு எதுவும் தெரியாது, அவர் குழந்தை என அவர் பறைசாற்றுவதாகவே எனக்குத் தோன்றியது. மகள் முதுகை நீவிவிடுவதும், தலையைத் தடவுவதையும் அந்தத் தந்தை ஊடக வெளிச்சத்தில் செய்துகொண்டிருந்தார். சில நொடிகளுக்கு முன்புதான் தன் மகளுக்கு அவர் பொன்னாடை போர்த்திய காட்சியையும் கண்டேன்.

பெண்ணை ‘ஆளுமையுடன்’ வளர்த்தவேண்டிய கட்டாயம் இங்குள்ள அனைவருக்கும் உண்டு. ஆனால் ‘பொத்திப் பொத்தி’ வளர்த்து, அதிகாரம் கையில் திணிக்கப்படும் பெண்கள் ஆணின் கைப்பாவையாகவே செயல்பட வாய்ப்புண்டு. இதில் இடதுசாரிக் கட்சிகளில் இணைந்து பணியாற்றும் பெண்கள் ஓரளவுக்கேனும் தனித்து இயங்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என காணமுடிகிறது. ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் 21 வயது மகள், சிபிஎம் கட்சியின் சார்பாகக் களம் காண்கிறார். இன்று ஊடகங்களில் அவரைக் காணமுடிந்தது. அவரது உடல் மொழி, அவரது தன்னம்பிக்கையை அழகாகக் காட்டியது.

அண்டை மாநிலமான கேரளாவில் மிக இளம்வயதுப் பெண்கள் மேயர், பஞ்சாயத்துத் தலைவர் என பதவிகளில் ஆளுமையுடன் அமர்ந்து கலக்கிக் கொண்டிருக்கும் வேளையில், தமிழ்ச் சமூகம் தன் வீட்டுப் பெண்களுக்கு உரிய அரசியல் அறிவை ஊட்டியிருக்கிறதா, தனித்து இயங்கும் ஆற்றலை இளம்பெண்களுக்குத் தந்திருக்கிறதா என நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். மாற்றுப் பாலினத்தவர், 70 வயது மூதாட்டி, 22 வயது இளம்பெண், சமீபத்தில் முதல்வர் தலையீட்டால் அடையாள அட்டை பெற்ற நரிக்குறவர் இனப் பெண்களில் ஒருவர் என பலரை தேர்தல் களத்தில் காணமுடிவது மகிழ்ச்சியே.

ஆனால் இவர்களில் யார் தன்னிச்சையாக நின்று இயங்கப்போகிறார்கள்? தங்கள் ஆளுமையை யார் வெளிப்படுத்தப் போகிறார்கள்? யார் வெறும் கைப்பாவையாக செயல்படப் போகிறார்கள் என ஆராய்ந்து வாக்கு செலுத்துவது மக்களாக நம் கடமையாகும். இங்கு பணியின் தரம் மட்டுமே ஒருவரது வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காரணியாக இருக்கவேண்டுமே அன்றி, இன்னாரின் குடும்பம், இன்னார் மனைவி, மகள், இன்னார் உறவு, இன்ன சாதி என்பதல்ல. ஆண் செலுத்த முடியாத ஆதிக்கத்தை பெண் வழி செய்ய நாம் பாதை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடாது என்ற தெளிவு நமக்கு வேண்டும்.

ஆளுமை இல்லாத சவலைகளை பதவிகளில் அமரவைத்துவிட்டு, பின்னால், ‘ஐயோ குத்துகிறதே, குடைகிறதே’, என புலம்புவதில் நியாயமில்லை தானே?