சான் பிரான்சிஸ்கோ 3

Fisherman’s Wharf சான் பிரான்சிஸ்கோவில் கோல்டன் கேட் பாலத்திற்கு அடுத்தபடியாக, மக்களை மிகவும் கவர்ந்த இடம் இது. இது சான் பிரான்சிஸ்கோ நீரிணை பகுதியில் உள்ளது. அதாவது, இதன் வடக்குப் பகுதியில் கடல் இருக்கிறது.

Fisherman’s Wharf, பியர் 35 (Pier 35) முதல், கிரர்டெல்லி சதுக்கம் (Ghirardelli Square) வரையிலான பகுதியை  உள்ளடக்கியது. 

1800 களின் நடுப்பகுதியில் நகரில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக பலரும், சான் பிரான்சிஸ்கோ வரத் தொடங்கினர். அவ்வாறு இத்தாலியில் இருந்து வந்த மீனவர்கள் வடக்கு கடற்கரை பகுதியில் குடியேறி மீன் பிடித்தொழிலைத் தொடங்கினர். அந்த மீன்பிடித்துறை தான் இந்த Fisherman’s Wharf. இன்றும் இது மிகப் பெரிய மீன்பிடித்துறையாக தான் உள்ளது.  இது பெரிய மரக்கட்டை (timber) வணிகத் தளமாகவும் இருந்துள்ளது.

பாதை நெடுகிலும் பல அருங்காட்சியகங்கள் உள்ளன.

பலவிதமான உணவகங்கள், குறிப்பாக கடல் உணவகங்கள் Fisherman’s Wharf நெடுகிலும் உள்ளன. அவை பெரும்பாலும், பெரிய நிறுவனங்களாக இல்லாமல் குடும்ப  உணவகங்களாக இருப்பது, கூடுதல் சிறப்பு.

சாலை ஓர ஹாட் டாக் கடைகள் 

சாலை ஓர கடைகள் 

 சிறுவருக்கான கேளிக்கைகள் 

ஆண்டுதோறும் ஜூலை நான்காம் தேதி நடத்தப்படும் பட்டாசு காட்சி உட்பட பல நிகழ்வுகள் Fisherman’s Wharf இல் நடத்தப் படுகின்றன. 

வழி நெடுகிலும், இரவும் பகலும் பல விதமான கலைஞர்கள் தங்கள் திறமையை நமக்குக் காட்சிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

இங்கு பல அருங்காட்சியகங்கள் உள்ளன. ஒரு மீன் கண்காட்சிசாலை உள்ளது. 270 க்கும் மேற்பட்ட மெழுகு உருவங்கள் கொண்ட, மெழுகு அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது.

இங்கு நமது மனம் கவர்ந்த இடங்கள் உள்ளன. அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த இடம் பியர் 39 (Pier 39).  பியர் 39 என்பது ஒரு ஷாப்பிங் சென்டர். அந்த இடமே எப்போதும் களைகட்டிய இருக்கும். ஏஞ்சல் தீவு, அல்காட்ராஸ் தீவு, கோல்டன் கேட் பாலம் மற்றும் விரிகுடா பாலம் போன்றவற்றைக் காணலாம்.

மேலும் Pier 39 இல் கடல் சிங்கங்கள் (sea lions) கூட்டம் கூட்டமாக கடலில் நீந்துவதைப் பார்க்கலாம். அவை ஓய்வு எடுப்பதற்கென மிகப்பெரிய மரப்பலகைகள் பல போட்டிருக்கிறார்கள். முதலில் கடல் சிங்கங்கள், சீல் ராக் (Seal Rock) எனப்படும் இடத்தில் அதிக அளவில் இருந்திருக்கின்றன. சீல் ராக் என்பது லேண்ட்ஸ் எண்ட் (Lands End) பகுதியில் உள்ள பாறைத் தீவுகளின் குழு. பிறகு  கடல் சிங்கங்கள் பியர் 39 பகுதிக்கும் வரத்தொடங்கியிருக்கின்றன.

1989 ஆம் ஆண்டிற்குப் பின், உடைந்து போன படகுகளின் பாகங்களை  பியர் 39 பகுதியில், போட்டிருக்கிறார்கள். கடல் சிங்கங்கள் கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக அவற்றின் மேல் இருந்து, தங்களில் வால்களை ஆட்டிக் கொண்டு ஆடுவதும், நாம் எதிர் பாராத நேரத்தில், திடீரென தண்ணீரினுள் குதிப்பதும் கண்கொள்ளாக் காட்சி. அந்த இடம் எப்பொழுதும், மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் இடமாக உள்ளது. மக்களின் சப்தத்தையும் மீறி கடல் சிங்கங்கள் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். மிக அருகில், தொட்டுவிடும் தூரத்தில் இவ்வளவு பெரிய விலங்கை/ விலங்கு கூட்டத்தைப் பார்க்கப் பார்க்க ஆனந்தம் தான். குளிர் காலத்தில் இவற்றின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

கோடைக்காலத்தில் எடுத்த புகைப்படங்கள் 

குளிர் காலத்தில் எடுத்த புகைப்படம்.

லவ் லாக் 

விரும்பினால் நாம் படகு சவாரி செய்யலாம். அவ்வாறு பயணம் செய்யும் போது கடல் சிங்கங்களை இன்னும் அருகில் இருந்து பார்க்கலாம்.

USS Pampanito  383 நீர்மூழ்கி கப்பல் மற்றும் Jeremiah O’brien என்ற இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப் பட்ட கப்பல் இரண்டும் கண்காட்சிப் பொருளாக  இங்கு நிற்கின்றன. கட்டணம் கொடுத்து உள்ளே சென்று பார்க்கலாம்.இவை குறித்து பின் ஒரு சமயம் பேசலாம்.

சுற்றுவோம்…

தொடரின் முந்தைய பகுதியை இங்கு வாசிக்கலாம்:

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.