கர்ப்பாதானம், ஜாதகர்மா, நாமகரணம், சவுளம், உபநயனம், குருகுலவாசம், (கல்விகற்றல்) அக்னிஹோத்ரம் (வேள்வி செய்தல்) எல்லாமே ஆண்களுக்கு உரித்தானது. சரீரப் பரிசுத்தத்துக்காக, இக்கிரியைகள் எல்லாமே குறிப்பிட்ட காலத்தில் பெண்களுக்குச் சாத்திர முறைப்படி ஆனால் மந்திரங்கள் இல்லாமல் செய்யப்படவேண்டும்.

பெண்களுக்குத் திருமணமே, உபநயனக் கிரியை என்று சொல்லப்படுகிறது. பதிக்குச் செய்யும் பணிவிடையே குருகுலவாசம், வீட்டுவேலைகளைச் செய்வதே அக்னிஹோத்ரமாகும் என்கிறது மநு தர்மம்.

பெண்களுக்குக் கல்வி, சுயச் சம்பாத்தியம், பொருளாதாரச் சுதந்திரம், சொத்தில் உரிமை, தன் உடல் சார்ந்த புரிதல் / சுதந்திரம் போன்றவை அவசியம் என அடித்துச் சொல்கிறார் பெரியார்.

இந்த இரண்டு கோட்பாடுகளுக்குள்ளும் உள்ள வித்தியாசம் எனக்குப் புரிகிறது, அவ்வளவுதான்.

மற்றபடி இதில் நான் ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், இறைமறுப்பு, பகுத்தறிவுவாதம், ஜாதீய எதிர்ப்பு எதையும் விலாவாரியாக விளக்க முற்படவில்லை. ஆனால், எதார்த்தத்தில் நான் சார்ந்திருக்கும் குலப் பெண்கள் சந்திக்கும் அவலங்களை உள்ளது உள்ளபடி சொல்ல முயல்கிறேன் அவ்வளவுதான். இதைப் படிக்கும் பெண்களுக்கு இதில் பொதிந்திருக்கும் நியாயம் நிச்சயம் புரியும் என்கிற நம்பிக்கையில் இந்தக் கட்டுரையின் அடுத்த அத்தியாயத்துக்குள் செல்கிறேன்.

நான்கு சுவர்களுக்குள் சிறைப்பட்டுக் கிடந்த கைம்பெண்கள் சுதந்திரமாக வெளியுலகில் நடமாடத் தொடங்கி, கோவில் குளங்களுக்கு மட்டுமல்லாமல் டென்ட்டு கொட்டகைக்குப் போய் சினிமா பார்க்கும் அளவுக்கு, சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் மாற்றங்களைக் காண முடிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாகச் சமூகம் பகுத்தறிவுப் பாதையில் பயணப்பட்டதன் காரணமாக விழிப்புணர்வு ஏற்பட்டு, மொட்டை அடித்து மூலையில் உட்காரவைத்த நிலையெல்லாம் சென்ற நூற்றாண்டோடு முடிந்த கதையாகியும் போனது.

இன்று காலம் எவ்வளவோ மாறிவிட்டது. பெண்களெல்லாம் படித்து வேலைக்குப் போய் சொந்தக்காலில் நிற்கிறார்கள். இந்த மாற்றமெல்லாம் வந்த பிறகும்கூட சில சடங்கு சம்பிரதாயங்கள், சாஸ்திரம் என்கிற பெயரில் இன்றளவும் மாறாமல் இருக்கின்றன. அதைப்பற்றிப் பார்ப்போம்.

கணவன் உயிர் துறந்த அடுத்த நொடியே ஒரு பெண்ணின் துயர வாழ்கை தொடங்கிவிடுகிறது.

சுமங்கலியாக இருக்கும் வீட்டுப் பெண்களும் சரி, துக்கம் விசாரிக்க வருபவர்களும் சரி, இறந்த மனிதனின் பிரேதத்தைக் கூட தீண்டலாம். ஆனால் கைம்பெண்ணாகிவிட்ட அவனது மனைவியான பெண்ணைத் தொடக் கூடாது. சக மனுஷியிடம் காண்பிக்கும் அரவணைப்பின் அடையாளமாக, கட்டி அணைத்து அவளுக்கு ஆறுதல் கொடுக்கக் கூடாது. அது தோஷமாகப் பார்க்கப்படுகிறது.

அவளைப் பார்ப்பதனால் உண்டாகும் தோஷம் நீங்க, துக்கம் விசாரிக்க வரும்பொழுது சுமங்கலிப் பெண்களெல்லாம் கட்டாயம் ஒரு மஞ்சள் கிழங்கைப் புடவை முந்தானையில் முடிந்துகொள்வது வழக்கம்.

இதில் அந்தப் பெண்ணின் தாய், சகோதரி, ஓரகத்தி, மாமியார், நாத்தனார், உயிராகப் பழகிய தோழிகள் எல்லோருமே அடக்கம். துணிந்து தீண்டிவிட மாட்டார்கள். எங்கே இதே நிலை நமக்கும் ஏற்பட்டுவிடுமோ என ஒவ்வொரு அணுவிலும் விதைத்து வைத்திருக்கும் அச்சம்தான் காரணம். இப்பொழுது சற்றே மாற்றம் வந்திருக்கிறது எனலாம்.

‘தஸமாஹ கைங்கர்யம்’ எனப்படும் இறந்தவருக்குப் பத்தாம் நாள் செய்யப்படும் காரியத்தன்றுதான் அவரது மனைவியைக் கைம்பெண்ணாக்கும் சடங்குகளைச் செய்வார்கள். அதுவரை தினமும் அவர்கள் தலையில் பூச்சூடி, மஞ்சள் குங்குமத்துடன் பார்க்க மங்களகரமாக இருக்கவேண்டியது கட்டாயம்.

மற்ற சுமங்கலிகள், அமங்கலியான பெண்ணின் முகத்தை அவளது கணவன் இறந்த பத்து நாளைக்குள் பார்த்துவிடவேண்டும். அதாவது அவளைச் சுமங்கலிக் கோலத்தில் பார்த்தாக வேண்டும். அப்படிப் பார்க்கவில்லை என்றால், வருஷாப்திகம் அதாவது தலை திவசம் முடியும் வரை ஓர் ஆண்டுக்கு அவளைப் பார்க்கக் கூடாது.

அதனாலேயே, காலை வேளைகளில், துக்க வீட்டுக்குச் சுமங்கலிப் பெண்கள் படையெடுப்பர். முன்பின் தெரியாதவர்கூட தூர இருந்து அவளைப் பார்த்துவிட்டுப் போவார்கள். அந்தப் பெண்ணின் மனநிலையைப் பற்றி யாரும் கவலையே படுவதில்லை.

அடுத்து, முக்கியமான நெருங்கிய உறவினர் வீடுகளுக்கு, முக்கியமாகப் பிறந்த வீட்டுக்கு அந்தப் பத்து நாட்களுக்குள் அந்தப் பெண்ணை அழைத்துச் செல்வர். உடன், சகோதரனோ அல்லது மகனோ செல்லவேண்டும். அப்படிப் பத்துநாள்களுக்குள் செல்லாமல் போனால், ஓராண்டு முடியும்வரை அவள் அங்கே செல்லக் கூடாது.

அங்கே அவர்களை வரவேற்க நடத்தப்படும் சில கேடுகெட்ட சடங்குகள், அபத்தத்தின் உச்சமாக இருக்கும்.

வீட்டு வாசலில் விளக்கேற்றி வைத்திருப்பார்கள். அவர்கள் நடந்துவரும் வழியில் நெல்மணிகளைத் தூவி வைத்திருப்பார்கள். ஒரு சொம்பு தண்ணீரில் பால் கலந்து வைத்திருப்பார்கள். அதில் கால் அலம்பிக்கொண்டே அவர்கள் உள்ளே வரவேண்டும். எதிர்கொண்டு யாரும் அவளை அழைக்கமாட்டார்கள்.

உப்பு சேர்த்த ஏதாவது ஓர் உணவைச் சாப்பிடக் கொடுப்பார்கள். ஒரு தட்டில் குங்குமம், வெற்றிலை பாக்கு, பூ, பழம் வைத்து ஓரமாக வைத்துவிடுவார்கள். அதையும் கைகளில் கொடுப்பதில்லை, அவர்களாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவே அவர்களுக்கு அந்த வீட்டில் கொடுக்கப்படும் கடைசி தாம்பூலம்.

நல்ல நாள், கிழமை என்றில்லை, எப்பொழுதென்றாலும் வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலைபாக்கு, பூ, பழம், தேங்காய், ரவிக்கைத் துண்டு வைத்துக் கொடுப்பது பார்ப்பனக் குடும்பங்களில் ஒரு பொதுவான வழக்கம். அதுவும் வீட்டில் பிறந்த பெண்களுக்குத் தாம்பூலம் கொடுப்பதைச் சுபிட்சமாகப் பார்க்கிறார்கள். குறைந்த பட்சம் குங்குமமாவது கொடுக்காமல் வீட்டிற்கு வந்த சுமங்கலிகளைத் திருப்பி அனுப்ப மாட்டார்கள் என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ளவேண்டும்.

பழங்காலத்திலெல்லாம், மற்றவர் பார்வையில் படாமல் இரவு நேரத்தில் அழைத்துச் சென்று விடிவதற்குள் வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தார்களாம். இப்பொழுது இதில் மாற்றம் வந்திருக்கிறதே ஒழிய, மொத்தமாக வழக்கொழிந்து போய்த் தொலையவில்லை.

பத்தாம்நாள் காரியத்தன்று இறந்தவருக்கு செய்ய வேண்டிய சடங்குகள் செய்து, அந்தப் பெண்ணை அமர வைத்து தலையில் தண்ணீர் ஊற்றி, ஈரப் புடவைகளை, மகன் ஒன்றும் உடன் பிறந்தவன் ஒன்றுமாகக் கழுத்தில் போடுவர். கிராமப்புறங்களில், இந்தச் சடங்கு குளத்தங்கரையில் வைத்துச் செய்யப்படுகிறது. பிறந்த வீட்டின் சார்பில் ஒன்றும், அவர்கள் வீட்டுச் சார்பில் ஒன்றுமாகப் புதுப் புடவைகள் வாங்கி அதைத்தான் தண்ணீரில் நனைத்துப் போடுவர்.

முந்தைய தலைமுறை வரை அது வெள்ளைப் புடவையாகவோ நார்மடி எனப்படும் காவி நிறப் புடவையாகவோ இருந்தது. இப்பொழுது அது கலர் புடவையாக மாறியிருக்கிறது. என் அப்பா இறந்த சமயம், என்னுடைய மாமா, அம்மாவுக்குப் பிடித்த நிறமாகப் பார்த்துப் பட்டுப் புடவை வாங்கிப் போட்டார்.

‘கழுத்தில் போடவேண்டாம், கையிலேயே கொடுத்துவிடுங்கள்’ என்று நான் சொன்னதற்கு, ‘நீ என்ன சொல்றியோ சரி’ என்று ஒப்புக்கொண்டார். இந்தச் சடங்கே வேண்டாம் என்று சொல்லியிருந்தால், என் அம்மாவேகூட கேட்டிருக்க மாட்டார். இந்த அளவுக்கு மட்டுமே இங்கே மாற்றம் உண்டாகியுள்ளது.

அதன் பின் மொட்டை அடிப்பது விலகலாக, மற்ற நள்ளிரவு நடக்கும் சடங்குகள் நடந்து முடியும். அந்த இரவில் அந்தப் பெண்ணுக்கு நெருங்கிய உறவில் இருக்கும் அவளது குடும்பத்துச் சுமங்கலிகள் மற்றும் அக்கம்பக்கம் வசிக்கும் சுமங்கலிகள் புடவை தலைப்பில் மஞ்சள் கிழங்கை முடிந்துகொண்டு உறங்கப்போவார்கள். ‘இது எவ்வளவு பெரிய துக்கம் தெரியுமா? ஒரு பொம்மனாட்டி தாலி அறுத்தா, ஈரேழு பதினாலு லோகமும் அப்படியே கிடுகிடுன்னு நடுங்குமாம். அதனால மஞ்சள் கிழங்கு முடிஞ்சுக்கணும்’ என வீட்டுப் பெரிய மனுஷிகள் வசனமெல்லாம் பேசுவார்கள்.

மூக்குத்தி உட்பட நகைகள் அணிவதை, பளிச்சென உடைகள் அணிவதைத் தற்காலக் கைம்பெண்கள் விட்டுக்கொடுப்பதில்லை. முன்பெல்லாம், ஆண்கள் தரிக்கும் விபூதி, செந்தூரம், கோபி போன்றவற்றை அவரவர் சம்பிரதாயப்படி நெற்றியில் இட்டுக் கொண்டார்கள். இப்பொழுது ஸ்டிக்கர் பொட்டு ஒட்டிக்கொள்கிறார்கள்.

அதன்பின் அவர்கள் ஒரு வருடம்வரை எங்கும் செல்லக்கூடாது, மிக நெருங்கிய உறவினர் வீட்டுச் சுப நிகழ்ச்சிகள் தவிர வேறெதிலும் கலந்து கொள்ளக்கூடாது, கடல்கடந்து செல்லக்கூடாது, போன்ற நடைமுறைகள் உள்ளன.

சிலர் கடைப்பிடிக்கிறார்கள். சிலர் கைவிடுகிறார்கள். ஆனாலும் விமரிசனங்களைத் தவிர்க்க இயலாது.

சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும்கூட, நிறைவாக மேடையில் நின்று மகிழ முடியாமல், ஓரமாக ஒதுங்கி நிற்க நேரிடும். மற்றவர் நடத்தும் விதமும், காலங்காலமாகப் பெண்களின் மனதில் விதைக்கப்பட்டிருக்கும் தாழ்வு மனப்பான்மையுமே இதற்குக் காரணம் எனலாம்.

மற்றொன்று, சுமங்கலியாக இருந்த போது, தாங்கள் மற்றவர்களை நடத்திய விதமும் பெண்கள் மனதில் குறுகுறுக்கும்தானே? மற்றவர்களுக்கு நடக்கும்போது வேடிக்கை பார்த்தவர்கள், தங்களுக்கு என நேரும்போது கூனிக் குறுகித்தான் போகிறார்கள். சமூகத்துக்காக முழுமனதுடன் இதுபோன்ற சடங்குகளுக்குத் தங்களை ஆட்படுத்திக்கொண்டு, காலத்தின் ஓட்டத்தில் இயல்பாக நடமாடத் தொடங்குகிறார்கள்.

இதே, மனைவியை இழந்த ஆண்களுக்கு அந்த மனச்சுமைகள் எதுவும் இல்லை. மகன் இருக்கும் பட்சத்தில், மனைவியின் உடலுக்குக் கொள்ளிபோட வேண்டிய கடமைகூட ஆண்களுக்கு இல்லை.

உடலிலும், உடையிலும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் சமூகத்தில் நிமிர்ந்து நிற்கிறார்கள். கைம்பெண்களை ஓரமாக ஒதுக்கி வைக்கும் இதே சமூகம்தான், பாகுபாடின்றிப் பண்டிகை, விசேஷச் சுப நிகழ்ச்சிகளில், அவர்களைச் சபையில் முன்னிறுத்தி, மதிப்பு மரியாதையுடன் அழகுபார்க்கிறது.

‘பெண்களுக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்று மட்டும் யாரும் கேள்வி கேட்பதே இல்லை.

படித்து வேலைக்குச் சென்று சொந்தக்காலில் நிற்பவர்கள், பிறந்த வீட்டு / புகுந்தவீட்டு / கணவன் வழி சொத்துக்கள் மற்றும் கணவர் விட்டுச் சென்ற ஓய்வூதியம் கிடைக்கப்பெற்று பொருளாதாரத் தற்சார்புடன் வாழும் கைம்பெண்களின் நிலைமை பெரிதாக மோசமில்லைதான். ஆனாலும், நான் முன்பே குறிப்பிட்ட கடைநிலையில் உள்ள ஆண்களின் விதவைகள் நிலை உண்மையில் பரிதாபத்துக்குரியதுதான்.

தொடக்கத்திலிருந்தே ஏதோ ஒரு கைத்தொழில் செய்து பிழைப்பவராயின், உடம்பில் வலுவிருக்கும் வரையில் உழைக்கலாம். அதுவும் இல்லாமல் போனால், பொருளாதார ரீதியாக மகனையோ மகளையோ, பிள்ளைகள் இல்லாதவர்களாயின் யாரோ ஓர் உறவினரையோ சார்ந்து வாழ வேண்டியதுதான்.

ஆண்களுக்காவது பிராம்மணார்த்தம் போன்ற ஏதோ ஒரு வழி கிடைத்துவிடுகிறது. பெண்களாக இருந்தால், குளத்தங்கரை வேலைக்குக் கூட வழியில்லை. ஏனென்றால் அது சுமங்கலிகளுக்கு மட்டுமானது!

துணையை இழந்த துயரம் போதாதென்று, இத்தகைய மன உளைச்சல்கள் அவர்களது துயரத்தையும் துக்கத்தையும் பலமடங்கு மிகைப்படுத்தவே செய்கின்றன.

**

தற்காலத்திலும் முண்டனம் செய்துகொண்ட கைம்பெண்கள் இருக்கிறார்கள் என முந்தைய அத்தியாயங்களில் சொல்லியிருந்தேன் இல்லையா? அதற்குப் பின் இருக்கும் காரணத்தையும் இங்கே சொல்லிவிடுகிறேன்.

ஒரு நூற்றாண்டு பின்தங்கிப்போய் பழமையைக் கைவிடாத சில வைதீகக் குடும்பங்கள் இங்கே இருக்கின்றன.

இன்றுவரை கட்டை அடுப்பிலும் கரி அடுப்பிலும்தான் சமையல் செய்து சாப்பிடுகிறார்கள். சமையலுக்கு, பருகுவதற்கு எல்லாமே, கையால் இறைத்த கிணற்று நீரைத்தான் பயன்படுத்துவார்கள்.

வெளியிடங்களில் சாப்பிட மாட்டார்கள். அவர்கள் குடும்பத்துப் பெண்கள், பிறந்த வீட்டில்கூட சாப்பிட மாட்டார்கள். அப்படியே பிறந்த வீட்டில் தங்க நேர்ந்தாலும், தனக்கென தானே தனியாகச் சமைத்துச் சாப்பிடுவார்கள்.

பஸ் தீட்டு, ஆஸ்பத்திரி தீட்டு, எனப் பேருந்து / ரயிலில் பயணம் செய்து வந்தாலோ, மருத்துவமனை சென்றுவந்தாலோ, தலை முழுகாமல் வீட்டுக்குள் நுழையமாட்டார்கள்.

மிக்சி, கிரைண்டர், வாஷிங் மிஷின் போன்றவற்றை பயன்படுத்த மாட்டார்கள்.

பரவாயில்லை எனக் கொஞ்சமாக தங்களை மாற்றிக்கொண்டாலும், சுப தினங்கள் / திவச நாள்களில் இவை எல்லாமே கட்டாயமாகப் பின்பற்றப்படும்.

நேரத்துக்குச் சோறு தண்ணீர் இல்லாமல், மாடு போல வேலை செய்து செய்தே பல பெண்கள் நடுத்தர வயதிலேயே நோயாளிகளாகிப் போகிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல, முண்டனம் செய்து கொள்ளாத கைம்பெண் சமைத்த உணவை, யாரும் சாப்பிட மாட்டார்கள்.

அதனாலேயே, வீட்டில் மற்ற வேலைகள் செய்யத் தோதாக வேறு பெண்கள் இல்லாத பட்சத்தில், முண்டனம் செய்துகொள்வதைத் தவிர இவர்களுக்கு வேறு மாற்று வழி இல்லாமல் போகிறது.

என் நினைவுக்கு எட்டியவரை நான் சொல்ல முற்பட்டதை இந்த அத்தியாயத்தில் சொல்லியிருக்கிறேன்.

‘இதற்கெல்லாம் பின்னால் எவ்வளவு காரணங்கள் இருக்கின்றன தெரியுமா’ எனச் சூடோ சயின்ஸ் விளக்கங்களைத் தூக்கிக்கொண்டு யாரும் இவற்றைப் புனிதப்படுத்த முயற்சி செய்யாதீர்கள்! ஏனென்றால், இவையெல்லாமே அறமற்ற செயல். அதுமட்டுமில்லை, பெண்களின் மீது சுமத்தப்படும் உணர்வுரீதியிலான வன்கொடுமைகள்தான்.

இதற்கெல்லாம் முழுமுதற் காரணமாக இருக்கும் மநு தர்மம் கைம்பெண்கள் குறித்து என்ன சொல்கிறது பார்க்கலாம்…

கைம்மையில் காய், கனி, கிழங்கு இவற்றால் சிற்றுணவு கொண்டு காலந்தள்ளலும், மற்றொருவன் பெயரை நாவாற் கூற விரும்பாமையும் வேண்டும்.

கைம்மையினள் தன் காலம் உள்ளளவும் பொறுமை தூய்மை, உடற்கலப்பின்மை புலால் கொள்ளாமை, மேன்மையான கற்பிலக்கணம் இவை பொருந்தக் கடவள்.

மாதர் பலர் இளமையிலும் பிரம்மச்சரியத்திலும் இருந்து வானின்பம் பெற்றனர். எனவே சந்ததி இல்லை என்ற வருத்தம் இவருக்கு வேண்டியது இல்லை.

கணவன் இறந்த பின் பிரம்மச்சரியம் தவறாத கற்பினள் பிள்ளை இல்லாதிருப்பினும் வாலக்கில்யர், சநகர் போன்ற பிரம்மச்சாரிகளைப் போன்று மோட்சம் அடைவாள்.

★கணவன் இறந்த பின் சொர்க்கத்திற்குப் பிள்ளை வேண்டும் என்ற கருத்துடன் பிறன் ஒருவனுடன் கூடியிருப்பவளுக்கு உலக நிந்தனையுண்டு. அவ்வாறு ஈன்ற பிள்ளையினால் சொர்க்கம் அடையாமலும் போவாள்.

கணவன் அல்லாதவளால் பிறந்த சேயும் அற நூல்களால் ஏற்கத்தக்கவனன்று. அவனைப் பெற்ற தகப்பனுக்கும் பயனில்லை. கற்பரசிகளுக்கு மறுமணம் எங்கும் விதிக்கப் பெறவில்லை.

மனம், சொல், புலன் இவற்றை அடக்கி நெறி தவறாமல் இருப்பவள் கணவன் இருக்கும் லோகத்தை அடைவதுடன் கற்பரசி என்றும் கொண்டாடப்படுவாள்.

இப்படி மனம் மொழி மெய்களால் கற்பரசியாக தூய்மையுடன் வாழ்பவள் இம்மையின் புகழும் மறுமையில் பதிலோகமும் பெறுவாள்.

மநு தர்ம சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயமான உணவு, சுத்தி, மாதர் என்கிற தலைப்பின் கீழ், மாதர்க்கு உரியவை என்கிற பகுதியில்தான் இதெல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன.

https://www.rarebooksocietyofindia.org/postDetail.php?id=196174216674_10151884645711675

மிகச் சிறு வயதில் திருமணம் ஆகி, இல்லற வாழ்க்கையைத் தொடங்காமலேயே வைதவ்யம் அடையும் குழந்தைகளுக்குக் கூட இதிலிருந்து எந்த விதிவிலக்கும் கிடையாது.

இப்படியாக, கணவனை இழந்த கைம்பெண்களுக்கு நல்ல அறிவுரைகளைச் சொல்லும் மநு தர்ம சாஸ்திரம் மனைவியை இழந்த ஆண்களுக்கு என்ன சொல்கிறது என்பதையும் சொல்கிறேன்!

கற்புக்கரசியான, தன் இனத்தவளான மனைவி, தனக்கு முன் இறந்துவிட்டால் சாஸ்திர முறைப்படி சடங்குகள் செய்து, செய்ய வேண்டிய கிரியைகளையெல்லாம் முறைப்படி செய்துமுடிக்க வேண்டும். தான் தினம் வளர்த்த அக்கினியோடும் யக்ஞப் பாத்திரங்களோடும், அவளைத் தகனம் செய்ய வேண்டும்.

இப்படி அவளுக்கு கடனிறுத்த பின்னர், மற்றொரு பெண்ணை மணந்து தீ வளர்த்தல் ஆகிய நற்கருமங்களை இயற்றி வரவேண்டியது.

மனைவி இழந்தவன் விதிப்படியே மறுமணம் செய்து கொண்டு அன்றாட ஐம்பெரும் வேள்வி முயன்று, தன் வாழ்வின் இரண்டாம் பகுதியை இல்லறத்துடன் கழிக்க வேண்டியது.

அவ்வளவுதான், இதற்கு மேலதிகமாக எதுவுமே சொல்லப்படவில்லை! என்ன ஓர் அநியாயம் பார்த்தீர்களா?

★ கைம்பெண் பிள்ளை பெற்றுக்கொள்ளக் கூடாது என்று சொல்லும் இதே மநு தர்ம சாஸ்திரம், குழந்தைப் பேறு இல்லாத கைம்பெண் பெற்றோர் பெரியோர் அனுமதியோடு மைத்துனன் மூலமாகப் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் சொல்கிறது.

ஆனால், பிராமண விதவைப் பெண்ணை, இன்னொருவன் மூலம் புத்திரனைப் பெறுவதற்குப் பெரியோர் அனுமதிக்கக் கூடாது, அப்படி அனுமதிப்பவர்களுக்குத் தர்மத்தைக் கெடுத்த பாவம் வந்து சேரும் என்றும் மறைமுக மிரட்டலும் விடுக்கிறது.

சந்ததி இல்லாமல் போனால் மற்றவர்களிடமிருந்து பிள்ளை பெறலாம் என்று எந்த வேத மந்திரத்திலும் குறிப்பிடவில்லை என்றும் விவாக விதிகளில் விதவைக்கு இன்னொரு விவாகத்தையும் சொல்லவில்லை என்றும் மனுதர்மத்தில் நேரடியாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

நம்முடையது ஆண்களால் தோற்றுவிக்கப்பட்ட தந்தை வழிச் சமூகம். அதன் சட்ட திட்டங்களை வரையறுத்ததும் ஆண்களே!

அத்தகைய சட்டதிட்டங்கள்தான், சாத்திரம், சடங்கு, சம்பிரதாயம், பாவம், புண்ணியம், சுவர்க்கம், நரகம், கற்புநெறி, பதிவிரதா தர்மம் போன்ற கற்பிதங்களைத் தங்களுக்குச் சாதகமாகவும் பெண்களுக்குப் பாதகமாகவும் சமுதாயத்தில் ஆணி அடித்தது போன்று நிலைக்க வைக்கின்றன. பெண்களை மட்டம் தட்டிக் கொண்டே அவர்களது வாழ்வாதாரத்தைச் சுரண்டிக் கொண்டேயிருக்கக் காரணமாக அமைந்திருக்கிறது.

கணிசமான மாற்றம் வந்திருக்கிறது என்றாலும், இந்த மாற்றம் போதுமானதாக இல்லை என்பதே உண்மை.

அவரவர் வாழ்கை அவரவருக்கு உரித்தானது என்கிற புரிதல் இல்லாமல், வீட்டுத் திண்ணைகளில் உட்கார்ந்து புறணி பேசிய காலம் போய் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக முகநூலில் மற்றவரை பற்றி புறணி பேசி கிண்டல் கேலி செய்யும் அளவுக்கே நம் சமூகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால், இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சிகளே பயனற்றதாகிப் போகிறது!

பிறரிடத்தில் தன்னை நிறுத்தி நேர்வழியில் சிந்தித்தால் மட்டுமே மனித மனங்கள் வளம்பெறும்!

இன்னும் எழுதுவேன்…

  • உள்ளிருந்து ஒரு குரல்