இதை எழுதிக்கொண்டிருக்கும் போது லண்டனின் கென்சிங்டன் அரண்மனை ‘மூழ்கு தோட்டம்’ பகுதியில் ‘லேடி டை’யின் சிற்பம் தன் மகன்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.

மகன்கள் திறக்கக் காத்திருக்கும் டயானாவின் சிலை, reuters

ஒரு தலைமுறையின் ‘ஏஞ்சலாக’, தேவதையாக நிறைந்திருந்தவர் டயானா. 1981ம் ஆண்டு ஜூலை 29 அன்று உலகின் கவனம் ஈர்த்தார். அன்று தான் இங்கிலாந்தின் வருங்கால மன்னரான இளவரசர் சார்லசுடன் 20 வயது டயானாவின் திருமணம் நடந்தது. உலகெங்கும் தொலைக்காட்சியில் அந்தத் திருமணத்தைக் கண்டு ரசித்தது. டயானா வாழ்ந்த காலத்தில், ஒரு ஆதர்ச மணம் என்றால் அது அவரது திருமணம் தான் என்றும், சிறந்த தம்பதி என்றால் சார்லஸ்- டயானா தான் என்றும் உலகமே போற்றியது.

1961ம் ஆண்டு ஆல்த்ராப் துரையின் நான்காவது மகளாகப் பிறந்த டயானா, இயல்பில் மென்மையானவர்; யாரிடமும் சட்டென பழகிவிடும் நேசமும், அன்பும் மிக்கவர். தந்தையும் தாயும் 9 வயது டயானாவை ‘உன்னிடமா, என்னிடமா’ என்று விவாகரத்துக்கு முந்தைய காலத்தில் போட்டி போட்டுக்கொண்டு விரட்டியடிக்க, பள்ளிப் படிப்பில் டயானாவால் பெரிதும் சோபிக்கமுடியவில்லை. ‘ஓ’ லெவல் தேர்வாகக் கூட முடியாமல், சுவிட்சர்லாந்தில் சமையல் கல்வியில் சேர்ந்தார்; அதிலும் தோல்வி. ஆனால் பாலே ஆடுவதிலும், பியானோ வாசிப்பதிலும், டேப் டான்ஸ் ஆடுவதிலும் வல்லவர். சுத்தம் செய்வதிலும் தான்! தன் சகோதரியின் லண்டன் ஃப்ளாட்டை சுத்தம் செய்யும் கிளீனராகவும் இளம் வயது டயானா வேலை செய்துவந்தார். நர்சரிப் பள்ளி ஒன்றின் துணை ஆசிரியராகவும் பணியாற்றிவந்தார்.

அரச் குடும்பத்தின் தோட்டத்து வீட்டுக்கு அருகே குடியிருந்த ஆல்த்ராப் குடும்ப வாரிசான சாராவைத் தான் இளவரசர் சார்லஸ் முதலில் மணமுடிக்க எண்ணினார். ஆனால், அவரைவிட அமைதியான, வெட்கப் புன்னகை சிந்தும் தங்கை டயானா பிடித்துவிட, அவரைக்கவர முயற்சித்தார். 20 வயது கூட நிரம்பியிராத டயானாவுக்கு நடப்பது கனவா நனவா என்று புரியவில்லை. ஆனால், இளவரசரின் காதலுக்கு பிப்ரவரி மாதம் அவர் ‘எஸ்’ சொல்ல, அதே ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. 25 அடி நீள ‘ட்ரெய்ன்’ கொண்ட டயானாவின் திருமண கவுனும், அவரது நிச்சயதார்த்த மோதிரமும் உலகின் பேசுபொருளாகின.

தன் திருமணத்தின் போது, உலகமே உற்றுநோக்க, ‘ கணவருக்கு அடிபணிந்து நடப்பேன்‘ என்ற கத்தோலிக்க திருமண பிரமாணத்தை செய்யமறுத்தவர் டயானா. அந்த வகையில் கணவரும் மனைவியும் சக பயணிகள் மட்டுமேயன்றி ஒருவர் ஒருவருக்கு கீழ்ப்படிய அவசியமில்லை என்று டயானா சொன்னது நினைவுக்கு வருகிறது.

நர்சரிப் பள்ளியின் டீச்சர் ஒருவர் இளவரசியாகிப் போனதை இங்கிலாந்தின் பொதுமக்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். ‘சின்ட்ரல்லா’ கதையின் நாயகியாகவே எல்லோருக்கும் தெரிந்தார் டயானா. சோகம் என்னவென்றால், சின்ட்ரெல்லா கதை போலவே இளவரசருக்கும் அவருக்கும் இடையே இருந்த ‘காதல்’ காணாமல் போனது. மகன்கள் வில்லியமும், ஹேரியும் பிறக்க, அரச குடும்பத்துப் பிள்ளைகள் போலல்லாது, சாதாரணர்களைப் போல மகன்களை வளர்த்தெடுத்தார்.

மகன்களுடன் டயானா

இயல்பாகவே இரக்க குணம் கொண்ட டயானா, தன் சொந்தப் பணம், இளவரசிக்கு வந்த ‘மெய்ன்டனன்ஸ்’ என கிடைக்கும் பணம் எல்லாவற்றையும் பொதுக்காரியங்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் செலவு செய்யத் தொடங்கினார்.

1980களின் இறுதியில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு, கேன்சர் விழிப்புணர்வு, தொழுநோயாளிகளுக்கு நிதி உதவி, தற்பாலீர்ப்பாளர்கள் புரிந்துணர்வு என்று அரசகுடும்பம் எண்ணாத, திரும்பிப்பார்க்க விரும்பாத எளிய மக்களின் உலகை அன்றாடம் சந்தித்தார் டயானா. இங்கிலாந்துப் பிரதமர் ‘பிரின்ஸஸ் ஆஃப் தி பீப்பிள்’ – மக்களின் இளவரசி என்று டயானாவை அழைக்கும் அளவுக்கு அவரது அர்ப்பணிப்பும், சேவை உணர்வும் இருந்தது.

அன்னை தெரசாவுடன் டயானா

அரசகுடும்பம் முகம் சுழிக்கத் தொடங்கியது. அதன் பின் தொடர்ந்து குதிரையேற்ற பயிற்சியாளர் முதல், பட்லர் வரை டயானா பழகிய ஆண்கள் எல்லோரிடத்திலும் அவருக்கு ‘காதல்’ இருந்ததாகக் கதை சொல்லப்பட்டது. அதில் பல கதைகளை மறுத்த டயானா, சிலவற்றை ஒப்புக்கொள்ளவும் செய்தார்.

சார்லஸ் கேமில்லா பார்க்கருடன் தன் பழைய காதலை மீண்டும் புதுப்பித்துக் கொண்டார். அதை கண்டும் காணாமல் போன அரச குடும்பமும், சமூகமும், டயானாவின் காதல்களை பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கத் தொடங்கின. வரிசையாக வந்த விமர்சனங்களால் கடும் மனச் சிதைவுக்கு ஆளானார் டயானா. கேமில்லாவைப் பற்றிக் குறிப்பிடுகையில், “எங்கள் திருமண உறவில் மூவர் இருந்தோம்; அது கொஞ்சம் கூட்டமாகவே தெரிந்தது”, என்று பின்னாளில் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

கேமில்லாவுடன் சார்லஸ், 2015

சட்டப்படி இருவரும் பிரிந்த பிறகும் டயானாவின் மேலான ஊடகங்களின் மோகம் குறையவில்லை. இந்த மோகத்தை, அதீத காதலை டயானாவின் ‘அட்டென்ஷன் சீக்கிங்’ மனநலம் ஊக்குவித்தது காரணமாக சொல்லப்பட்டது. திருமணமான சில வாரங்களில் தனிமை தன்னை மிகவும் அச்சமூட்டியதாக உணர்ந்ததாக தன் தோழிகளிடம் சொல்லியிருக்கிறார் டயானா.

அதே போல, மூன்று மாத கர்ப்பிணியான டயானா படிக்கட்டிலிருந்து வேண்டுமென்றே உருண்டு விழுந்து அடிபட்டுக்கொண்டார் என்பதையும் பின்னாளில் ஒப்புக்கொண்டார். சார்லஸைப் பொருத்தவரை ஒரு பெர்ஃபெக்ட் ‘ட்ரோஃபி வைஃப்’ தான் டயானா. அவரை விட 9 வயது இளையவரான டயானாவைத் திருமணம் செய்துகொண்டதும் தன் ‘அரசக் கடமை’ முடிந்து போனது என்றே நினைத்திருந்தார். இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்ததும், டயானா அவருக்கு தேவையற்றவராகிப் போனார்.

அன்றைய உலகின் ஆதர்ச குடும்பம் சுக்கல் சுக்கலாக நொறுங்கிப் போனதைப் பார்த்து வளர்ந்த தலைமுறைக்கு டயானாவின் அடுத்தடுத்த காதல்கள் புரியவே இல்லை. குழப்பமான, மனநலம் பிறழ்ந்த குழந்தை தான் அவர் என்றே உலகம் கதை சொல்லியது. தன் சொந்த தம்பிலார்ட் ஸ்பென்சரிடம் டயானா விவாகரத்துக்குப் பின் அவரது குடும்பப் பண்ணை வீட்டில் ஒரு அறையில் வசிக்க அனுமதி கோரினார்.

அரச குடும்பம் டயானாவை தெருவில் நிறுத்தவில்லை தான். ஆனாலும், சார்லஸ் தனக்கு முதன்முதலில் வாங்கிப் பரிசளித்த ஃப்ளாட்டில் தனியே வசிக்கப் பிடிக்காமல் தான் தன் சகோதரனிடம் கெஞ்சினார். அங்கும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இன்றோ ஸ்பென்சர் தன் மாளிகையில் டயானாவின் கல்லறைக்கு இடம் ஒதுக்கியிருக்கிறார். உயிருடன் அவர் வாழ்ந்த போது ஒரு அறை மறுத்த தாய்வீடு, கல்லறைக்கு ஏக்கர் கணக்கில் நிலம் ஒதுக்கியது வேதனை தான்.

உலகே வியந்து பார்த்த ‘பெண்மையின்’ சின்னமான டயானா அந்த நொடியிலிருந்து ஒரு ‘புரட்சியாளராக’, ரிபெலாக மாறிப்போனார். அடுத்தடுத்து ‘காதல் டேப்கள்’ வெளியாயின. மகன்களை முன்னிட்டு சார்லஸை சந்திக்க நேர்ந்த போதெல்லாம் தன்னைத் தானே காயப்படுத்திக்கொண்டு மருத்துவ சிகிச்சை நாடினார். அவரது தனிப்பட்ட விஷயங்களை நண்பர்களும், தெரிந்தவர்களும் கோடிக்கணக்கான பவுண்டுகளுக்கு இங்கிலாந்து நாளிதழ்களுக்கு விலைபேசினார்கள். இந்தச் சூழலில் தான் புகழ்பெற்ற ஹரோட்ஸ் ஸ்டோரின் நிறுவனர் முகமது ஃபயெதின் மகன் டோடி ஃபயெதுக்கும் டயானாவுக்கும் காதல் ஏற்பட்டது.

அரச குடும்பத்தின் அமர்த்தலான, ரகசிய காதல்கள் நூற்றாண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் அமுங்கிபோனாலும், டயானாவின் காதல்கள் கிளறப்பட்டு, அவரைக் காயப்படுத்த பயன்படுத்தப்பட்டன. ஆணுக்கு எத்தனை பெண்களுடனும் காதல் வரலாம், எந்தச் சூழலிலும் காதல் வரலாம்; அது எல்லாமே தெய்வீகம் தான் என்று சொல்லும் சமூகம் தான், விவாகரத்தான பெண்ணுக்கு மற்றொரு ஆணுடன் இருக்கும் காதலை பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கிறது.

எந்த சமூகமும், ஊடகமும் டயானாவைக் கொண்டாடியதோ, அதே சமூகமும் ஊடகமும் டயானாவை 1997ம் ஆண்டு ஒரு பின்னிரவில் கொன்று ஒழித்தன. நோய்க்கு உயிரைத் தந்தவர்களைக் கூட மறந்து போவோம்; பாபராசி எனப்படும் ஊடக வெளிச்சத்துக்கு அஞ்சி உயிர்விட்ட டயானாவை மறக்க முடியுமா என்ன? அதீத காமிரா வெளிச்சத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த டயானா என்ன எண்ணியிருக்கக் கூடும்?

டயானா டோடி சிலை, ஹரோட்ஸ், 2010

டோடியின் தந்தை முகமது தன் ஹரோட்ஸ் ஸ்டோரில் 2018ம் ஆண்டுவரை வைத்திருந்த டோடி-டயானா சிலையை டயானா பார்த்திருந்தால் என்ன நினைத்திருக்கக்கூடும்? என்னளவில் டயானாவை நான் அந்த சிற்பத்தில் இருப்பது போலவே நினைவில் இருத்தியிருக்கிறேன். பறவை போல சுதந்திரமாகப் பறந்து, காதலனின் கைப்பற்றி, கடற்கரை மணலில் நடந்தபடி…

ஆண் எத்தனை காதல்கள் வேண்டுமானாலும் கொள்ளலாம், தவறே இல்லை. பெண்ணுக்கு காதல்ஒரே ஒருமுறை மட்டுமே பூக்கும் என்று தமிழர்கள் மட்டுமல்ல, உலகே நம்பிக்கொண்டிருக்கிறது. கேமில்லாவுடன் காதல், டயானாவுடன் காதல், டயானாவுடன் திருமணம், கேமில்லாவுடன் உறவு தொடர்ச்சி, டயானா விவாகரத்து, மீண்டும் கேமில்லாவுடன் திருமணம் என்று படு ஜாலியாக உலகின் எந்த கைச்சுட்டலும் இன்றி இயல்பாக வலம்வந்து கொண்டிருக்கிறார் சார்லஸ். ஒரே குடும்பம், அரச பரம்பரை தான், ஆனால் ஆணின் காதல்கள் ‘தெய்வீகம்’. பெண் காதல்கள் ‘பரத்தமை’ என்று இங்கு பார்க்கப்படுவது ஏன்?

டயானாவை இன்றைய இளைய தலைமுறை அறியுமா என்று தெரியவில்லை. ஆனால் 80களின் ‘குடும்பப் பெண்’ ஒருவர், 1990களின் இறுதியில் ‘ரிபெலாக’ மாறிய பின்னணியை அறிந்த ‘அந்தக் கால’ பெண்களுக்கு டயானாவை நினைத்தால் ஒரு பெருமூச்சு ஏற்படுவதை மறுப்பதற்கில்லை. தன் வாழ்க்கையை தனக்காக வாழ முடியாத சூழலில், திடீரென கிடைத்த விடுதலையைக் கொண்டாடிய ‘சிம்பிள்’ பெண் டயானா.

காதல் இயல்பானது, மனிதர்கள் எல்லோருக்கும் எவர் பாலும், எத்துணை முறையும் வரக்கூடியது. வாழ்வில் ஒருமுறை வந்துபோக, அம்மைப்புண் அல்ல. என்று நடந்தாலும், எத்தனை இழந்தாலும், வாழ்வின் எல்லையில் அசைபோட்டு ரசிக்கக்கூடியது காதலில் கிடைக்கும் மகிழ் பொழுதுகளே. ஆதலினால் காதல் செய்வீர் பெண்டிரே. காதலிப்பவரை இம்சிக்காமலும் இருப்பீரே!!

ஹேப்பி பேர்த்டே லேடி டை!

கட்டுரையாளரின் பிற கட்டுரைகள்:

கட்டுரையாளர்:

நிவேதிதா லூயிஸ்

எழுத்தாளர், வரலாற்றாளர்.