// 75% பிராமண சமூகம் தன்னிறைவு அடைந்துவிட்டது. பிராமணார்த்தம் போவதுகூட எலைட் சமூகத்தில் ஹாபி/ சேவை என்று போகும் சிலரைப் பார்த்து இருக்கிறேன். அதேப்போல போன தலைமுறைகளில் இல்லாதவர்கள் புரோகிதத்துக்குப் போவார்கள் என்பது மாறி, இன்று தன் பிள்ளைகளை வேதப்பாடசாலைக்கு அனுப்புவதையும் பார்க்கிறேன்.//

நேற்றைய எனது கட்டுரைக்கு இப்படி ஒரு பின்னூட்டத்தைப் பார்க்க நேர்ந்தது. உண்மையில் இது ஒரு நகைமுரணான விஷயம்தான். எனக்கு இந்தப் பாடல் வரிகள்தான் நினைவில் வருகின்றன.

‘அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா

ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா

வாயில் என்ன மந்திரமா

மனசு என்ன எந்திரமா

சாமியிடம் பேசுது புள்ள

தாயழுகை கேட்கவுமில்லை’

பஞ்சாங்க / புரோகிதப் பார்ப்பனர்கள் இன்றளவும் அதிக எண்ணிகையில் இருக்கிறார்கள்தான், அதில் சந்தேகமே இல்லை. எல்லா துறைகளைப் போல இங்கேயும், ஒருவர் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தால், பிழைப்புக்காக அதை பிடித்துக்கொள்ள அதிகளவில் ஆள்கள் இருக்கிறார்கள்.

சென்ற தலைமுறைவரை மிக மிக மோசமான பொருளாதார நிலையில் இருந்தவர்கள் சற்று மேம்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லலாமே ஒழிய, 75% பேர் பொருளாதார தன்னிறைவு அடைந்துவிட்டார்கள் என்பது முற்றிலும் அபத்தமான பார்வை.

அதே போல, எலைட் சமூகத்தை சார்ந்தவர்கள், நிச்சயம் பிள்ளைகளை வேத பாடசாலைக்கு அனுப்புவதில்லை. முறையான நவீன பள்ளிக் கல்வியுடன் கூட, எப்படி கர்நாடக சங்கீதம் கற்பிக்கிறார்களோ அதே போல ஒரு குருவிடம் அனுப்பி, வேதமும் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதே சமயம் முழு நேரமாக (உண்டு உறைவிட) வேத பாடசாலைக்கு வேதம் படிக்க அனுப்பி வைப்பவர்களும் இருக்கிறார்கள்தான்… ஆனால், நவீன கல்விக்கு செலவழிக்க வசதியில்லாதவர்களும், நடுத்தட்டு பழமைவாதிகளுமே இதில் அடக்கம்.

அடுத்து பிராம்மணார்த்த பார்ப்பனர்களைப் பற்றிப் பார்ப்போம்!

இவர்களில் பலர் ராயபுரம் பிரம்ம தீர்த்தம், மாம்பலம் ஞானவாபி, குரோம்பேட்டை ஞானவாபி, தாம்பரம் விஷ்ணுபாதம் போன்ற அமைப்புகள் மற்றும் ஊருக்கு ஊர் கான்ட்ராக்ட் திவசம் ஏற்பாடு செய்யும் தனி நபர்கள் என அதிக அளவில் உள்ளனர், அங்கெல்லாம் பலர் நிரந்தரமாக வேலை செய்கின்றனர்.

https://www.facebook.com/groups/444094645641076/search/?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

கொரோனா பேரிடருக்கு பின்னர், நிறைய சிறு சிறு நிறுவனங்கள் மூடப்பட்ட பிறகு பலர் வேலை இழந்து நின்ற நிலை நாம் அறிந்ததே! ஓய்வு பெறும் வயதையும் எட்டாமல், மாற்றங்கள் காரணமாக புதிய வேலைக்கும் போக முடியாமல் சிக்கிக் கொண்டவர்கள் பலர். இப்படிப்பட்டவர்கள், குடும்பத்தை காப்பாற்ற பிராம்மணார்த்தம் சாப்பிடுவதை முழு நேர தொழிலாக ஏற்றுக்கொண்டதை, கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

பிராமணர்த்தம் உண்பவர்களுக்கும் சமையல் மாமிகளுக்கும் உதவுமாறு வேண்டுகோள், ஃபேஸ்புக் பதிவு – https://www.facebook.com/groups/444094645641076/search/?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிக்கும் பல பார்ப்பனர்கள் இதை முழு நேர தொழிலாகவே செய்கின்றனர். அவர்களெல்லாம் எலைட் சமூகத்தைச் சார்ந்தவர்கள் கிடையவே கிடையாது. இதில் பிள்ளைகள் இல்லாத / பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயோதிகர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். இளவயதில் தனியார் நிறுவனங்களில் சொற்ப சம்பளத்தில் வேலை செய்துவிட்டு, ஓய்வூதியம் எதுவுமே இல்லாமல் பணி ஓய்வு அடைந்தவர்கள் பலரும் இதையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மிக மிக அருகில் இருந்து பார்த்தால் மட்டுமே இதையெல்லாம் உணர முடியும்.

இறந்தவர்களுக்குச் செய்யும் இறுதிச் சடங்கில் பதினோராவது நாள் ஒருவர், பன்னிரெண்டாவது நாள் நான்கு பேர் என பிராம்மணார்த்தம் சாப்பிடுவதற்கு ஆள்கள் தேவைப்படுவார்கள். இதில்லாமல் ஒருவர் இறந்த முதல் வருடத்தில் பதினாறு திவசங்கள் செய்தாகவேண்டும், அவற்றுக்கு ‘ஊன மாஸ்யாதிகள்’ என்று பெயர். பிறகு வருடாந்திர திவசம். பெருபாலும் யாரும் இவற்றை குறைப்பதில்லை.

பவித்ரம் (தந்தை இல்லாத ஆண்கள் மட்டும் அ ணியலாம்)

நல்ல பணவசதியில் உள்ளவர்கள், வெள்ளி சொம்பு, வெள்ளி டம்ளர், கால் சவரனிலிருந்து அரை சவரன் வரையிலாகும் மோதிரம் (பவித்ரம்) அங்க வஸ்திரத்துடன் வேஷ்டி, 1500 இல் தொடங்கி 3500, 5000 வரை அவர்கள் ஏற்கும் ஸ்தானத்துக்கு ஏற்றவாறு தட்சணை என அனைத்தும் அவர்களுக்குக் கொடுப்பார்கள். நடுத்தர வர்க்கம்/கீழ் நடுத்தர வர்க்க நிலையில் உள்ளவர்கள் தங்கம் வெள்ளி தவிர்த்து, அவரவர் வசதிக்கேற்ப செய்கிறர்கள். பெரும்பாலும் இது போன்ற சமயங்களில் நான் சென்ற பகுதியில் சொல்லியிருந்தது போல உறவினர்களே அந்தந்த ஸ்தானத்தை ஏற்றுக் கொள்வார்கள். பங்காளி உறவினராக இல்லாமல் இருப்பது மட்டுமே அவசியம்.

இதெல்லாம் கான்ட்ராக்டாகக்கூட எடுத்து செய்ய ஆள்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சமையங்களில் தட்சணையை மட்டுமே எடுத்துக் கொண்டு மற்ற அனைத்தையும் அவர்களிடம் ஒப்படைத்து விடவேண்டும். ஒரு குறைந்த கட்டணம் கமிஷனாகவும் கொடுக்க வேண்டி வரும். இதைப் பற்றி நேரடியாக விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், தி-நகர் சிவா விஷ்ணு கோவிலின் பின்புறம் இருக்கும் மண்டபத்துக்கு மாலை நேரங்களில் சென்று விசாரித்தாலே போதும்.

‘ஹாபி’யாக எடுத்துக்கொண்டு ‘எலைட்’ சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் சத்தியமாக இது போன்ற ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கவே மாட்டார்கள். நெருங்கிய உறவினர்களுக்காக வேண்டுமானால் ஓரிரு முறை ஈடுபடலாம். உயர் நடுத்தர வர்க்க நிலையை எட்டி விட்டால்கூட, யாரும் இதில் ஈடுபடுவதில்லை.

நிம்மதியாக இரண்டு மூன்று சபாக்களில் மெம்பர்ஷிப் வாங்கிக்கொண்டு கச்சேரிகளுக்கு சென்று வருவது, நினைத்த நேரத்தில் ( ஆன்மீக/உல்லாச) சுற்றுலாவுக்கு சென்று வருவது, வெளிநாடுகளுக்குப் போய் பிள்ளைகளுடன் இருந்துவிட்டு வருவது என இப்போது இருக்கும் மேல் தட்டு பார்ப்பன வயோதிகர்கள் வாழ்க்கை ஓரளவுக்கு சொல்லிக் கொள்ளும்படிதான் செல்கிறது.

இவர்களுக்கெல்லாம் அடுத்த வேளை சாப்பாட்டைப் பற்றியோ மருத்துவ செலவுகளைப் பற்றியோ சிறிதளவும் கவலை இருக்காது. ஆனால் பிராமணர்த்தம் உண்பது போன்ற தொழில்களில் ஈடுபடும் மனிதர்களின் நிலைமை அப்படி இல்லை. அவர்களது அன்றாட செலவுக்கு பணம் ஈட்டவே இப்படி ஓடுகிறார்கள் என்பது மறுக்க இயலாத உண்மை.

மிகவும் ஆழமான ஒரு விஷயத்தை, தயக்கம் துறந்து இவ்வளவு வலியுடன் பதிவு செய்யும்பொழுது, இதுபோல எதையாவது சொல்லி இதை பிசுபிசுக்க வைப்பவர்களைப் பார்க்கும் பொழுது மேலும் மேலும் வேதனைதான் அதிகரிக்கிறது.

மற்றும் ஒருவர் குறிப்பிட்டபடி தெற்கத்திய கிராமப்புறங்களில் இருக்கும் பார்ப்பனப் பெண்கள் குளத்தங்கரை தானம் பெற செல்லவேமாட்டார்கள். அது குல கவுரவம் சார்ந்த விஷயமாக மாறிப்போகும். ஆனால் நகரங்களில் இதையே முழு நேரத் தொழிலாகச் செய்கிறவர்கள் இன்றளவும் அதிகம் பேர் இருக்கிறார்கள். இந்த புடவை தானம் பெறுவதிலும், புடவையை விட, இவர்களுக்கு பணமாகக் கொடுக்கப்படும் தட்சணையே முக்கியத்துவம் பெறுகிறது. இது ஒரு சபிக்கப்பட்ட நிலை என்பதால் யாரும் மகிழ்ச்சியுடன் இதை ஏற்பதில்லை. மாம்பலம் நோக்கிச் செல்லும் புறநகர் ரயில்களில், காலை 5:30 மணி முதல் 7:00 மணி வரை பயணிக்க நேர்ந்தால் இவர்களைப் போன்றோரை சந்திக்கலாம்.

காஞ்சிபுரம், கும்பகோணம், சிதம்பரம், ஸ்ரீரங்கம் போன்ற ஊர்களில், ‘முண்டனம்’ அதாவது விதவைகளுக்கு தலை மழிக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. என் நெருங்கிய வட்டத்துக்குள்ளேயே சிலர் இருக்கிறார்கள். இவர்களது எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், இவர்களெல்லாம் பொதுவெளியில் இயல்பாக நடமாடுவதில்லை என்பதாலும் பலர் பார்வையிலும் படுவதில்லை. அதனால் இதெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டது என பொருள் இல்லை. இருக்கிறது; ஆனால் அதிகளவில் இல்லை.

இது வங்காள பார்ப்பனர், மராத்திய பார்ப்பனர் போன்றவர்களுடன் ஒப்பிடும்பொழுது மிகமிகக் குறைவு.

ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார சுதந்திரம், அனைத்திலுமே இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழ்நாட்டில் பெண்கள் நிலை உயர்வாகவே உள்ளது. காரணம், ஒரே ஒருவர் மட்டுமே! தந்தைப் பெரியார்.

பெரியார் இல்லை! பெரியார் இல்லை! பெரியார் இல்லவே இல்லை! என ஆனமட்டும் ஆவணப்படுத்த முயன்றாலும், அது இங்கே நடவாத காரியம். காரணம் இதற்கெல்லாம் பின்னால் இருப்பது, அவர் நம் மனதில் ஆழமாக விதைத்துவிட்டுப் போயிருக்கும் சுயமரியாதை உணர்வு மட்டுமே!

  • உள்ளிருந்து ஒரு குரல்