ஹலோ தோழிகளே,

உணர்வுசார் நுண்ணறிவை மேம்படுத்தும் முன்பு நமது இயற்கையான அறிவு எந்த வகையைச் சார்ந்தது என்று தெரிந்துகொள்ளுதல் முக்கியம். இதை அறிந்து கொண்டால்தான் நாம் எந்தத் துறையில் ஜொலிக்க முடியும் என்று புரிந்து கொள்ளலாம். அதன் பிறகு கூடுதல் தகுதியாக EQ கற்றுக் கொள்ளலாம்.

பொதுவாக ஒருவரை அறிவாளி, புத்திசாலி என்று புகழும்போது நாம் குறிப்பிடுவது அவரது அறிவு கூர்மையை மட்டுமே. எத்தனையோ பெற்றோர் மொழிப் பாடத்தில் அதிக மதிப்பெண் வாங்கினாலும் கணக்கிலும், அறிவியலிலும் முழு மதிப்பெண் வாங்காத குழந்தையை அறிவாளி என்று ஒத்துக்கொள்வது இல்லை.

இளையராஜாவை, ஏ.ஆர். ரஹ்மானை மியூசிகல் ஜீனியஸ் என்று கொண்டாடினாலும், சச்சினை கிரிக்கெட் கடவுள் என்று அழைத்தாலும், பல மொழிப் பேச முடிகிற மனிதரை ஆச்சரியத்தோடு பார்த்தாலும் நமக்கெல்லாம் புத்திசாலித்தனம் என்பது கணக்கு அறிவியலோடு சம்பந்தப்பட்டது.  ஆனால், Howard Gardner என்பவர் புத்திசாலித்தனத்தை 8 பிரிவாகப் பிரித்து பன்முக நுண்ணறிவு ( Multiple Inteligence ) என்கிற கருத்தை முன்மொழிந்தார்.

அவை

  1. காட்சிப்படுத்துதல் ( Visual – Spatial)

கற்பனை வளம் மிக்கவர்கள், ஓவியம், கதை, திரைக்கதை எழுதுதல்,  காட்சிப் புதிர்களுக்கு விடை காணல்  ( image based puzzles ) போன்ற திறமை மிக்கவர்கள்.

  • மொழியறிவு (Linguistic Intelligence)

பல மொழிகளில் பேசும், எழுதும் திறன்.

புது மொழியை வேகமாக கற்றல்.

விவாதங்களில், பொது மேடையில், பலர் முன்னிலையில் தயக்கமின்றி தங்கள் கருத்துகளை எடுத்துரைக்கும் திறன்.

  • கணக்கு மற்றும் தர்க்கத்திறன் (Mathematical and logical Intelligence) நமக்கெல்லாம் நன்றாகத் தெரிந்ததுதான்.  கூர் நோக்கும் அறிவு, சவால்களை ஆராய்ந்து தீர்த்து வைத்தல், கணிதப் புலிகள், ராக்கெட் விஞ்ஞானத்தைக்கூட லகுவாகக் கற்கக் கூடியவர்கள்.
  • உடலியக்க நுண்ணறிவு (Bodily – Kinesthetic intelligence) உடல் மேல் அபரிதமான ஆளுமை, கை – கண் ஒருங்கிணைப்பு உள்ளவர்கள். இவர்களுக்குப் படித்து, பார்த்து அறிவதைவிட, செய்து பார்த்துத் தெரிந்து கொள்வது சுலபம். இயற்கையாகவே நடனம் ஜிம்னாஸ்டிக், விளையாட்டுத் துறையில் திறன் அதிகமிருக்கும்.
  • இசை நுண்ணறிவு (Music Intelligence)

இசை நுணூக்கங்களில் இயல்பான திறமை, இசைக் கருவிகளைக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் திறனும் அதிகமிருக்கும். சில சமயம் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, இந்தக் குழந்தைகள் எத்தனை அதிர்ஷ்டசாலிகள், நாமெல்லாம் எத்தனை முயன்றும் அவ்வளவு எளிதில் கைவராத பாட்டு இவர்களுக்கு இவ்வளவு அழகாக வருகிறதே என்று கொஞ்சம் பொறாமைகூடப் பட்டிருக்கிறேன். நம்மால் பல பிரயத்தனங்களுக்குப் பிறகு கைவரும் ஒன்று இவர்களுக்குச் சுலபமாக வரும்.

  • மற்றவர்களுடன் உறவாடும் திறன்  (Interpersonal Intelligence)

இவர்களுக்கு இயல்பாகவே தன் கருத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது, மற்றவரின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வது, சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வது போன்ற திறன்கள் இயல்பாக இருக்கும்.

  • தனிப்பட்ட நுண்ணறிவு (Intra Personal telligence )

இவர்கள் தன்னைப் பற்றிய ஆராய்ச்சியில் அதிகம் ஈடுபடுவர். தன் உடல், மன, எண்ணங்களை நன்கு அறிந்திருப்பர்.

  • இயற்கை நுண்ணறிவு (Naturalistic Intelligence)

இயற்கையைப் பற்றி அதிக ஆர்வமும், அறிவும் கொண்டிருப்பர். மற்ற உயிரினங்களைப் பற்றிய அன்பும் அக்கறையும் அதிகமிருக்கும். மற்ற உயிரினங்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வர்.

இதை வைத்து உங்களை நீங்களே எடை போடுங்கள். நீங்கள் இப்போது எந்த வயதிலிருந்தாலும் இது மிகவும் முக்கியமான படி.

வண்ணதாசனின் கூற்றுப்படி, “ எதுவும் தாமதமாகிவிடவில்லை, இந்த இடத்தில் ஆரம்பித்தால்கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்குப் போய்விட முடியும்.”

எப்படியும் இன்றிருக்கும் நிலையைவிட நிச்சயம் நல்ல நிலைக்குப் போய்விடலாம்.

உங்களின் தனித்திறமையைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி உள்ள யார் இந்தத் திறமையை அங்கீகரிக்காவிட்டாலும் நீங்கள் முதலில் உங்கள் திறமைக்காகப் பெருமைபடுங்கள், அதில் உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

இதில் மற்றவருடன் உறவாடுவதும், தனிப்பட்ட நுண்ணறிவும் EQ வின் மந்திரச் சாவிகள்.

வாங்க நமது மந்திரக்கோலைச் சுழற்ற கற்கலாம்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

’உன்னை அறிந்தால்…’ என்கிற தலைப்பில் ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய தொடர், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் புத்தகமாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்று இருக்கிறது.