டிங்டிங்டிங்டிங் டிங்… டிங்…  மாலை பள்ளி விடுவதற்கான  மணி அடித்த  சில நிமிடங்களில் மாணவர்கள் அவரவர் வகுப்பிலிருந்து சிட்டாய்ப் பறந்து வந்து வரிசையில் நின்றார்கள்.

ஆசிரியர்களும் ஒவ்வொருவராய் வந்துசேர, மாலை நேர ப்ரேயர் தொடங்கி, தேசியகீதம் பாடி முடித்தவுடன் ஹோய்ய்ய்ய்ய்…என்ற சப்தத்துடன் கலைக்கப்பட்ட தேன்கூடு போல நாலா பக்கமும் பிள்ளைகள் சிதறினார்கள். சிலர் வீட்டுக்கும், பலர் தீப்பெட்டி ஆபிசுக்கும் ஓடினார்கள்.   பள்ளிக்கு எதிரே கண்மாயை ஒட்டியிருக்கும் ஆலமர  விழுதுகளைப் பற்றி ஊஞ்சலாடுவதற்கு போட்டி போட்டுக்கொண்டு பலர் ஓடினர். ஆசிரியர்கள் அனைவருமே பக்கத்திலிருக்கும் டவுனை நோக்கி அவரவர் வாகனத்தில் நகர, அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் அந்த இடம் பள்ளிக்கான எந்தச் சுவடும் இல்லாமல் அமைதியானது.

மிகவும் சின்னஞ்சிறு கிராமம் அது. விவசாய நிலம் அனைத்தும் வானம் பார்த்த பூமிதான். இருக்கும் இரண்டு தீப்பெட்டி ஆபிசுகளால் ஊரில் இருக்கும் எல்லோருக்கும் வேலை கொடுக்க முடியவில்லை. அதனால் பக்கத்து ஊர்களிலிருந்து பஸ், வேன், குட்டியானை போன்ற வாகனங்கள்  காலை நாலு மணியிலிருந்தே மனித இயந்திரங்களை அள்ளிப்போட ஊருக்குள் வரத் தொடங்கிவிடும். சமையல் செய்தும் செய்யாமலும் அரக்கப்பரக்க கருக்கலில் வண்டியில் ஏறும் பெண்களின் உழைப்பை தீப்பெட்டி ஆபீசுகள் முடிந்தவரை உறிஞ்சிவிட்டு, சக்கையை அந்தி சாய்ந்தபிறகு  வாகனத்தில் ஏற்றி வந்து துப்பிவிட்டுப்போகும். பெரும்பாலான ஆண்கள் வெளியூர்களுக்கு கட்டிட காண்ட்ராக்ட் வேலைக்குப் போய்விட, ஊருக்குள் மிச்சமிருக்கும் ஆண்கள், பெண்களை வேலைக்கு அனுப்பிவிட்டு சாவடிகளில் உட்கார்ந்து ‘ஒலக அரசியல்’ பேசிக்கொண்டோ, டாஸ்மாக் புண்ணியத்தில் ‘அங்க பிரதட்சணம்’ செய்து கொண்டோ பொழுதை ஓட்டுவார்கள்.

பள்ளி விட்டதும் ஆறாம் வகுப்பு வீரலட்சுமியும் மூன்றாம் வகுப்பு கோகிலாவும் வழக்கம்போல ஊரின் மையத்தில் இருந்த காளியம்மன் கோயில் நோக்கி நடந்தார்கள். இருவருக்கும் பக்கத்து பக்கத்து வீடுதான். வாழ்க்கையைக் கடத்த எல்லாரையும்போல அவர்களது அம்மாக்கள் தீப்பெட்டி ஆபீசிலும், அப்பாக்கள் வெளியூரிலும்  உழைத்து சக்கையாகிக் கொண்டிருப்பதால், பிள்ளைகள் அவர்களாக வளர்கிறார்கள். காலையில் அம்மா வைத்து விட்டுப் போகும் ஏதோ ஒரு பழைய சாப்பாடு… அதை இருவருமே பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. மதியம் சத்துணவு, ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ அம்மா டி.வி. மேல் வைத்து விட்டுப்போகும் காசுக்கு மாலையில் பள்ளிக்கு அருகில் இருக்கும் முனீஸ் அக்கா கடையில் முறுக்கோ, பிஸ்கட்டோ  வாங்கித் தின்று விட்டு, வீட்டுப்பாடம் எழுதி, எப்படியோ பொழுதைக் கடத்தி அம்மாக்களுக்காகக் காத்திருப்பார்கள்.

சுற்றுச் சுவர் கூட இல்லாத சின்னக் கோயில் அது. பையை கோயில் வாசலில் வைத்துவிட்டு,  வழக்கம்போல இரண்டு பேரும் முனீஸ் அக்கா கடைக்குப் போனார்கள். ஏற்கனவே பிஸ்கட் பாக்கெட் வாங்கி காசை காலியாக்கி விட்டிருந்ததால், ஆளுக்கு ஒரு ரூபாய்தான் இருந்தது. 

“ஒர்ரூவா  முறுக்கு ரெண்டு கொடுங்கக்கா…” காசை நீட்டிய வீரலட்சுமி  நீள நீளமாய் வாழைக்காய் பஜ்ஜிகள் ஒரு தட்டில் அழகாக அடுக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும் கையை இழுத்துக்கொண்டாள். கோகிலாவைப் பார்த்தாள். எச்சில் ஊறியது இருவருக்கும்.

“வேணாம், வேணாம் ஒரு பஜ்ஜி கொடுங்க” என்றாள் அவசரமாக.

“ஒரு பஜ்ஜி மூனு ரூவாய்ல…? ரெண்டு ரூபா கொடுக்கற…? சரி, நாளைக்கு ஒரு ரூவா கொண்டு வந்து கொடுக்கறயா?”

“இல்ல… வேணாங்க்கா… அம்மா திட்டும்.”

“ச்சே… இன்னும் ஒரு ரூபாய் இருந்தா ஒரு பஜ்ஜி வாங்கி ரெண்டுபேரும் பங்கு போட்டு சாப்பிடலாம்.”

எப்போதாவது நல்ல மூடு இருக்கும் நாளில், ரேசன் கடையில் வாங்கிய பாமாயில் மிச்சமிருந்தால்தான் முனீஸ் அக்கா, பஜ்ஜி போட்டு விற்பாள். தட்டில் கொட்டிவைத்த சில நிமிடங்களில் காலியாகிவிடும். இது தெரிந்திருந்தால், ‘இன்ட்ரோல் பீரியடில்’ அந்த பிஸ்கெட் வாங்கித் தின்னாமல் முழுக்காசையும் வைத்திருக்கலாம். ஒன்றுமே வாங்காமல் இருவரும் திரும்பி வந்து கோயில் வாசலில் உட்கார்ந்து கொண்டார்கள்.

இருவருக்கும்  பஜ்ஜி சாப்பிட வேண்டும்போல இருந்தது. பஜ்ஜி தீருவதற்குள் அம்மா வந்து விட்டால், எப்படியாவது அழுது பிடித்து பஜ்ஜி வாங்கலாமே என்ற நப்பாசையுடன் வீட்டுப்பாடம் எழுத ஆரம்பித்தார்கள். கண்கள் மட்டும் அவ்வப்போது முனீஸ் கடையை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தன. இன்னும் சில பிள்ளைகள் முன்னாலிருந்த திடலில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

“ஏ வீரலச்சுமி இங்க வா…”

சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள். கையில் ஏதோ பார்சலுடன் அந்த ஆள் நின்று கொண்டிருந்தான். உள்ளூர் ஆள் தான். ஊருக்குக் கடைசியில் வீடு. பக்கத்து ஊர் ஸ்கூலில் பியூன் வேலை.

“என்னா ?”, வீரலட்சுமி கேட்டாள்.

“இந்தா இந்த பார்சலை எங்க வீட்டுல கொண்டு போய் கொடுத்திடறீயா? எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு…”

“ம்ஹூம்… நாங்க எழுதனும், வீட்டுப்பாடம் நெறைய இருக்கு… அந்தப் பையங்ககிட்ட கொடுத்து விடுங்க.”

“அவனுங்க வேலைக்கு ஆக மாட்டாங்கே… நீங்க வாங்க, ஆளுக்கு ஒரு ரூபாய் தர்றேன்.”

வீரலட்சுமி கோகிலாவைப் பார்த்தாள். கோகிலா முனீஸ் கடையைப் பார்த்தாள். சந்தோஷமாய் இருவரும் நோட்டுப்புத்தகங்களை புத்தகப்பைக்குள் வைத்து பையை சுவரில் சாய்த்து வைத்துவிட்டு, அவனிடமிருந்து பார்சலையும் மறக்காமல் காசையும் வாங்கிக் கொண்டார்கள். பார்சல் மணத்தது.

“என்னாதுண்ணே, மணக்குது? உளுந்த வடையா…?” அவர்கள் கண்களில் தெரிந்த ஆர்வத்தையும் மனதில் தெரிந்த ஏக்கத்தையும் மனதுக்குள் அவன் குறித்துக்கொண்டான்.

வேகமாக ஓடோடிச் சென்று மூன்று ரூபாய் கொடுத்து ஒரு பஜ்ஜி வாங்கினார்கள். “இப்ப எப்படி காசு வந்துச்சு?” என்று கேட்ட முனீஸுக்கு பதில் சொல்லாமல், பஜ்ஜியை இரண்டாகப் பிய்த்து இருவரும் தின்றுகொண்டே அந்த வீடு நோக்கிச் சென்றார்கள்.  ஊர்க்கடைசியில் தோட்டத்தை ஒட்டி அந்த வீடு இருந்தது.

“அக்கா… அக்கா…” வெளியிலிருந்து அழைத்தார்கள். எந்தச் சத்தமும் இல்லை, கதவு இலேசாகத் திறந்திருந்தது. தள்ளிவிட்டு உள்ளே போனார்கள். அந்த அக்கா அடுக்களையில் இருந்தது. அடுப்பில் கருவாட்டுக்குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. இவர்களைப்பார்த்ததும் கேட்டார், “என்னாங்கடி…?”

“அண்ணே இதக் கொடுத்துட்டு வரச் சொல்லுச்சு…”

“உங்ககிட்ட கொடுத்து விட்டாராக்கும், வீட்டுக்கு வராம தொரைக்கு என்னா பெரிய கலெக்டர் வேலையாமா…? சரி வைச்சிட்டுப் போங்க…”

“ம்ம்ம்ம்… அம்பது வயசுக்கு மேல ஆச்சு, ஒரு புள்ள குட்டி இருந்தா இந்நேரம் கல்யாண வயசு வந்திருக்கும். ஆனா இந்த ஆளு இன்னும் சோக்கு பண்ணிக்கிட்டு அலையறான், என்னிக்கு எவகிட்ட அடி வாங்கப்போறானோ தெரியல…” தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தவளை ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் இருவரும். புலம்பிக் கொண்டே அடுக்களைக்குள் போகத் திரும்பியவள், இவர்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும், “இன்னும் போகலியா நீங்க? இந்தா இதை தின்னுக்கிட்டே போங்க…” பார்சலிலிருந்து ஒரு உளுந்த வடையை எடுத்து இரண்டாகப் பிய்த்துக் கொடுத்தாள்.

அதை வாங்கிக் கொண்டவர்கள், கருவாட்டுக்குழம்பு வாடையை நன்றாக மூச்சுப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்தார்கள். வீரலட்சுமி, கோகிலாவிடம் “கோகி, உங்க அம்மாட்ட நாம இங்கு வந்ததையோ, அந்த அண்ணன் ரூபாய் கொடுத்ததையோ சொல்லாத…” என்றாள்.

“ஏன்?”

“ம்ம்ம்ம்… சொன்னா நல்லா உங்க அம்மா வெளக்குமாத்தை வைச்சு வெளுக்கும். அடிவாங்க ஆசையா இருந்தா சொல்லிக்கோ…” ‘நல்ல்ல்லா’வை அழுத்திச்சொன்னாள்.

“அய்யோ….நா சொல்ல மாட்டேம்ப்பா, போன மொற எங்க சித்தி வந்தப்பா காசு கேட்டேன்னு, அந்த அடி அடிச்சுச்சு” கோகிலா தோள்களைக் குலுக்கி மறுத்தாள்.

அடுத்தடுத்த நாள்களில் அந்த ஆள் தினம் தினம் ஒரு பார்சலுடன் வந்தான்.  இவர்களைப் பார்த்தவுடன், ஆளுக்கு ஒரு ரூபாயை நீட்டுவதும், பார்சலைத் தருவதுமாக இருந்தான். கொடுக்கும்போது அவன் பார்க்கும் பார்வையும், கையத் தடவுவதும் மட்டும் வீரலட்சுமிக்குப் பிடிக்கவில்லை. நடந்து செல்லும் வழியில் இருவருக்கும்  ‘இன்னிக்கு இந்த பார்சலில் என்ன இருக்கு?’ என பந்தயம் கட்டி விளையாடுவதும், அதை முகர்ந்து பார்ப்பதும் ஒரு விளையாட்டாக மாறிப்போனது.

ஒரு நாள் வழக்கம்போல வந்தவன், பார்சலைக் கொடுத்து விட்டு, காசு கொடுக்காமல், “இதைக் கொண்டு போய் கொடுங்க,  என்ட்ட சில்லறை இல்ல, நான்  சில்லறை மாத்தி கொண்டு வாறேன்” என்று சொல்லி விட்டு வீரலட்சுமி கன்னத்தைக் கிள்ளிவிட்டு ரேசன் கடையை நோக்கி போனான். இருவரும் பேசிக்கொண்டே அந்த வீட்டை அடைந்தார்கள். கதவு பூட்டியிருந்ததைப் பார்த்ததும் குழப்பமாக இருந்தது. பக்கத்தில் வீடுகள் எதுவும் இல்லை. என்ன செய்வது எனப் புரியாமல் பக்கத்துத் தொழுவில் கட்டியிருந்த மாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். திரும்பிப் போகலாமா என யோசித்துக் கொண்டிருக்கையில் அந்த ஆள் வந்து விட்டான். அவனே சாவி வைத்திருந்தான். கதவைத் திறந்து விட்டு,

“உள்ள வாங்க” என அழைத்தான்.

“அக்கா இல்லியாண்ணே…?”

“அக்கா  கரிசல்பட்டில பொங்கல்னு போயிருக்கா”

“அப்புறம் எதுக்கு எங்க கிட்ட பார்சலை கொடுத்து விட்டீங்க…?”

“அதுவா, நான் இன்னிக்கு உங்களுக்குத்தான் தின்பண்டம் வாங்கியாந்தேன், அங்ஙனயே கொடுத்தா மத்த பசங்க எல்லாம் கேப்பாங்க இல்ல…அதனாலதான் உங்களை இங்க வரச் சொன்னேன்.”

“நெசம்மா…? எங்களுக்கா…?” வீரலட்சுமி சந்தேகத்துடன் கேட்க, கோகிலாவுக்கு சந்தேகமெல்லாம் இல்லை, சீக்கிரம் பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட பரபரத்தாள்.

“உங்களுக்கேதான், பார்சலைப் பிரிங்க”

பார்சல் சூடாக இருந்தது. பிரிக்கும்போதே, கேசரி மணத்தது. இன்னொரு பார்சலில் பஜ்ஜி.

கண் நிறைய சந்தோஷமும், ஆர்வமும் கொப்பளிக்க வீரலட்சுமி நிமிர்ந்து பார்த்தாள்.

“எல்லாமே உங்களுக்குத்தான்… சாப்பிடுங்க”

இரண்டு பேரும் ஆசை ஆசையாய் நெய் ஒழுகிக் கொண்டிருந்த கேசரியை எடுத்து வாய் கொள்ளாமல் அடக்கினார்கள். அவன் மெதுவாக அவர்கள் முன்னாலேயே பேன்ட்டை உருவி சுவரை ஒட்டி இருந்த கொடியில் போட்டான். சட்டையைக் கழற்றினான். வெறும் ஜட்டியோடு நின்றான். நிமிர்ந்து பார்த்த வீரலட்சுமிக்கு அருவெறுப்பாக இருந்தது.

வீட்டில் அப்பா கைலி மாற்றினால்கூட, “பொம்பளப்புள்ள முன்னாடி கைலி மாத்தறயே, அறிவில்ல உனக்கு?” என அம்மா அப்பாவைத் திட்டுவது நினைவுக்கு வந்தது. சீக்கிரம் இங்கிருந்து போகவேண்டும் என பரபரத்தது. ஆனால் கேசரியை விட்டுட்டு போக மனமில்லை. கோகிலா எதைப்பற்றியும் யோசிக்காமல் ஆர்வமாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவர்கள் கையிலிருந்த பொட்டலங்களை  வெடுக்கென பறித்தவன், பக்கத்தில் இருந்த கட்டிலில் வெறும் ஜட்டியோடு படுத்துக்கொண்டு தனக்குப் பக்கத்தில் வைத்துக்கொண்டான்.

“இங்க வாங்க என் பக்கத்தில உட்கார்ந்து சாப்பிடுங்க…”

……………

…………….

அவர்கள் கிளம்பும்போது கேட்டான், “உங்களுக்கு என்ன பிடிக்கும்? நாளைக்கு என்ன வாங்கிட்டு வர?”

இரண்டு பேரும் பதில் சொல்லாமல் வெளியேறினார்கள். போகும்போது கோகிலா வீரலட்சுமியிடம் கேட்டுக்கொண்டே வந்தாள்.

“ஏன் இந்த அண்ணே இப்படில்லாம் செய்யுது?”

வீரலட்சுமிக்கு பதில் தெரியவில்லை.

அன்று இரவு முழுக்க வீரலட்சுமிக்கு கனவிலெல்லாம் அந்த ஆள் வந்து உடம்பைத் தடவுவது போலவே இருந்தது. இரண்டு மூன்று முறை பயத்தில் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தாள். ஆனால் மறுநாள் மாலைக்குள் அந்த எண்ணம் மறைந்து, ‘இன்னிக்கு என்ன தின்பண்டம்?’ என  எதிர்பார்ப்பு தோன்றியது. அவனும் தினம் ஒரு பார்சலுடன் வர ஆரம்பித்தான். ரவா தோசை, கேசரி, புரோட்டா, நெய் மணக்கும் அல்வா… இன்னும் இன்னும் அவர்கள் அதுவரை பார்த்தறியாத தின்பண்டங்கள்…

அந்த அறைக்குள் நடப்பது எதுவும் இருவருக்கும் பிடிக்கவில்லை என்றாலும் அவன் கொண்டுவரும் பண்டங்கள் அவர்களை இழுத்தன.  மாலை ஆனதும், இருவருமே அவன் வரும் பாதை பார்த்து காத்திருக்க ஆரம்பித்தார்கள். பத்து பதினைந்து நாள்கள் ஆகியிருக்கும். அன்று பிரியாணி வாங்கி வந்திருந்தான். இரண்டு பேரும் ஆசைஆசையாய் சாப்பிட்டு முடித்தார்கள். பிறகென்ன…வழக்கம்போலத்தான்.

அன்று வீரலட்சுமிக்கு வலி உயிர் போவதுபோல் இருந்தது. பாவம்… கோகிலா, வலி பொறுக்காமல் கத்தத் தொடங்கிவிட்டாள்.

“அண்ணே… வலிக்குதுண்ணே, விட்டுடுங்கண்ணே…”

அவன் காரியத்திலேயே மும்மரமாக இருந்தான்.

“எங்க அம்மா ட்ட சொல்றேன் பாரு…”

கோகிலா வலியிலும் கோபத்திலும் கதறினாள். வெளியே கதவு தட்டும் சத்தம் கேட்டது. சட்டென திடுக்கிட்டான்.

“யார்ட்டயாவது இங்க நடக்கறத சொன்னீங்க… டெய்லி எங்க வீட்டுக்கு வந்து திருட்டுத்தனமா  தின்னுட்டு போறீங்கன்னு சொல்லி, போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்துடுவேன் ஜாக்கிரதை!” மிரட்டலாகச் சொன்னவன் கதவைத் திறக்க, வெளியே அவன் மனைவி நின்றுகொண்டிருந்தாள். அவள் என்ன, ஏது என புரிந்து கொள்வதற்குள் குழந்தைகள் இருவரும் அழுதுகொண்டே ஓடிவிட்டனர். அந்த வீட்டுக்குள்ளிருந்து சண்டையும் அழுகைச் சத்தமும் இரவு முழுக்கக் கேட்டுக்கொண்டிருந்தது.

வீட்டுக்கு வந்த வீரலட்சுமி அம்மா வந்தவுடன் இந்த விஷயத்தை சொல்லலாமா என நினைத்தாள்.  ‘ஏன் இத்தனை நாளாக சொல்லவில்லை?’ என அம்மா அடிப்பாளோ என்றும் பயமாக இருந்தது.  காய்ச்சல் வருவது போல இருந்தது. அம்மா வந்ததும் மெல்ல ஆரம்பித்தாள்.

“அம்மா…”

“என்னடி?”

“ஒண்ணுமில்ல… உங்கிட்ட ஒண்ணு சொல்லனும்”

“உன் கதையை அப்பறம் கேட்கறேன், இப்ப கடையில போயி தக்காளி வாங்கிட்டு வா… இன்னும் எம்புட்டு வேலை கெடக்கு… இந்த நேரத்துல வந்து சும்மா நொய்யு நொய்யுன்னுட்டு…”

வீரலட்சுமி பதில் பேசாமல் தக்காளி வாங்க கடைக்குச் சென்றாள்.

மறுநாள் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த உமா டீச்சர், வீரலட்சுமி எதையோ பார்த்து பயந்ததுபோல அரண்டு போய் உட்கார்ந்திருப்பதை கவனித்தாள். ‘எப்போதும் படிப்பில் ஆர்வமாக இருக்கும் வீரலட்சுமி ஏன் சில நாட்களாக மிகவும் சோர்வாக இருக்கிறாள்? வீட்டுப்பாடமும் எழுதுவதில்லை, சரியாக படிப்பதில்லை, சுகமில்லையோ?’ என சந்தேகப்பட்டு பக்கத்தில் போய் கை வைத்துப் பார்த்தாள். உடம்பு சூடாக இருந்தது.

“ஏன்மா காய்ச்சலா? மாத்திரை சாப்பிடறியா?” முதுகைத் தடவியவாறே டீச்சர் கேட்கவும், வீரலட்சுமியால் தாங்க முடியவில்லை. ஓவென கத்தி அவள் அழ ஆரம்பிக்க, வகுப்பே வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டது.

“ஏம்ப்பா அழற? வீட்ல அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டாங்களா?” “இல்ல டீச்சர்….ஒண்ணுமில்ல டீச்சர்…”, அழுது கொண்டே பதில் சொன்னாள். உமா டீச்சருக்கு ஒன்றும் புரியவில்லை. தனியாக விசாரிக்கவேண்டும் என நினைத்தவள், மதிய இடைவேளையில் வீரலட்சுமியை கூப்பிட்டு அனுப்பினாள்.

“டீச்சர்…”

“என்ன ஆச்சு, ஏன் இவ்வளவு அழுகை? டீச்சர்ட்ட சொல்ல உனக்கு என்ன பயம்?”ஆதரவாய்க் கேட்டாள் உமா.

நடந்ததை ஒன்று விடாமல், அவன் இவர்களிடம் நடந்து கொண்ட விதத்தை, பிட்டுப் பிட்டு வைத்தாள் வீரலட்சுமி. உமா டீச்சருக்கு காது கூசியது, அருவெறுப்பில் வாந்தி வரும் போலிருந்தது.

“நீ சொல்றது உண்மை தானா…? பொய் ஏதும் இல்லியே…?”

“சாமி சத்தியமா… அம்மா சத்தியமா நெசம் தான் டீச்சர்”

கோகிலாவையும் வரவழைத்து பக்குவமாகக் கேட்க, அந்தக் குழந்தை நடந்ததை வெள்ளந்தியாய்க் கொட்டியது. ஏழு வயது குழந்தையின் மழலைகூட மாறவில்லை. உமா டீச்சருக்கு அவனை வெட்டிப்போட்டால் என்ன எனத் தோன்றியது. விஷயம் விபரீதமாக இருப்பதை உணர்ந்து  பள்ளி முதல்வரிடம் பிள்ளைகளை அழைத்துப் போனாள்.

அன்று மாலை இருவருடைய அம்மாக்களும் வேலை விட்டு வரும்வரை உமா டீச்சரும் பள்ளி முதல்வரும் பள்ளியிலேயே காத்திருந்து, விஷயத்தைச் சொன்னார்கள். விஷயம் தெரிந்து இருவரும் தாங்க முடியாமல் அழுதார்கள். “போலீஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுப்போமா?”, என்று உமா கேட்டதற்கு, “இல்ல டீச்சர், நாங்க யோசிச்சிட்டு நாளைக்கு வந்து சொல்றோம்”, எனக் கூறிவிட்டுப் போனார்கள்.

மறுநாள் நான்கு பேராய் பள்ளிக்கு வந்தார்கள்.

“டீச்சர், இந்த விஷயத்தை தயவு செஞ்சி நீங்க யார்ட்டயும் சொல்லிடாதீங்க. நாங்க அவன் பொண்டாட்டிகிட்ட பேசினோம். அவளுக்கும் இது தெரியுமாம். அவளும் சண்டை போட்டாளாம். இந்த ஊர் மூழுக்க அவங்க ஜாதிதான். நாங்க சும்மா ஏழெட்டு வீடுக இங்க பொழைக்க வந்தவுக… அவங்களை எதுத்து நாங்க எதுவும் செய்ய முடியாது. அப்படியே எதுத்துப் பேசினாலும் எங்களை இங்க வாழ விடமாட்டாங்க. ஊரைவிட்டு தொரத்தி விட்டுடுவாங்க. ஊருக்குள்ள இந்த விஷயம் தெரிஞ்சிடுச்சினா, எங்களுக்கு குடும்பத்தோட சாகுறதத் தவிர வேற வழியில்ல… எங்க பிள்ளைக மேலயும் தப்பு இருக்கு. அவன் ஆம்பள அப்படித்தான் இருப்பான்… அவன் கூப்பிட்டா இவளுக ஏன் போறாளுக? ரெண்டு பேரையும் காலை முறிச்சுப் போட்டாத்தான் அடங்குவாளுங்க, அதனால, உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறோம். எங்க பிரச்சினையை நாங்க பார்த்துக்கறோம், நீங்க இதுல தலையிடாதீங்க” பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.

பரிதாபமாக நின்று கொண்டிருந்த வீரலட்சுமியும் கோகிலாவும் அம்மாக்களையே வெறிக்கப் பார்த்தார்கள்.

இரண்டு மாதம் கழிந்த ஒருநாள்… மாலையில் பொட்டலில் விளையாடிக்கொண்டிருந்த பெண் குழந்தைகளை நோட்டம் விட்டான். “ஏய் மீனாட்சி, இங்க வா…” சத்தமாக அழைத்தான். அவன் கையிலிருந்த பொட்டலத்திலிருந்து கமகமவென திருநெல்வேலி அல்வா வாசனை வந்துகொண்டிருந்தது.

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். அடுத்து, ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும், ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வி த் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் அழகாக எழுதியிருக்கிறார். இம்மூன்று தொடர்களும் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகங்களாகவும் வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. ‘வியட்நாம் அனுபவங்கள் ‘என்கிற இவரது நான்காவது தொடர் நூலாக்கம் பெற்றுவருகிறது. இது தவிர ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகத்துக்காக ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் எழுதியுள்ளார். குட்டிப் பெண்களின் பெரிய கதைகள் இவர் எழுதும் ஐந்தாவது தொடர்.