சாதி, மத, பாலின, நிறரீதியான ஒடுக்குமுறைகள் என்று உலகில் எத்தனையோ ஒடுக்குமுறைகள் இன்றளவிலும் உள்ளன. உலகம் நவீனமயமாதல் போல ஒடுக்குமுறைகளும் நவீனத்துவம் பெற்று வருகின்றன. அதிலும் வயதின் காரணத்தால் நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகள் மேற்கண்ட அனைத்திற்கும் பொதுவானது. குழந்தைப் பருவம் தொட்டு அன்றாடம் நம்மை நாம் அறியாமல் துரத்தும் ஓர் ஆகச்சிறந்த ஒடுக்குமுறை. இதற்கு மட்டும் ஆண், பெண் என்கிற எந்த வேறுபாடும் கிடையாது. மனிதர்களை மதிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுப்பதற்குப் பதில், பெரியவர்களை மதிக்க வேண்டும் என்று போதித்து வளர்ப்பதே தன்னைவிட வயதில் சிறியவர்கள் மீது எப்பேர்ப்பட்ட வன்முறையையையும் நிகழ்த்திக்கொள்ளலாம் என்னும் எண்ணத்தை விதைக்கிறது.

பெரியவர்கள் சொல்பேச்சு கேட்டு நடக்க வேண்டும், பெரியவர்கள் என்பதால் எதிர்த்துப் பேசக் கூடாது, பெரியவர்கள் என்பதால் அவர்கள் தவறாகவே ஏதாவது ஒரு விஷயம் செய்திருந்தாலும் அவர்களை எதிர்த்துக் கேள்வி கேட்கக் கூடாது, பெரியவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் , வயதில் பெரியவர்கள் தவறு செய்தால் இளைஞர்கள் அதைக் கேட்கக் கூடாது, இவ்வளவு ஏன் பெரியவர்களுக்குச் சமமாக அமர்வதே தவறு என்கிற ஒரு போக்குகூட நம் சமூகத்தில் இருக்கிறது. பதின் பருவத்தில் தான் இந்த சிக்கல் என்றால், படித்து முடித்து வேலைக்குச் சென்ற பிறகு இந்தச் சிக்கல் சீனியாரிட்டி என்கிற பெயரில் விஸ்வரூபம் எடுத்து நிற்கும். பணியிடத்தில் நடக்கக்கூடிய வயது சார்ந்த வன்முறை என்பது கொடிதினும் கொடிது! ஒருவர் வயதிலும் சர்வீசிலும் சீனியர் என்றால் அவ்வளவுதான், அவர் ஒரு சர்வாதிகாரியாகவே மாறிவிடுவார். பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் ஒடுக்கு முறைகளைப் பட்டியல் போட்டால் அவற்றுக்கே தீர்வு காண இன்னும் பெரிதாக எந்த அலுவலகமும் முன்வருவதில்லை. முடிவெடுக்கும் இடத்தில் இன்னும் சரிவிகிதத்தில் பெண்கள் இல்லை என்பதே அதற்கு காரணம்.

இதில் சுவாரசியம் என்னவென்றால் வயதின் பெயரில் நடக்கும் வன்முறைகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் சற்று அதிகமாகவே பாதிக்கப்படுகிறார்கள். ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் குரல் கொடுப்பதே தவறாகக் கருதப்படும் நிலையில் ஒரு பெண் அலுவலகத்தில் உள்ள முக்கியப் புள்ளிகளைவிட வயதில் சற்று இளையவளாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். ஒரு ஜூனியர் ஆண் அனுபவிக்கும் ஒடுக்கு முறைகளைவிட அந்தப் பெண் சற்றுக் கூடுதலாகவே ஒடுக்கு முறைக்கு ஆளாக நேர்கிறது. 

பெரும்பாலான மேலை நாடுகள் போல இந்தியாவில் Age Discrimination-க்கு எந்தச் சட்டமும் இன்னும் இயற்றப்படவில்லை. இப்படி ஓர் ஒடுக்குமுறை இருக்கிறது என்பது குறித்தான வெளிப்படையான பேச்சுகூட நம் சமுதாயத்தில் எழுவதாகத் தெரிவதில்லை. காரணம், பெண்களைக் கலாச்சாரத்துடன் தொடர்புபடுத்தி வைத்துள்ளது போலவே வயதையும் கலாச்சாரத்துடன் தொடர்புபடுத்தி வைத்துள்ளனர். நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் பெரியவர்களை மதிக்கக் கற்று இருப்பார்கள். நல்ல கலாச்சாரம் உள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள் பெரியவர்கள் சொல் கேட்டு நடக்கக் கற்றுக் கொடுக்கப்பட்டு இருப்பார்கள்  என வழக்கமான கலாச்சார பூச்சாண்டிகளை வைத்து இந்தச் சமுதாயம் நம்மைக் கட்டிப்போட்டு வைத்து விடுகிறது.

வயதின் காரணத்தால் அலுவலகங்களில் அறிவு சுரண்டல் முதல் கொண்டு சீனியர் சொல் பேச்சு கேட்டு நடக்கவில்லை என்றால் அவரை வேலையிலிருந்து நீக்குவது எனத் தன்னாலான வன்முறைகளை இந்த ஏஜ் டிஸ்கிரிமினேஷன் செவ்வனே செய்கிறது. எவ்வளவுதான் புத்தி உள்ளவராக இருந்தாலும் வயதில் பெரியவர்கள் முன்னால் தன்னை முட்டாளாக காட்டிக் கொண்டால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற ஒரு போக்கு பெரும்பாலான அலுவலகங்களில் எழுதப்படாத விதியாகவே வலம்வந்து கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் 19 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பணியிடங்களில் வயதின் காரணமாக தங்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்கு முறைகளை எதிர்த்து மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரலாம். பணியிடத்தில் வயதைக் காரணம் காட்டி சம்பள உயர்வு, பதவி உயர்வு, வேலைவாய்ப்பு மறுக்கப்படுவது, அல்லது எந்த ரீதியிலும் ஒரு சலுகை மறுக்கப்பட்டால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம். பணியிடத்தில் மட்டுமல்ல வீடு வாடகைக்கு வயதை காரணம் காட்டி கொடுக்க மாட்டோம் எனக் கூறினாலும் அது குற்றமாகவே கருதப்படுகிறது. அதை எதிர்த்தால் அவர்களால் வழக்கு தொடர இயலும். ஆனால், இந்தியாவிலோ வயதும் பெரியவர்களுமே சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்கள். திறமையோ கடின உழைப்பையோ விடுத்து வயது எப்படி ஒரு தகுதியாக இருக்க முடியும்?

என் அனுபவம் அளவுகூட இருக்காது உன் வயது என்று மோசமாகன சொல்லாடல் ஒன்று இருக்கிறது. அதைப் பெருமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் வயதில் பெரியவராக இருந்தால் நிச்சயமாக அவருடைய அனுபவமும் அத்தனை ஆண்டுகளைக் கொண்டதாகத்தான் இருக்கும். ஏனென்றால் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே பிறந்துவிட்டார் என்பதுதான் நிதர்சனமே ஒழிய இவரது அனுபவம் படு பயங்கரமானது என்று எப்படித்தான் கர்வத்தில் திளைக்க முடிகிறதோ தெரியவில்லை!

வயதிருக்கும் அறிவிற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? தன்னை சீனியர் என்று கூறிக்கொண்டு வெட்கமே இல்லாமல் சக மனிதனை ஒடுக்கு முறைக்கு ஆளாக்குபவர்கள்,           “குறைவான ஆண்டு அனுபவத்தை வைத்துக்கொண்டு இவனெல்லாம் அல்லது இவளெல்லாம் சீக்கிரம் முன்னேற வேண்டுமென்று எப்படி நினைக்கலாம்?” என்று அடுத்தவரின் திறமையை ஏளனப்படுத்தும் மகா புனிதர்கள் என்று கூறுவதைவிட வேறென்ன கூறிவிட முடியும்‌? மரியாதையும் அன்பும் இன்ன பிற மனிதத் தன்மையும் ஒருவரின் குணம் சார்ந்தே கொடுக்கப்பட வேண்டுமே தவிர, வயதின் காரணத்தால் அல்ல. சக மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாமல் வயதின் காரணத்தால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் யாரும் மனிதத்தன்மை வாய்ந்தவர்கள் அல்லர்! 

படைப்பாளர்:

சண்முகப் பிரியா. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். வாசிப்பதிலும் எழுத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.