கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த முத்தழகி   நெளிந்து கொண்டேயிருந்தாள். உட்கார கஷ்டமாக இருந்தது. கணக்கு சார் நடத்திக்கொண்டிருந்த அல்ஜீப்ரா மண்டைக்குள் சுத்தமாக ஏறவில்லை.

வகுப்பைச் சுற்றி சுற்றி பார்த்தாள். எல்லாரும் சிரத்தையாக பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஒன்பதாம் வகுப்புவரை விளையாட்டுத்தனமாக ஆடிக்கொண்டிருந்தவர்கள்கூட பத்தாம் வகுப்பு வந்ததிலிருந்து கப் சிப்பென அடங்கி படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும், ‘பத்தாம் வகுப்பு… பத்தாம் வகுப்பு’ என சொல்லிச் சொல்லி அனைவருக்கும் தேர்வு பற்றிய பயம் ஏற்பட்டிருந்தது.

முத்தழகி கிராமத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில்தான் இருக்கிறது இந்தப் பள்ளி. ஊருக்குள் டவுன்பஸ் எதுவும் வராது; மினிபஸ் நினைத்த நேரத்துக்கு வரும் என்பதால், அதை எதிர்பார்க்காமல் நடந்தே பள்ளிக்கு வந்துவிடுவார்கள். பையன்கள் பெரும்பாலும் சைக்கிளில் வருவார்கள். முத்தழகிக்கும் சைக்கிளில் போக ஆசையாகத்தான் இருக்கும். ஆனால் “பொம்பளப் புள்ளைங்க சைக்கிள் ஓட்டக்கூடாது” என்று யார் வீட்டிலும் சைக்கிள் வாங்கித் தருவதில்லை. கூடப்படிக்கும் ரதி சிலசமயம் அவள் அண்ணனுடன்  சைக்கிளில் போகும்போது ஏக்கமாக இருக்கும். தனக்கும் ஒரு அண்ணன் இருந்தால்..? நினைக்கும்போதே மனதுக்குள் சந்தோஷமாக இருக்கும்.

முத்தழகிக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே, அப்பா வேறு ஒரு பெண்ணோடு ஊரை விட்டே ஓடிப் போய்விட்டாராம். அம்மா மாரியம்மாளும் அவளும் மட்டும்தான் வீட்டில். ஊரைச் சுற்றி கீரைத்தோட்டங்கள் இருந்ததால், பக்கத்து டவுனுக்குப் போய் கீரை விற்பதுதான் அந்த கிராமத்து பெண்களின் வருமானத்துக்கான ஒரே வழி. காலையில் ஐந்து மணிக்குக் கிளம்பிவிடுவார்கள். ஆளுக்கொரு  பக்கம் பிரித்துக்கொண்டு அலைந்து திரிந்து விற்று முடித்தவுடன், நாயக்கர் கடையில் ஒரு காப்பி, வடையோடு அவர்களது காலை உணவு முடிந்துவிடும்.

அதுக்குப்பிறகு டவுன் மார்க்கெட்டில் அந்தந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி  கிடைக்கும் பழங்களை வாங்கி அதையும் டவுனைச் சுற்றி  விற்றுவிட்டு  மதியம் இரண்டு மணிக்கு மேல்தான் வீடு திரும்புவார்கள். வீட்டுக்கு வந்தாலும், பத்து நிமிடம் உட்கார முடியாது.  பரபரவென்று வீட்டு வேலைகளைப் பார்த்துவிட்டு  நான்கு மணிக்கு பக்கத்தில் இருக்கும் தோட்டத்தில் போய் மறுநாளுக்கான கீரையை அறுத்துக்கொண்டுவந்து கட்டுப்போட்டு முடிக்க, எட்டு மணியாகிவிடும்.  மகளிடம் பேசக்கூட நேரமில்லாமல் மகளுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் சராசரி தாய்தான் மாரியம்மாள்.

ஏதேதோ யோசித்துக்கொண்டிருந்த முத்தழகிக்கு வயிறு வலிப்பது போல் இருந்தது. குனிந்து பார்த்தாள். யூனிஃபார்முக்கு மேல் வயிறு துருத்திக்கொண்டிருந்தது. ‘ஏன் இப்படி இருக்கு? காலையில பழைய சோறு சாப்பிட்டதால் அப்படி இருக்கோ? இல்லையில்லை… இப்போ கொஞ்ச நாளா எப்பவுமே வயிறு பெரிசாத்தான் இருக்கு, ஏன்னு தெரியல…’

“ஏய்… முத்தழகி… அங்க என்ன பண்ணிட்டு இருக்க? வகுப்பை கவனிக்கிறியா இல்லியா? ஏ ஸ்கொயர் ப்ளஸ் பி ஸ்கொயர்  ஃபார்முலா சொல்லு பார்ப்போம்?” என்ற பாலு சாரின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள். என்ன சொல்வதெனத் தெரியவில்லை. வகுப்பைக் கவனித்தால்தானே சொல்வதற்கு?

“இல்ல சார், வயிறு ரொம்ப வலிக்குது… வீட்டுக்குப் போகனும்” என சட்டென வாய்க்கு வந்ததைச் சொன்னாள்.

பாலு சார் யோசித்தார். ‘ஒருவேளை பீரியட்சா இருக்குமோ’ என தனக்குள் நினைத்துக் கொண்டவர், “கட்டாயம் வீட்டுக்குப் போகனும்னா ஹெச். எம். கிட்ட கேட்டுட்டுப்  போ”, என அனுப்பிவிட்டு, ‘படிக்கறதே இல்ல…எப்படித்தான் பாஸ் ஆகப் போறாளோ? இப்படிப் பிள்ளைகளை வைச்சுக்கிட்டு ரிசல்ட் கொடுங்க, ரிசல்ட் கொடுங்கன்னா நாங்க என்னா செய்யறது?’ தனக்குள் புலம்பியவாறே, “டேய் அடுத்த கணக்கைப் போடு” என பிள்ளைகளுடன் ஐக்கியமானார்.

வகுப்பைவிட்டு வெளியே வந்த முத்தழகி யோசித்தாள். ‘கணக்கு சார் ஒண்ணும் கேட்காம அனுப்பிட்டாரு, ஆனா ஹெச்.எம். நோண்டி நோண்டி கேட்கறதுக்கு பதில் சொல்ல முடியாது’, என நினைத்தவள், அவர் அறைப் பக்கம் திரும்பாமல் கழிவறை போவது போல் போய், பள்ளியைவிட்டு வெளியேறினாள்.

வழக்கம் போல அம்மா வீட்டில் இல்லை. வயிற்று வலி அதிகமாகியிருந்தது. வெயிலில் நடந்து வந்தது புழுக்கமாக இருந்ததால், குளித்தால் நன்றாகயிருக்கும் போல இருந்தது.  குளிக்கும் போது வயிற்றைத் தடவிப் பார்த்தாள். நன்றாக உப்பிப் போயிருந்தது. ‘வயித்துக்குள்ள கட்டி இருக்குமோ? அய்யோ கட்டி பெரிசானா செத்துப்போயிடுவோமோ’ என்று பயம் வந்தது. இதை யாரிடம் எப்படி கேட்பது? திடீரென கடந்த வாரம் தொலைக்காட்சியில் பார்த்த அந்த சினிமா நினைவுக்கு வந்தது. முத்தழகியைப் போலவே பத்தாம் வகுப்பு படிக்கிற பொண்ணு “ப்ரெக்னென்ட்டா இருக்கேன்னு  சந்தேகமா இருக்கு மா” என்று அம்மாவிடம்  சொல்லுவாள்.

ஒருவேளை தனக்கும் அதுபோல இருக்குமோ?  ‘ஆனா அதுல அந்த பொண்ணு வாந்தி எடுத்தாளே? எனக்கு வாந்தியே வரலியே? பக்கத்து வீட்டு வள்ளி அக்கா மாசமா இருக்கும்போது வாந்தி எடுத்துட்டே தான இருந்துச்சு?  கல்யாணமானால் தான மாசமாக முடியும்? சினிமாவுல பார்த்த பொண்ணு மாதிரி நான்  யாரையும் லவ் கூட பண்ணலியே?’ அவளுக்குள் கேள்விகள் நிறைய இருந்தன, ஆனா பதில் சொல்லத்தான் யாரும் இல்லை.

வெகு நேரம் யோசித்த பிறகு, ‘லவ் பண்ணாம, கல்யாணம் பண்ணாம யாரும் ப்ரெக்னென்ட்டா ஆக முடியாது’ என தானாகவே ஒரு முடிவுக்கு வந்தாள்.

ஆறு மணிக்கு பெரிய ஓலைப் பெட்டி நிறைய கீரையுடன் வந்த அம்மா காபி போட்டு மகளுக்குக் கொடுத்துவிட்டு கீரை கட்டுப்போட உட்கார்ந்து விட்டாள். தொலைக்காட்சியில் ஏதோ ஒரு நாடகம் ஓடிக்கொண்டிருந்தது.

எதற்கும் அம்மாவிடமே கேட்கலாம் என்று  மெதுவாக பேச்சைத் தொடங்கினாள்.

“அம்மா, வயிறு வலிக்குதும்மா…”

கீரையை அளவாக எடுத்து வைத்து  வாழை நாரை கிழித்து முடிந்து கொண்டிருந்தவள் தலை நிமிராமலே, “மணி கடையில் ஒரு சோடா வாங்கிக் குடி… எல்லாம் சரியாப் போயிடும்”, ஒற்றை வரியில் முடித்துவிட்டு அடுத்த கட்டுக்கு அளவு பார்த்தாள்.

“இப்ப மட்டும் இல்லம்மா… அடிக்கடி வயிறு வலிக்குது. வயிறு வீங்குனாப்புல இருக்கு”

“ஒழுங்கா நேரா நேரத்துக்கு சோத்தை தின்னா எதுக்கு வயிறு வலிக்குது? சினிமாக்காரிகளைப் பார்த்துட்டு அவளுகளைப்போல ஒல்லியாகனும்னு சாப்பிடாமக் கெடந்தா… வாய்வு சேர்ந்து வயிறு உப்புசமாகத்தான் செய்யும். போயி மணி கடையில் ஒரு சோடாவுல எலுமிச்சம்பழம் புழிஞ்சி தரச்சொல்லி குடி…” நிமிர்ந்து பார்த்து பேசக்கூட நேரமில்லாதவளாய் கீரைக் கட்டுப்போடுவதிலேயே மும்மரமாக இருக்கும் அம்மாவைப் பார்த்துக்  கொண்டேயிருந்தாள் முத்தழகி.

டி.வி. விளம்பரத்தில் வரும் அம்மாக்களைப் பார்க்கும்போது  முத்தழகிக்கு ஆச்சரியமாக இருக்கும். ‘எப்படி அம்மாவும் பொண்ணும் ஜாலியா இருக்காங்க, மகளைக் குளிக்க வைக்கிறாங்க… ஹெல்மெட் போட்டு டூ வீலர் ஓட்டிட்டுப் போய் பொண்ணை கராத்தே க்ளாஸ் அனுப்புறாங்க…ஃப்ரெண்ட்ஸ் மாதிரி ஜாலியா பேசிக்கறாங்க? ம்ம்ம்… இவளுக்கும் அதுபோல அம்மா வேணும்னு ஆசையா இருக்கும். ஆனா எங்க? ஒரே வீட்டுக்குள்ள இருந்தாலும் அம்மாவைப் பார்க்கறதும் பேசறதும்  அதிசயமால்ல இருக்கு?’

முத்தழகிக்கு இரவு சாப்பிடவே பிடிக்கவில்லை. “நிறைய ஹோம்வொர்க் இருக்கு, எழுதிட்டு  பிறகு சாப்பிடறேன்” என்றாள்.

“பொம்பளப்புள்ள நைட்டு சாப்பிடாம படுக்கக்கூடாது, பெறவு வயிறு வலிக்குது, முதுகு வலிக்குதுனு சொல்லி உயிரை வாங்காதே” அதட்டலாகச் சொல்லிவிட்டு மாரியம்மாள் படுக்கப் போய்விட்டாள்.

அம்மா தூங்கும் வரை எழுதுவது போல பாவ்லா காட்டிக்கொண்டிருந்த முத்தழகி, அம்மா தூங்கிவிட்டதை உறுதிப் படுத்திக்கொண்டதும், சாப்பிடாமலே தானும் படுக்கப்போனாள். அவளது உடல் அவளுக்கே பாரமாக இருப்பதுபோல இருந்தது. இரவெல்லாம் தூக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள்.

முத்தழகிக்கு  யாரிடமாவது இதைப்பற்றி சொல்லவேண்டும்போல இருந்தது.  காலையிலும் சாப்பிடாமலே பள்ளிக்குக் கிளம்பிவிட்டாள்.  எப்போதுமே பத்து பனிரெண்டு பேர் கூட்டமாக சேர்ந்துதான் போவார்கள். ரதியிடம் கொஞ்சம் நிற்கும்படி மற்றவர்களுக்குத் தெரியாமல் கண்ணைக் காட்டினாள். அவளும் புரிந்துகொண்டு நடையைத் தாமதப்படுத்த மற்ற பிள்ளைகளுக்கும் இவர்களுக்கும் இடையில், பேசினால் கேட்காதவாறு இடைவெளி ஏற்பட்டது.

முத்தழகி மெதுவாக ரதியிடம், “வேகமா நடக்காதடி, எனக்கு நடக்கவே கஷ்டமா இருக்கு, கொஞ்ச நாளா அப்பப்போ வயிறு வலிக்குது, ரொம்ப பசிக்குது, சில நேரம் சாப்பிடவே பிடிக்கல… ஆனா வயிறு பெரிசாயிட்டே போகுது, எனக்கு ஏதோ நோய் வந்துட்ட மாதிரி இருக்கு”, கலக்கத்துடன் கூறினாள்.  

“இதுக்கு ஏன் பயப்படற? உங்க அம்மாட்ட சொல்லி டாக்டர்ட்ட காமிக்க வேண்டியது தான?”

“எனக்கு பயமா இருக்குடி… வயிறு பெரிசாகிட்டே வர்றதனால நான் ப்ரெக்னென்ட்டா இருக்கனோனு சந்தேகமா இருக்கு, அம்மாட்ட சொல்லவும் பயமா இருக்கு”

“என்னடி மென்ட்டல் மாதிரி பேசற?”

“ஆமாண்டி, ஒரு சினிமாவுல பார்த்தேன், அந்தப்பொண்ணு பத்தாப்பு படிக்கும்போதே ப்ரெக்னென்ட் ஆயிடறா…”

“போடி லூசு, ஸ்கூல்ல படிக்கும்போது எப்படி ப்ரெக்னென்ட் ஆக முடியும்? அதெல்லாம் கல்யாணம் ஆகி ஃபர்ஸ்ட் நைட் நடந்தால்தான் மாசமாக முடியும். நீ கிறுக்கி மாதிரி பேசாம ஆஸ்பத்திரிக்குப் போ. முழுப்பரிச்சை வேற வரப்போகுது, நீ ஏற்கனவே ஒழுங்கா படிக்க மாட்டேங்கறேனு எல்லா டீச்சரும் திட்டிக்கிட்டு இருக்காங்க, என்கிட்ட சொன்ன மாதிரி எல்லார்கிட்டயும் உளறிக்கிட்டு இருக்காத” என பெரிய மனுஷி போல அறிவுரை கூறியவள், “வா வா… சீக்கிரம் போகலாம். இன்னிக்கு ஸ்டடில சயன்ஸ் டெஸ்ட் இருக்கு”, என்றபடி வேகமாக நடக்கத் தொடங்கினாள்.         

 முத்தழகிக்கு அடுத்து யாரிடம் இதைப்பற்றி பேசவென்று தெரியவில்லை. ‘ஸ்கூல்ல தமிழம்மா எல்லார்ட்டயும் ரொம்ப அன்பா பேசுவாங்க… யாராவது கொஞ்சம் சோர்வா இருந்தால்கூட பக்கத்தில கூப்பிட்டு என்ன, ஏதுனு விசாரிப்பாங்க. அவங்களைப் பார்த்தால் டீச்சர்னு பயமே வராது. அவங்ககிட்ட சொல்லலாமா?’ என யோசித்தாள். ஆனால், பொதுத் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே இருந்ததால் எல்லா ஆசிரியர்களும்  எப்போதும் பரபரப்பாக  இருந்தார்கள். எதேதோ நோட்டுக்களில் எழுதுவதும், தேர்வு வைப்பதும், திருத்துவதும், மாணவர்களைக் கூப்பிட்டு கண்டிப்பதும், புலம்புவதுமாக அவர்களே தேர்வுக்கு தயாராவதுபோல பரபரப்பாக இருந்தார்கள். அந்த நெருக்கடியில் மாணவர்களை கவனிக்கவோ, பேசவோ யாருக்கும் நேரமில்லை.

முத்தழகி அமைதியாக கடைசி பெஞ்சில் தனது இடத்தில் போய் அமர்ந்தாள்.  படபடவென்று வருவதுபோல இருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு உட்கார்ந்திருந்தாள். முதல் வகுப்பு  முடியும் நேரத்தில்,  அறிவியல் ஆசிரியர், “என்ன முத்தழகி உன்னோட ரெக்கார்டு நோட்டு மட்டும் இன்னும் வரல, என்ன பண்ணிட்டு இருக்க?” கொஞ்சம் அதட்டலாக கேட்கவும், எழுந்து நின்ற முத்தழகிக்கு தலை  சுற்றியது. நிற்க முடியவில்லை.

“இல்ல டீச்சர்…”

ஏதோ சொல்ல வந்தவள் மயக்கமாகிக் கீழே விழுந்தாள். பதறிப்போன ஆசிரியர், “ஏய்… தண்ணி கொண்டு வா, தண்ணி கொண்டு வா” என பதறியவாறு அருகில் வந்தார்.  யாரோ நீட்டிய பாட்டில் தண்ணீரை கைகளில் ஊற்றி, முத்தழகியின் முகத்தில் பளீரெனத் தெளித்தார். இரண்டு மூன்று முறை தண்ணீர் தெளித்தபின் முத்தழகி மெதுவாகக் கண் திறந்தாள். ரொம்ப சோர்வாக இருப்பதைப் பார்த்து, “காலையில சாப்பிட்டியா இல்லையா?” என விசாரித்துக்கொண்டே, “ஹெச்.எம். கிட்ட சொல்லிட்டு வா” என ஒரு பையனை அனுப்பினார். தலைமை ஆசிரியர் பக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்த செவிலியரைக்  கூட்டி வரச் சொன்னார். அவர் வந்து ப்ரஷர், பல்ஸ் பார்க்க, அவர் முகம் ஏதோ குழப்பமானது. தலைமை ஆசிரியரின் காதில் மெதுவாக,

“எனக்கு சந்தேகமா இருக்கு மேடம், மாசமா இருக்கிறா போலத் தெரியுது. கண்ணெல்லாம் வெளிறிப்போயிருக்கு, உடம்புல சுத்தமா ரத்தம் இல்ல…எதுக்கும் அவங்க அம்மாவை வரச்சொல்லுங்க. வேணும்னா ப்ரெக்னென்சி கிட் இருக்கு, டெஸ்ட் பார்த்திடலாம். எத்தனை மாசம்னு தெரியல…”

அங்கு கூடியிருந்தவர்கள் மொத்தமும் அதிர்ந்து போனார்கள்.  

தமிழம்மா தான் கொண்டு வந்திருந்த இட்லியைக் கொடுத்து சாப்பிடச் செய்தார்.   க்ளாஸ் டீச்சர் முத்தழகியின் அம்மாவுக்கு போன் செய்து, “ஒரு கையெழுத்து போடனும் உடனே வாங்க” என்று பொய் சொல்லி வரவழைத்துவிட்டார்.  செவிலியர் ‘ப்ரெக்னென்சி டெஸ்ட்’ பார்த்துவிட்டு கர்ப்பத்தை உறுதி செய்ய, தலைமை ஆசிரியருக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.  

முத்தழகியின் அம்மாவிடம் விஷயத்தைச் சொல்லி, “பிள்ளையைக் கவனிக்க மாட்டீங்களா?” என திட்டிய தலைமை ஆசிரியர், “வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் என்ன, ஏது, யார்னு விசாரிங்க” எனச்சொல்லி இருவரையும் அனுப்பி வைத்தார்.

மாரியம்மாளுக்கு ஒன்றும் புரியவில்லை. செய்தியை வாங்க மூளை மறுத்தது. மலங்க மலங்க முழித்துக்கொண்டே மகளை  அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தவள், கையில் வாகாகக் கிடைத்த விளக்குமாறை எடுத்து  அடித்து நொறுக்கினாள்.

“யாருடி அவன்? அப்பனில்லாத பிள்ளைனு உயிரைக் கொடுத்து வளர்த்துட்டு இருக்கேன்… நீ எவன் கூட ஊர் மேய்ஞ்சிட்டு வந்த?”

 “சத்தியமா நான் ஒண்ணுமே பண்ணலம்மா…”

“திரும்பத் திரும்ப பொய்யா பேசுற… உன்னைக் கொலை பண்ணினாக்கூட பாவமில்ல. சொல்லித் தொலை…. எவங்கூட படுத்துட்டு வந்த? பதினைஞ்சி வயசுல ஒனக்கு ஆம்பள சுகம் கேட்குதா?” என்ன பேசுகிறோம் என தெரியாமல் ஏதேதோ பேசி, அடித்து, அழுது ஓய்ந்தாள்.

முத்தழகி அம்மாவின் அருகில் வந்தாள். “அம்மா… ப்ளீஸ்மா அழாதம்மா, கல்யாணமாகாம நான் எப்படிம்மா ப்ரெக்னென்ட் ஆக முடியும், எனக்கு வாந்திகூட வரல. அந்த டாக்டர் பொய் சொல்லியிருப்பாங்க…”

அம்மா தலையில் அடித்துக்கொண்டாள். ‘இப்படி ஒரு கூறு கெட்டவளை பெத்து வைச்சிருக்கனே…’  பொறுமையாக யோசித்தாள். ‘இவளுக்கு ஒரு மண்ணும் தெரியல, ரெண்டுங்கெட்டானாக இருக்கிறாள். எங்கோ ஏமாந்து விட்டாள்’ எனப் புரிந்தது.

“கல்யாணம் ஆனாலும் ஆகாட்டாலும் ஆம்பளயும் பொம்பளயும் நெருக்கமா இருந்தா புள்ள உருவாகத்தான் செய்யும். எந்த ஆம்பள உங்கிட்ட தப்பா நடந்துகிட்டான் சொல்லுடி, இல்ல உனக்கே தெரியாமல் ஏதாவது நடந்ததா?” மாரியம்மாளின் குரலில் ஆக்ரோஷம் குறைந்து அக்கறை கூடியது. இன்னும் பல விஷயங்களையும் சொல்லி புரிய வைக்க முயற்சித்தாள்.

முத்தழகிக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்தது.

“அம்மா… ஸ்கூலுக்குள்ளேயே ஒரு ஹாஸ்டல் இருக்குல்ல…”

“ஆமா…”

“எங்க ஹெச்.எம். ஒருநாள் அந்த ஹாஸ்டல் வார்டன்ட்ட போய் ஒரு நோட்டு வாங்கிட்டு வரச் சொன்னாங்க. நான் வார்டனை பார்க்க போகும்போது வார்டன் அங்க  இல்ல. அவங்க சார் மட்டும் ஏதோ படம் பார்த்துட்டு இருந்தாரு. என்னைப் பார்த்ததும் உள்ள கூப்பிட்டு உட்கார சொல்லி ஏதோ கூல் ட்ரிங்க்ஸ் கொடுத்தாரு. நான் வேணாம்னுதான் சொன்னேன். அவர்தான்  ‘டேஸ்டா இருக்கும் குடி’னு சொன்னாரு. அப்புறம் என்ன நடந்துச்சுனு தெரியல. எழுந்திரிச்சு பாக்கும்போதும் வார்டன் இல்ல, அந்த சார் ‘நான் படம் பார்த்துட்டே தூங்கிட்டேன்’னு சொன்னாரு. ட்ரெஸ் எல்லாம் ரத்தமா இருந்துச்சு… பீரியட்ஸ் வந்துருச்சுன்னு நினைச்சேன். ஆனா, அவரு சிரிச்சிக்கிட்டே, ‘இங்க நடந்ததை யார்ட்டயும் சொல்லாத’னு சொன்னாரு.”

“எனக்கு ஒண்ணும் புரியல… ஆனா அன்னிக்கு உடம்பெல்லாம் பயங்கரமா வலிச்சு காய்ச்சல் வந்துருச்சு… நான்கூட உங்கிட்ட காய்ச்சல்னு சொன்னேன், நீ மணி கடைல காய்ச்சல் மாத்திரை வாங்கிச் சாப்பிடுனு சொல்லிட்டு போயிட்டீயே?”

“படிக்க அனுப்பற பிள்ளைகளை இப்படி சீரழிக்கறானுகளே…” மாரியம்மாள் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். மறுநாள் பள்ளிக்குப் போய் தலைமை ஆசிரியரைப் பார்த்து மகள் கூறிய விபரத்தைக் சொன்னாள். அவர் வார்டனை அழைத்து, “உங்க மேலயும் உங்க வீட்டுக்காரர் மேலயும்  ஏற்கனவே நிறைய கம்ப்ளெயின்ட் இருக்கு. கேர்ல்ஸ் ஹாஸ்டலுக்குள்ள அவரு ஏன் வர்றாரு? நான் சி.இ.ஓ, டி.இ.ஓ எல்லாருக்கும் இன்ஃபார்ம் பண்ணப்போறேன்”, என்றார்.

“இதுங்க எங்கயாவது போய் வயத்த ரொப்பிக்கிட்டு வந்து என் புருஷன் தலையில் கட்டப் பாக்குதுங்களா?” என முதலில் கத்தத் தொடங்கிய வார்டன், ஹெச்.எம். போலீசை வரவழைப்பதாகக் கூறியவுடன், “அய்யோ மேடம் என் வேலை போயிடும். இந்தப்புள்ளைய இப்பவே நான் ஆஸ்பத்திரிக்குக்  கூட்டிட்டுப் போய் என்ன செய்யலாம்னு டாக்டர்ட்ட பேசி பிரச்னையை  சரிபண்றேன். அவங்க அம்மாவையும் நான் சமாளிச்சுக்கறேன்”, என்றார்.

வார்டனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மாரியம்மாளை அழைத்துக்கொண்டு வெளியேறினாள் அந்த நவீன நளாயினி. ஹெச்.எம். பள்ளி வளாகத்திற்குள் நடந்த விஷயம் என்பதால், கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார்.

மாரியம்மாள் ஒரு வார்த்தை பேசாமல் வார்டனுடன் போனாள். முத்தழகியைப் பரிசோதித்த டாக்டர், “அறிவில்ல உங்களுக்கு? பிள்ளை மாசாமாசம் தூரமாகுறாளானு கூட கவனிக்க மாட்டீங்களா? அவளுக்கு இப்போ எத்தனை மாசம் தெரியுமா? ஆறு மாசம் ஆயிடுச்சு. உள்ளுக்குள்ள குழந்தை முழுசா வளர்ந்துருக்கு. ஆளும் ரொம்ப வீக்கா இருக்கா. இப்போ அபார்ஷன் பண்ணினா உயிருக்கே ஆபத்து. நான் பண்ண மாட்டேன். நாளைக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் என் தலை உருளும்”, பொரிந்து தள்ளினார். மாரியம்மாள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து விலகாமல் எங்கோ  பார்த்துக் கொண்டிருந்தாள்.   

“ப்ளீஸ் டாக்டர் ஏதாவது பண்ணுங்க. நானும் மாட்டிக்குவேன், எனக்கு வேலை போயிடும். எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்”, என வார்டன் கெஞ்சத் தொடங்கினாள்.

“ச்சீ… வெக்கமாயில்ல உனக்கு? இதுவரை எத்தனை பிள்ளைகளை அழைச்சிட்டு வந்திருக்க? உன் புருசனை ஒழுங்கா இருக்கச் சொல்ல மாட்டியா? புருசனும் பொண்டாட்டியும் சேர்ந்துகிட்டு என் உயிரை வாங்குறீங்க?”

“என்ன டாக்டர் செய்யறது? என்னால் அவனுக்கு ஒரு பிரயோஜனமும் இல்ல. அதனால பொறுக்கியாவே மாறிட்டான். நான் சண்டைபோட்டா என்னை தீர்த்துட்டு வேற கல்யாணம் பண்ணிக்குவேனு மிரட்டுறான்…”

“உன் சுயநலத்துக்காக அப்பாவி பிள்ளைகளை பலி கொடுப்பியா? இதுதான் கடைசி. அதுவும் அந்த அம்மா முகத்துக்காக செய்யறேன். இனிமேல் இப்படி வந்த… நானே போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணிடுவேன்”, வார்டனிடம் உறுமிய டாக்டர்,  “அட்மிஷன் போடுங்க, ஆனா ரெக்கார்ட்ஸ் எதுவும் வேணாம்”, என நர்சிடம்  மெல்லிய குரலில் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.

உடல் பலவீனமாயிருந்த முத்தழகி, மறுநாள் நடந்த கருக்கலைப்பின்போது கடுமையான இரத்தப்போக்கினால்  செத்துப்போனாள்.

பத்திரிக்கைகள் இரண்டு நாளைக்கு பரபரப்பாக எழுதின. பள்ளியில் ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் ‘ஃபார்மாலிட்டி’ விசாரணை நடந்தது. டாக்டர் மீது கேஸ் பதிவுசெய்யப்பட, 15 நாள் பணியிடை நீக்கத்துக்குப்பின் துறையில் யார் யாரையோ பிடித்து தப்பித்து விட்டார்.

ஊரே சேர்ந்து மாரியம்மாளைத் தூற்ற, பிரமை பிடித்தவளாக வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்தவள், பிள்ளை செத்த ஒரு வாரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டாள்.

எதற்குமே ஆதாரம் இல்லாததால் வார்டனின் கணவர் பெயர்கூட வெளியே வரவில்லை. அப்பாவிகள் இருவரின் உயிரைப் பலிவாங்கிய குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல், மாற்றல் வாங்கிக்கொண்டு அடுத்த ஊருக்குச் சென்றார்கள் வார்டனும் அவள் கணவனும். அடுத்த ஊரில் எந்த முத்தழகி காத்திருக்கிறாளோ?

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். அடுத்து, ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும், ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வி த் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் அழகாக எழுதியிருக்கிறார். இம்மூன்று தொடர்களும் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகங்களாகவும் வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. ‘வியட்நாம் அனுபவங்கள் ‘என்கிற இவரது நான்காவது தொடர் நூலாக்கம் பெற்றுவருகிறது. இது தவிர ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகத்துக்காக ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் எழுதியுள்ளார். குட்டிப் பெண்களின் பெரிய கதைகள் இவர் எழுதும் ஐந்தாவது தொடர்.