2023, மார்ச். மெட்ராஸ் லிட்ரெரி சொசைட்டியில் ஹெர் ஸ்டோரிஸ் நிகழ்வு ஒன்றில் முதன்முறையாக உமா மோகனைப் பார்த்தேன். அவருடைய ‘விடுதலைக் களத்தில் வீரமகளிர்’ நூல் அறிமுகக் கூட்டம். ஒரு பார்வையாளராகத்தான் சென்றேன். என்னை அறிமுகம் செய்துகொண்டேன். ஹெர் ஸ்டோரிஸுக்கு ஒரு கட்டுரை இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறேன் என்று சொன்னேன். ’அப்படியா! வாழ்த்துகள்!’ என்கிற வார்த்தைகளோடு எங்கள் உரையாடல் முடிந்தது.
2024, மார்ச். ஹெர் ஸ்டோரிஸ் புத்தக வெளியீட்டு நிகழ்வு. என் முதல் புத்தகம் ‘மேதினியின் தேவதைகள்’ வெளியான நாள். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் என்னைப் பார்த்ததும் என் கைகளைப் பிடித்துக்கொண்டார். ‘எப்படி இருக்கீங்க சித்ரா?’ என்று பாசமாக உரையாடினார். என் புத்தகத்தை அறிமுகம் செய்தவரும் அவரே! என் புத்தகத்தைப் பாராட்டியதில் என் கண்களில் இன்பத்துளிகள் அன்று. மற்றுமொரு கூட்டத்தில் என்னைப் பார்த்ததும் கட்டிக்கொண்டார். இன்னும் நெருக்கமானோம். முதல் முறை நான் பார்த்த அவரின் கம்பீரம் அடுத்தடுத்த சந்திப்பில் உருகி ஒரு குழந்தைப் பருவத் தோழமை உணர்வாக மாறியது.
ஜனவரி 6, 2022 இல் என் உயிர்த் தோழி மறைவில் மீள முடியாமல் இருந்த எனக்கு, ஜனவரி 6, 2025 மற்றுமோர் அதிர்ச்சி. 58 வயதே ஆன உமா மோகன் தோழர் மறைந்த செய்தி. இருவரும் மாரடைப்பில் இறந்திருக்கிறார்கள். நிவேதிதா தோழர் உமா மோகன் தோழரின் நினைவேந்தலில், அவரின் வீட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது, உமா மோகன் வீட்டு வரவேற்பறையில் அவருடைய சமையலறையின் பெரிய ஒளிப்படம் மாட்டப்பட்டிருந்ததை நினைவுகூர்ந்தார். அங்குதான் அவரது கவிதைக் குழந்தைகள் பிறந்ததெனச் சொல்வாராம்.
சமையல் அறை – பெண்களின் உழைப்பை மட்டுப்படுத்தும் ஓர் அறை. ஒழிக்க வேண்டிய அறை. அதற்கு மாற்றாகப் பொது உணவகங்கள், சமுதாயக் கூடங்களை அரசு கொண்டு வரவேண்டும் என்று எவ்வளவு போராட்டங்கள் முன்னெடுத்தாலும் பெண்களே அதற்கு முதல் எதிர்ப்பு தெரிவிக்கும் நல்லவர்களாக இருப்பார்கள்.
உமா மோகன் தோழருக்கு நெஞ்சு வலி அதிகரித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, மாடிப்படியிறங்கி சென்றதுகூட அவர் இறப்பிற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று இன்னொரு தோழர் பகிர்ந்துகொண்டார். என் தோழியின் இறப்பிற்கும் நெஞ்சு வலியோடு மூன்று மாடிப்படி இறங்கியதே காரணம் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். இந்த விழிப்புணர்வெல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருக்காது என்று என்னால் ஒத்துக்கொள்ளவே முடியாது. ஒவ்வொரு பெண்ணும் தன் உடலின் மீதும் ஆரோக்கியத்தின் மீதும் வைத்திருக்கும் அலட்சியம். நான் விதிவிலக்கல்ல, இது எனக்கும் பொருந்தும்.

கீதா இளங்கோவன் தோழரை எனக்கு மிகவும் பிடிக்கும். முகநூலில் அவரின் இலக்கியப் பதிவுகள் மற்றும் விமர்சனப் பதிவுகளைக் காட்டிலும் அவருடைய மாரத்தான் பதிவுகளும், உடற்பயிற்சியின் பதிவுகளும் , உடல்நலம் பேணும் பதிவுகளும்தாம் நிறைந்திருக்கும். அவரை மட்டும் ஊக்குவித்துக்கொள்ளாமல் பலரையும் ஊக்குவிக்கும் அந்தக் குணம் எனக்கு அவரின் மீது ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியது. வீரம், விவேகம், வலிமை, விடாமுயற்சி என்ற டைட்டில்களெல்லாம் இவருக்குத்தான் நன்கு பொருந்தும்.
ஹெர் ஸ்டோரிஸ் சென்ற வருடம் நூறு நாள் நடை மற்றும் உடற்பயிற்சி சவாலை ஆரம்பித்தனர். இந்த வருடம் அது ஐம்பது நாளாகக் குறைந்துள்ளது. இதையாவது செய்வீர்களா என்று எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
பெண்களே, உங்கள் உடல் நலத்தைப் புறக்கணிக்காதீர்கள்! அலட்சியப்படுத்தாதீர்கள்! இது வேண்டுகோள் அல்ல! எச்சரிக்கை என்று எடுத்துக்கொள்ளுங்கள்!
‘எங்கோ தூரத்தில் ஒலிக்கிறது
மனம் கவர்ந்த பாடல்
இடம் வலமா எங்கு நான் நெருங்கவென
நான் முடிவு செய்யும் முன்
இதோ முடிந்தேவிட்டது!’
என்கிற உமா மோகன் கவிதையைப் படித்தபடி நான்!
படைப்பாளர்

சித்ரா ரங்கராஜன்
கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து. ஹெர் ஸ்டோரிஸில் ‘மேதினியின் தேவதைகள்’ என்கிற தலைப்பில் இவர் எழுதிய தொடர், தற்போது ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் நூலாக வந்திருக்கிறது.