செல்லலெட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட செல்லம் திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை மருத்துவர். தன் குழந்தைகளை அவர் முற்போக்காக வளர்த்துள்ளார். குறிப்பாக, பெண் குழந்தை என்று பிரித்துப் பாராது, செல்லத்திற்கு அவரது தந்தை சிறுவயதில் இருந்தே தைரியமும் ஊக்கமும் கொடுத்து வந்துள்ளார்.
நாடகம், திரைப்படம், பொதுக்கூட்டம் என்று அனைத்திற்கும் செல்வத்தை அழைத்துச் செல்வார். இயற்கையிலேயே கற்பனை சக்தி உடையவர் செல்லம். இவர் தம் எட்டு வயதிலேயே வீட்டிற்கு அனைத்துப் புத்தகங்களையும் வரவழைப்பார். அதனால் சிறுவயதிலேயே அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த பிரதாப முதலியார் சரித்திரம், ஜடா வல்லபர், கமலாம்பாள் சரித்திரம் போன்ற புதினங்களைப் படித்து வளர்ந்துள்ளார்.
செல்லலெட்சுமி சிறந்த பாடகியும் ஆவார். அவர் கர்நாடக இசை நுணுக்கம் அறிந்தவர்; பிற்காலத்தில் பல பக்திப் பாடல்களையும் இயற்றியுள்ளார். குறிப்பாக முருகன், அம்பாள் பெயர்களில் பாட்டுகள் எழுதி இருக்கின்றார்.; மாடு, கன்றுகள் மீது மிகுந்த பிரியம் உடையவர்; காந்தியத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்; எட்டு வயதிலேயே ராட்டை நுற்றுள்ளார்; கதர் ஆடையும் அணிந்துள்ளார்.
வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த செல்லம், ஆச்சாரம் மிகுந்த பெரிய குடும்பத்துக்குத் திருமணம் ஆகிச் சென்றார். புகுந்த வீட்டில் இவரையும் சேர்த்து ஆறு மருமகள்கள். இவர்தான் கடைசி மருமகள். இவர் கணவர் சிவ சாமிநாதன், ரயில்வேயில் பயணச்சீட்டுப் பரிசோதகராக வேலை பார்த்தார். செல்லம் திருமணமாகி தஞ்சை மாவட்டத்தில் உள்ள தண்டாங்கோரை என்ற கிராமத்திற்குச் சென்றார். நகரத்தில் பிறந்து வளர்ந்த அவருக்குக் கிராமத்தின் பழக்கவழக்கங்கள் புரிய கொஞ்ச காலமானது.
அந்தக் காலத்தில் பெண் அழைக்கும் வழக்கம் தஞ்சாவூர் கிராமங்களில் இருந்திருக்கிறது. “அக்காலத்தில நாட்டுப் பெண்கள் மாமியார் வீட்டிற்கு வந்தால், குளத்தங்கரையிலேயே வண்டியை விட்டு இறங்கி காலில் செருப்பு இல்லாமல் நடந்து வரவேண்டும். கிராம வாசலில் வண்டி ஓசை கேட்டால் போதும், பெண்கள் அடுப்பில் என்ன காரியம் இருந்தாலும் அதை அப்படியே விட்டுவிட்டுத் தெருவில் வந்து, யார் வருகிறார்கள் என்று பார்ப்பார்கள். ஒருவர் எதிர் வந்து ‘நாட்டுப் பெண்ணே வந்தாயா?’ என்று கேட்பாள். உடனே தெருவிலேயே அவர்களுக்கு நமஸ்காரம் செய்ய வேண்டும். ‘யாருடீ, சுப்புலட்சுமி நாட்டுப் பெண்ணா? நமஸ்காரம் பண்ணு’ என்று கேட்டுப் பெறுவார் ஒரு பாட்டி. ‘பொன்னு (என் பாட்டி) உன் பேத்தி அரக்குச் சமந்தடி’ என்பாள் மற்றொரு பாட்டி. ‘ஆம்படையாளா… வாடியம்மா உடம்பு சௌக்யமாயிருக்காயா?’ என்பாள் ஒரு பாட்டி… இத்தனை விருதுகளுடன் மாமியார் வீட்டில் நுழைய வேண்டும்” என்று பெண் அழைப்பது பற்றி , வேடிக்கையாகத் தன் நூலின் முன்னுரையில் எழுதியுள்ளார் எழுத்தாளர் செல்லம்.
மேலும் அவர் “எனக்குப் பகலில் வேலை சரியாக இருக்கும். வீடு பெருக்கும் போது, சாமான் கட்டிய பேப்பர் துண்டுகள் கீழே கிடந்தால் எடுத்து ஆர்வமாகப் படிப்பேன். எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். ஆனால் அதை எடுத்துப் படித்து விட்டால், வீடு கிடுகிடுக்கும் . மூத்த ஓர்ப்படி ஓடி வந்து, ‘இதற்குத் தான் படித்த நாட்டுப் பெண் கூடாது’ என்பார் . ‘ஆத்துக் காரியம் அத்தனையும் விட்டுவிட்டுப் பாதி பெருக்குகையில் பேப்பர் படிக்கிறாள். குடிகெட்டது. இவளுக்குப் படிக்கிறதுக்கும் பாடுவதற்கும்தான் பொழுது சரியாக இருக்கும். முற்றத்தில் கூடை பாத்திரம் தேய்க்காமல் கிடக்கிறது. தேய்க்க வேண்டாமா? சந்தி வாசல் பெருக்கணும். இரவு சமையல் யார் செய்வது?’ என்று கன்னத்தைத் தோளில் இடித்துக் கொண்டு மாமியாரிடம் கோள் மூட்டுவாள்” என்று புகுந்த வீட்டில் தன் நிலையைச் செல்லம் பதிவு செய்துள்ளார்.
வசதியான வீட்டிலிருந்து அதிகச் சீருடன் வந்திருக்கும் கடைசி மருமகள் மீது அவள் மாமியாருக்குத் தனிப் பற்று உண்டு. யாரும் இல்லாத சமயத்தில் சின்ன நாட்டுப் பெண்ணிடம் , “உடம்பைப் பார்த்துக் கொள். ஓடி ஓடி வேலை செய்யாதே. ஆளுக்கு ஒரு வேலையாகச் செய்யுங்கள்” என்று கரிசனம் காட்டுவது உண்டு.
இவ்வாறான தன் முரண்பட்ட வாழ்க்கை சூழலையே கதையாக எழுத வேண்டும் என்று செல்லம் நினைத்திருக்கின்றார். ஆனால் அதற்கான வாய்ப்பு அவருக்குப் பலகாலம் வாய்க்கவில்லை.
செல்லத்தின் கணவர் ஐந்து வருடம் வெளியூரில் வேலையாய் இருந்ததால், அப்போது அவர் தனிமையை உணரத் தொடங்கினார். தூக்கம் வராத இரவுகளில், தனிமையைப் போக்குவதற்குக் கதை எழுதத் தொடங்கினார். பிறந்தகத்திற்குச் சென்று வரும்போது, பேப்பர் பேனா முதலியவைகளைப் பெட்டியில் மறைத்து எடுத்து வருவார். தன்னுடைய அறையில் கதவைத் தாளிட்டுக் கொண்டு சிமினி விளக்கிலும், பித்தளை விளக்கு வெளிச்சத்திலும் தன்னுடைய மன ஓட்டங்களை கதைகளாக எழுதத் தொடங்கினார்.
இதைப் பற்றிக் கூறும் செல்லம், ” எனக்கு நாலு குழந்தைகள் பிறந்து வளர்ந்து பள்ளிக்கூடம் போக ஆரம்பித்த பிறகுதான் சிறுகதை எழுத ஆரம்பித்தேன். நான் கதை எழுதுவது அவருக்கு ரொம்ப நாள் தெரியாது. தெரிந்ததும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. உன் இஷ்டப்படிச் செய் என்று கூறிவிட்டார்”, என்று பதிவு செய்துள்ளார்.
செல்லத்தின் இளைய சகோதரர் அக்காலத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர் நாடோடி ஆவார்.
எம். வேங்கடராமன் என்ற இயற்பெயர் கொண்ட அவர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர். நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள் எழுதிய பல்திறன் கொண்ட எழுத்தாளர் ஆவார். அக்காலத்தில், அவர், தம் நகைச்சுவை எழுத்துக்காகக் கொண்டாடப்பட்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் செல்லம் சுமார் 40 சிறுகதைகளையும், 2 நாவல்களும், 15 பாப்பா மலரும் எழுதியுள்ளார். இவருடைய எழுத்துகள் அக்காலத்தில் கல்கி, ஆனந்த விகடன், நாடோடி ஆகிய வார இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.
பெண்கள் படிப்பதற்கும் சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் கட்டுப்பாடு நிறைந்த அந்தக் காலகட்டத்தில், அவற்றை எல்லாம் மீறி தன்னுடைய எழுத்தைப் பதிவு செய்துள்ளார் செல்லம். அவருடைய கதைகளில் அக்காலத்தில் சமூகத்தில் நிலவி இருந்த பெண் அடக்குமுறை பற்றியும், பெண்கள் படிக்க வேண்டும், கல்விதான் அவர்களை முன்னேற்றும் என்றும் பல கதைகளில் பதிவு செய்துள்ளார்.
அத்துடன், அவர் தம் கதைகளில், தைரியமான பெண்களைப் படைத்துள்ளார். குறிப்பாக தனக்கு விருப்பமில்லாத திருமணத்தை மறுக்கும் பெண், தன் வாழ்க்கையைத் தானே தீர்மானித்துக் கொள்ளும் பெண், திருமணத்தைத் தவிர்த்து விட்டு உயர்கல்வி கற்க நினைக்கும் பெண் என்று தாம் வாழ்ந்த காலத்திற்கு மாறுபட்ட புதிய பெண் பிம்பங்களைப் படைத்துள்ளார்.
அந்த விதத்தில் இவர், நூற்றாண்டு கண்ட பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவராகவும் போற்றத்தக்கவராகவும் திகழ்கிறார்.
படைப்பாளர்

இரா. பிரேமா
தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது வென்ற இரா.பிரேமா, தமிழ்ப் பேராசிரியர்; பெண்ணிய ஆர்வலர்; எழுத்தாளர்; ஆய்வாளர். இவர் 27 ஆண்டுகள் கல்லூரிப் பேராசிரியர் பணியிலும் நான்கு ஆண்டுகள் கல்லூரி முதல்வர் பணியிலும் 30 ஆண்டுகள் ஆய்வுப் பணியிலும் ஈடுபட்டவர். இவர் 23 நூல்களையும் 250க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் பதிப்பித்த நூல்கள் 3. இவர் எழுதிய ‘பெண்ணியம்’ என்ற நூல் 12 பதிப்புகளைக் கண்டுள்ளது. இவரது பெண்ணிய நூல்கள் தமிழகப் பல்கலைக்கழகங்களிலும் பல தன்னாட்சிக் கல்லூரிகளிலும் பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்திலும் பாடநூலாகவும் நோக்கு நூலாகவும் எடுத்தாளப்படுகின்றன. இவரின் இரண்டு நூல்களை சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது. இலக்கிய வட்டத்தில் ‘பெண்ணியம் பிரேமா’ என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.