என் மனைவி, 1942 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படம். எடுத்தவுடன், சரஸ்வதி சினி பிலிம்ஸ் லெபோர்டரி லிமிடெட் தயாரித்த
‘என் மனைவி’ எனப் போடுகிறார்கள்.
அடுத்து திரைக்கதை வசனம் சுந்தர் ராவ் நட்கர்னி. இவரே எடிட்டிங் மற்றும் இயக்கத்தைச் செய்து இருக்கிறார். பேசாப்பட கால நடிகரா இருந்த இவர், மெல்ல மெல்ல திரைப்படத் தொழில்நுட்பங்களைக் கற்று இருக்கிறார். சாந்த சக்குபாய், என் மனைவி என இயக்கத் தொடங்கிய அவரின் பெரிய வெற்றிப் படமாக இருந்தது தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ்.
கதை GB Develமராத்தி மேடை நாடகமான ‘சம்ஷாய் கலோல்’யை Samshaya Kallol அடிப்படையாகக் கொண்டது.
பாட்டு டி.கே.சுந்தர வாத்தியார்.
சங்கீதம் சரஸ்வதி ஸ்டோர்ஸ் ஆர்கெஸ்ட்ரா
ஸ்டுடியோ பிரகதி பிக்சர்ஸ் மதராஸ்
ஆண் நடிகர்கள்
வேம்பு – கே.சாரங்கபாணி
தனபால் – கே.மகாதேவன்
கோபால் – எஸ்.ஆர்.கிருஷ்ணர்
சமையல்காரர் சுப்பு – ஆர்.நடேசர்
அப்பாயி – அப்புடு
என்.எஸ்.கண்ணன் – கே.எஸ்.ஜெகதீஸ்வர ஐயர் கே.வி.சொர்ணப்பா, ஜி.பட் மற்றும் கே.வி.சண்முகம்.
பெண் நடிகர்கள்
ரேவதி – எம்.கே.மீனலோச்சனி
செல்லம் – கே.ஆர்.செல்லம்
பேபி – வி.எம்.பங்கஜம்
சுவாதி – ஆர்.பத்மா
ரோகினி – டி.ஆர்.சந்திரா
தனம்மாள் – டி.என்.சந்திரம்மா
தரிஹா – லட்சுமிகாந்தம்
இவ்வாறு எழுத்து போட்டு முடித்ததும், அன்றைய சென்னை மாநகரைத்தான் காட்டுகிறார்கள். மெட்ராஸில், பணக்கார இளைஞரான தனபால் குப்தா, நடனக் கலைஞர் ரேவதி இருவரும் காதலித்துத் திருநீர்மலை கோயிலில் சத்தியம் செய்து மாலை மாற்றிக் கொள்கிறார்கள். திருநீர்மலை கோயிலில்தான் திருமணம் நடைபெறுகிறது. திருநீர்மலையில் போய் மாலை மாத்திக்கட்டுமா எனப் பிற்காலத்தில் சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் வரும். ஒருவேளை திருநீர்மலை என்பதே அந்தக் காலத்தில் இருந்தே மாலை மாற்றுவதற்கான கோயிலாக இருந்து இருக்குமோ எனத் தெரியவில்லை. பல திரைப்படங்களில் வரும் இந்தத் திருநீர்மலைக் கோயில் காட்டப்படும் முதல் திரைப்படமாகக்கூட இது இருக்கலாம்.
நடுத்தர வயது டாக்டர் வேம்பு, கோடம்பாக்கத்தில் இலவச மருத்துவமனை (தர்ம வைத்தியசாலை) வைத்திருக்கிறார். சென்னை மையிலாப்பூரில்தான் முதலில் இருந்திருக்கிறார். அங்கு மனைவி அடிக்கடி உறவினர்களைப் பார்க்கப் போனதாகவும், மருத்துவரைப் பார்க்க என யாராவது வந்த வண்ணமாகவே இருந்ததாகவும், அவர்களிடம் இருந்து மனையைப் பாதுகாக்கவே, இந்தக் கிராமத்தில் (கோடம்பாக்கம்) வந்து குடியிருப்பதாகவும் சொல்லிக் கொள்கிறார்.
மனைவி செல்லம் வெளியில் சென்று வரும்போது நல்லபடி அலங்காரம் செய்து கொண்டு செல்வதில் இவருக்குச் சந்தேகம். செல்லம் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சாமி கும்பிடப் போன நேரத்தில் அவரது வீட்டு வேலைக்காரப் பெண்ணின் தோழி சுவாதி வருகிறார். சுவாதியின் முதலாளி அம்மா, ஒரு மாதம் உடுத்திய சேலையை மறுமாதம் இவரிடம் கொடுத்துவிடுகிறார். பதினைந்து ரூபாய் விலையில் மூக்குத்தி வாங்கிக் கொடுத்து இருக்கிறார். இப்பெண்ணும் விலை மலிவான நகைகள் வாங்கிப் போட்டு சினிமா நடிகை போல வந்திருக்கிறார். கோயிலில் இருந்து வந்து பார்த்த செல்லத்திற்கு, இவற்றை எல்லாம் கணவர்தான் வாங்கிக் கொடுத்திருப்பாரோ என்று சந்தேகம். சுவாதியின் முதலாளி மதுரம் செல்லத்திற்கு ஏற்கெனவே தெரிந்தவர் என்பதால், சந்தேகத்தை நிவர்த்தி செய்ய அவருக்குக் கடிதம் எழுதுகிறார்.
திருநீர்மலையில் திருமணம் முடித்த கையோடு, ரேவதி தனபாலிடம் வற்புறுத்தி அவரின் படத்தை வாங்கிக் கொள்கிறார். வழியில் இருக்கும் அம்பாள் கோயிலில் பூசை செய்துவிட்டு வரப்போவதாகவும், அன்று விரதம் என்பதால், மாலை தனபால் வந்தபின்தான் விரதத்தை முடிக்கப் போவதாகவும் காரில் இருந்து இறங்கிக்கொள்கிறார். கையில் கணவரின் படம்.
மருத்துவர் கோயில் பூசாரியாகவும் இருப்பதால், அவர்தான் அம்பாள் கோயில் பூசாரியாக இருக்கிறார். விரதம் இருந்ததால் பசி மயக்கம். கீழே விழ இருந்த ரேவதியை மருத்துவர் தாங்கிப் பிடிக்க, அதை செல்லம் மேலிருந்து பார்க்க, சந்தேகம் கூடுகிறது. ரேவதி கணவரின் போட்டோவைத் தவறவிட்டு விட்டுப் போய்விடுகிறார். அதைக் கையிலெடுத்த செல்லம், இவ்வளவு அழகான கணவரை விட்டுவிட்டுத், தன் கணவர் மீது விருப்பம் எப்படி வரும் எனச் சிந்தித்தவாறே போட்டோவைக் கையாள, அதைப் பார்த்த மருத்துவருக்கு, மனைவி மீதான சந்தேகம் வலுக்கிறது.
கடிதம் தபாலில் சென்றடைந்த நேரத்தில் மதுரம், பிறந்த வீட்டிற்குச் சென்று இருந்ததால், அவரின் கணவர் சுவாதி மீது சந்தேகம் வேண்டாம் என எழுதி, ஒருவரிடம் கொடுத்து அனுப்புகிறார். கடிதம் மருத்துவர் கையில் கிடைக்க, இவர் சுவாதி யார் எனத் தேட நினைக்கிறார். வீட்டில் இருக்கும் வேலைக்காரரும் சுவாதி வீட்டிற்கு வருவதை உறுதி செய்கிறார்.
மருத்துவர் தனது மனைவியின் காதலனைத் தேடுவதற்காக சென்னை நகரம் செல்கிறார். தேடியலைந்து ஒருவழியாக ஒரு பூங்காவில் தனபாலைக் கண்டுபிடித்து அவரிடம் படத்தைக் காட்டுகிறார். ரேவதியிடம் இருந்த அந்தப் படம் எப்படி மருத்துவரிடம் சென்றது என இப்போது, தன்பாலுவிற்கு ரேவதி மேல் சந்தேகம்.
ஒருவர் மேல் இன்னொருவர் எனச் சந்தேகப்பட்டு, ஒருவழியாக அனைவரின் சந்தேகமும் நிவர்த்தி அடைந்து அனைவரும் நலமாக வாழ்வதாக கதை முடிகிறது.
மருத்துவராக கே.சாரங்கபாணி மிக இயல்பாக நடித்துள்ளார். மனைவி மீது சந்தேகம் கொண்டு சாலையில் நடக்கும் விதம், வேகம் கொண்ட அவரின் நடை, தன்பாலிடம் புகைப்படத்தைக் காட்டி கேட்பது எல்லாம் அப்படியே பொருந்தி விடுகிறது. என்னைப் பொறுத்தவரை அவரது மிகச் சிறந்த படம் இதுதான். தனிப்பட்ட வாழ்வில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அடையாறு மருத்துவமனையில் இருந்த போது. நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டு, குங்குமத்தை அண்ணா நெற்றியில் பூசி விடுவாராம். நாத்திகரான அண்ணாவும் அழிக்கவே மாட்டாராம். அந்த அளவிற்கு இருவரின் நட்பும் இருந்து இருக்கிறது.
ரேவதியாக வருபவர் எம்.கே.மீனலோச்சனி. குறும்பு ததும்பும் முகம். புகைப்படத்தைத் தனபாலிடம் கேட்கும் காட்சி, அவர் தன்னைச் சந்தேகப்படுவது நடிப்பு என நினைத்து இவர் நடிப்பது, அதிலும் குறிப்பாக, Silence, ready for yourself எனச் சொல்லிக்கொண்டு சினிமா இயக்குநர் போன்றே காமிரா கோணம் பார்ப்பது, ஆஹா மெத்த அபூர்வ ஆக்ட்டிங், அதனால் நானே செய்வேன் டைரக்ட்டிங் எனக் கழுத்தில் கைகுட்டையைக் கட்டிக்கொண்டு சினிமா இயக்குநர் போலே நடிப்பது எல்லாம் மிகவும் அருமையாக இருக்கிறது. இந்தப் பாடலைக் கொலைவெறி பாடலுக்கு முன்னோடி எனச் சொல்லலாம். இதற்கு முன் இப்படி ஆங்கிலமும் தமிழும் கலந்து பாடல் வந்திருக்கிறதா எனத் தெரியவில்லை.
மருத்துவரின் மனைவியாக வருபவர், கே.ஆர்.செல்லம். கணவர் மீது இருக்கும் கோபத்தைக் காட்டும் முகபாவனை எல்லாம் அவருக்கு அவ்வளவு இயல்பாக வருகிறது.
வயலின் கலைஞர் நெல்லூர் நடேசர், சமையல்காரர் வேடத்தில் நடித்துள்ளார். கொட்டாங்குச்சி வயலின் வைத்து அவர் பாடும் அழகே தனிதான்.
சங்கடமான சமையலை விட்டு
சங்கீதம் பாடப்போறேன்
சங்கீதம் பாடப்போறேன் ஒரு
தம்பூரா தேடப்போறேன்.
சரியாமல் அரைக்கணும் எடுக்கணும்
கறிகாய்கள் நறுக்கணும் அவிக்கணும்
உலையோரம் இருக்கணும் வடிக்கணும்
எலை போட்டுஅரைக்கணும் படைக்கணும்
ஆல் இண்டியா ரேடியோவில்
அடியேனும் பாடப்போறேன்
சினிமாவில் கூடப்போறேன்
சாரீரமோ முறுக்கு சங்கீதமோ இருக்கு
சாதகம் மட்டும் செய்தால்
ஒரு பாகவதர் ஆகிடுவேன்
என ஒரு பாடலும் பாடுகிறார்.
வேலையாளாக வரும் லக்ஸ் பத்மா வீட்டில் இருக்கும்போது சட்டை அணியாமலும், வெளியில் செல்லும்போது, சட்டை மட்டுமல்லாமல், நல்ல ஆடை ஆபரணங்களுடனும் வருகிறார். இரண்டிலுமே மிகவும் அழகாகத் தோற்றுகிறார். பாடல் ஒன்றும் பாடுகிறார்.
‘பட்டணத்தைப் பார்க்கப் பார்க்கப் பசியெடுக்கவிலை சென்னை பட்டணத்தைப் பார்க்கப் பார்க்கப் பசியெடுக்கவிலை
எங்க பட்டிக்காட்ட சுத்தி சுத்தி பாத்தா கம்பங்கொல்ல
சாயங்கால நேரத்திலே சமுத்திரக்கரை ஓரத்திலே
மாயமான கம்பம் ஒண்ணு மனுசன்போல பாடுது
எனக் கடற்கரையைக் காட்டுகிறார்கள். அங்கு ஒரு நீண்ட கம்பத்தில் இரு கூம்பு ஒலிபெருக்கி கட்டி வைத்து இருக்கிறார்கள். அதில் வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபெருக்கும் வழக்கம் இருந்து இருக்கிறது.
மானத்திலே பறக்குதம்மா மாயாஜால வண்டி -அது
வளஞ்சி வளைஞ்சி மீனம்பாக்கம் வந்து இறங்குற வண்டி
என அதே பாடலில் வானில் பறக்கும் விமான நிலையத்தைக் காட்டுகிறார்கள்.
கச்சேரி மேல் வச்சிருக்கு காந்த ஜோதி விளக்கு
கொஞ்சம் கழிச்சு கழிச்சு முழிச்சு முழிச்சு
பளிச்சு திறக்கும் கணக்கு
என அதே பாடலில் கலங்கரை விளக்கத்தைக் காட்டுகிறார்கள். அப்போது கலங்கரை விளக்கம் உயர்நீதிமன்ற கோபுரத்திற்கு மேலே இருந்திருக்கிறது என்பதெல்லாம், வரலாற்றுப் பதிவு.
நாகர்கோவில் மகாதேவன் என்ற நாரதர் மகாதேவன்தான் தனபாலாக நடித்துள்ளார். அவருக்குத் தனபால் குப்தா என்கிற வடநாட்டுப் பெயர். பார்க்கவும் அவ்வாறே இருக்கிறார். இவர், பல திரைப்படங்களில் நாரதராக நடித்தவர் என்பதால், நாரதர் மகாதேவன் என அழைக்கப்பட்டிருக்கிறார். இவரும், இசையமைப்பாளர் K V மகாதேவனும் உறவினர்களா எனத் தெரியவில்லை. அவரும் நாகர்கோவிலைச் சார்ந்தவர்தான். நாகர்கோவில் வடசேரியில் மிகப் பழமையான மகாதேவர் கோயில் உள்ளது. அதனால் இருவருக்கும் அந்தச் சாமியின் பெயரை வைத்திருக்கலாம்.
சென்னை உயர்நீதிமன்றம், டிராம் வண்டி, குதிரை மேல் இருக்கும் சிலை போன்ற சிலைகள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம் போன்ற பல இடங்கள், பழைய சென்னை எப்படி இருந்திருக்கிறது என்பதைச் சொல்கின்றன. கூண்டு போட்ட குதிரை வண்டி, டிராம் வண்டி, விளக்கு பொருத்திய ரதம் போன்ற குதிரை வண்டி என அந்தக் கால சென்னையைக் கண் முன்னே கொண்டு வருகிறார்கள்.
கீழ்ப்பாக்கத்தில் அப்போதே மனநல மருத்துவமனை இருந்து இருக்கிறது. சேத்துப்பட்டு மதராஸ் என்கிற சென்னையின் ஒரு பகுதியாகவும் கோடம்பாக்கம் தனி கிராமமாகவும் இருந்திருக்கிறது. பனை மரங்கள் நிறைந்ததாக கோடம்பாக்கம் ரயில் நிலையம் இருந்திருக்கிறது. கொத்தவால் சாவடிக்கு கறிகாய் வாங்கப் போவதாக மருத்துவரின் வேலைக்காரர் சொல்கிறார். அதனால் அப்போதே பெரிய காய்கறி சந்தை அங்கு இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.
வேலைக்காரப் பெண் தானியம் இடிப்பதாக ஒரு காட்சி வருகிறது. ஓர் அறையின் நடுவில் உலக்கை போகுமளவுக்குத் துளை இருக்கிறது. சுற்றிலும் இருக்கும் தானியத்தைக் காலால் உள்ளே தள்ளித் தள்ளி இடிக்கிறார். எங்கள் பாட்டி வீட்டில் இதே போன்று ஓர் அறை இருந்தது. அதற்குக் குத்துப்பிரை என்பது பெயர். நெல் குற்றுவதற்கான அறை. அறையின் நடுவில் கல் பதித்து இருப்பார்கள். அதன்மேல், உறைப்பெட்டி எனப்படும், ஓர் அடி கூம்பு வடிவப் பெட்டி வைத்து அதனுள் நெல், தானியங்கள் போட்டு குத்துவார்கள்; இடிப்பார்கள். இப்படி ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொருவிதமான உரல்கள் இருந்து உள்ளன என அறிந்து கொண்டேன். இங்கு மட்டுமல்ல, அமெரிக்காவிலும் இந்த மாதிரி கல்லைத் தரையில் பதித்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
வண்டியை இன்சூர் பண்ணுவது குறித்து; டெம்ப்ரவரி லைசென்ஸ் வாங்குவது குறித்தெல்லாம் உரையாடல் வருகிறது. சும்மா உடான்ஸ்தான் என்று அன்றே பேசி இருக்கிறார்கள். Retta Scott விற்குக்கூட இந்த ஆக்க்ஷன் வராது என ஹாலிவுட் நடிகை குறித்துப் பேசுகிறார்கள். இப்படி அந்தக் கால உரையாடல்கள் மூலம் அன்றைய மேல்தட்டு மக்களின் வாழ்வியல் புரிகிறது.
இங்கே மருந்துகள் இனாமாகக் கொடுக்கப்படும் என்கிற எழுத்துகள் மட்டுமல்ல; ஸ்த்ரீகள் எனத் தனியாகவும் இடம் இருக்கிறது. குழந்தை பிறந்ததற்கு இனாம் இல்லையா என கம்பவுண்டர் கேட்க, பிள்ளை (ஆண்) குழந்தை பிறக்கட்டும் சேர்த்துத் தருகிறேன் என்கிறார், வந்தவர். இப்படி இலவச மருத்துவமனையின் கையூட்டு கலாச்சாரம் அப்போதே இருந்து இருக்கிறது. தோலா (12 கிராம்) என்கிற நிறுத்தல் அளவில் மருந்துகள் கொடுக்கிறார்கள். மருத்துவர், பெரும்பாலான மருந்துகளை நெய்யில் குழைத்துச் சாப்பிடச் சொல்கிறார்.
தனபால், ரேவதியைத் திருநீர்மலையில் வைத்துத் திருமணம் செய்திருந்தாலும், இருவரும் வேறு வேறு இடங்களில் இருப்பது போலத்தான் காட்டுகிறார்கள். ரேவதி நடனமாடும் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் இவ்வாறு தனித்தனியாக இருக்கிறார்களா எனத் தெரியவில்லை.
வீடுகள் சோபா, திரைச்சீலை, கொசுவலை, கட்டில் மெத்தை, வெந்நீர் கொதிகலன், திருக்குச் செம்பு, கிராமபோன் என ஆடம்பரமாக இருந்தாலும், அடுப்பு என்னமோ தரையில்தான் இருக்கிறது. வேலைக்காரர்கள் தானே பயன்படுத்துகிறார்கள் என்கிற எண்ணமாக இருக்கலாம். வீட்டில் அப்போதே குழாய் எல்லாம் இருந்து இருக்கிறது. Quilting எனப்படும், நூல் வேலைப்பாடு மருத்துவரின் மனைவி செய்கிறார். இப்படி மேல்தட்டு மக்களின் வாழ்வியலை எடுத்துக்கூறும் திரைப்படமாக இது உள்ளது.
(தொடரும்)
படைப்பாளர்:
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.