சபாபதி 1941ஆம் ஆண்டு திரைப்படம். இதுவே தமிழின் முதல் நகைச்சுவைத் திரைப்படமாக இருக்க வேண்டும். வசூலை வாரிக் குவித்து உள்ளது. இது, பம்மல் சம்பந்தம் எழுதி நடித்த மேடை நாடகம். 2021 ஆம் ஆண்டு, நடிகர் சந்தானம் நடித்த திரைப்படம் ஒன்று சபாபதி என்கிற பெயரில் வெளியானது. கதை முற்றிலும் வேறானது.
ஆண் நடிகர்கள்
சபாபதி டி.ஆர்.ராமச்சந்திரன்
சபாபதி காளி என்.ரத்தினம்
தமிழாசிரியர் சின்னசாமி கே.சாரங்கபாணி
குமரகுரு, குப்புசாமி வைத்தியர் என்.எஸ்.கண்ணன்
முருகேசன் கே.தேவநாராயணன்
கிருஷ்ணசாமி கே.வி.சொர்ணப்பா
தத்திராமன் கே.ஹிரண்ணையா
ராவ் சாகிப் மாணிக்கம் எஸ்.குப்புசாமி
சிதம்பரத்தடிகள் குஞ்சிதபாதம்
தினகரசாமி கே.பி.ரத்னபத்தர்
ஹோட்டல் விஸ்வநாதர் கே.எஸ்.ஜெகதீசர்
பெண் நடிகர்கள்
சிவகாமு ஆர்.பத்மா
குண்டுமுத்து சி.டி.ராஜகாந்தம்
திரிபுரம்மாள் பி.ஆர்.மங்கலம்
கன்னி அம்மாள் வி.எம்.பங்கஜம்
தெய்வயானை அம்மாள் சி.கே.கமலம்
சங்கீதக் கச்சேரி
P. A. பெரியநாயகி – வாய்ப்பட்டு
சி.வி.தனலட்சுமி – பிடில்
வி.நீலாம்புரி – மிருதங்கம்
கதை மற்றும் சம்பாஷணை ராவ் பகதூர் P சம்பந்தம் முதலியார் BA. BL.
பாட்டு T K சுந்தரம் வாத்தியார்
சங்கீதம் சரஸ்வதி ஸ்டோர்ஸ் ஆர்கெஸ்ட்ரா
ஸ்டுடியோ பிரகதி பிக்சர்ஸ் மதராஸ்
டைரக்க்ஷன் A. V. மெய்யப்பன் மற்றும் A. T. கிருஷ்ணசாமி
சபாபதி, ஒரு பணக்கார அரசியல்வாதி வீட்டுச் செல்லப்பிள்ளை. இவர்கள் வீட்டில் சபாபதி என்று ஒரு வேலைக்காரரும் இருக்கிறார். பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் சபாபதிக்கு, வேறு ஊரில் வாழும் பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் சிவகாமி சுந்தரியைத் திருமணத்திற்குப் பேசி வைக்கிறார்கள். 20 – 6 – 40 அன்று திருமணம் நடைபெறுகிறது. அதாவது பள்ளி இறுதித் தேர்வு முடிந்து திருமணம், இருவரும் அவரவர் ஊரில் வாழ்கிறார்கள். நடைபெற்ற தேர்வில் சிவகாமி தேர்ச்சி பெற, சபாபதி தோல்வி அடைகிறார். ஒரு காலகட்டத்தில் சிவகாமி, சபாபதி வீட்டிற்கு வந்துவிடுகிறார். அவர் உதவியால் தேர்வில் வெற்றியும் பெறுகிறார். ஏற்கெனவே வெற்றி பெற்றிருந்தாலும் சிவகாமி, கல்லூரியில் சேரவில்லை. இருவரும் மருத்துவக் கல்லூரியில் சேர இருப்பதாகச் சொல்கிறார்கள். வேலைக்காரர் சபாபதியும் அவரது மனைவி குண்டுமுத்து உதவியால் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்கிறார். பெண்கள் படித்தால் வீடு நலம் பெரும் எனத் திரைப்படம் நிறைவு பெறுகிறது.
இளம் சபாபதியாக டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்து இருக்கிறார். 1937 ஆம் ஆண்டு நந்தகுமார் என்கிற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி இருந்தாலும், சபாபதிதான் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. இன்றும் அவரின் சிறந்த படம் எனப் பேசப்படுவது சபாபதிதான்.
பள்ளி இறுதி வகுப்பு மாணவராக இத்திரைப்படத்தில் வரும் இவர், தோற்றத்திலும் அவ்வாறே இருப்பது சிறப்பாக உள்ளது. உடல் மொழி, உடல் அசைவுகளில் அவர் காட்டும் வேகம், ஆங்கிலம் பேசும் விதம், நடை உடை பாவனை என அனைத்திலும் கச்சிதமாகப் பொருந்தி விடுகிறார். பாலாறு பாலத்தில் ரயில் போவதைப் பாதி பகுதி குப் குப் மீதிப் பக்கம் கடகட என எழுதி வைத்து இருக்கிறார். ஒவ்வொரு குக்குப்பிற்கும், ஒவ்வொரு கடகடாவிற்கும் அவர் வாசிக்கும் அழகே அலாதிதான்.
வேலைக்காரர் சபாபதியாக வரும் காளி என். ரத்தினம் தனது புத்திசாலித்தனக் குறைவைக், கண்கள், உடல் மொழி மூலம் எளிதில் வெளிக்காட்டி விடுகிறார்.
நாயகி பத்மா அன்றைய லக்ஸ் சோப்பின் விளம்பர மாடலாம். இந்தத் திரைப்படத்தில் சிறு பெண்ணாக வருகிறார். இனிமையாகப் பாடுகிறார்.
தமிழ் ஆசிரியராக வரும் சாரங்கபாணிதான், பிற்காலத் திரைப்படங்களில் வரும் கேலிக்குரிய தமிழ் ஆசிரியர்களின் முன்னோடி எனலாம். கறுப்பு வெள்ளைக் கால வெண்ணிற ஆடை மூர்த்தி போல இருக்கிறார்.
அன்றைய காலகட்டத்தில் வசதியானவர்கள் வீட்டுத் திருமணத்திற்குக் கச்சேரி என்பது வழக்கமாகவே இருந்து இருக்கிறது. பிற்காலத்தில் பிரபல பின்னணிப் பாடகராக இருந்த P. A. பெரியநாயகியின் கச்சேரியை அப்படியே போடுகிறார்கள்.
கல்யாணி ராகத்தில் தமிழ் பாட்டே கிடையாதோ? தமிழ்ப்பாட்டு என்றால் நன்றாக ரசிக்கலாமே எனக் கேட்க, ஆகட்டும் என அவர் தமிழ்ப்பாட்டுப் பாடுகிறார். இப்படி அந்தக் காலகட்டத்தில் இருந்த வழக்கம் தெரியவருகிறது.
P. A. பெரியநாயகி – வாய்ப்பட்டு
சி.வி.தனலட்சுமி – பிடில்
வி.நீலாம்புரி – மிருதங்கம்
என எழுத்து போடும்போதே போடுகிறார்கள். பிற்காலத்தில் சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும், இதுவே P. A. பெரியநாயகியின் முதல் படம். ஸ்ரீ வள்ளி 1945 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். அதில் உதடு ஒத்திசைவு (lip synchronization) மூலம் பின்னணிப் பாடல் அறிமுகமாகி இருக்கிறது. திரைப்படம் எடுத்து படத்தை முடித்துவிட்டுப் பார்த்ததில் நாயகி ருக்மணி பாடியது, AVM அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால், பிந்தைய ஒத்திசைவு முறை மூலம் பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தப் பாடல்களைப் பாடியவர் பெரியநாயகிதான். அதனால், இவரே தமிழ் திரைப்படத்தின் முதல் பின்னணிப் பாடகர். அதன்பிறகுதான் திருச்சி லோகநாதன் ‘ராஜகுமாரி’ திரைப்படத்தில் ‘காட்டினிலே நாங்கள் வாழ்வதே சுக வாழ்வுதான்’ என்ற பாடலைப் பாடினார். இதனால், அவரை முதல் ஆண் பின்னணிப் பாடகர் எனலாம். பெரியநாயகி அப்போது வேறு படங்களில் நடித்துக் கொண்டும், தனக்கான பாடல்களைப் பாடிக் கொண்டும் இருந்தவர் என்பதால், திருச்சி லோகநாதன் முதல் தொழில்முறைப் பாடகர் எனச் சொல்லலாம்.
நாம் பிற்காலத்தில் திரைப்படங்களில் பார்த்த, சமூகத்தில் கேள்விப்பட்ட பல நகைச்சுவைகள் இந்தத் திரைப்படத்தில் உள்ளன.
பள்ளியின் பெயர் A. B. C. D எனத் தொடங்குவதில் இருந்து, எள்ளல் தொடங்குகிறது. பள்ளியில் ஆசிரியரின் உருவத்தைக் கரும்பலகையில் மாணவர்கள் வரைகிறார்கள். அதுவும் தமிழாசிரியர்தான். அவர் மட்டும்தான் பெருமளவில் காட்டவும் படுகிறார். தமிழாசிரியர்களைக் கேலி செய்யும் வழக்கம் அப்போதே இருந்து இருக்கிறது. வகுப்பில் தூங்கும் அவருக்கு மாணவர்கள் மீசை வரைகிறார்கள்.
ஆங்கிலம் தெரியாத வேலைக்காரரிடம் Fool என்றால் கெட்டிக்காரர் எனச் சபாபதி சொல்கிறார். Cards கொண்டா என்றதும், வேலைக்காரர் அஞ்சலட்டை கொண்டு வந்து கொடுக்கிறார். ராஜா தலை போட்ட அஞ்சல்தலை என்பது விடுதலைக்கு முந்தைய திரைப்படம் என்பதை நமக்கு நினைவுப் படுத்துகிறது.
பாலாறு பாலத்தில் ரயில் போவதைப் பாதி பகுதி குப் குப் மீதிப் பக்கம் கடகட என சபாபதி எழுதி வைத்து இருக்கிறார். இது பிற்காலத்தில் பலரும் சொல்லும் நகைச்சுவை.
தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்கு மாட்டிக் கொள்வது போல நடிக்கிறார்.
மனைவி கணவனுக்குத் தெரியாமல் பண்டம் சாப்பிடுகிறார்.
இரண்டு காலணா கொடுத்து, ஒரு காலணாவிற்கு பக்கோடாவும் இன்னொரு எந்தக் காலணாக்கு பாதாம் அல்வா? எந்தக் காலணாக்குப் பகோடானு வேலைக்காரர் சபாபதி கேட்கிறார்.
JUST TURN THE TABLE என்பதற்கு, மேசையைக் கவிழ்த்துப் போடுகிறார்.
இப்படியான பல நகைச்சுவைகளைச் சொல்லலாம்.
அந்தக் காலகட்ட வழக்கங்கள் பலவற்றை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
சபாபதி வயதான வேலைக்காரரை டேய் என அழைக்கிறார். அவரும் பதிலுக்கு வாப்பா போப்பா எனதான் பேசுகிறார்.
மாணவர்கள், அரைக்கால் சட்டையில் அல்லது வேட்டியில் பள்ளியினுள் செல்கிறார்கள். அதே பள்ளியில் மேல்தட்டு மாணவர்கள் கோட்டும் சூட்டுமாக வருகிறார்கள்.
VI form A எனக் கரும்பலகையில் உள்ளது. VI form என்பது அன்றைய பள்ளி இறுதி வகுப்பு எனத் தெரிந்து கொள்ள முடிகிறது. NOON ROLLS; Present என எத்தனை பேர் வகுப்பில் சேர்ந்து இருக்கிறார்கள்; அன்றைய வகுப்பிற்கு வந்து இருக்கிறார்கள் எனக் கரும்பலகையில் இருக்கிறது. இது அன்றைய கால நடைமுறையாக இருந்து இருக்கலாம். மேசையில் பேனா, தொட்டு எழுத மைபாட்டில் உள்ளது. அன்றைய பேனாக்கள் அவ்வாறு இருந்து இருக்க வேண்டும். எங்கள் காலத்தில் பேனாவினுள் மை ஊற்றும்படியான அமைப்பு வந்துவிட்டது. சுவரில், சரஸ்வதி படம், மனித உடலின் பாகங்கள் குறித்த வரைபடம், இந்திய வரைபடம், மாட்டப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் வரைபடம் எவ்வாறு இருந்தது என்பதை அந்த வரைபடம் சொல்கிறது.
சவுத் இந்தியன் ரயில்வே, மெட்ராஸ் தசரன் மராட்டா ரெயில்வே என இரு ரயில்வேக்கள் உள்ளன என சபாபதி எழுதுகிறார். இதன் மூலம் அப்போது இருந்த ரெயில்வேக்கள் குறித்துத் தெரிய வருகிறது.
மோட்டார் பஸ்களுக்கு பெட்ரோல் கிடைக்காததால் மக்களுக்குச் சிரமம் இருப்பதாகவும், கரி போட்டு ஓட்டும் வாகனத்தை ஓட்டச் சொல்லி, அரசு பரிந்துரைப்பதாகவும் செய்தித் தாளில் (தினமணி) வாசிக்கிறார். முதல் பக்கம் நமக்குக் காட்டும் பகுதி, தமிழில்தான் இருக்கிறது. ஆனால், அதே முதல் பக்கத்தில் மடித்து அவர் வாசிக்கும் கீழ்ப்பகுதியை சபாபதி ஆங்கிலத்தில் வாசிக்கிறார். நகைச்சுவைக்காக அவ்வாறு காட்டினார்களா அல்லது உண்மையில் செய்தித் தாள்கள் இரு மொழிகளில் வந்தனவா என்று தெரியவில்லை. இரண்டாம் உலகப்போர் குறித்த தகவல்கள் ஆங்காங்கே உள்ளன.
பணக்காரர்கள் கையில் ரிவால்வர் இருந்து இருக்கிறது.
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ என்கிற அசோக்குமார் திரைப்படப் பாடலின் மெட்டில், வேலைக்காரர் சபாபதி, வேலைக்கார அம்மாவைப் பார்த்துப் பாடுகிறார். இதுதான் முதல் ரீமேக் பாடலாக இருக்க வேண்டும்.
சபாபதி அப்பா தேர்தலில் அவருக்கு ஓட்டு கேட்டுத் தமிழாசிரியர் வீட்டிற்கு வருகிறார். ‘உங்க ஓட்டு மட்டுமல்ல, அக்கம் பக்கத்துல இருக்கறவங்க ஓட்டெல்லாம் வேணும்’ என்கிறார். தமிழாசிரியரோ, “இதெல்லாம் உங்களுக்கு இன்னும் எதுக்குன்னு கேக்குறேன், முதல்ல member ஆரவங்களுக்கு நல்ல புத்தி வேணும், சாந்தம் வேணும், பரோபகார சிந்தை வேணும், ஏழைகளிடத்துல அன்பு வேணும், தியாக சக்தி வேணும், தேச பக்தி வேணும், நீங்கள்லாம் போய் என்னத்த செய்றது? உங்களுக்கு சாஹிப் பட்டத்த வாங்கிக்கிட்டத தவிர மத்தவங்களுக்கு என்ன செஞ்சிங்க” எனக் கேட்கிறார். இறுதியில் சமாதானப்படுத்தும் விதமாக சபாபதி அப்பா, கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டுப் போகிறார். அப்போதே, அதாவது அனைவருக்கும் ஓட்டு உரிமை இல்லாது இருந்த அந்தக் காலத்திலேயே நேரிடையாகவோ மறைமுகமாகவோ இந்த ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் வழக்கம் வந்து இருக்கிறது.
வசதியான சபாபதி வீட்டில் ஐஸ் கிரீம் செய்வதற்கான வசதி இருப்பதாகக் காட்டுகிறார்கள்.
சென்னையில் அப்போது பீப்பிள்ஸ் பார்க் என ஓர் இடம் இருந்து இருக்கிறது. வானில் விமானம் பறக்கிறது. திரைப்படத்தில் ஐஸ் ஹவுஸ், அதைச் சுற்றி உள்ள இடங்கள் எப்படி இருந்தன போன்ற பழைய சென்னையைப் பார்க்க முடிகிறது.
இப்படிப் பலவற்றை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
பெண்கள் குறித்துச் சொல்ல வேண்டுமென்றால், வயதான பெண்கள், தோளை மூடி நடமாடுகிறார்கள். இளம் பெண்கள் நாம் இப்போது கட்டுவது போல சேலை கட்டியிருக்கிறார்கள். பின் குத்துவதற்குப் பதிலாக, ஏறக்குறைய அரை ஜாண் நீளத்தில், இப்போது தலையில் வைக்கும் மாட்டி போன்று கல் வைத்த கிளிப் வைத்து இருக்கிறார்கள். கம்மல்கள் நீளமான தொங்கட்டான்களாக உள்ளன.
மச்சானின் பெண்பாலாக மச்சி என்கிற சொல்லாடல் இருந்து இருக்கிறது. பெண் சம்பந்திகளில் பெரியவர், இளையவரை மச்சி என அழைகிறார். இளையவர் பெரியவரை அண்ணி என அழைக்கிறார். ஓரிரு உரையாடலுக்குப் பின் இருவரும் ஒருவரை இன்னொருவர் மச்சி என்றே அழைத்துக் கொள்கிறார்கள். இந்த மச்சி எனச் சொல்லும் வழக்கம் இப்போது வேறு விதமாக மாறிவிட்டது.
நான் வந்து பெண்ணைப் பார்த்து ஒருத்தருக்கு இன்னொருத்தர் லவ் பண்ணிய பிறகுதான் கலியாணம் என்கிறார் சபாபதி. அந்த வழக்கம் இல்லையே என்றதும் வாகன ஓட்டியாகப் போகிறார். பின் அம்மாவும் மாப்பிளையாகவே வா என்கிறார். ஆனால், இவர் டிரைவராகப் போகிறார். பெண்ணின் அம்மாவும் மாப்பிள்ளை வந்தது குறித்து தவறாக நினைக்கவில்லை. உள்ளே வரவழைக்கிறார். இப்படிக் கதை தொடர்கிறது. அதாவது மணமக்கள் சந்தித்துக் கொள்வதை அம்மாக்கள் இருவரும் ஆதரிப்பதாக கதை போகிறது.
பெண் வீட்டில் கீழே இறங்கியதும், வேலைக்கார சபாபதி கச்சேரி நடக்கிறது என்கிறார். இப்போது அந்தச் சொல் நடத்தை தவறியவர் எனச் சொல்வதற்கான கெட்டவார்த்தையாக மாறிவிட்டது. அம்மாவும் ஏதோ விசேஷம் போல இருக்கிறது நல்ல சகுனம் என்கிறார். உள்ளே வந்தும் அதே சொல்லாடலைத்தான் மணமகனின் அம்மா சொல்கிறார். மணமகளின் அம்மா, “இந்தக் கலிகாலத்தில புதுசு புதுசா என்னென்னவெல்லாமோ ஏற்படுது. பள்ளிக்கூடத்திலகூடப் புதுசா பரத நாட்டியம் கத்துக்கணுமாம். அதுல நம்ம கொழந்த கெட்டிக்காரின்னு மெடலெலாம் வாங்கியிருக்கா இப்போ war fundனுறாங்களை அதுக்கு கலெக்டர் பங்களாவிலே ஒரு ஆட்டம். அதுக்காக பழகுறா” என்கிறார்.
சபாபதி சிவகாமி இருவரும் மருத்துவக் கல்லூரியில் சேர இருப்பதாகச் சொல்கிறார்கள். வேலைக்காரர் சபாபதியும் அவரது மனைவி குண்டுமுத்து உதவியால் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்கிறார். பெண்கள் படித்தால் வீடு நலம் பெரும் எனத் திரைப்படம் நிறைவு பெறுகிறது. பெண் கல்வியை வலியுறுத்தும் விதமாகத் திரைப்படம் ஒன்று 1041ஆம் ஆண்டே வந்திருக்கிறது என்பது வியப்புக்குரியதாகவே எனக்குத் தோன்றியது.
(தொடரும்)
படைப்பாளர்:
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.