ஏதென் தோட்டத்தில் விலக்கப்பட்ட கனியைப் புசித்தபோது அறிவுக் கண் திறந்து ஆதாமும் ஏவாளும் தங்கள் நிர்வாணம் குறித்து நாணம் கொண்டதாகப் பைபிள் கூறுகிறது. ஆள் பாதி ஆடை பாதி, ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்று முதுமொழிகள் வேறு இருக்கின்றன. தைத்த ஆடைகளைவிட தைக்காததை அணிந்து கொண்டது கௌரவமாக இருந்தது ஒரு காலத்தில். இன்று மட்டுமல்ல அன்றைய சமூகத்திலும்கூட ஆடை என்பது ஒரு மனிதரின் அந்தஸ்தை நிர்ணயிக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. தோள்சீலைப் போராட்டம் நடத்தி மேலாடை அணியும் உரிமை பெற்ற வரலாறுகள் உண்டு. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆடைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான வகையில் சௌகரியமாக இருக்கிறதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

சங்க காலத்தில் பெண்கள் மேலாடை அணியும் வழக்கம் இல்லை. அதற்குப் பதிலாக மணிகள், முத்துகளைக் கோத்து மாலைகளாகத் தொடுத்து, அவற்றால் மார்பை மறைத்துக் கொண்டனர் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

சென்ற நூற்றாண்டில்கூட அடிமைகள் என்றும் ஒடுக்கப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டவர்கள் அரையாடை மட்டுமே அணியும்படி நிர்பந்திக்கப்பட்டனர். மேல் துண்டு அணிந்துகொள்ளும் உரிமைகூட அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இதில் ஆண், பெண் என்கிற பேதமும் இல்லை. சில பத்தாண்டுகளுக்கு முன்புகூட பண்டிகை நேரத்தில் அல்லது முக்கிய விசேஷங்களுக்கு மட்டுமே ஆடைகள் புதிதாக எடுக்கப்பட்டன. ஆனால், இப்போதோ நினைத்த போதெல்லாம் ஆடைகளை வாங்கிக் குவிக்கும் வண்ணம் காலம் மாறிவிட்டது.

ஆனால், எத்தனை மாறினாலும் என்ன? ஆடைகளில்கூடப் பெண்களுக்குப் பிரச்னைகள்தாம் அதிகமாக இருக்கிறது. இந்த மாதிரிதான் உடுத்த வேண்டும். இந்த இடத்துக்கு இந்த மாதிரி ஆடைதான் பொருந்தும் என்று பெண்கள் உடுத்தும் உடைகளில்கூட ஆணாதிக்க சிந்தனைகள்தாம் பொங்கி வழிகின்றன. பாக்கெட்டுடன் இருக்கும் பெண் உடைகளை விரல்விட்டு எண்ணி விடலாம். அதே நேரம் பாக்கெட் இல்லாத ஆண் உடைகள் இருக்கின்றனவா என்ன? பெண் எப்போதும் பொருளாதாரத் தேவைகளுக்கு ஆணையே சார்ந்து இருக்க வேண்டும் என்று இந்த ஆடை வடிவமைப்புகள் மறைமுகமாக வலியுறுத்துகின்றன. மேலும் பெண்ணின் உடைகள் எப்போதும் ஆணுக்குக் கிளர்ச்சியை உண்டு பண்ணும் விதமாகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. தனக்குச் செளகரியமான ஆடையை உடுத்தும் வாய்ப்பு பெண்களுக்கு எப்போதும் கிடைப்பதே இல்லை.

என் தோழி துக்கம் விசாரிக்கப் போகும் போது அவள் சல்வாரோ சுடிதாரோ அணிந்து போக முடியாதாம். அவள் அம்மா அவளிடம் புடவை கட்டிக் கொண்டுதான் வர வேண்டும் என்று வற்புறுத்துவாராம். ஏனென்றால் அங்கே இருக்கும் உறவுக்காரப் பெண்கள் ஏதேனும் தவறாகப் பேசுவார்கள் என்று. போட்டிருக்கும் உடையை வைத்து தவறாகப் பேசுபவர்களின் உறவை ஏன் நாம் வலிந்து பேண வேண்டும்?

பீரோவில் ஆண்களின் உடையை வைக்க இடமே இருப்பதில்லை. முழுவதும் பெண்களின் உடைகள்தாம் ஆக்கிரமித்துள்ளன என்று நகைச்சுவை என்கிற பெயரில் பத்திரிகையில் எழுதுவார்கள். உண்மைதான், கோயில், ஷாப்பிங், உறவினர் வீடு, துக்க வீடு, கல்யாணம் என்று ஒவ்வோர் இடத்துக்குத் தக்கவாறு பெண்கள் ஆடை அணிகின்றனர். இந்த வழக்கத்தை உண்டாக்கியது யார்?. பார்க்கும் போதெல்லாம் பளிச்சென்று அழகாகத் தோன்ற வேண்டும் என்கிற சிந்தனையைப் பெண்களின் மூளைக்குள் புகுத்திய ஆண்கள்தாமே?

ஆண்கள் போட்டிருக்கும் எளிய உடையைக்கூட வீட்டிற்கு வந்ததும் மாற்றி, இன்னும் சௌகரியமான ஆடைக்குள் புகுந்து விடுகின்றனர். ஆனால், பெண்கள் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு அணியும் நைட்டி பலராலும் கிண்டல் அடிக்கப்படுகிறது. அலுவலக உடையுடனே ஆண்களால் நாள் முழுதும் இருக்க முடியுமா? அப்புறம் பெண்கள் மட்டும் எப்படி நாள் முழுவதும் சேலை அணிந்து கொண்டே இருக்க முடியும்? பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் புடவையின் கொசுவத்தில் வைத்துப் பிணைத்திருக்கிறார்கள் இந்தக் கலாச்சாரக் காவலர்கள். பெண்களைக் கீழ்மைப்படுத்தும் தந்திரம் இது. அந்தக் காலத்தில் நம் அம்மா, பாட்டிகள் எல்லாம் இந்த உடைக்குள் சிக்கிக் கொண்டு மூச்சுத் திணறியிருக்கிறார்கள். சமீபத்தில் என் பெரியம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு டெஸ்ட்டுகள் எல்லாம் புடவையைத் தளர்த்தி செய்தார்கள். அதன்பின் புடவையைக் கட்டும் போது அவர் பின்கொசுவம் வைத்துத்தான் கட்டுவார். எனக்கு அதுபோல் கட்டத் தெரியாமல் அவரே மிகுந்த சிரமப்பட்டுக் கட்டிக் கொண்டார். அதன் பின்னான நாட்களில் என் வற்புறுத்தலால் இலகுவாக இருக்க நைட்டி அணிந்து கொண்டார். பெண்களின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதுகூட அவர்கள் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க வேண்டும் என்று வற்புறுத்தும் புண்ணிய பூமிதான் இது.

எட்டு முழம், ஒன்பது முழம் கொண்ட புடவைகளை அணிந்து கொண்டு, எந்நேரமும் அவற்றைச் சரி செய்து கொண்டு, அந்த உடை விலகி இருக்கிறதா இல்லையா என்பதிலேயே கவனத்தைச் செலுத்திக்கொண்டு இருப்பதால் பெண்களின் நேரம் வீணாகக் கழிகிறது என்பது பெரியாரின் எண்ணம். ஆண்களின் உடை அவர்களுக்குச் செளகரியமாகவும், உடுத்த எளிமையாகவும் அமைந்திருப்பதால் அவர்களால் உடை பற்றிய சிந்தனையின்றி இதர வேலைகளில் தங்கள் கவனத்தைச் செலுத்த முடிகிறது என்பது அவரது வாதம். அதனால் பெண்களும் ஆண்கள் போல எளிமையான உடை அணிய வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். உண்மைதான், அணிவதற்கும், கையாள்வதற்கும் பராமரிப்பதற்கும் ஏற்ற எளிய உடைகள் நிறைய நேரத்தை மிச்சப்படுத்துகின்றன.

பெண்கள் ஆண்களின் உடைகளை அணிந்துகொள்ளும் போது, ஆண்கள் மட்டும் ஏன் பெண்ணின் உடைகளை அணிந்து கொள்ளத் தயங்க வேண்டும்?. ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படத்தில் கதாநாயகன் சாலையில் ரேஸ் விடும் இளைஞனைக் கைது செய்யும்போது ஒரு நைட்டியை மாட்டி இழுத்து வருவார். அதை அந்த இளைஞன் தன்னை அவமானப்படுத்தியதாக எடுத்துக் கொள்வான். அப்போது கதாநாயகனின் தாய் கேட்பார், “உங்க ட்ரெஸ்களை எல்லாம் நாங்க போட்டுக்கும் போது, நீங்க மட்டும் ஏண்டா எங்க ட்ரெஸ்களைப் போடுறதுக்கு அவமானப்படுறீங்க?” என்று. ஆமாங்க.. பொண்ணுங்க பேண்ட், ஷர்ட், டிரவுசர் ஏன் லுங்கிகூட கட்டிக்குறாங்க. ஏன்னா அதெல்லாம் உடுத்துறதுக்கும், வேலை செய்யறதுக்கும் சௌகரியம் என்று. ஆனா, பெண்ணோட ஆடையை ஆண் உடுத்தினா மட்டும் ஏன் சிரிக்கிறோம்? திரைப்படங்களுக்கும் பெண்கள் ஆடையைக் கேவலப்படுத்துவதில் கணிசமான பங்கு உண்டு. தோல்வியடைந்த ஆண்களைப் புடவை கட்டச் சொல்லி அசிங்கப்(?)படுத்துவானாம் வென்றவன். புடவை என்ன அவ்வளவு அருவருப்பான ஆடையா?.

என் தோழி அவள் கணவருடன் வெளியூருக்குச் சென்றிருக்கிறாள். அங்கே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் தங்கியிருந்த அறைக்கு காலி செய்ய வந்திருக்கிறார்கள். அவள் உடை மாற்றிக் கொண்டு வர, அவள் கணவருக்குக் கோபம் வந்துவிட்டதாம். “இப்ப எதுக்கு ட்ரெஸ் மாத்துன? அப்படியே கிளம்பி வர வேண்டியதுதானே?” என்று கடுகடுத்திருக்கிறார். அவள் அந்த உடையின் அசௌகரியங்களை விளக்கியும் அவர் கொஞ்சமும் சமாதானம் ஆகவில்லையாம். அவர் போட்டிருந்த ஆடையுடனே (வெள்ளைச் சட்டை, கால்சட்டை) கிளம்பியதால் அவளையும் அப்படியே வர வற்புறுத்தியிருக்கிறார். இவர்களுக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அழகாக ஆடை அணிந்து கொள்ள வேண்டும். அப்படியே எந்நேரமும் இரு என்றால் யாரால் இருக்க முடியும் என்று புலம்பித் தள்ளினாள் தோழி. ஆண்கள் அவர்களைக் கொண்டுதான் பெண்களையும் சிந்திக்கிறார்கள். பெண்களின் கஷ்டங்களை ஓரிருவரைத் தவிர யாரும் நினைப்பதில்லை. அப்படியே சிந்தித்தாலும் கண்டு கொள்வதில்லை.

ஒல்லியாக இருக்கும் பெண்கள் அணியக்கூடிய ஆடை, பருமனான பெண்களுக்குப் பொருந்தும்/பொருந்தாத ஆடை என்றெல்லாம் ஆடைகளை வகைப்படுத்தி இருக்கிறார்கள். அப்படி எல்லாம் ஏதுமில்லை. நமக்குப் பிடித்த ஆடைகளை நமக்குப் பிடித்த வகையில் நாம் அணிந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்க எல்லாப் பெண்களுக்கும் உரிமை இருக்கிறது. அதில் தலையிடத்தான் எந்த ஆணுக்கும் உரிமையே கிடையாது. ஒழுக்கம் என்பது ஆடைகளில் மட்டும் கிடையாது. அதையும் தாண்டி நமது நடத்தைதான் நம்மைப் பற்றிய தெளிவை அடுத்தவருக்கு உருவாக்கும். பருமனோ ஒல்லியோ நமது உடலை முதலில் நாம்தான் கொண்டாட வேண்டும். எப்படி இருந்தாலும் நம்மை முதலில் நாம்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். எப்போதும் அடுத்தவரின் அங்கீகாரத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கக் கூடாது. அந்த நினைப்பை முதலில் பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமாக இருந்தால் போதும் .சிரித்த முகத்துடன் அணிந்துகொள்ளும் எந்த வகையான ஆடையும் நம்மை அழகாகவே காட்டும்.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.