மூன்று தலைமுறைப் பெண்களின் கதை – 2

ஒருவர் பெயரை உச்சரிக்கும் போதே நம் மனதுக்குள் அப்பெயர் குறித்தான ஒரு பிம்பம் தோன்றும் அல்லது ஒரு உணர்வு மேலிடும். அதுபோல, மாலதி இரத்தினசாமி…. இந்தப் பெயரை உச்சரிக்கும் போதே மென்மையும், திண்மையும் கலந்த பாரதிராஜா பட ஹீரோயின் உருவம் தான் எனக்குத் தோன்றுகிறது.

என் அம்மா  1950 ல் சிவகாசியில் பிறந்து, குலதெய்வமான மாலையம்மனின் நினைவாக  ‘மால சுந்தரி’ என்று பெயர்  சூட்டப்பட்டு, திருமணத்திற்குப் பின் புகுந்த வீட்டாரின் ( அதென்ன சுந்தரி, மந்தரினு டான்ஸ் ஆடறவ பெயர் கணக்கா இருக்கு என்ற கேள்விக்குப்பின், குல விளக்காய்) சுந்தரியைத் தூக்கிவீசிவிட்டு மாலதியானார். இளம் பருவத்தில் மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்தில்  வசதி குறைவாயினும், அன்பும், பாசமும் அளவில்லாமல் கிடைக்க, “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” என ஆடிப் பாடி  வளர்ந்தவர். பள்ளிப் படிப்பின் நடுவிலேயே குடும்பச்சூழல் காரணமாக குடும்பம் தேனிக்கு வர, தேனியில் படிப்பைத் தொடர்ந்தார். சிவகாசியில் இருந்து வெறுங்கையுடன் தேனி வந்த என் தாத்தாவை தேனி அள்ளிக்கொடுத்து, தனக்குள் அணைத்துக் கொண்டது. கீழ் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த என் அம்மா, தனது பதின்ம வயதில் செல்வந்தரின் மகளாக வளர்ந்தார். உடன் பிறந்தோர் எட்டு பேரும் இன்று வரை ‘மாயாண்டி குடும்பத்தார்’ போல பாசக் கொழுந்துகள் தான்.

அந்தக் காலத்திலேயே வாணி ஸ்ரீ  போல ஹேர் ஸ்டைல், சரோஜாதேவி  போல நாகரீக ஆடைகள், பள்ளியில் என் எஸ் எஸ் பயிற்சியாளர், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வீர மங்கையாக தலைமையேற்றுப் பங்கேற்பு என கலக்கியவர். ஆனால், சிறிது காலத்திலேயே என் தாத்தாவை வாரி அணைத்திருந்த  தேனி தன் கைகளை சற்றே  தளரவிட,  வியாபாரம் முற்றிலும் நொடித்துப் போக வறுமை வாசல் வரை வந்து எட்டி பார்த்திருக்கிறது. அந்த சமயத்தில்  என் அம்மாவுக்குத் திருமணம் நடந்தது.

அப்பாவிற்கு தமிழ் நாடு மின்சார வாரியத்தில் அரசு வேலை. திருமணம் முடித்து அப்பா அப்பொழுது  வேலை செய்து கொண்டிருந்த  மாயவரம் செல்கிறார். மீண்டும் வாழ்க்கை லா….லலால லா….தான். அன்றைய 130 ரூபாய் அரசு  சம்பளத்தில் சிக்கனமாக குடும்பம் நடத்தி, என்னையும் ஒரு ஆங்கிலோ இண்டியன் பள்ளியில் படிக்க வைத்து, மிகச் சுதந்திரமாக தோழிகள், அரட்டை, சினிமா என வாழ்க்கை இலகுவாகி இருந்தது. ‘நிம்மதி நிம்மதி எங்கள் சாய்ஸ்’ என்றிருந்த  அந்நியோன்யமான  வாழ்வில் இடி, மின்னல், புயல், சுனாமியாய் இறங்கியது என் அப்பாவின் திடீர் மரணம்.

ஆம், பதினெட்டு வயதில்  தொடங்கிய திருமண வாழ்க்கை, இருபத்தாறாவது வயதில்  முடிந்தபோது, ஏழு வயதில் நானும், பிறந்து 25 நாள் கைக்குழந்தையாக என் தம்பியும் மட்டுமே அவர்கள் திருமண வாழ்வின் மிச்சங்களாக இருந்தோம்.  தேனி, மாயவரம் என்ற  நகர வாழ்க்கையிலிருந்து, என் அப்பாவின் சொந்த ஊரான எம். கல்லுப்பட்டி என்ற மதுரை மாவட்டத்தின் கடைக்கோடி குக்கிராமத்திற்கு தலைகீழாய் ஷிப்ட் ஆகியது வாழ்க்கை. கண்ணைக் கட்டி காட்டில் அல்ல, சுடுகாட்டில் விட்டது போலானது. பெயரென்னவோ ஊரில் ‘ஜமீந்தார் குடும்பம்’ என்ற பெத்த பெயர் தான். அதனாலேயே ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.

வலிய வீடு தேடி வந்த ,  அரசு வேலை “பொம்பளப் புள்ளகளை வேலைக்கு அனுப்பி சாப்பிடணும்னு ஒண்ணும் எங்களுக்கு அவசியமில்லை”, என்ற என் தாத்தாவின் (அப்பாவின் அப்பா) மறுப்பினால், கைநழுவிப் போனது. பொதுவாக, ஒரு கிராமத்தில் கணவனை இழந்த பெண்ணை இந்த சமூகம் நாற்பது வருடங்களுக்கு முன் என்ன விதமான மரியாதை செய்து எப்படி நடத்தியதோ, இம்மி பிசகாமல் என் அம்மாவையும் அப்படியே நடத்தியது .  அதை விவரிப்பது ரொம்ப ட்ராமடிக் ஆகி இந்தக் கட்டுரை ஒரு அழுவாச்சி காவியமாவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் உங்கள் கற்பனைக்கே விட்டு விட்டு , ஸ்கிப் செய்து விடலாம். 

என்ன சாப்பிட வேண்டும், எப்படி உடுத்த வேண்டும், எங்கு நிற்க வேண்டும், எப்பொழுது வாசலுக்கு வர வேண்டும், எப்படி பேச வேண்டும், யாரிடம் பேச வெண்டும், யாரிடம் பேசக்கூடாது, என மிகப் பெரிய பட்டியலுடன் ஊரும், உறவும் எந்த நேரமும் தன் கண்காணிப்பிலேயே அம்மாவை வைத்திருந்தது.   அத்தனையும் பொறுத்துக் கொண்டதற்குக் காரணம், இரண்டு குழந்தைகள். ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்தார். பிள்ளைகளை படிக்க வைத்தே தீருவேன் என்பதில். படிப்பிலும், ஒழுக்கத்திலும்   ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஊ…ஸ்ட்ரிக்ட் ஊ ஸ்ட்ரிக்ட் ஊ தான். நானோ, தம்பியோ ஏதாவது தப்பு செய்தால் பாவ மன்னிப்போ, கட்டிப்பிடி வைத்தியமோ கிடையாது, பளார்…பளார்…அடி தடி வைத்தியம் தான். கிட்டத் தட்ட எட்டு வருடங்கள்……மிக மிக அத்தியாவசியமான நிகழ்வுகள் தவிர வீட்டை விட்டு வெளியே வந்ததே இல்லை. அப்படியே வெளியே வருவதாக இருந்தாலும் இருட்டிய பிறகே வெளியே வர வேண்டும்  என்பது போன்ற கட்டுப்பாடுகள் இன்றைய தலைமுறையினருக்கு வினோதமான செய்தியாக இருக்கலாம், ஆனால் அத்தனையும் உண்மை. அதையும் ‘டேக் இட் ஈஸி பாலிசியாக’ ஏற்றுக் கொண்டார். 

தான் வீட்டிற்குள் அடைந்து கிடந்தாலும், நூலகத்தின் வழியாக புது உலகை எனக்கு அறிமுகப் படுத்தினார். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டி என எதையும் விட்டு வைக்க விடமாட்டார். அவரது கருத்துகளை என் பேச்சின் வழியே, என் எழுத்தின் வழியே கடத்தி ஆசுவாசப் படுத்திக்கொள்வார். பாரதியும், பாரதி தாசனும் வீரா வேசமாய் என்வழியே மேடைகளில் பொங்குவதைக் கண்டு மகிழ்ச்சியடைவார். பள்ளியில் நாடகம், நடனம், விளையாட்டுப் போட்டிகள் எல்லாவற்றிலும் நாங்கள் கலந்துகொண்டே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

இப்படியாக நத்தையாய் ஊர்ந்து சென்ற எட்டாம் ஆண்டின் முடிவில், நான் பத்தாம் வகுப்பு முடித்த சூழலில், “பொம்பளப் புள்ள பத்தாவதுக்கு மேல படிச்சா நம்ம சொல்லுப் பேச்சு கேட்குமா” என குடும்ப நாட்டாமைகள் எழுதிய தீர்ப்பை மாற்றி எழுத  விரும்பினார். பூ ஒன்று புயலாகிய நாட்கள் அவை. அது வரை மிகப் பொறுமையாக இருந்தவர், என்னையும், என் தம்பியையும் அழைத்துக்கொண்டு வீடு வாசல் , தோட்டம், சொத்துகள் என  அத்தனையும் உதறிவிட்டு தேனி வந்தார். எங்கள் தாய் மாமா வீட்டில் சில வருடங்கள்…பிறகு தேனியே எங்கள் நிரந்திர  விலாசமானது. 

எங்கள்  விருப்பப்படி நாங்கள் நினைத்ததையெல்லாம் படிக்க அனுமதித்தார்.  என் அப்பா இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருப்போமோ, நன்றாக படிக்க வைத்திருப்பாரோ என நானும் என் தம்பியும் நினைக்க முடியாத அளவு எங்களின் தந்தையுமானார். தையல் வகுப்பு நடத்தினார். ஃபேன்ஸி ஸ்டோர், ஜவுளி வியாபாரம், மருத்துவமனையில் பணி என தன்னால் முடிந்ததையெல்லாம் செய்தார். இருவரையும் படிக்க வைத்து , அரசுப் பணியில் அமர்த்திய பிறகே அமைதியானார். அடுத்து, பணியின் பொருட்டு நான் ஊர் ஊராய் சுற்ற, என் பிள்ளைகளுக்கும் தாயானார். 

இன்றும் என்னை, “அடுத்து ஏதும் டிகிரி படிக்கலியா?, அடுத்து என்ன எழுதப் போற? ஏன் சும்மாவே இருக்க? என தூண்டித் தூண்டியே என் அடுத்த இலக்கை நோக்கி என்னை நகர்த்திக் கொண்டே இருக்கிறார். கடந்த வாரம் பேசிக் கொண்டிருக்கும் போது, “ உன்னோட அடுக்களை டூ ஐ நா’ புத்தகமாக வரும் போது, ‘வாஷிங்டனில் திருமணம்’ அளவுக்கு பேசப்படணும்” என டார்கெட் கொடுத்து  அதிரவிட்டார். ( என்னடா இது ‘சாவி’ க்கு வந்த சோதனை??) இப்படித்தான்  அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்து என்னை எப்போதும் அலர்ட்டாகவே வைத்திருப்பார்.  

தாய்ப் பாசம் எப்போதும் அன்பை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை, பாதுகாப்பற்ற சமூகத்தில், நிர்க்கதியாய் நிற்கும் சூழலில் பிள்ளைகளிடம்  காட்டும் கண்டிப்பிற்குப் பின்னால் இருப்பதும் கூட அன்பின் மிகுதி தான் என்பதே அவர்  செய்கைகளிலிருந்து நான் புரிந்து கொண்ட செய்தி.    

நான் இன்று பெண்ணியம் சார்ந்த கருத்துக்களில் ஈடுபாடு உடையவளாக இருப்பதற்கு என் கண்முன் கடந்து சென்ற அம்மாவின் வாழ்க்கையும், அவர் அறிமுகப்படுத்திய வாசிப்புப் பழக்கமும்  காரணமாக இருக்கலாம்.  

வாழ்க்கை எனும் பிக்பாஸ் அவருக்கு கொடுத்த டாஸ்க்குகளை மிகச் சிறப்பாகவே கடந்து பெஸ்ட் சர்வைவராகவே மிளிர்ந்து கொண்டிருக்கிறார்.  “இந்த வாரம்  Her Storiesக்கு எழுதி அனுப்பிட்டியா இல்லியா, ஏன் லேட்டு??” அதோ…. அரட்டியபடியே  வருகிறார் என் தோழி… இல்லையில்லை  மந்திரச் சிறகுகள் செருகிய என் தேவதை!

தொடரும்…

தொடரின் முதல் பகுதியை இங்கே வாசிக்கலாம்:

படைப்பு:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது.