மகப்பேறு மருத்துவர் அகல்யா உதிரமாக வழிந்தோடியிருந்த அப்படுக்கையின் முனையைப் பார்த்தாள். பின் பெருமூச்சுடன் அந்த பெண்ணின் முகத்தைக் கண்டாள். அம்முகம் பேரமைதியில் ஆழ்ந்திருந்தது.
இறுதியாக தலையையுயர்த்தி கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “டைம் ஆப் டெத் 2: 49” என்றபடி ரத்தம் படிந்திருந்த தன் கையுறைகளைக் கழற்றினாள்.
அவளுடைய மருத்துவப் பணியில் பார்த்த மரணங்களில் இது முற்றிலும் புதிது. இது இயற்கை மரணமோ அல்லது விபத்தோ இல்லை. ஒரு வகையில் தற்கொலை என்றே தோன்றியது.
அடிவயிற்றிலிருந்து ஓர் இனம் புரியாத வலி கிளம்பி அகல்யாவின் உடல் முழுவதும் பரவியது.
காலையிலிருந்த ஓய்வே இல்லாத ஓட்டம். வரிசையாக மூன்று பிரசவங்கள். எந்த பிரச்னையும் இல்லாமல் எல்லாமே நல்லபடியாகவே முடிந்தது என்று திருப்தியடைந்த சமயத்தில்தான், நடுநிசியில் ஆட்டோவில் இந்தப் பெண் வந்து இறங்கினாள். கூடவே இரண்டு வளர்ந்த பிள்ளைகள்.
மேம்படுத்தப்பட்ட அந்த ஆரம்பச் சுகாதார நிலையத்தில் ஆங்காங்கே குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. சுகாதாரப் பணியாளர் சரஸ்வதி தரையில் சாயப் போகவும், ஆட்டோ சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.
தூரத்திலிருந்து பார்க்கும் போதே கர்ப்பிணி என்று தெரிந்துவிட, உடனடியாக எழுந்து ஓடினார்.
“நல்ல வேளை டாக்டரம்மா இன்னும் கிளம்பல, நான் போய் கூட்டியாரேன்…”
அதேசமயம் அங்கே வந்துவிட்ட தலைமை செவலியர் தேவிகா, “என்ன? டெலிவரி பெயினா..?” என்று விசாரித்துக் கொண்டே நெருங்கி வந்தாள்.
‘இந்த பெண் எந்தவிதப் பரிசோதனைக்கும் வந்தது போலவே தெரியவில்லை. ஆனால் எங்கேயோ பார்த்திருக்கிறோம்’ என்று மட்டும் நினைத்துக் கொண்டாள். எதேச்சையாக அருகே நின்ற சின்ன பெண்ணின் கையில் துணிப்பொதிக்குள் தெரிந்த பச்சிளம் குழந்தையைப் பார்த்து, அதிர்ந்தாள். அந்த நடுவயதுப் பெண்ணின் கால் வழியாக ரத்தம் வழிந்தபடி இருக்க, தன் யோசனைகளை எல்லாம் ஓரமாகத் தள்ளி வைத்துவிட்டு, அழைத்துச் சென்று சோதனை அறையில் படுக்க வைத்தாள்.
“குழந்தை எங்கே பொறந்தது? எப்படி?” என்று அந்தப் பிள்ளைகளிடம் விசாரிக்க, அழுது கொண்டே நடந்ததை அவர்கள் விவரித்தனர்.
அதற்குள் உள்ளே சென்ற சரஸ்வதி, அகல்யாவிடம் தகவல் சொல்லி இருந்தார். அவரை வார்டில் இருந்து பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு சோதனை அறையை நோக்கி விரைந்தாள் அகல்யா.
நடந்தவற்றைக் கேட்டுப் பதறிப் போயிருந்த தேவிகா, பரிசோதனை அறை வாசலிலேயே அகல்யாவைப் பார்த்ததும் அவசர அவசரமாக அனைத்தையும் ஒப்புவித்தாள். அதிர்ச்சியடையக் கூட அவளுக்கு நேரமிருக்கவில்லை.
“இதுக்கு முன்னாடி இவங்க செக் அப் எதுக்குமே வரலையா?”
“இல்ல மேடம்” என்ற அவளுக்கு அப்போதுதான் அந்த நாள் நினைவுக்கு வந்தது.
“இல்ல மேடம்… வந்திருந்தாங்க, ஆபார்ஷன் பண்ணனும்னு சொன்னாங்க. நான் என்ன ஏதுன்னு விவரம் கேட்குறதுக்குள்ள ஆளைக் காணல” தயங்கித் தயங்கிச் சொன்னாள்.
“நீ ஏன் முன்னாடியே என்கிட்ட இந்த விவரத்தை சொல்லலை?”
“அது… எந்த விவரமும் தெரியாம என்ன சொல்றதுன்னு…”
“சரி பார்க்கலாம் வா”
உள்ளே செல்வதற்கு முன் அகல்யாவின் விழிகள் வாசலில் பரிதாபமாக நின்றுகொண்டிருந்த பிள்ளைகளைப் பார்த்தன.
அச்சின்னப் பெண், தன் வயதிற்கு மீறிய பாரமாக, பிறந்த குழந்தை ஒன்றை தாங்கிப் பிடித்தபடி இருந்தாள். அவள் கண்கள் ஏற்கனவே அழுது முடித்துவிட்டடிருந்தன.
இனி அதில் அழ ஒன்றுமில்லை என்பது போல ஒரு நிச்சலனம்.
“ரெண்டு பேருக்கும் என்ன வயசு?”
“எனக்கு பதினாறு, தம்பிக்கு பதினைஞ்சு…”
“சரி உங்க அப்பா எங்க? அவருக்கு தகவல் சொல்லிடீங்களா?”
அந்த சிறுவன் அழுகையை நிறுத்திவிட்டு அக்காவைப் பார்க்க, அவள் ஆமோதித்துத் தலையசைத்தாள்.
“எதுக்கும் நீ நம்பர் வாங்கி அவங்க அப்பாவுக்கு இன்பார்ம் பண்ணு…” என்று தேவிகாவிடம் அகல்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“அம்மாவை காப்பாத்திடுவீங்க இல்ல, டாக்டர்?” என்று கேட்டாள் அந்த சின்னப் பெண். அவளது கேள்விக்கு நேரடியாக ஆம், இல்லை என்று அகல்யாவால் பதில் சொல்ல முடியவில்லை.
“முயற்சி செய்றோம் மா” என்று அவளிடம் சொன்ன அகல்யா, “நீ குழந்தையை வாங்கிட்டு வா” என்று தேவிகாவிடம் சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தாள். கையுறையை அணிந்தபடி அப்பெண்ணின் உடலைப் பரிசோதித்தாள்.
“ரத்தம் நிறைய போயிருக்கு, முதல இவங்க என்ன பிளட் க்ரூப்னு தெரியணும்”
“எதுக்கு மேடம் வம்பு, நம்ம பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டுடுவோம். அவங்க பார்த்துக்கட்டும்” என்றாள் தேவிகா.
“என்ன பேசுற நீ? ஆஸ்பத்திரி பக்கத்துலயா இருக்கு? இன்னும் அரைமணி நேரம் ஆகும் அங்க போய்ச் சேர்றதுக்கு…”
எதையாவது செய்து அந்தப் பெண்ணின் உயிரைப் பிடித்து வைக்க முடியுமா என்று அகல்யா போராடிக் கொண்டிருக்க, தேவிகாவின் பதற்றம் தீரவே இல்லை. அவர்கள் உதவிக்கு அங்கு யாருமே இல்லை. சற்று முன்புதான் செவிலியர் சங்கீதாவும் கிளம்பிச் சென்றிருந்தாள்.
சுற்றுவட்டாரத்தில் உள்ள முப்பது கிராம மக்களுக்காக, மேம்படுத்தப்பட்ட இந்த அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. ஓரளவு எல்லா வசதிகளும் இங்கே உண்டு. குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருக்கலைப்பு செய்வதற்கான அறுவை சிகிச்சை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
அகல்யா வந்து சேர்ந்தபின் கடந்த இரண்டு வருடமும் சிறந்த மகப்பேறு மையம் என்ற அரசு விருதையும் அவர்கள் பெற்றிருந்தனர். ஆனால் அடுத்தடுத்த மாதங்களில், மருத்துவ ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. அதுவும் கடந்த வருடத்தில் வேலை மாற்றல், வேலையை விடுவது என்று வரிசையாக ஆள்கள் குறைந்து, தற்சமயம் இரண்டு செவிலியர்களும் அவளும் மட்டும்தான் எஞ்சி இருக்கிறார்கள்.
ஆள்கள் இல்லாத காரணத்தால் கொஞ்சம் சிக்கலான கேஸ் என்றால் பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துவிடுகிறார்கள். ஆனால் அதுவோ அரைமணி நேரத் தொலைவில் இருந்தது. இதனால் சில உயிரிழப்புகளும் நேர்ந்திருக்கின்றன. மாவட்ட நிர்வாகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
‘மற்ற மரணங்கள் பிரச்னை இல்லை. ஆனால் பிரசவத்தில் நிகழும் மரணங்கள் அப்படி இல்லை. அப்பெண்ணின் இறப்பு எப்படி நிகழ்ந்தது போன்ற வாய்மொழியான ‘verbal autopsy’ விவரிப்புகள் தொடங்கி நசநசவென்று நிறையக் கேள்விகள் செயல்முறைகள் என்று உயிரை எடுத்து விடுவார்களே?’ என்று யோசித்து தேவிகா பயந்து கொண்டிருந்தாள். ஆனால் அகல்யா இது எதைப் பற்றியும் யோசிக்கவில்லை.
“அம்மாவை காப்பாத்திடுவீங்க இல்ல, டாக்டர்?” என்ற அந்தச் சிறுமியின் கேள்வி மட்டுமே அவள் காதில் திரும்பத் திரும்ப ஒலித்தது.
ரத்தம் நிறைய போய்விட்டதில் என்ன போராடியும் அகல்யாவால் அப்பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

அயர்ந்து போய் நின்ற அகல்யா, தொட்டிலில் கிடத்தப்பட்ட குழந்தையைப் பார்த்தாள். அந்த நொடி அவள் மூளைக்குள் ஒரு எண்ணம் உதித்தது.
“குழந்தை பிறந்த டைம், 2. 23னு ரெஜிஸ்டர்ல எழுதிட்டு, சைல்ட் ஸ்பெஷலிஸ்ட் மோகனுக்கு இன்பார்ம் பண்ணிடு, தேவிகா…”
“அது எப்படி மேடம்?”
“நான் சொன்ன மாதிரி செய் தேவிகா, என்ன பிரச்னை வந்தாலும், நான் பார்த்துக்கிறேன்” என்றவள் வெளியே சென்று அந்த பிள்ளைகள் இருவரையும் தன் அறைக்கு அழைத்துச் சென்று பேசினாள்.
ஆரம்பத்தில் அமைதியாகக் கேட்டவர்கள், பின்னர் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார்கள்.
அவர்கள் அழுது அடங்கிய பின்னர், “யார் கேட்டாலும் நான் சொன்ன மாதிரிதான் சொல்லணும், உங்க அப்பா கேட்டாலும். புரிஞ்சுதா?” என, இருவரும் இசைவாகத் தலையாட்டினார்கள்.
அவர்கள் தோளில் தட்டிக் கொடுத்த அகல்யா, அடுத்த நாள் விடியலில் தான் கட்டமைத்த பொய்யைச் சொல்லி எல்லோரையும் சமாளித்துவிட்டாள்.
தேவிகாவிற்குத்தான் உள்ளூர உதறலெடுத்தது. இது எத்தனை பெரிய சிக்கலில் கொண்டு விடும் என்று தெரிந்தும் அகல்யா இதைச் செய்யத் துணிந்திருக்கிறாள்.
தொடரும்…
செயற்கை நுண்ணறிவு படங்கள்: மோனிஷா
படைப்பாளர்

மோனிஷா
தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இணையத்தில் 27 நாவல்களை இதுவரை எழுதியுள்ளார். அவற்றில் இருபது நாவல்கள், புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பெண்ணியம், சூழலியல் விழிப்புணர்வு இரண்டும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன. சிறார் எழுத்திலும் தற்போது ஈடுபட்டுள்ளார். இவரின் ‘ஒரே ஒரு காட்டில்’ சிறார் நூலை ஹெர் ஸ்டோரீஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.