அவர்கள் ஊர் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு பக்கத்து வீட்டு மோகனின் ஆட்டோவில் வந்து இறங்கினாள் ரேகா. அவள் இறங்கி நின்ற மறுகணமே பனிக்குடம் உடைந்துவிட்டது. அதுவரைக்கும் தாக்குப் பிடித்ததே பெரிய விஷயம்தான்.
“எமர்ஜென்சினா உடனே கூப்பிடுன்னு சொல்லித்தான் அனுப்பிச்சேன், பனிக்குடம் ஒடையுற வரை என்ன பண்ணிட்டு இருந்த?” என்று செவிலியர் தேவிகா திட்டிக் கொண்டே அவளை மகப்பேறு அறைக்கு அழைத்துச் சென்றாள்.
“இல்லக்கா ஒரு மாசம் இருக்கே, அதான் பொய் வலியா இருக்குமோன்னு…” என வலியுடன் முனகினாள் ரேகா.
“அது சரி, உன் புருசன்காரனுக்கு சொன்னியா இல்லையா?”
“போன் பண்ணேன் க்கா, எடுக்கல”
“நெற மாச புள்ளதாச்சி போன் பண்ணா எடுக்காம அப்படி என்ன கழட்டுற வேலை பார்க்குறானாம்”
“அவரு லோடு வண்டி ஓட்டுறாரு, வண்டி ஓட்டும் போது போனை எடுக்க மாட்டாரு”
“சரி சரி நல்லா படுத்துக்கோ” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள் தேவிகா. சில நிமிடங்கள் தாண்டியும் திரும்ப வந்தபாடில்லை.
கால்களுக்கு இடையில் பனிக்குட நீர் வழிந்தோடியதில் துணி நனைந்துவிட்டது. வரும் போதே விட்டு விட்டு வலி. இப்போது அந்த வலி மெது மெதுவாக அதிகரித்துக் கொண்டிருந்தது.
மலர்விழி பிறந்த போது இப்படி இல்லை. அவளுக்கு லேசாக வலி வந்ததுமே மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துவிட்டாள். பனிக்குடத்தைக்கூட மருத்துவர்தான் உடைத்துவிட்டார்.
மீண்டும் உள்ளே வந்த தேவிகா அவள் படுத்திருந்த நிலையைப் பார்த்து, “என்ன… புதுசாவா புள்ள பெக்குற… கால விரிச்சு வைய்யி” என்ற சிடுசிடுத்தாள்.
அவள் சொன்னது போலப் படுத்துக் கொண்ட ரேகா, “டாக்டர் வரலையா க்கா” என்று கேட்டு அதற்கு வேறு வாங்கி கட்டிக் கொண்டாள்.
“இங்க என்ன நீ மட்டும்தான் ஒரே பேசன்ட்டா, எவ்வளவு பேர் இருக்காங்க, அதுவும் செவ்வாய்கிழமை வேற, செக் அப்புக்கு எவ்வளவு பெரிய கூட்டம் வந்திருக்கும் தெரியுமா? அவங்க ஒருத்தர்தான் எல்லாத்தையும் பார்க்கணும், படு… நல்லா வலி வரட்டும், வருவாய்ங்க”
இதற்கு மேல் நல்ல வலியா? இப்பொழுதே முதுகுத் தண்டை யாரோ உடைப்பது போன்ற வலி. தாங்க முடியவில்லை. ரேகாவிற்கு கத்தி அழ வேண்டும் போலிருந்தது. ஆனால் அதற்கும் அந்த செவிலியப் பெண் திட்டுவாளோ என்று பல்லைக் கடித்து வலியைப் பொறுத்துக் கொண்டாள். இப்படியே சில நிமிடங்கள் ஓடியது.
பிறகு கையுறையுடன் உள்ளே வந்தாள் அகல்யா.
“ஒன்னும் பயப்பட வேண்டாம், நல்லபடியா குழந்தை பொறக்கும்”என்று ரேகாவின் கை பிடித்து நம்பிக்கை கொடுத்தாள். அத்தனை வலி வேதனையிலும் மருத்துவரின் அந்தக் கரிசனமான வார்த்தைகள் ரேகாவை ஆசுவாசப்படுத்தி.
சட்டென்று அம்மாவின் நினைவு வந்தது. மலர்விழியை வயிற்றில் வைத்திருந்த போது உச்சந்தலையைத் தொட்டுப் பார்த்தவர், “இது நிச்சயம் பிரசவ வலிதான்” என்றார்.
ஆனால் இன்று அவர் தன்னுடன் இல்லை என்பதை நினைக்கும் போதே அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.
அப்போது உண்டான வலியில் ரேகா, “அம்ம்ம்ம்மா… ம்ம்ம்ம்” என்று வாய் விட்டுக் கதற, மறுபக்கம் அகல்யா, “இன்னும் கொஞ்சம்தான், தலை வந்திருச்சு, நல்லா வாயை திறந்து மூச்சு விட்டு முக்கு” என்றாள். ரேகாவின் உடல் ஓய்ந்து விட்டது. இனி முடியாது. முடியவே முடியாது என்று தோன்றியது.
அருகில், ரேகாவின் வயிற்றை அழுத்தி உதவி கொண்டிருந்த தேவிகா, “முக்கு… முக்கு… முக்கு…” என்று கத்தியது மட்டுமே அவளுக்கு கேட்டது .
“ரேகா ரேகா… அவ்வளவுதான்” என்ற அகல்யாவின் குரல் தூரமாக எங்கோ ஒலித்தது. குழந்தையின் தலை இலகுவாக வெளியில் வர அவளின் யோனி கத்தியால் கிழிக்கப்பட்டது. பிரசவ வலியை ஒப்பிடும்போது இப்படி தசை கிழிபடுவது எல்லாம் ஒரு பெரிய வலியாகவே தெரியவில்லை.
குழந்தை வெளியில் வந்த நொடி, அப்படி ஒரு ஆசுவாசம் உண்டானது. ‘என்ன குழந்தை’ என்று ரேகா ஆர்வத்துடன் விழிகளை விரித்தாள்.
“பெண் குழந்தை” என்றபடி அவள் நெஞ்சின் மீது கிடத்தினாள் அகல்யா. ரேகாவின் முகம் சின்னதாகிவிட்டது.
‘பொம்பள புள்ளையா’ சட்டென்று மனதில் பரவிய ஏமாற்றவுணர்வு அவள் முகத்திலும் அப்பட்டமாக பிரதிபலித்தது.
அதனைக் கண்டுகொண்ட அகல்யா, “குழந்தை ரொம்ப அழகா இருக்கு, பாருங்க” என்றபடி தன் வேலையைத் தொடர்ந்தாள்.

அந்தப் பிஞ்சுக் குழந்தையின் ஸ்பரிசம் அவளின் ஏமாற்றத்தையும் மீறி தாய்மை உணர்வை சுரக்கச் செய்ய. அப்படியே தன் நெஞ்சோடு பொத்திக் கொண்டாள்.
அகல்யா கைகளைத் துண்டால் துடைத்துவிட்டு வந்து தன் அறையின் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.
பின்னோடு வந்த தேவிகா, “நான் உண்மையிலேயே ரொம்ப பயந்துட்டேன் மேடம்” என்றாள்.
“பயப்பட என்ன இருக்கு, இது ஒன்னும் அவ்வளவு காம்பிளிக்கேஷனான கேஸ் இல்லையே”
“ஆமாம் மேடம், ஆனா அந்த பொண்ணு ஆட்டோவில வந்து இறங்குனதுமே பனிக்குடம் உடைஞ்சுருச்சு. எனக்கு பக்குன்னு ஆகிடுச்சு. போன வாரம் வந்துச்சே, அந்த பொம்பள கேஸ் மாதிரி ஆகிடுமோனு பயந்துட்டேன்”
“நீ அதை பத்தியே நினைச்சுட்டு இருக்க”
“பயமா இருக்கு மேடம், அடுத்த வாரம் கலெக்டர் ஆபிஸ் வேற போகணும், என்ன கேட்பாங்களோனு, அதுவும் உண்மையைச் சொன்னாலே சில நேரங்களில் எடுத்துக்க மாட்டாங்க, நம்ம பொய் வேற” என்று பயத்தில் புலம்பினாள் தேவிகா.
“ப்ச்… தேவி போதும், நீ நினைக்குற மாதிரி ஒன்னும் ஆகாது. இறந்து போன லேடிக்கு ஏற்கனவே நாற்பது வயசு, ஆல்ரெடி ரிஸ்க் பிரக்னன்ஸி, ஸோ இதுல நம்ம தப்பு எதுவும் இல்ல”
“இல்லைதான், ஆனாலும் நம்ம நடந்ததை சொல்லிட்டா எந்த பிரச்னையும் இல்லதானே? அப்புறம் பொய் சொல்லி நீங்களே வம்பை ஏன் இழுத்து விட்டுக்கணும்?”
“இங்க எது பொய் எது உண்மைங்குறது எல்லாம் நம்ம சொல்றதுலதான் இருக்கு. அதுவும் இல்லாம உன்னையும் என்னையும் தவிர இந்த உண்மை யாருக்கும் தெரியாது”
“அந்தப் பசங்களுக்கு தெரியும் இல்ல, அவங்க சொல்லிட்டா?”
“அவங்க எல்லாம் சொல்ல மாட்டாங்க, நீ எதையும் உளராம இருந்தா சரி”
“நான் உளற மாட்டேன், ஆனா கலெக்டர் ஏதாவது எடக்கு மடக்கா கேட்டா”
“கேட்டா, நான் பார்த்துக்கிறேன், நீ போய் அந்த ரேகாவோட புருசன் வந்துட்டானா பாரு” என்று தேவிகாவை துரத்திவிட, ‘என்ன நடக்கப் போகுதோ’ என்று புலம்பிக் கொண்டே வெளியேறினாள்.
‘கலெக்டரைக்கூட சமாளிச்சுடலாம் போல, இவளை?’ என்று அகல்யா தலையைப் பிடித்துக் கொண்டு குனிய, மேசையிலிருந்த இறந்த பெண்ணின் தகவல் அடங்கிய கோப்பு வைக்கப்பட்டிருந்ததை கவனித்தாள். விசாரணைக் குழுவிடம் அவள் சார்பாகக் கொடுக்கப்பட்ட அறிக்கை அது.
அதனை மீண்டும் திறந்து சோதித்துப் பார்க்க, எல்லாம் சரியாகத்தான் இருந்தது. எதுவும் பிரச்னை வருமென்று அவளுக்குத் தோன்றவில்லை. ஆனால் இதில் அந்தப் பெண்ணை பற்றிச் சொல்லப்படாத செய்திகளும் உண்டு. மருத்துவ அறிக்கைகளில் புரிய வைக்க முடியாத சிக்கல்கள் அவை.
அந்த நாற்பது வயது பெண்ணுக்கு ஏற்கனவே மூன்று பிள்ளைகள். இதில், மூத்த மகளுக்குத் திருமணம் ஏற்பாடு ஆகியிருந்த சமயத்தில் நாள் தள்ளி போனதை இவர் பெரிய விஷயமாகக் கருதவில்லை.
மாதவிடாய் முற்றிலுமாக நின்று போனதென எண்ணி கருத்தரித்ததையே அறியாமல் இருந்துள்ளார்.
ஆனால் குழந்தையின் அசைவை உணர்ந்த தருணத்தில் காலம் கடந்திருந்தது. ‘சுற்றத்தார் என்ன சொல்வார்கள்? மாப்பிள்ளை குடும்பத்தில் என்ன நினைத்துக் கொள்வார்கள்? மற்ற பிள்ளைகள் தன்னை எப்படிப் பார்ப்பார்கள்?’ என்று பயந்து நொந்து யாரிடமும் சொல்ல முடியாமல் தனக்குள்ளாகவே புழுங்கி இருக்கிறார்.
ஆனால் ஏன் அவர் தன் கணவனிடம் கூட பகிரவில்லை? இந்தக் கேள்விக்கு அகல்யாவிடம் பதிலில்லை. பதில் சொல்ல வேண்டிய அப்பெண் உயிருடன் இல்லை.
வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் முடிவு கிட்டத்தட்ட ஒரு தற்கொலை முடிவுதான். நாற்பதுகளின் மெனோபாஸ் அழுத்தம் மற்றும் பிரசவத்தின் போது உண்டாகும் ஹார்மோன் குளறுபடிகள் என்று அவரை எதுவும் தெளிவாக யோசிக்க விட்டிருக்காது.
இதில் தாயின் பிரசவத்தை அந்தப் பிள்ளைகள் பார்த்திருப்பது இன்னும் கொடுமை. இந்த உண்மை வெளியில் தெரிந்தால், ஊடகங்கள் இதனைத் தலைப்புச் செய்தியாக மாற்றி அந்த குடும்பத்தை மன உளைச்சலில் தள்ளுவார்கள். முகநூல் முற்போக்குவாதிகள் ஆளுக்கொரு விதமாகக் கருத்து சொல்லி, மரித்த அந்தப் பெண்ணை மீண்டும் மீண்டும் கூறு போடுவார்கள்.
பல சங்கடங்களிலிருந்து நம்மை ஒரு பொய் காப்பாற்றுமேயானால் அதனைச் சொல்வதில் தவறில்லை. தாயை இழந்த துக்கத்துடன் சேர்த்து இந்த மன அழுத்தமும் அவர்களுக்கு வேண்டாமென்று அகல்யா எண்ணினாள்.
தொடரும்…
செயற்கை நுண்ணறிவு படங்கள்: மோனிஷா
படைப்பாளர்

மோனிஷா
தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இணையத்தில் 27 நாவல்களை இதுவரை எழுதியுள்ளார். அவற்றில் இருபது நாவல்கள், புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பெண்ணியம், சூழலியல் விழிப்புணர்வு இரண்டும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன. சிறார் எழுத்திலும் தற்போது ஈடுபட்டுள்ளார். இவரின் ‘ஒரே ஒரு காட்டில்’ சிறார் நூலை ஹெர் ஸ்டோரீஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.