இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க ராஜா அண்ணன், தனது அம்மாவின் அம்மா (நல்லம்மை) குறித்துச் சொன்னவை. அவற்றை நான் அப்படியே கொடுத்திருக்கிறேன். 1900களின் முற்பகுதியில் ஆறுபுளி ஊரில் பிறந்து கள்ளிகுளம் ஊரைச் சார்ந்தவரைத் திருமணம் செய்து, தனது வாழ்வைத் தொடங்கிய ஒரு பெண்ணின் கதை இது.
பொதுவாகவே ஊரில், கடைக்காரி, பஞ்சுகடைக்காரி, கடலைக்காரி இப்படிப் பல காரிகள் உண்டு. அப்படி ஒரு காரி தான் இந்தப் பாட்டி. பெயர், பிதலியம்மாள். அரிதான பெயர். பிதலி என்றால் பசும்புல் என நினைக்கிறேன். பெயர்க்காரணம் தெரியவில்லை. செய்த தொழில், நூல் வணிகம்.
அன்றைய காலகட்டத்தில் பஞ்சை உடைத்து எடுக்கும் வேலை, உடைத்து எடுத்த பஞ்சை வெட்டும் வேலை, பின் பட்டையாக மாற்றும் வேலை, கயிறு போலத் திரிக்கும் வேலை அதை நூலாக நூற்கும் வேலை எனப் பல நெசவு தொடர்பான வேலைகள் இருந்திருக்கின்றன. ஊரில் பஞ்சுக்கடைகள் இதற்கென இருந்திருக்கின்றன. பெண்கள் பஞ்சுக்கடைகளை நடத்தியிருக்கிறார்கள்.
கள்ளிகுளம் ஊரின் அருகாமை ஊர்களான மடப்புரம், மகிழ்ச்சிபுரம், வள்ளியம்மாள்புரம், ஓட்டக்காரன், அருளானந்தபுரம், ஓட்டக்காரன் குடியிருப்பு போன்ற ஊர்களின் முதன்மைத் தொழிலாகக் கைத்தறி நெசவு இருந்தது. அவர்கள் நூல் வாங்கிச் சென்று அதைத் துணியாக மாற்றியிருக்கிறார்கள். அப்படியான ஒரு கடை தான் பாட்டி வைத்திருந்திருக்கிறார்கள்.
இந்த ஊர்களில் அருளானந்தபுரம் மட்டும் சென்றிருக்கிறேன். மிக அழகிய சிறிய ஊர். அகலமான, மரங்கள் கொண்ட தெருக்கள். மரநிழலில் நின்று பாவு கட்டும் மக்கள் என மிகவும் உயிரோட்டம் கொண்ட ஊர் அது. அனைவரின் வீட்டிலும் தறி ஆடும். குடும்பமே இணைந்து தறி ஓட்டுவார்கள். வருமானம் மிகவும் குறைவு. நெய்த துணிகளை ஒரு தாத்தா விற்பனை செய்வார். வேறு கடைகளுக்குப் போடுவார்களா எனத் தெரியவில்லை. அருள்தந்தை குருசந்தோணி, அருளானந்தபுரம், ஓட்டக்காரன் குடியிருப்பு ஊர்களில் (இரண்டும் ஒரே ஊர் தான். இந்துக்கள் வாழ்விடத்திற்கு ஒரு பெயர், கிறிஸ்தவர் வாழ்விடத்திற்கு ஒரு பெயர்) நூல் ஆலையை நிறுவி அம்மக்கள் வாழ்வாதாரம் உயர வழி வகை செய்தார். அருள்தந்தை ஸ்தனிஸ்லாஸ் பாண்டியன் ஊர் முகப்பில் ஒரு தறிக் கூடம் அமைத்துக் கொடுத்தார்.
கல்வி தான் உயர்வைத் தரும் என்பதை நம்பிய அந்த ஊர் மக்கள் தங்கள் பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைத்தனர். அங்கு ஒரு ஈராசிரியர் தொடக்கப்பள்ளி மட்டுமே உண்டு. ஐந்தாம் வகுப்பிற்குப் பின் நடந்து கள்ளிகுளம் வர வேண்டும். ஆனாலும் சிரமம், வறுமை என எதுவும் பார்க்காமல், படித்தார்கள். விளைவு இப்போது பெரும்பாலானோர் உயர் பதவியில் இருக்கின்றனர். கல்வியின் சிறப்பிற்கு அவ்வூர் ஒரு எடுத்துக்காட்டு.
நல்லம்மை பிறந்த ஆறுபுளி என்பது கள்ளிகுளத்திலிருந்து ஓரிரு மைல் தூரத்தில் உள்ள சிற்றூர். குளத்தின் இந்தப்பக்கம் கள்ளிகுளம் என்றால் அந்தப்பக்கம் ஆறுபுளி. ஆறு புளியமரங்கள் நின்றதால் அப்பெயர் எனச் சொல்வார்கள். பனைத்தொழில் சிறப்பாக நடைபெற்ற ஊர். பனையேற்றம் இல்லாத காலத்தில், நார்க்கட்டில் கட்டுவது போன்ற இணைத்தொழில்கள் நடக்கும்.
சரி. ஊரைச் சுற்றி வந்த நாம் இப்போது பாட்டியின் வரலாற்றிற்கு வருவோம்! பாட்டியைப் பேரப்பிள்ளைகள் நல்லம்மை என்றே அழைத்திருக்கிறார்கள். அதனால் நாமும் அப்படியே அழைப்போம். எங்கள் ஊரில் அம்மாவின் அம்மாவை மாமம்மை (மாமாவின் அம்மா) என அழைக்கும் வழக்கம் இருந்தது. எல்லாம் என்ன! ஆணாதிக்கம் தான். சில குடும்பங்களில் நல்லம்மை என்ற சொல்லாடல் புழக்கத்தில் இருந்தது.
நல்லம்மை பிதலியம்மாளின் அப்பா பெயர் ‘தொம்மை அந்தோணி’. தொம்மை என்பது Thomas என்பதன் கிராமிய வடிவம். நான்கு ஆண்கள் மூன்று பெண்கள் கொண்ட குடும்பத்தில் பாட்டி, முதலாவது பிறந்தவர். வசதியான குடும்பம். ஆறுபுளி ஆரோக்யநாதர் (ST Roach) கோவிலுக்கு தன் நிலத்தை தொம்மை அந்தோணி அவர்கள்தான் கொடுத்திருக்கிறார்கள். இப்போது நல்ல கட்டமைப்பு கொண்ட கோவிலாக அது விளங்குகிறது.
நல்லம்மை ஏறக்குறைய ஆறடி உயரம்; அதற்கேற்ற உடல்வாகு கொண்டவர். மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த பாட்டியை, கள்ளிகுளத்தில் இருந்த ‘விசேந்திரர்’ என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். “விசேந்திரர்” “வின்சென்ட்” என்பதன் தமிழ் வடிவம். அவர் நூல்கடை நடத்திக் கொண்டிருந்திருக்கிறார். திருமணத்தின் போது, பாட்டிக்கு, அவர்களின் அப்பா சொத்து கொடுத்திருக்கிறார். பாட்டி தான் வேண்டாம் என மறுத்து இருக்கிறார். தாத்தா வைத்திருந்த நூல் கடை மீன்கடைத்தெருவில் இருந்தது. அது தான் ஊரின் சந்தை போன்று இயங்கியது. மீன்கடைக்கு வெளியே காய்கறி விற்பார்கள். மாலை மீன் வந்த காலகட்டத்தில் வெய்யிலின் கொடுமை இருந்து இருக்காது. அப்போது அதற்கு அந்திக் கடை என்று பெயர் இருந்திருக்கிறது. மக்கள் கூடும் இடமென்பதால் கடையில் வணிகம் நல்ல படி நடந்திருக்க வேண்டும்.
மூன்று பெண் குழந்தைகள். சிறு வயதிலேயே தாத்தா இறந்துவிட்டார். பெண் குழந்தைகள் என்றாலே சுமை என இருந்த காலகட்டம். நல்லம்மை கலங்கவில்லை; சிறிதாக இருந்த நூல் கட்டு வணிகத்தை விரிவுபடுத்தியிருக்கிறார்கள். செம்பாடு பக்கம் உள்ள வள்ளியம்மாள் புரத்திலும் தறிநெசவு வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டார்கள். பணசுழற்சி அருளானந்தபுரம், மடப்புரம், வள்ளியம்மாள்புரம் ஊர்களிலிருந்து வரவும் வளரவும் ஆரம்பித்தது.
நல்லம்மை, மூன்று மகள்களையும் எட்டாம் வகுப்பு வரைப் படிக்க வைத்திருக்கிறார். அப்போது ஊரில் எட்டாம் வகுப்பு வரை தான் இருந்தது. படிப்பின் மீது காதல் கொண்டிருந்த நல்லம்மை மூவரையும் உள்ளூரிலிருந்த படித்த மணமகன்களைப் பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கிறார். இரண்டு மகன்கள் தலைமையாசிரியர்கள். ஒரு மருமகன், ரெயில்வேயில் ஆந்திர மாநிலத்தில் உயர்ந்த பதவியிலிருந்தவர். பின்னாளில் பி ஹெச் எல் நிறுவனத்திலும் உயர் பதவியிலிருந்திருக்கிறார்.
மூத்த மகள் திருமணத்திற்குப் பின் மருமகன் அந்தோணி ஆசிரியர், மகனானார். கடையின் வரவு செலவுகளைப் பார்த்துக் கொடுத்தார். இரண்டாவது மருமகன் தான் கள்ளிகுளத்தில் காங்கிரஸ் இயக்கத்தை வலுவுறச் செய்தவர். ஊருக்கு உழைக்க என்றே பிறந்த மரியான் ஆசிரியர்.
மருமகன் உதவியால், கடை இன்னமும் சிறப்படைந்திருக்கிறது. பாட்டியும், அனைவரையும் அரவணைக்கும் குணம் கொண்டவராக இருந்திருக்கிறார். “பாட்டி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் தறி நெய்பவர்களின் வாழ்க்கை நைந்து பிஞ்சி போய் இருக்கும். பாட்டி அந்த மக்களுக்குக் கடனை வாரி வாரி வழங்கினார்கள்.” என்கிறார்கள் இரோ அண்ணன்.
இரு தங்கைகளும் கள்ளிகுளத்திற்கு மணமுடித்து வந்ததால், நல்லம்மைக்கு குடும்ப உறவிற்குப் பஞ்சமில்லை. இருந்திருக்கிறது. மகள்கள் குடும்பமும் அருகிலேயே இருந்ததால், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்திருக்கிறார்கள். மூன்று மகள்களையும் அருகிலேயே வீடு வாங்க வைத்து, ஒருவருக்கொருவர் ஒத்தாசை என வாழவைத்திருக்கிறார்கள். ஆனாலும் இவர் யார் வீட்டிலும் போய் இருக்கவில்லை. தனக்கென ஒரு வீடும் வைத்திருந்திருக்கிறார்கள். அந்த வீட்டைத் தனது மூத்த பேரனுக்குக் கொடுத்திருக்கிறார்கள். (அவர், பாட்டியின் கணவர் போன்று இருப்பாராம். அதற்காகக் கொடுத்தார்களாம். அம்மா சொன்னது. சரி தானா எனப் பாருங்கள்).
முதிர்ந்த வயதில், 1977 நல்லமம்மை இவ்வுலகை விட்டுச் சென்றார்கள்.
ஒட்டுமொத்த சுமைகளையும் வாழ்வில் சுமந்ததினால், நல்லம்மைக்கு குடும்பத்தில் அப்படி ஒரு மரியாதை என்கிறார் பேரன். இளம் வயதில் கணவனை இழந்து கணவனிடம் தீரா காதலுடன் தான் இறுதிவரை இருந்திருக்கிறார். மூன்று மகள்கள் வீட்டிலும் ஒரு பேரனின் பெயரில் ஒருபகுதியாக வின்சென்ட் உள்ளது. மூத்த பேரனின் பெயரே வின்சென்ட் தான். அவர், தாத்தா போன்றே இருக்கிறார் எனத் தனது இறுதிக் காலத்திற்குப்பின் அவரது வீட்டை அவரிடமே கொடுத்து இருக்கிறார்.
கடனுக்குத் தான் பெருமளவில் நல்லம்மை நூல் கட்டுகளை வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பார்கள். ஒரு மாதத்திற்குப் பிறகு பாக்கி பிரிக்கப் போவார்கள். நடராஜா பயணம்தான். பேரப் பிள்ளைகளைப் பள்ளி விடுமுறை நாள்களில் கூட்டிக்கொண்டு நடைப் பயணமாகவே போவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். வழியில் சாலையோரம் உள்ள கடைகளில் முறுக்கு, பொரி உருண்டை, கடலை மிட்டாய், தேங்காய் மிட்டாய் வாங்கிக் கொடுத்து, கதை பேசி சிரிக்க வைத்துப் பாசத்தைக் காட்டிக் கூட்டிச் செல்வார்கள்.
பெரிய பேரப்பிள்ளைகள் சிலநேரம் பணம் பிரிக்கத் தனியாகப் போவார்கள். சிலநேரம் நண்பர்களும் இணைந்து செல்வார்கள். பில்லை காண்பித்து பாக்கியை வாங்கி வருவார்கள். வந்தவுடன் அவர்களுக்கு மிட்டாய் வாங்குவதற்கு ஐந்து பைசா கொடுப்பார்கள்.
நல்லம்மை, பேரக்குழந்தைகளுடன் விளையாடவும் செய்வார்கள். பாண்டி (பல்லாங்குழி), சீட்டுக்கட்டில் கழுதை போன்ற விளையாட்டுகள் எங்களுடன் இணைந்து விளையாடுவார்கள். அவர்கள் வீட்டில் கறிவேப்பிலை மரம் இருக்கும். கறிவேப்பிலையைப் பறித்து பக்கத்தில் மீன் கடையில் விற்று கிடைக்கும் ஒரு பைசா இரண்டு பைசாவை வைத்து தனக்கு வேண்டியதைப் பேரப்பிள்ளைகள் வாங்கி உண்பார்கள். நாங்கள் குச்சி கம்பு (கிட்டிப்புள்), கழச்சி (கோலிக்காய்) விளையாடும் பொழுது திண்ணையில் அமர்ந்து கொண்டு பேரப்பிள்ளைகள் விளையாடுவதைப் பார்த்து ரசிப்பார்கள்.
வயது முதிர்வால் 1979 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவ்வுலகை விட்டு மறைந்தார்கள். அது வரை மகள் மிக்கேலம்மாள் கண்ணும் கருத்துமாகத் தாயைப் பக்கத்தில் வைத்தே பார்த்துக் கொண்டார். “என் அம்மாவின் கவனிப்பு மிகச் சிறப்பாக இருந்ததைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் விடுவார்கள் என் நல்லம்மை. நான் அறிந்ததை விட என் அண்ணன்மார்கள் அக்கா நிறைய அறிந்திருப்பார்கள் ஏனென்றால் எங்கள் குடும்பத்தில் நான்தான் கடைசி” என்கிறார் பேரன் ராஜா.
நல்லம்மா மிகுந்த பக்தி கொண்டவர். அவரின் வழிநடந்த ஒரு பேரன், அருள்தந்தை மைக்கிள் பிரிஜட் இளங்கோ தற்பொழுது அசாம் மாநிலத்தில் பிஷப்புக்கு அடுத்த பதவி வகித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு கரையில் நூல் வணிகம், மறுகரையில் பிள்ளைகளின் எதிர்கால கனவுகள். இவற்றை ஒருங்கிணைந்து சமன் செய்து, துணிவுடன் எடுத்துச் கொண்டு சென்றது நல்லம்மையின் திறமைதான் என்பதை மறுப்பதற்கில்லை. தனி ஒரு பெண்ணாக எப்படி இவ்வளவு சாதித்தார்கள் என எண்ணும்போது இப்பொழுதும் என் உள்ளத்தினுள் கேள்விக்குறி இருக்கிறது என்கிறார் ஒரு பேரன் ராஜா.
மூன்று பெண்குழந்தைகள் தான். மகன் இல்லை. அதனால் எந்த குறையுமில்லை. என்பதை அவர்களின் வாழ்க்கை சொல்கிறது. பாட்டியின் அப்பா, சொத்தில் பங்கு கொடுப்பதாக இருந்திருக்கிறார். அது வேண்டுமா வேண்டாமா என்ற முடிவெடுக்கும் நிலையில் பாட்டி இருந்திருக்கிறார். ‘அப்பா கொடுத்ததை நீ ஏன் வாங்கவில்லை என கணவரும் கேட்டதில்லை’ என்று நினைக்கும்போது, மிகச்சரியான குடும்பம் அவருக்குக் கிடைத்திருக்கிறது. அண்ணன் தம்பிகள் பெற்றோருக்கான பொறுப்பை எடுத்துக் கொள்ளும்போது அவர்கள் சொத்தையும் எடுத்துக் கொள்வது சரிதானே! என்ற பார்வை அவரிடமிருந்திருக்கிறது.
குறைந்த ஆண்டே கணவருடன் வாழ்ந்தாலும், நிறைவாகவே அவரின் வாழ்வு இருந்திருக்க வேண்டும் என அவரின் வரலாறு சொல்கிறது. இந்த அளவிற்குப் பெண்ணுக்கு உரிமை வேண்டும் எனத் தான் பெண்கள் கேட்கிறார்கள். கேட்பது சரிதானே!
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.