“நான் உனக்கு சமையல்ல ஹெல்ப் பண்றேன்”

“என்ன செய்யணும்னு சொன்னா நான் செய்யப்போறேன்”

“அய்யே… நான்ல்லாம் கிச்சன் பக்கமே போகமாட்டேன்”

” நான் சமைப்பேன். ஆனா க்ளீன் பண்றது எல்லாம் நீ தான் செஞ்சுக்கணும்” இவை வெவ்வேறு இயல்பிலான குடும்ப ஆண்களின் (அப்படித்தானே முந்தைய பதிவிலே முடிவுசெய்துகொண்டோம்) குரல்கள். இவற்றில் சில குரல்கள் சரியானவை போலத் தோன்றலாம்.

ஆனால் கவனித்துப் பார்த்தால், இதன் மறைபொருள் சமைத்தல் என்பது பெண்ணின் வேலை. அதை அவள்தான் செய்ய வேண்டும். அதற்கு உதவும்படியான வேலைகளை வேண்டுமானால் ஆண் செய்யலாம் என்ற அளவிலேயே நாம் வளர்ந்திருக்கிறோம் அல்லது வளர்க்கப்பட்டிருக்கிறோம் என்பதே உண்மை.

நம் வீட்டை நமக்கு எந்த அளவுக்குத் தெரியும் என ஒரு சிறிய டெஸ்ட். பின்வரும் வினாக்களுக்கு சட்டென பதில் சொல்ல வேண்டும்.

வீட்டில் தற்போது என்னென்ன மளிகைப்பொருள்கள் தீரும் நிலையில் உள்ளன?

நம் வீட்டில் ஒரு மாதத்திற்கான சமையலுக்கு எவ்வளவு எண்ணெய் தேவைப்படுகிறது?

நாளைய சமையலுக்கு என்னென்ன காய்கறிகள் உள்ளன? (குளிர் பதனப்பெட்டியைப் பார்க்காமல் சொல்லவும்) 

துணி துவைக்கும் சலவைத் திரவம் எவ்வளவு இருக்கிறது? 

இதில் எத்தனை கேள்விகளுக்கு சட்டென நமக்குப் பதில் தெரிகிறது?

இதே கேள்விகளை அம்மா/ இணையரிடம் கேட்டுப் பாருங்கள். கடகடவென பதில் வரும்.

இதில் என்ன இருக்கிறது? அவர்கள் வீட்டைப் பார்க்கிறார்கள். அதனால் இவற்றையெல்லாம் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் இவைதாமே நம் வீட்டின் அடிப்படைச் செயல்பாடுகள்? இவற்றை நாம் ஒவ்வொருவருமே அறிந்திருக்க வேண்டும்தானே?

உண்மையிலேயே ஆண்களுக்கு இதை அறிந்துகொள்வதில் எந்தத் தயக்கமும் இருப்பதில்லை. அன்புக்குரிய பெண்கள்  இந்தச் சமையலறைக் கொத்துச்சாவியை இரண்டு சாவிகளாக்கி, ஒரு சாவியைத் தம் குடும்ப ஆண்களிடம் கொடுக்கலாம். தவறில்லை.

எல்லாவற்றிலும் பெண்ணினும் அதிகம் வெளிப்பழக்கமும் பரிட்சயமும் உள்ள அன்புக்குரிய ஆண்கள், தம் குடும்பப் பெண்களின் பார்வையை விரிவுபடுத்த முனையலாம். நம் அம்மாவோ இணையரோ வேண்டாம் எனச் சொன்னாலும், தாமாகவே முன்வந்து வீட்டு வேலைகள் சிலவற்றைச் செய்து உங்கள் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்கலாம்.

இரவு படுக்கப் போகும்போது பெரும்பாலான பெண்கள் என்ன நினைத்துவிட்டுப் படுப்பார்கள் என நினைக்கிறீர்கள்? பலரும் மறுநாள் காலையும் மதியமும் என்ன சமைக்க வேண்டுமென்ற சிந்தனையோடுதான் உறங்கப் போகிறார்கள். அப்பெண் என்ன படித்திருந்தாலும் எந்த வேலையில் இருந்தாலும் இந்தச் சிந்தனைப் போராட்டத்திலிருந்து தப்பிக்கிற வாய்ப்பு அவளுக்கு மிகக் குறைவு.

எந்த ஒரு ஆணும் மறுநாளின் குழம்புக் குழப்பத்தோடு உறங்கப்போவதில்லை.

ஆனால் பெண்ணோ, ‘நாளை காலை ஒரு மீட்டிங் இருக்கிறது. சீக்கிரம் போக வேண்டும். சட்டென என்ன சமைத்து எடுத்துச் செல்வது?’ என சிந்திக்கவேண்டும். இந்த மீட்டிங் என்பதற்கு பதிலாக பிராஜெக்ட், தேர்வு அறையின் கண்காணிப்பாளர், மருத்துவமனையின் காலை டியூட்டி, ஊடகத்துறையில் செய்தி வாசிப்பாளர், ஒரு எழுத்தாளர், தூய்மைப் பணியாளர் என வேலைகள் மாறலாம். ஆனால் காலை என்ன சமைப்பது என்கிற சிந்தனை மட்டும் மாறுவதேயில்லை.

அந்த வீட்டு ஆணுக்கு விடிகிற அதே பொழுதுதானே பெண்ணுக்கும் விடிகிறது? படுக்கையிலிருந்து எழுந்து சமையலறையில் பம்பரமாய்ச் சுழலும்போது மட்டும் பெண் ஏன் முன் எழ வேண்டும்? அவள் மட்டும் ஏன் சுறுசுறுப்புடன் வேலை செய்யப் பழகிக்கொள்ள வேண்டும்? வீட்டு வேலைக்கு உதவியாளர் அமைத்துக்கொள்வதுபோல சமையலுக்கும் ஒருவரை வைத்துக்கொள்ளலாம் என்பதே சமூகம் சொல்கிற தீர்வு. சமூகம் ஆணுக்கு  சிரமமான தீர்வை ஒருபோதும் வழங்குவதேயில்லை. இதுவரை சமையலில் ஈடுபடாவிட்டாலும்கூட

குறைந்தபட்சம் உணவுத் திட்டமிடலிலேனும் வீட்டிலுள்ள உறுப்பினர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். பொருள் ஈட்டுவதே அருஞ்செயலெனில் பெண்ணும் அதே அருஞ்செயலைத்தானே செய்து வருகிறார்? அவருக்கும் அதே களைப்பும் ஓய்வும் அயர்ச்சியும் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

மளிகைப் பொருள்களைக் கடையில் வரிசையில் நின்று வாங்குவதே பெரும் வேலையென நினைக்காதீர்கள். பெண் மூளைக்குள் எழுதப்படாது செயல்படுகின்ற இருப்புப் பதிவேடு ஒன்று இயங்குகிறது. அதில் எந்த மளிகைப் பொருள் எவ்வளவு உள்ளது; எவ்வளவு தேவை என எப்போதும் பட்டியலிட்டுக் கொண்டே இருக்கிறாள். அந்தச் சுமையில் கொஞ்சத்தை ஆண்களும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

காய்கள், பழங்கள் உன் பொறுப்பு; மளிகை, மற்றவை என் பொறுப்பு எனப் பேசிக் கொள்ளுங்கள். நம் வீட்டு வேலைகளை நாமும் நம் இணையும் சேர்ந்து பேசித் திட்டமிட்டு, சமையல் செய்யும்போது அங்கு இயல்பாகவே காதல் கூடும்.

இணையேற்புக்கு முன்பு வரை தான் உண்டு தன் வேலை உண்டு என்று ஆணைப்போலத்தான் பெண்ணும் இருக்கிறார். இணையேற்பின் பின்பான குடும்ப வாழ்வில் கண்களுக்குத் தெரியாத ஒவ்வொரு பிளக்காக தங்கள் தோள்களெனும் சுவிட்ச் போர்டில் செருகப்படுவது, பெண்கள் உள்பட யாருக்குமே தெரியாதது.

உணவுக்கான முன்தயாரிப்பு, வீட்டுப் பராமரிப்பு, குளியலறைத் தூய்மை, குழந்தை வளர்ப்பு, சத்தான தின்பண்டம், பணிச்சுமை, பிணக்கமில்லாத குடும்பச் சூழல் நிர்வகிப்பு, உறவினர் நண்பர் வருகை-உபசரிப்பு, பண்டிகை நாள்களின் திட்டமிடல் என அத்தனையின் மொத்த பொறுப்பும் குருவித்தலையில் பனங்காயாக இருக்கிறது. இத்தனை அழுத்தத்தோடு அவள் கைப்பையைச் சுமப்பதனாலோ என்னவோ, அந்தத் தோள்பட்டை எப்போதும் வலித்துக்கொண்டே இருக்கிறது. வலிக்கிறதென்பதைச் சொன்னால் வீட்டின்  புழுங்கலறையிலேயே (புகை கூட வெளியேறாத சமையலறையை அப்படித்தானே சொல்ல முடியும்) மீண்டும் அடக்கிவிடுவார்களோ என்கிற அச்சம் பலருக்கும் இருக்கிறது.

அந்த அச்சத்தை உடைத்து அகற்றுவதுதான் உடன் பயணிக்கிற இணையராக ஓர் ஆணின் பொறுப்பு.

வீடுகள் வெறும் அறைகள் அல்ல. அவற்றை உயிர்ப்புள்ள இடமாக மாற்றிட வீடுகளில் வரவு செலவு கணக்கு கடந்த உரையாடல்கள் தேவை.

‘என்ன பேசினாலும் நாலாவது வார்த்தையில சண்டை வந்துடுது’ என்போர் வீட்டு வேலைகள் குறித்துப் பேசிப்பாருங்கள். முரண்களுக்கே வேலையிருக்காது. தனக்கு வலிப்பதை தன் இணையர் உணர்கிறார் என்பதை அறியும்போது பெண்ணுக்குக் கிடைக்கிற நிம்மதி, சொல்லிலடங்காதது.

பளபளப்பான வண்ணத்தாளினைச் சுற்றி அட்டைப் பெட்டிக்குள் அடைத்துப் பொருளாகத் தருகிற அன்பளிப்பு சில நிமிடங்களுக்கு மட்டுமே மகிழ்வைத் தரலாம். அன்றைய உணவுக்கான காய்களைத் தாமே நறுக்கித் தருவது; ஒரு கோப்பை காஃபி; மளிகையைக் கவனித்து நினைவூட்டலின்றி வாங்கிவருவது; அடுத்த நாள் உணவைத் திட்டமிடுவது; சலவை இயந்திரத்தில் துணிகளைப்போடுவது; மடித்த துணிகளை எடுத்து வைப்பது என வீட்டு வேலைகளைப் பகிர்ந்து வெளிப்படுத்துகின்ற அன்புக்குக் காதலும் பிணைப்பும் அதிகம்.

பணம், பொருள், பகட்டான வாழ்வு, ஆடம்பரங்கள், கேளிக்கைகள் இவை எவையும் தந்திடாத மிக வசதியான வாழ்வை ஒவ்வொரு பெண்ணும் தன் வீட்டில் வாழ முடியும். அந்த வீட்டின் ஆண், வீட்டு  வேலையைப் பகிரும்போது.

மதிப்பாக நடத்தப்படுவதைவிட மிகச்சிறந்த காதல்மொழி வேறு என்னவாக இருக்க முடியும்?

அன்புக்குரிய ஆண்களே! வேலைகளைப் பகிர்வதால்  ஒருபோதும் உங்களது மதிப்பு குறைந்துவிடாது. பயமின்றி வேலையைப் பகிருங்கள். வீடு எல்லாருக்குமானதுதான்!

தலைப்புப் படம் நன்றி: சாம் ஜெபசிங்

படைப்பாளர்

பா. ப்ரீத்தி

தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ்நாடு அரசின் தமிழ்ப் பாடநூல் குழுவில் நூலாசிரியராகப் பணியாற்றியுள்ளார். பேறுகாலம் குறித்த இவரது அனுபவப் பகிர்வை ‘பிங்க் நிற இரண்டாம் கோடு’ என்கிற புத்தகமாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.