உலக அளவில் குறிப்பாக தென்னிந்தியாவில் கோவிட் இரண்டாவது அலை ஏற்படுத்தி இருக்கும் கோரத்தாண்டவத்தை, கடந்த தலைமுறையாகட்டும், இன்றைய தலைமுறையாகட்டும், இரண்டு தரப்புமே இப்படி ஒரு அவலத்தை கடந்து வந்திருக்க மாட்டார்கள். கோவிட் நோய்தொற்றின் காரணமாக ஆங்காங்கே செத்து மடியும் மனித உயிர்களை காணும்போது, அமானுஷ திரைப் படங்களில் அரக்கர்களிடம் சிக்கிகொண்ட அப்பாவிகளைப் போல மனசு கிடந்து தவிக்கிறது. நமக்கோ நம்மைச் சார்ந்தவர்களுக்கோ என்னவாகுமோ என்ற பரிதவிப்பு அச்சமும் ஆட்கொண்டு நிம்மதியை இழக்க செய்துவிட்டது.

வீட்டில் நிம்மதியாக சற்று ஓய்வெடுக்க மாட்டோமா என்று ஏங்கியவர்கள் ஏராளம். அவர்களுக்கு ஓர் வாய்ப்பாக கடந்த மார்ச் மாதம் முதல் வைரஸ்தொற்று காரணமாக லாக்டவுன் உறவுகளை வீட்டுக்குள் ஓரிடத்தில் உட்கார வைத்து, அவர்களுடன் நேரத்தை பகிர்ந்துகொள்ள ஓர் சந்தர்ப்பமாக அமைந்தது. பொருளாதார பின்னடைவு, வேலை இழப்பு என்று வீட்டில் இருப்பவர்களை இரும்புகோட்டைக்குள் அடைபட்டவர்களைப் போல மாற்றியுள்ளது. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை ஏற்படுத்தும் பாதிப்பில் ஒரு நாளை நகர்த்துவதே ஓர் யுகத்தை கடப்பது போல இருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களின் நிலையை, அவர்கள் அவஸ்தையை, நோயாளியின் உறவுகளின் கதறலை தொலைக்காட்சியில் கண்டு, அந்த இடத்தில் நம்மை பொருத்திக் காணும் காட்சி மனத்திரையில் ஓடும்போது படபடப்பும், பீதியும் தொற்றிக்கொள்கிறது. எது நடந்தாலும் நம் கையில் இல்லை என்ற மோசமான மன நிலைக்கு மாறிவிட்டோம். ஆபத்பாந்தவனாக யாராவது வருவார்களா? இந்த பெருந்தொற்றை அழித்து நாட்டையும் நாட்டுமக்களையும் காப்பாற்றுவார்களா என்று காத்திருக்கிறோம்.

——————————————————————————————————-

உறவுகள் என்றால் ஏதோ அயர்ச்சி ஏற்படுத்துகிற விசயத்தைப் பற்றி பேசப்போகிறோம் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். நீங்கள் சந்தித்த அல்லது கடந்து வந்த பாதையில் இப்படி ஒருவரைக் கண்டிருப்பீர்கள், உங்களின் அடிமனதில் தேங்கி கிடக்கும் அந்த நினைவுகளை உரசி செல்வதாக இந்த பதிவு இருக்கும். இங்கு மனிதனின் தேவையும் ஆடம்பரமும் அதிகரிக்க அதிகரிக்க, அவனது இயல்பு நிலையில் எழும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டுவிட்டோம். அப்படியான மாற்றங்களில் ஒன்று தான் சொந்தங்களிடமிருந்து விலகி வசிப்பது.

whatsHOT

ஒரு காலை வேளையில் புறநகர் இரயிலில் ஏறிப் பார்த்தால், எல்லா வயது பெண்களையும் நீங்கள் காணலாம். அரக்க பறக்க இரயிலேறி உட்கார இடம் கிடைத்ததும் அவரவர் வேலையைத் தொடங்கிவிடுவார்கள். இரயில் கிளம்பியதும் காலை உணவு பொட்டலங்கள் பிரிக்கப்படும், ஆசுவாசமாக உட்கார்ந்து சுற்றி இருப்பவர்களை நினைத்து சங்கோஜப்படாமல் இட்டிலியை சட்னியில் தொட்டு சாப்பிடும் அவளின் முதுகுக்கு பின்னால் மறைந்திருக்கும் குடும்ப சுமை எத்தனையோ?

இன்னொரு பக்கம், பொது மக்கள் சுற்றி அமர்ந்திருக்கும் இடம் என்று யோசனை இல்லாமல், வீட்டிலிருந்து கிளம்பிய அவசரத்தில் மேலே போர்த்திக்கொண்டு வந்த சேலையைக் கலைத்து, சரிசெய்து கட்டிக்கொள்வதும், பூ தொடுப்பதும், கீரையைக் கிள்ளி எடுப்பதும் என இரயில்பெட்டி பெண்களின் அடுத்த சமையல் கூடமாக மாறியிருப்பதை கண்கூடாகக் காண முடியும். இந்த பெண்கள் எந்தக் கோட்டையைப் பிடிக்க இப்படி பரபரக்கிறார்கள்!!!! குழந்தைகளின் படிப்பு, அத்தியாவசிய தேவைகளின் அதிகரிப்பு , ஆடம்பர பொருள்கள், விலைவாசி என்று மனிதனின் எதிர்ப்பார்ப்பு கூடிப்போக, கணவன் மனைவியும் சேர்ந்து சம்பாதித்தாலுமே, முப்பதாம் தேதியை எட்டிப் பிடித்து நடப்பது என்பதெல்லாம் சவாலாகிவிட்டது. நமது இந்த ஓட்டம் தான், உறவுகளையும் நம்மை விட்டு ஓடவிட்டிருக்கிறது.

முன்பொரு காலத்தில் ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவது என்பது வெகு அரிதாக நிகழக்கூடிய ஒன்று. வெளியூருக்கு இரண்டு மூன்று நாள் பயணம் என்றாலோ, அல்லது ஏதோ ஓர் அரிதான சந்தர்ப்பத்திலோ தான் ஓட்டலுக்கு செல்வார்கள். இந்தக் காலத்தில் ஓட்டல் என்ற ஒரு இடம் இல்லை என்றால் இங்கு பாதி பேர் பட்டினி கிடந்தே செத்துவிடுவார்கள். நாள் முழுக்க அலுவகத்தில் வேலை செய்து விட்டு வீட்டுக்கு வந்து சேரும் வேளையில் யாராவது தட்டில் சாப்பாடு வைத்து பரிமாற மாட்டார்களா என்று மனது ஏங்கும் அந்த நிமிடத்தில், ஸ்விகியும் ஜொமொடோவும் தெய்வங்களாக மாறிவிடுகின்றனர். சுயத்தேவையையே பூர்த்தி செய்துக்கொள்ள இயலாதவர்களால், விருந்தினர்களை உபசரிப்பதை பற்றி விலாவரியாக விளக்கத்தேவை இருக்காது என்று நினைக்கிறேன்.

முன் அறிவிப்பு இல்லாமல் எந்த சொந்தக்காரர்கள் வீட்டுக்காவது போனோம், அவ்வளவு தான். உலகத்தில் இருக்கும் சாபங்கள் அனைத்தும் விருந்தினருக்கே சமர்ப்பணம். அது யார் இந்த காலத்தில் வீட்டில் வந்து தங்கிப் போகும் விருந்தினர், என்று நீங்கள் கேட்கலாம். மாமியாரும், மாமனாரும் விருந்தினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வெகு காலம் ஆயிற்று. மாமியார் மாமனாராகட்டும், மருமகளாகட்டும் இவர்களின் மனநிலையில் மாற்றம் உண்டாகி பலவருடங்கள் கடந்துவிட்டது. மாற்றத்துக்கு தகுந்தாற்போல தங்களை மாற்றிக்கொள்ள இயலாதவர்கள் அந்த வீட்டுக்கு அடுத்த தடவை செல்லும் தகுதியை இழந்தவர்களாகி விடுகின்றனர்.

எதிர்ப்பாராமல் யாராவது வீட்டுக்கு வந்தால் உபசரிக்க வேண்டும் என்று ஒன்றிரண்டு பேர் சாப்பிடும் அளவுக்கு அதிகமாகத் தான் சமைப்பார் அம்மா. ஒருவேளை உணவு தீர்ந்துவிட்டிருந்தாலும் விருந்தினருக்கு தண்ணீர் கொடுத்து உபசரித்து, தின்பண்டங்களை சாப்பிட கொடுப்பார், பத்து நிமிடத்திற்குள் ரவை உப்புமாவும், போண்டாவும் தயாராகிவிடும். எங்கள் வீட்டுக்கு வந்தவர்கள் சாப்பிடாமல் சென்றார்கள் என்ற வழக்கமே இதுவரை இருந்ததில்லை. தெய்வங்கள் விருந்தினர்கள் ரூபத்தில் வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் எங்கள் அம்மாவின் உபசரிப்பு. சமையல் கூடத்திற்கும் வராந்தாவுக்கும் நடையாய் நடப்பார், ஓடி ஓடி சமைப்பார் போதும் போதும் என்று விருந்தினர் திக்குமுக்காடும் அளவிற்கு உணவு பரிமாறுவார் அம்மா. மீதமான சாப்பாட்டை கீழே கொட்டுவதற்காக அப்பாவிடம் வசை வாங்கினாலும் அதிகமாக சமைப்பதை அம்மா இன்று வரை நிறுத்தியதில்லை.

இப்படியொரு சூழலில் வளர்ந்துவிட்டு திருமணத்துக்கு பிறகு சென்னையில் வசிக்கும் உறவினர் ஒருவர் வீட்டுக்கு மாலை வேளையில் சென்றபோது, அவர்கள் வா என்று கூட அழைக்கவில்லை, சாப்பிடுங்க என்று மருந்துக்கு கூட உபசரிக்கவில்லை. கொண்டு சென்ற பழங்களை வாங்கி வைத்துக்கொண்டார்கள். டீ என்ற பேரில் எதையோ டம்ளரில் ஊற்றி கொண்டுவந்தார்கள். அப்போது இரவு ஒன்பது மணியிருக்கும். உங்கள் வீட்டுக்கு செல்வதற்கு பத்து மணியாகிவிடுமே இங்கே சாப்பிடுங்கள் என்ற சொல்லை சம்பிரதாயத்துக்கு கூட அவர் சொல்லாதது மனதைத் தைத்தது. சரவண பவன் ஓட்டலில் சாதம், சாம்பார், ரசம், பொரியல், கூட்டு, மோர், அப்பளம் எனப் பரிமாறினார்கள். வயிறை விட மனசு கனத்துப்போன தருணம் அது.

இன்னும் பேசுவோம்…

கட்டுரையின் முந்தைய பகுதி இங்கே:

கட்டுரையாளர்

வைதேகி பாலாஜி

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வைதேகி பாலாஜி பணியாற்றி வருகிறார். ஹெச்.டி.எஃப்.சி.குழுமத்தில் பேனல் அட்வகேட் பொறுப்பு வகிப்பவர். குடும்பநல சட்ட ஆலோசகரும் கூட. கடந்த 12 ஆண்டுகளாக திருப்பத்தூர், அகமதாபாத், சென்னை ஆகிய நீதிமன்றங்களில் வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரபல தமிழ் இதழ்களில் சட்ட விழிப்புணர்வுத் தொடர்கள் எழுதிவருகிறார். பெண்கள் அறிந்துகொள்ள வேண்டிய சட்டப்பிரிவுகள் பற்றிய பல கருத்தரங்குகளில் பங்கேற்றுவருகிறார். கவியரங்கம், பட்டிமன்றங்களிலும் தன் சொல்வன்மையால் சொக்கவைப்பவர்.