23.04.2021
என் சிறு வயது எங்கள் வீட்டுத் தோட்டத்தின் பூக்களாலும் காய், கீரை வகைகளாலும் நிரம்பியது.
செடிகள் பூக்கத் தொடங்கும்போதே அம்மா ஒரு பட்டியல் போட்டாற் போல் சொல்லிக் கொண்டு இருப்பார்.
”முத பறி காயில எதிர் வீட்டுக்கு ஒரு பங்கு கொடுத்துடணும். ரெண்டாம் பறி காய் மொத்தமும் ஸ்கூல்ல கொடுக்க. அப்புறம்…”
”மொதல்ல காய் வரட்டும். இரு!” என்பார் அப்பா!
”அவங்க வீட்டு காய், பழம்னு கொடுத்து இருக்காங்க இல்ல. நாம பதிலுக்கு கொடுக்கணும் இல்ல..? அதானே முறை.. யார் எது கொடுத்தாலும் அது வட்டி இல்லாக் கடன் தான். திருப்பிக் கொடுத்துடணும்.”
சரிதான்…!
ஒரு பெண்மணி தன் மகனைக் குறித்து என்னிடம் குற்றப் பத்திரிக்கை வாசித்துக் கொண்டு இருந்தார்.
”ஏங்க! இவனைப் பெத்து வளர்த்து படிக்க வச்சு ஆளாக்கி விட்டுருக்கோம்… இந்த நாய்க்கு அந்த நன்றி கூட இல்லாம பொண்டாட்டி பக்கம் பேசுது…”
நான் தாங்க முடியாமல் இடை மறித்தேன்.
”அவன் நல்ல பையன். என் கிட்ட இந்த மாதிரி அவனைத் திட்டாதீங்க.”
”நீங்க இப்படிப் பேசாதீங்க! எங்க வயிறு எரிஞ்சா நல்லா இருக்க மாட்டான். அந்தப் பொண்ணை வச்சு அவன் வாழக் கூடாது. நாங்க எதைச் சொன்னாலும் அவன் செய்யணும். பெத்த கடன்னு இருக்கு இல்ல?”
நான் அவர்களைத் திருத்த முடியாது என்று பேசுவதையே விட்டு விட்டேன்.
இத்தனைக்கும் இவர்கள் எல்லாம் படித்தவர்கள்! தான் மிக நாகரிகமானவர் என்று சொல்லிக் கொள்பவர்கள்!
சமீப காலத்தில் இவர் போன்று நிறைய பேரைப் பார்க்கிறேன்.
”நான் பெத்து வளர்த்தேன். அந்தக் கடனை நீ அடைக்கும் வழி என்பது கடைசி வரை நீ என் பேச்சைக் கேட்டுத்தான் நடக்க வேண்டும்! ”
பெண், பையன் என இரு பாலரின் பெற்றோரும் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள்.
தாய், தந்தை தன்னலம் பார்க்காதவர்கள் என்ற காலம் மெதுவாய் மறைந்து வருகிறது என்பது கசப்பான உண்மை.
சம்பாதிக்கும் மகனுக்கு மட்டும் இல்லை…! மகளுக்கும் திருமணம் செய்வதை நிறைய பேர் தள்ளிப் போடுகிறார்கள்.
திருமணம் செய்து வைத்தாலும் தன் கையே ஓங்கி இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்.
தன் மகன் மற்றும் மகள் வாழ்க்கை குறித்து எந்தக் கவலையும் இல்லை.
மணம் ஆகி ஒரே மாதத்தில் மகளைப் பிரித்து வந்து தன் வீட்டில் வைத்துக் கொண்டு விவாகரத்து செய்யச் சொல்லும் ஒரு பெண்மணி இருக்கிறார்.
மகள் செய்த தவறு, கணவன் பற்றியும் அவன் வீட்டார் பற்றியும் அம்மாவிடம் குறை சொன்னது தான். அதை ஊதிப் பெரிதாக்கி பிரித்தே விட்டார்.
பெண் இப்போது சேர்ந்து வாழ நினைக்கிறாள். அம்மா விடவில்லை. அவரிடம் பேசிப்பேசி எனக்குத் தொண்டை வறண்டு போனது தான் மிச்சம்.
”எனக்குப் பிள்ளை இல்லை. இவ என் கூட இருந்து கடைசி வரை பார்க்கட்டும். அந்தக் கடமை இருக்கில்ல..?
அதுவும் என்னத் தப்பா பேசின குடும்பத்துல இவ போய் எப்படி வாழலாம்?” என்கிறார்.
”பெத்து வளர்த்து…” வசனம் கேட்கும் போது எல்லாம் ஒரு கேள்வி எனக்குத் தொண்டை வரை வந்து விடுகிறது…!
”நீங்க பெத்த பிள்ளைய நீங்க வளர்க்காம பக்கத்து வீட்டுக்காரனா வளர்ப்பான்..?”
காய்கறி கொடுக்கல் வாங்கலே கடன் என்றால் பெற்றவர்களுக்கு பதில் மரியாதை செலுத்துவதும் ஒரு கடன் தான். நிச்சயம் செய்ய வேண்டும் தான்.
ஆனால் எந்த எல்லை வரை?
வாங்கிய ஒரு சிறு கடனுக்கு வாழ் நாள் முழுவதும் உழைத்துப் பணம் கொடுத்தாலும் அது வட்டிக்கே காணாது என்று சொல்லி உருட்டி மிரட்டி வாழ்வை நரகம் ஆக்கும் கந்து வட்டி பற்றி செய்திகளில் படித்தது உண்டு.
இன்று பெரும்பாலும் பெற்றோர் அப்படித்தான் மாறி வருகிறார்கள் என்பது கசப்பான உண்மை.
குறிப்பு… அப்படி எல்லாம் எந்தத் தாயும் கிடையாது என்று தயவு செய்து யாரும் சண்டைக்கு வர வேண்டாம். நீங்கள் இதுவரை அவர்களை சந்தித்தது இல்லை.. அவ்வளவுதான்…!

  • நிபுணமதி துரைசாமி