ஆண் மேலாண்மைச் சமூகம் பெண்ணை அடிமைப்படுத்த கண்டுபிடித்த ஆயுதங்களிலே அதி அற்புதமானது தாய்மை என்பது தான்.

பெண்ணின் மேல் பாரமாய்க் கவிந்திருக்கும் அடையாளமான தாய் என்ற புனைவின் காரணமாக திருமணமாகி குழந்தைகள் பிறந்ததிலிருந்தே, தான் ஒரு சூப்பர்மாம் ஆகிவிட வேண்டும் என்று தன்னை ஒரு இயந்திரம் போல் ஆக்கிக்கொள்கிறார்கள் பெரும்பாலான பெண்கள். குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதே அவர்களின் வாழ்நாள் லட்சியம் ஆகிவிடுகிறது.
அந்த லட்சியத்தை அடைவதற்காகவே ஒவ்வொரு நிமிடமும் ஓடுகிறார்கள். தன் பிள்ளைகளை டாக்டராகவோ, இன்ஜினியராகவோ ஆக்கிவிட வேண்டும் போன்ற கனவுகளை நோக்கி அவர்கள் ஓடும்போது, தன் மனதிற்கு என்ன தேவை, தன் உடலுக்கு என்ன தேவை என்பதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை.

பிள்ளைகள் முன்னுக்கு வரும் போது, அதுநாள் வரை அவர்களைப் பற்றி மட்டுமே யோசித்துக்கிடந்த பெண்களின் மூளையில் பாசிபடிந்து விடுகிறது. பிள்ளைகளுக்காகவே உழைத்த உடல் வலுவிழந்து போகிறது. அதன் பின் உடல் உபாதைகளைத் தாண்டி, நிம்மதியாக உறங்க மாத்திரைகளை நாடுவதே பல பெண்களின் வாடிக்கையாகவும், வாழ்க்கையாகவும் ஆகி விடுகிறது. தனக்கான வாழ்வை தான் வாழவில்லை என்பதை கூட அவர்கள் உணர்வதே இல்லை.

காதல் மட்டும் கணவனின் உரிமை, குழந்தைகள் என்பதெல்லாம் பெண்களின் கடமை என்பன போன்ற பாலின பாகுபாடு தொடர்பான சமூகப் பண்பாட்டு வேர்களை அகற்ற வேண்டியதே பெண்ணியத்தின் அடிப்படை கோட்பாடு.

சமூகத்திலும், வேலைதளத்திலும், குடும்பத்திலும் பெண் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் பற்றிய பெண்களின் உணர்வு நிலைகளும், இந்நிலையை மாற்றுவதற்கு பெண்கள் எடுக்கும் உணர்வுப் பூர்வமான நடவடிக்கைகளுமே பெண்ணியத்தின் பரந்துபட்ட வரையறை.

உஷா சுப்பிரமணியன் கதைகள்
panuval

சமூகத்தில் வழக்கிலிருக்கும் இத்தகைய ஆண் பெண் ஏற்ற தாழ்வுகளை மாற்ற முயற்சிக்கும் ஒரு பெண் தான் அனு. எழுத்தாளர் உஷா சுப்ரமணியனின் “த்ரில்” கதையின் நாயகி. மனைவியைத் தாண்டி வேறொரு தொடர்பு, சுதந்திரம் என எந்நேரமும் த்ரில் எதிர்பார்க்கும் கணவன் விஜய், மனைவி அனுவை சுலபமாக சமாதானப்படுத்தி விவாகரத்தும் வாங்கிவிடுகிறான். பிள்ளைகளை அவள் வசம் ஒப்படைத்து, அதற்கான செலவுகளையும் தானே பார்த்துக்கொள்வதாக ஆணவமாகச் சொல்கிறான். ஜீவனாம்சத்தையும் அவனே தீர்மானிக்கிறான். எந்த பணத்தால் அவன் ஆடுகிறானோ, அதே பணத்தால் அவன் திமிரை லேசாக ஆட்டிப்பார்க்கிறாள் புதுயுக நாயகி அனு.

‘நான் இனி விட்டுப்போன என் படிப்பை தொடர்ந்து, என் தகுதிகளை வளர்த்துக்கொண்டு என் சொந்தக்காலில் நிற்க வேண்டும். அதற்காக நிறைய போராட வேண்டி இருக்கும். வார இறுதியில் வரும் என் பிள்ளைகளின் அப்பா எல்லா வசதிகளையும் அவர்களுக்குக் காட்டுவார். அவரிடம் இருந்து திரும்பி வரும் போது அவர்கள் இனிமையான நினைவுகளுடன் வருவார்கள். முடிவு…என் வாழ்க்கைப் போராட்டங்கள் என் பிள்ளைகளுக்குப் புரியாது. ஜாலியான அப்பா… சதா அழுது வடியும் அம்மா . அப்பா தரும் இவ்வளவு சௌகரியங்களில் இருந்து எங்களைப் பிரித்திருக்கும் அம்மா என தவறாக நினைத்து என் மீது வெறுப்பு தான் வரும்.
எல்லாவற்றிலும் த்ரில் வேண்டும் என்று அலைபவர் என் கணவர். குழந்தைகளை வளர்ப்பது எவ்வளவு த்ரில்லான விஷயம் தெரியுமா? எனவே குழந்தைகளை அவரிடம் ஒப்படைத்து, விசிட்டிங் உரிமையை எனக்களியுங்கள்’, என்று நீதிபதியிடம் சொல்லி விடுகிறாள்.

பிரச்னைகளின் வேர்களை அறுக்கவேண்டுமெனில் நமக்கு நாமே சில சமயங்களில் கோடரி ஆக வேண்டியது அவசியமாகிறது. அனுவின் அறிவுப் பூர்வமான இந்த நடவடிக்கையால், அவள் பிரச்னையை அவளே சுமூகமாக நேர்கொண்டு விடுகிறாள்.

(கதை- த்ரில்
ஆசிரியர்- உஷா சுப்ரமணியன்
தொகுப்பு- உஷா சுப்ரமணியன் சிறுகதைகள் – தொகுப்பு 1)

நூல் அறிமுகங்கள்:

கட்டுரையாளர்:

ஸ்ரீதேவி மோகன்

ஏழு ஆண்டுகால பத்திரிகையாளரான ஸ்ரீதேவி மோகன், குமுதம், தினகரன் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றியிருக்கிறார். 2015ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். 2018-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கியத்தில் மதம், சமூகம்’ பற்றிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை அளித்துள்ளார். எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி மற்றும் திருவையாறு ஐயா கல்விக்கழகம் இணைந்து நடத்திய எட்டாவவது தமிழ் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளார்.