இப்போதைய திருமணங்கள் எல்லாம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படாமல் ‘மேட்ரிமோனியல்’களில் மலர்வதாலோ என்னவோ சகிப்புத்தன்மை குறைந்து, மனமுறிவோடு மணமுறிவுகளும் அதிகரித்து வருகின்றன.

காதல் மணமோ கந்தர்வ மணமோ பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமோ எதுவாக இருப்பினும் மனம் ஒப்பி மகிழ்ச்சியாக வாழ்வதையே எல்லோரும் விரும்புவர்.

மனித சமூகம் பல்கிப் பெருக இயற்கை செய்த ஏற்பாட்டில் சிற்சில மாற்றங்களுடன் அமைந்ததே திருமணம் என்னும் ஏற்பாடு. அந்தத் திருமண வாழ்வை இனிமையாக்குவதில் தேன்நிலவுக் காலம் பெரும்பங்கு வகிக்கிறது. புதுமணம் புரிந்தோர் தங்களை ஒருவரையொருவர் முழுமையாக அகமும் புறமும் அறிந்துகொள்ள இந்தத் தேனிலவுக் காலம் உதவுகிறது.

அதன் பின்னான நாட்களில் தம்பதியினருக்கிடையே ஏற்படும் பிணக்குகளையும் கருத்து வேறுபாடுகளையும் நீக்க மனதளவில் ஏற்பட்டிருக்கும் ‘நெருக்கம்’ பெருமளவில் உதவி செய்யும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் இத்தகைய நெருக்கமான உறவு நிலை அதிகமாக அமைவதில்லை என்பது வேதனையளிக்கும் விஷயம். இதற்கான பின்னணி என்னவென்பதை ஆராய்ந்தோமானால் நம்ப முடியாத விஷயம் முன்வருகிறது. கூட்டுக் குடும்பங்கள் மறைந்து பெருகி வரும் தனிக்குடித்தனங்களால் தான் இத்தகைய பிரச்னை அதிகளவில் ஏற்படுகிறது என்பதுதான் அது. கூட்டுக் குடும்பங்களில் வாழும் போது பெருமளவு தனிமை வாய்க்காது. அரிதாகக் கிடைக்கும் பொழுதுகள் மிக இனிமையாகக் கழியும். ஆனால், தனிக் குடித்தனத்தில் எப்போதும் வாய்க்கும் தனிமைத் தருணங்கள் சீக்கிரமே அலுத்து விடுகின்றன. தேன் துளியை ரசித்து சுவைக்கும் ஒரு ஈயானது தேன் குடத்திற்குள் விழுந்தால் ஏற்படும் நிலையைப் போன்றதுதான் இதுவும்.

திருமணம் ஆனதும் முதல் ஒரு வருடத்திற்கு இணையரிடையே ஏற்படும் பிணைப்பே பின்னாட்களில் அவர்களிடையே ஏற்படும் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறது என்பது உளவியல் ரீதியான உண்மை. இந்த கொரோனா லாக்- டவுன் காலகட்டம் தனித் தீவுகளாக இருந்தவர்களை இணைந்து இருக்க வைத்தது போலவே பெரும்பாலானவர்களின் பாலியல் வாழ்க்கையில் சற்றுப் புயலைக் கிளப்பியிருக்கிறது என்பது நம்ப முடியாத உண்மை.

இப்போதைய வீடுகள் ஒரு படுக்கையறை, அதிகபட்சமாக இரண்டு படுக்கையறைகள் கொண்டவையாகத் தான் இருக்கின்றன. பெற்றோர் உடனிருக்கும் இணையர், தங்களது குழந்தைகளை அவர்களுடன் உறங்க வைப்பர். இல்லாதவர்கள் தங்களுடனே உறங்க வைக்க வேண்டும். இதனால் தம்பதியினரின் அந்தரங்க வாழ்வில் இடைவெளி விழுகிறது. சிடுசிடுப்பும் எரிச்சலும் அதிகமாக அவர்களை ஆக்கிரமித்து விடுகிறது. இது அவர்களின் அன்றாட செயல்பாடுகளில் எதிரொலிக்கிறது.

என் தோழிக்குத் தெரிந்தவரின் வீட்டில் அவர்களது மகன் தாயுடனே உறங்குகிறான். கணவரால் மனைவியை நெருங்க முடியவில்லை. இதனால் தினமும் அவர்களிடையே வாக்குவாதம். கணவர் குடிக்கத் தொடங்கி விட்டார். கணவன், மனைவி, குழந்தைகள் மட்டும் என்றிருக்கும் வீடுகளில், குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் தனிமையில் உறங்கப் பழக்க வேண்டும்.

இது போன்ற பிரச்னையின் விளைவாக மூன்றாம் நபர் உள்நுழையும் பேரபாயமும் இருக்கிறது. இதைத் தவிர்க்க கணவனும் மனைவியும் தங்களுக்குள்ளான அந்தரங்கத் தருணங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தம்பதியினரிடையே ஒருவர் மேல் ஒருவருக்குச் சலிப்பு ஏற்படும் போல் இருந்தால் அவர்கள் உஷாராக வேண்டிய நேரம் அது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அது போன்ற சமயங்களில் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசிப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். ஒருவரின் விருப்பு, வெறுப்பை இன்னொருவரிடம் அன்பாக, இதமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அதேபோல் அவர் சொல்வதையும் பக்குவமாகப் புரிந்துகொள்ள முயல வேண்டும். குடும்ப உறவுகளின் அஸ்திவாரமும் கட்டமைப்பும் இணையரின் ஒற்றுமை தான். புரிதலும் மன முதிர்ச்சியும் கூடிய தாம்பத்தியத்தில் தான் மகிழ்ச்சி பெருகும்.

பொருளாதாரப் பிரச்னை, வறுமை, வேலையின்மை என்று புறக்காரணிகளின் அழுத்தத்தில் இருக்கும் தம்பதியினர்கூட மகிழ்வான வாழ்வை அனுபவிப்பார்கள். எல்லா வசதிகளும் இருப்பவர்கள் சிக்கலான தாம்பத்தியத்தில் இருப்பார்கள். அதற்கு முக்கியக் காரணம் மனரீதியான நெருக்கம் தான் என்பதில் சந்தேகமில்லை. தங்களது உறவில் ஈகோ தலைதூக்கி விடாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இருவருக்குமே இருக்கிறது.

கணவரிடம் அன்பான வார்த்தைகளையே மனைவி எதிர்பார்க்கிறாள். மற்றதெல்லாம் அடுத்த பட்சம்தான். யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் பேசுவதைம், வெளியே சேர்ந்து போவதையும் அதிகம் எதிர்பார்ப்பாள். எந்த ஒரு சிறிய விஷயத்தையும் தன்னிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று நினைப்பாள். தான் செய்யும் ஒரு சிறிய விஷயத்தைக்கூடக் கவனித்துப் பாராட்ட வேண்டும் என்று ஆசைப்படுவாள்.

அதேபோல் கணவனும் மனைவியிடம் தன்னை அடுத்தவருடன் ஒப்பிடக் கூடாதென்று நினைக்கிறான். குடும்பப் பிரச்னைகளை வெளியே சொல்லக் கூடாது என்று எதிர்பார்க்கிறான். தனது சம்பளத்தில் குடும்ப நிர்வாகத்தைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறான். இதுபோன்ற விஷயங்களை இருவரும் ஒளிவுமறைவு இல்லாமல் பேசிக்கொள்ள வேண்டும். பரஸ்பர நம்பிக்கையுடன் இருவருமே நடந்துகொள்ள வேண்டும்.

ஒருவர் மீது ஒருவருக்குச் சலிப்பு வரும் சூழலில் தயங்காமல் ‘இரண்டாவது தேனிலவு’ சில நாட்கள் செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த நாட்களை இருவரும் முழுமையாகத் தங்களுக்கு மட்டுமே செலவிட வேண்டும். புதுத் தம்பதியர் மட்டுமே தேனிலவு கொண்டாட வேண்டும் என்றில்லை. பழைய தம்பதியர் கூடத் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள ‘செகண்ட் ஹனிமூன்’ செல்லலாம். ஒருவருக்கு மற்றவர் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்த வேண்டும்.

அவ்வாறு செல்லும் சூழ்நிலையில் உடன் யாரையும் அழைத்துச் செல்லாமல், குழந்தைகளைக்கூட நம்பிக்கையான இடத்தில் விட்டுவிட்டு குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்களாவது சென்று வர வேண்டும். மனதை அழுத்தும் பிரச்னைகளில் இருந்து விடுபடவும் புத்துணர்ச்சியோடு செயல்படவும் உதவக் கூடியதாக அந்த நாட்கள் அமைய வேண்டும். அப்போதுகூடத் தேவையில்லாத சிந்தனைகளில் உழலக் கூடாது. வாக்குவாதம், சண்டை, குறைகூறுதல் என்று செகண்ட் ஹனிமூனின் நோக்கத்தையே கெடுப்பது போல நடந்துகொள்ளக் கூடாது.

உடல்ரீதியாக இணைவதற்கு மட்டுமல்ல தாம்பத்தியம். மனரீதியான நெருக்கம் இருந்தால்தான் உடலும் ஒத்துழைக்கும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

இந்த இரண்டாம் தேனிலவில் விட்டுக் கொடுத்தல், சகித்துக் கொள்ளுதல், நேர்மறையான எண்ணங்கள், நகைச்சுவை உணர்வு, சிரித்த முகம் என்று இருந்தால் அது என்றென்றைக்கும் மறக்க முடியாத அழகிய தருணங்களாக நினைவில் படிந்திருக்கும். பாதுகாப்பு உணர்வு ஏற்படும்படி நடந்துகொள்வது மிகவும் அவசியம். அப்படி இருந்தால் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது என்று தேனிலவுக் காலங்களை அதிகரித்துக் கொண்டே போகலாம். அது அவரவர் சூழ்நிலையைப் பொறுத்தது.

புது இடங்கள், புது மனிதர்கள், முற்றிலும் புதிய சூழலில் அன்றாட வேலைகள் இல்லாது, கிடைக்கும் ஓய்வுப் பொழுதுகளை அர்த்தமுள்ளதாக்கிக்கொள்ள வேண்டும். வயதான பின்பு இதெல்லாம் எதற்கு என்பவர்கள் முதலில் அத்தகைய எதிர்மறை எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். பசி, தாகம், உறக்கம் போல தாம்பத்தியமும் இயல்பான, இயற்கையான ஒன்றுதான் என்று முதலில் உணர வேண்டும்.

அதேபோல் வயதானவர்களின் உணர்வுகளை அவர்களது குடும்பத்தினர் மதிக்க வேண்டும். ஆடை, அலங்காரம் செய்து கொண்டால், “இந்த வயசுல இதென்ன கூத்து?” என்றோ, “இதெல்லாம் தேவையா?” என்றோ கமெண்ட் அடித்து கேலி செய்யக் கூடாது. அவர்களது வாழ்வை வாழ அவர்களுக்கு முழு உரிமை உண்டு என்று புரிந்துகொள்ள வேண்டும். அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களுக்கும் அந்தரங்க வாழ்க்கை என்று ஒன்று உண்டு என்பதை உணர வேண்டும். இன்று கிண்டல் செய்பவர்களுக்கும் நாளை வயதாகும் என்பதை ஒருபோதும் மறக்கக் கூடாது. நடுத்தர வயதினர் மற்றும் முதியோரின் உணர்வுகளை கேலிக்கிடமாக்கக் கூடாது.

அந்தக் காலத்தில் வயதானவர்கள் கோவில், குளம் என்று ஷேத்ராடனம் சென்று விடுவார்கள். அதுதான் அவர்களுக்கு இரண்டாவது தேன்நிலவுக் காலம். அதுவரை தனிமை வாய்க்காதவர்கள் மனம் விட்டுப் பேச அதுவொரு வாய்ப்பாக அமைந்தது. இளமைக் காலத்தைவிட வயதான காலத்தில் தான் மனது துணையைத் தேடி விழையும். அதனால் அதுவோர் உளவியல் ரீதியான ஏற்பாடாக அமைந்தது. போக்குவரத்து வசதிகள் அதிகம் உள்ள இந்தக் காலத்தில் வயதாகும் வரை காத்திருக்கத் தேவையில்லை.

இல்லறம் என்பது அழகிய வீணை. அதில் இனிமையான ஸ்வரங்களை எழுப்புவதும் நரம்புகளை அறுத்து வீசுவதும் அவரவர் அதைக் கையாளும் விதத்தில் தான் இருக்கிறது. இணையருக்கு எத்தனை வயதானாலும் மனதை இளமையாக, நேசமுடன் வைத்துக் கொண்டால் எஞ்சிய நாட்களை இனிமையான நினைவுகளுடன் எளிதாகக் கடக்கலாம்.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.