கருச்சிதைவு அல்லது அபார்ஷன் உடல் ரீதியான பாதிப்புடன் நின்று விடுவதில்லை. கூடுதலாகப் பல பெண்களுக்கு மன உளைச்சலையும் பரிசளித்து செல்கிறது. கணவர், காதலன் அல்லது குடும்பத்தாரின் வற்புறுத்தல் காரணமாக விருப்பமின்றி கருவை கலைக்கும் பெண் குற்ற உணர்வுக்கு ஆளாவதுடன் அதன் காரணமான மன உளைச்சலை பல ஆண்டுகள் சுமக்கிறாள்.

சில பெண்களுக்குக் கருவுற்ற சில மாதங்களில் பல்வேறு காரணங்களால் தானாகக் கருச்சிதைவு நடக்கும் வாய்ப்பும் உண்டு. இது குழந்தையை எதிர்ப்பார்த்து கனவுகளோடு காத்திருக்கும் அந்தப் பெண்ணுக்குக் கடும் மனச்சோர்வையும் உடற்சோர்வையும் ஒருங்கே ஏற்படுத்தும். தானாகக் கருச்சிதைவு ஏற்பட்டாலும் மருத்துவ ஆலோசனையுடன் தகுந்த சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

அதே போல ஒரு பெண்ணின் மாதாந்திர சுழற்சி சரியாக இல்லை என்றால் குழந்தைப்பேறுக்காகப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அந்த மாதாந்திர சுழற்சியில் ஹார்மோர்ன்கள்தாம் முக்கியப் பங்காற்றுகின்றன. கர்ப்பம் தரிப்பது கடவுளின் அருள் என நம்பும் பெரும்பான்மை மக்கள், அதற்குக் காரணமான மாதவிடாயைத் தீட்டு எனத் தூற்றி, அந்தச் சமயத்தில் சாமி காரியங்கள் மட்டுமல்லாது, வீட்டு விசேஷங்களிலும் பங்கேற்க கூடாது என ஒதுக்கி வைப்பதும், மாதவிடாய் பெண்கள் தலைக்கு குளித்தே ஆக வேண்டும் என்பதில் ஆரம்பித்து அவர்களைத் தனியாக்குவது வரை அவர்களை மன உளைச்சலுக்குள்ளாக்கும் அத்தனை செயல்களையும் செய்கிறோம்.

கரு உண்டாவது கடவுளின் செயல் என்றால், அதற்குக் காரணமான மாதவிடாயை வெறுப்பதும் தூற்றுவதும் எதனால்? ஹார்மோர்ன்களின் செயல்பாட்டால் மாதா மாதம் கருமுட்டை உருவாகி இயற்கையாக வெளியேறும் அந்த நிகழ்வு இல்லையென்றால் கரு உருவாதல் சாத்தியமா? பெண்ணின் உடலில் இயற்கையாக நிகழும் இந்த ஹார்மோர்ன் சுழற்சியை மாத்திரைகள் மூலம் குலைப்பது சரியா?

பெட்டிக் கடைகளில் தலைவலி மாத்திரை வாங்குவது போல, கல்யாணமா, காது குத்தா, கிடா வெட்டா, குல தெய்வ வழிபாடா, தீபாவளியா, பொங்கலா எந்தப் பண்டிகை என்றாலும் பெண்கள் உடனடியாக மாத விலக்குத் தள்ளிப் போகும் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி வாங்கிச் சாப்பிடுகின்றனர். நாள் கணக்கில் ஆரம்பித்து வாரக் கணக்கில் எந்த மருத்துவ ஆலோசனையும் இன்றி உட்கொள்ளுவதால் ஹார்மோன்களின் மாற்றங்கள், உடல் நலத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி துளிக்கூட அக்கறை காட்டுவதில்லை. அதுமட்டுமன்றி அந்த மாத்திரை யார் யார் உட்கொள்ளலாம், கூடாது என்பதை மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால் சில மெடிக்கல் ஹிஸ்டரி இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த மாத்திரைகளை மருத்துவ ஆலோசனையின்றி எடுத்துக்கொண்டால் அதன் பாதிப்புகளும் பக்க விளைவுகளும் மிக மோசமானதாக இருக்கும்

மாதவிடாய் அசுத்தமானதில்லை. அதேபோல மாதவிடாய் காலங்களில் உங்களைத் தள்ளி வைக்கிறேன், பண்டிகை கொண்டாடக் கூடாது என எந்தக் கடவுளும் கூறவில்லை. மனிதர்கள் உருவாக்கிய நம்பிக்கைகளுக்குக் கடவுளை பொறுப்பாளியாக்கலாமா? மாதவிடாயைக் கரித்துக் கொட்டி, மாதவிடாய் பெண்களை ஒதுக்கி, மன உளைச்சலுக்குள்ளாக்கி அழகு பார்க்கும் இந்தச் சமூகம் கரு உருவாவதைக் கொண்டாடுவது மிகப்பெரிய முரண் இல்லையா?

சரி, கருத்தடைக்கு வருவோம். கர்ப்பம் தரிப்பது கடவுளின் அருள், இயற்கையின் கொடை என்பதெல்லாம் போய், அதனை மனிதனின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து பல ஆண்டுகள் ஆகின்றன. விஞ்ஞான வளர்ச்சியில் கருத்தடை மாத்திரைகளும் கருத்தடை சாதனங்களும் பெண்களுக்குத் தொடர் பிள்ளைப்பெறுவதில் இருந்து ஓய்வு அளித்தன. அதன் விளைவாகத் திருமணமாகி குழந்தைப் பெற்ற பெண்களும் பல துறைகளில் வெகுவாக முன்னேறி வருகின்றனர். இருப்பினும் நமது குடும்ப அமைப்பில் குழந்தை பிறப்பு என்பதும் பெரும்பாலும் சம்மந்தப்பட்ட பெண் அல்லது அவளது துணையின் முடிவாக இருப்பதில்லை. குடும்பம் மற்றும் சமூக நிர்பந்தமாகதான் இன்றளவும் தொடர்கிறது.

ஆண்களுக்கான ஆணுறை போல பெண்களுக்கான பெண்ணுறையும் தற்போது நடைமுறையில் உள்ளது என்றாலும் அது பரவலாகப் பலரைச் சென்று அடையவில்லை. ஆண் உடலுறவின் போது அணிவது போலே, பெண்ணும் உடலுறவுக்கு முன் இதனைத் தனது பிறப்புறுப்பில் பொருத்திக்கொள்ளலாம். இது பிறப்புறுப்புக்குள் விந்தணுக்கள் நுழைவதைத் தடுக்கிறது. இதனால் கரு உண்டாவதும் தடுக்கப்படுகிறது.

ஆனால், பெண்ணுறைகள் அணிவதற்குச் சற்றுக் கடினமாகவே இருக்கும் என்பதுடன் சரியாக பொருத்தவில்லை என்றால் விந்தணுக்கள் உட்புகுதலைத் தடுக்கவியலாது. அணிவதில் இருக்கும் சிரமம் அதை வெளியே எடுக்கவும் தேவைப்படலாம். அதே போல இந்த உறைகள் கிழிந்து விட்டாலும் அதன் உபயோகம் பலனற்றதாகிவிடும்.

கருத்தடைக்காகப் பயன்படுத்தும் ஹார்மோர்ன் மாத்திரைகள் பக்க விளைவு இல்லாதது என மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும், உலகெங்கும் பலர் இதனை கருத்தடைக்காகப் பயன்படுத்தினாலும், சில பெண்களுக்கு ஹார்மோர்ன் மாத்திரைகள் உயர் ரத்த அழுத்தம், உடல் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது. நான் ஆறு மாதங்கள் இந்த மாத்திரைகள் எடுத்தபோது எட்டு கிலோ வரை எடை அதிகரித்தது.

இந்த மாத்திரைகளை மாதவிடாயின் மூன்றாம் நாள் தொடங்கி 21 நாட்கள் தொடர்ச்சியாக உட்கொள்ள வேண்டும். அதுவும் தினமும் ஒரே நேரத்தில் உட்கொள்ள வேண்டும், ஒரு நாள் தவறவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவர் கூறியவாறு கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இப்போது கரு உருவாகாமல் தடுக்க ஊசி போன்றயும் இருப்பதால், கைனகாலஜிஸ்ட் உங்கள் உடலிற்கு எந்த வகை பரிந்துரைக்கிறாரோ அதைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.

பாதுகாப்பான கருத்தடை வழிமுறைகள் பின்பற்றியும் மாதவிடாய் தவறவிட்டால், பரிசோதனைகள் மூலமாக ஒரு வாரத்திற்குள்ளாகவே கருவுற்று இருப்பதைக் கண்டறிந்து, மருத்துவ ஆலோசனை மூலமாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

இது தவிர்த்து உடலுறவு முடிந்து அடுத்த 24 மணி நேரத்துக்குள் பெண்கள் எடுத்துக்கொள்ளும் அவசர கர்ப்பத்தடை மாத்திரையும் கரு உருவாகும் வாய்ப்பை ஓரளவு தடுக்கும் என்றாலும், அதில் தோல்விக்கான வாய்ப்பும் உண்டு.

இந்தக் கருத்தடை மாத்திரை தவிர்த்தும் மூன்று மாத இடைவெளியில் போட்டுக்கொள்ளும் கருத்தடை ஊசி கரு உருவாதலை தவிர்ப்பதோடு, பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பை அடர்த்தியாக்கி விந்தணு கருப்பை நுழைதலைத் தடுக்கும். இதுவும் பரவலாக உள்ள நடைமுறைதான்.

அதேபோல காப்பர் டி மிகவும் பாதுகாப்பான கருத்தடை முறையாக அதிகளவு நடைமுறையில் இருந்து வருகிறது. மாத்திரைகள், ஆணுறை, பெண்ணுறை, ஊசி போன்றவற்றில் தோல்விக்கான வாய்ப்புகளைவிட காப்பர் டி யில் தோல்விக்கான வாய்ப்பு இல்லை என்றே கூறலாம். அத்துடன் இது நீண்ட கால கர்ப்பதடைக்கு உதவுகிறது.

இந்த முறையில் பெண்ணின் கருப்பைக்குள் ஒரு டி போன்ற உலோகம் மருத்துவர்களால் பொருத்தப்படுகிறது. இந்தக் கருத்தடை முறை பெரும்பாலும் முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடையிலான இடைவெளிக்காகப் பின்பற்றப்படுகிறது. இதனை சரியான இடைவெளியில் மாற்ற வேண்டும் என்பதுடன், ஏதேனும் அசெளகரியம் இருந்தால் உடனடி மருத்துவ ஆலோசனையும் அவசியம். ஏனென்றால் இது சரியாகப் பொருந்துவதற்குச் சிலருக்கு இரண்டு மூன்று மாதங்கள்கூட ஆகலாம். சிலருக்கு காப்பர் டி நகர்ந்து விடுவதும் உண்டு. இதன் காரணமாக அதீத உதிரப்போக்கு, கடுமையான வயிற்று வலி அனுபவித்த பெண்களும் உண்டு.

என் சித்தி மகளுக்கு காப்பர் டி அணிந்து சரியாகப் பொருத்தப்படாமல், அவரும் சரியாகக் கவனிக்காமல் விட்டு, வலியில் அவஸ்தைப்பட்டு, பின் கர்ப்ப்பையை எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. ஆக யார் உடம்புக்கு எந்தக் கருத்தடை ஒவ்வாமை உண்டாக்கும் என்பதும் அறுதியிட்டுக் கூற முடியாது.

கரு உருவானதில் இருந்து ஏற்படும் அத்தனை உபாதைகளும் பெண்ணுக்கானதுதான் என்பதுடன், இன்றைய நவீன யுகத்திலும்கூட கருத்தடை உபாதைகள் அதிகம் பெண்ணுக்கானதாகவே இருப்பதை என்னவென்று சொல்வது?

ஆணுறை கருத்தடை சாதனம்தான் என்றாலும் அதில் தோல்விக்கான சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன. ஆனால், தற்காலிகமான கருவுறுதலைத் தடுக்க ஆணுக்கான மாத்திரைகளோ ஊசிகளோ ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை? ஏன் அது குறித்த ஆராய்ச்சி பரவலாக்கப்படவில்லை? கரு உருவாதலில் ஆண், பெண் இருவருக்கும் சமபங்கு இருக்க, அது குறித்த அனைத்து உடல் உபாதைகளும் பெண்ணுக்கானதாகத் தொடர்ந்து வருவது எதனால்? பெண் உடல்தான் கருத்தடை ஆராய்ச்சிக்கு உகந்ததா?

தற்காலிக கருத்தடையில் ஆணுறை தவிர வேறு எதுவும் தற்போது நடைமுறையில் இல்லை என்றாலும், மிக எளிமையாகச் செய்யப்படும் ஆண்களின் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையான வாசக்டமி ஏன் குறைந்த அளவில் மேற்கொள்ளப்படுகிறது? நன்கு படித்த ஆண்களும் ஏன் வாசக்டமி செய்து கொள்வதில்லை? பெண்களே ஆண்கள் வாசக்டமி செய்து கொள்ள வேண்டாம் என்று கூறுவது எதனால் என்பதை அடுத்து பார்ப்போம்.

(தொடரும்)

படைப்பாளர்:

கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.