அரசியல் என்பது ஆண்களுக்கு மட்டுமே ஆனது என்று நிறைய ஆண்களும், ஆணாதிக்க சிந்தனை மட்டுமே கொண்ட பெண்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்ணோ ஆணோ யாராக இருந்தாலும் அரசியல் குறித்து அறிந்திருக்க வேண்டும். நாம் அரசியலில் நுழையவில்லை என்றால், அரசியல் நம் வாழ்க்கையில் நுழைந்துவிடும் என்கிற உண்மையைத் தெரிந்து இருக்க வேண்டும். நம் எல்லோர் வாழ்விலும் அரசியல் பின்னிப் பிணைந்துள்ளது. அரசியலில் நுழைந்து தலைவர்களாவது அடுத்த விஷயம். முதலில் அடிப்படை உரிமையான ஓட்டுப் போடுவதை எத்தனை பெண்கள் சரியாக நிறைவேற்றுகிறார்கள்?.

இன்னும் இந்த நாட்டில் எத்தனை பெண்களுக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமையும், அறிவும், தெளிவும் கிடைத்திருக்கிறது? அப்பாவோ அல்லது கணவனோ சொல்லும் கட்சிக்குத்தான் நிறையப் பெண்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டுப் போடுவதில்கூடத் தனக்கென்று ஒரு சுயமான முடிவை எடுக்க இயலாத சூழ்நிலையில்தான் நம் பெண்களை இந்தச் சமுதாயம் இன்னும் வைத்திருக்கிறது. இதோ வந்துவிட்டது மக்களவைத் தேர்தல். இதில் எத்தனை பெண்கள் போட்டியிடப் போகிறார்கள்?.  முதல் முறை வாக்களிக்கும் பெண்கள் எத்தனை பேர் முழுமையான அரசியல் தெளிவோடு வாக்களிக்கப் போகிறார்கள்?. நமக்கான கல்வியறிவு, பொருளாதார சுதந்திரம், பகுத்தறிவு, வாழ்க்கை மேம்பாடு, வேலை வாய்ப்பு போன்றவற்றை யார் உருவாக்கித் தர வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று தெரிந்து, தெளிந்து வாக்களிக்க வேண்டும். அதற்காக அரசியல் குறித்து நாம் நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும். நாம் அரசியல் பேசாமல் நமக்கான உரிமைகளையும் வாய்ப்புகளையும் ஒருபோதும் பெற முடியாது.

பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் இருந்த மதராஸ் மாகாணத்தில் முதன் முதலாக 1921இல் பெண்களும் வாக்களிக்கலாம் என்கிற சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் சொத்து வைத்திருக்கும் பெண்கள் மட்டுமே வாக்களிக்கும் நிலை இருந்தது. அதன் பின்னரே 1928இல் இங்கிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது,

1944இல் பிரான்ஸிலும் 1945இல் இத்தாலியிலும் பெண்களுக்கான வாக்களிக்கும் உரிமை மசோதாக்கள் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேற்றப்பட்டன.  படிப்பறிவு பெற்ற பெண்கள்கூட அரசியலுக்கு வர இன்னும் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியலில் ஈடுபட வேண்டும் என்றாலே செலவு செய்தால்தான் இயலும் என்கிற நிலைதான் இன்றும் இருக்கிறது. மக்களுக்கு சேவை செய்வது குறித்து எதுவும் யோசிப்பது இல்லை. இது கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை. அரசியலில் ஈடுபடும் பெண்கள் குறித்த விமர்சனங்கள் இன்றளவும் அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றன. பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகும் சூழலை அரசியல் தருவதால் அதில் ஈடுபடும் பெண்களின் நடத்தை குறித்த கேலி, கிண்டல்களை இன்றளவும் மக்கள் மாற்றிக் கொள்ளவில்லை என்பது மிகப் பெரிய அவலம் மட்டுமல்ல கேவலமும்கூட. அப்புறம் கால, நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டும், வெளியூர்களுக்குப் பயணப்பட வேண்டும் என்பதால் குழந்தைகள், கணவர், வீட்டுப் பராமரிப்பு, சமையல் போன்ற காரணங்களுக்காக அவர்கள் தயங்குகிறார்கள் என்பது முகத்திலறையும் நிஜம். வீட்டுப் பொறுப்பை இருபாலாரும் பகிர்ந்து கொள்ளும் போது நிச்சயம் பெண்களும் வீட்டுக் கவலையின்றி அரசியலில் முழுநேரமும் ஈடுபடலாம். ஆனால் அதற்கான சூழ்நிலையை இந்தச் சமுதாயம் உருவாக்கி வைத்திருக்கிறதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

நாடாளுமன்றங்களில் பெண்கள் என்பது குறித்த உலகளாவிய தர வரிசையில் 193 நாடுகளில் இந்தியா 144வது இடத்தில் இருக்கிறது. ஆண் அரசியலில் ஈடுபடும்போது சகல சௌகரியங்களும் செய்து கொடுக்கும் பெண்கள் அரசியலில் ஈடுபட நினைத்தாலே தடை போடுவது எத்தகைய கயமைத்தனம். சோழ மன்னன் ராஜராஜன் அரசாளும் போது அவரது தமக்கை குந்தவை நாச்சியார் அரசாங்கப் பொறுப்புகளில் பங்கெடுத்துக் கொண்டார் என்று வரலாறு கூறுகிறது. ஜஹாங்கிரின் மனைவியான மெஹர்-உன்-நிஷா உலகின் ஒளி என்று பொருள் படும் நூர்ஜஹான் என்று பெயர் சூட்டிக்கொண்டு அரசப் பதவி வகித்ததை நாம் அறிவோம். அந்தக் காலத்திலேயே அரசுப் பொறுப்பேற்ற பெண்களை இன்றைய சூழலில் முடக்கி வைத்தது எது என்று எல்லாரும் சிந்திக்க வேண்டும். இடைக்காலத்தில் பெண்களைச் சமயமும் ஆணாதிக்கமும் அடக்கி வைத்த இருண்ட காலம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் பெற்று வருகிறது.

பெண்கள் எத்தகைய உயர்பதவி வகித்தாலும் அவர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை என்பது இன்னொரு கசப்பான உண்மை. ஆணின் உடைமையாகப் பெண் கருதப்படும் வரையில் இந்தப் பிரச்னை ஓயாது. பெண்களுக்குப் பாலியல்ரீதியான பிரச்னைகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. அதைக் காரணம் காட்டி தடைகள் போடுதல் தவறு. நான் சந்தித்த நிறைய பெண்கள் அரசியல் குறித்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் இருக்கிறார்கள். இதில் படிக்காதவர்களைவிடப் படித்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

“நாம சம்பாதிச்சு, நாம சாப்பிடறோம். இதுல அரசியல் பத்தியெல்லாம் தெரிஞ்சு என்ன ஆகப் போகுதுங்க்கா” என்பதே பெரும்பான்மையோரின் பதிலாக இருக்கிறது. இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகப்பெறும் சவாலாகத்தான் இருக்கப் போகிறது என்று தோன்றியது. என் உறவினர் பெண் ஒருவர் வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் சார்ந்த கட்சி குறித்து எனக்கு அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் ஒரு பெண்ணாக அவர் துணிச்சலாகக் களத்தில் இறங்குவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. அவர் மீதும் எதிர்மறையான விமர்சனங்கள் எழத்தான் செய்கின்றன.

தோழியின் சகோதரி ஒருவர் வார்டு கவுன்சிலராக உள்ளார். ஆனால், அவரது பொறுப்பு முழுக்க அவர் கணவர்தான் பார்க்கிறார். இது எல்லாருக்கும் தெரியும். ஆனால், இதை இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இதுவே ஆண் கவுன்சிலராக இருந்து பெண் அவரது அதிகாரத்தில் தலையிட்டால், உடனே கேள்வி கேட்க வரும் அந்த நாலு பேர் இப்போது எங்கேதான் போயிருப்பார்கள்?.

விளிம்புநிலைப் பெண்களுக்கும் கடைநிலைப் பெண்களுக்கும் அரசியல் என்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டுமானால் பெண்கள் அனைவரும் கட்டாயம் கல்வி கற்றுப் பொருளாதார சுதந்திரத்தையும் பெற்றால்தான் முடியும். அது மட்டுமன்றி இவ்வாறு பொது வாழ்வில் ஈடுபடும் பெண்களை, பெண்களே தவறாகப் பார்ப்பதை முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும். அப்புறம் ஆண்களை மாற்றலாம். அரசியல் கட்சிகளில் இருக்கும் மகளிர் அணிகள் பெயரளவில்தான் இருக்கின்றன. நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை வருடங்களான போதிலும், இன்னும் 33 சதவீத இட ஒதுக்கீடு கேட்டுப் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம் என்பது பெருத்த அவமானம். பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் தேர்தலில் நிற்க முடியாமல் போனது. அதற்கு மாற்றாக அவரது மனைவி ராப்ரி தேவியை நிற்க வைத்து மூன்று முறை முதலமைச்சராகப் பதவி வகிக்கச் செய்தார் லல்லு பிரசாத் யாதவ். 1997 முதல் 2005 வரை ராப்ரி தேவி மூன்று முறை முதலமைச்சரானார். ஆனால். பத்திரிகையாளர்கள் அவரைப் பார்க்க சென்றபோது அவர் பின்கட்டில் அமர்ந்து பாத்திரம் விளக்கிக்கொண்டிருந்ததாக எழுதி இருக்கிறார்கள். அவருக்குப் பதிலாக அவரது கணவர்தான் முதலமைச்சர் பதவியை வகித்து வந்தார் என்பது கண்கூடாக நடந்த அவலம். அப்போது இது குறித்து கேள்வி கேட்க எந்தச் சமூக ஊடகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் துணிச்சல் இல்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால் பெண்களால் ஆட்சி செய்ய முடியாது அவர்கள் பாத்திரம் கழுவத்தான் லாயக்கு என்கிற எண்ணம் அவர்கள் அடி மனதில் ஆழமாகப் பதிந்து கிடப்பதால்தான் எதிர்ப்புக் குரல் எதுவும் எழும்பாமல் போனது. நீட்டிய கோப்புகளில் காட்டிய இடத்தில் கையெழுத்துப் போடுவதை மட்டுமே அவர் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். பெண்கள் என்றாலே இப்படித்தான் என்கிற எண்ணம் ஆணாதிக்க சமுதாயத்தில் மேலும் வலுப்பெற இதுவும் ஒரு காரணம். காலங்காலமாக ஒடுக்கப்பட்ட பெண்ணினம் தன்னை மீறிச் சென்றுவிடும் என்கிற அச்சம் ஆணாதிக்கத்திடம் அப்பட்டமாகத் தெரிகிறது.

கடலூர் மாவட்டத்தில் புவனகிரிக்கு அருகே உள்ள தெற்குத் திட்டை என்கிற ஊரில் ஊராட்சி மன்றத் தலைவி தலித் என்கிற காரணத்தால் தரையில் அமர வைக்கப்பட்டிருக்கிறார். அவரது பதவியின் மதிப்பும் அவரின் பொறுப்பு குறித்தும் யாருமே சட்டை செய்யவில்லை. ஏனெனில் பெண்களுக்குச் சிந்திக்கும் திறன் குறைவு என்று சொல்லும் அரைவேக்காடுகள் நிறைந்த சமூகம் இது. கட்சி மாநாடு, அரசியல் கூட்டங்கள் என்றாலே பெண்கள் அதிகம் வருவதில்லை. இதற்கு முக்கியக் காரணம் அவர்களுக்குப் புழங்குவதற்கு ஏதுவாக பொதுவெளி இருப்பதில்லை. போக்குவரத்து வசதி, பாதுகாப்பான தங்குமிடங்கள், அத்தியாவசியமான கழிப்பறைகள் போன்றவை இருப்பதில்லை. ஆண்களுக்குக் கழிப்பறை தேவையில்லை என்றே ஆண்டாண்டு காலமாகப் ‘பழக்கி’ வைத்திருக்கிறார்கள். இந்த வசதிகளையெல்லாம் செய்தால் பெண்கள் கூட்டமும் பங்கேற்க இயலும்.

அதேபோல் பெண்கள் ஈடுபடும் அரசியலில் அவர் குடும்பத்து ஆண்களின் தலையீடு அறவே தவிர்க்கப்பட வேண்டும். பெண் தனக்கான சுய அடையாளத்தை உருவாக்க வேண்டும். தனித்த பெண் ஆளுமையாக இருக்கும் போதுதான் பெண்ணுக்காக முழுமையாக அவள் சிந்திக்க முடியும். ஆணின் கண்ணோட்டத்தில் பெண்களின் பிரச்னைகள் முழுவதும் ஒருபோதும் தீர்க்கப் படாது. அப்படி ஒரு நிலைமை வேண்டுமானால் பெண்கள் சகஜமாகவும், தீவிரமாகவும் கட்டாயம் அரசியல் குறித்துப் பேசியே ஆக வேண்டும். வீட்டைச் சிறப்பாக நிர்வகிக்கும் பெண்கள் கட்டாயம் நாட்டையும் திறம்பட நிர்வகிப்பார்கள்.

வாழ்க்கை தோசை மாவு மாதிரி. தான், தனக்கு என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் வேகும் இட்லிக்கு அதிகம் மதிப்பு கிடையாது. ஆனால், பரந்து விரிந்து வேகும் தோசை அதிக விலைக்கு விற்கிறது. அதைப்போல வாழ்க்கையிலும் நமது சிந்தனையும் கண்ணோட்டத்தையும் குறுகிய வட்டத்துக்குள் அடைத்து விடாமல், பரந்து விரிந்து பார்க்கும்போது வாழ்க்கை மிகவும் அழகாக, விலைமதிப்பு மிக்கதாக அமையும் என்பது உண்மைதானே! தைரியமாகப் பெண்கள் பொதுவெளிக்கு வரவேண்டும். அன்றாட நிலவரங்கள் குறித்துச் செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாகத் தெரிந்துகொள்ள வேண்டும். சீரியல்களில் மூழ்கி விடாமல் உலக நடப்புகள் குறித்துத் தெரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். நாடும் வீடும் வேறல்ல என்று சிந்திக்கத் தொடங்குதலே பெரிய வெற்றிதான். முப்பத்து மூன்று சதவீதம் வேண்டாம். ஐம்பது சதவீதம் இட ஒதுக்கீட்டுக்குக் குரல் கொடுப்போம்.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ என்கிற நூல்களாக வெளிவந்திருக்கிறது.