மர்மயோகி 1951ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். தலைப்பு போட்டதும் கதை மற்றும்  வசனம், A S A சாமி எனப் போடுகிறார்கள். அடுத்துப் பாடல் இயற்றியவர் K. D. சந்தானம், கண்ணதாசன் (கண்ணதாஸன்) எனப்  போடுகிறார்கள். 

பின் நடிகர் நடிகைகள் பெயர் போடுகிறார்கள்

நடிகர்கள் 

M G ராமச்சந்தர் -கரிகாலன் 

எஸ்.வி.சஹஸ்ரநாமம் -வீராங்கன் 

செருகளத்தூர் சாமா – ராஜா, மர்மயோகி

N .சீதாராமன்- புருஷோத்தமன்  

S A நடராஜன்- பைசாச்சி

MN .நம்பியார் -நல்லதம்பியாக 

LR முதலியார் -பகவதியாக 

நடிகைகள் 

அஞ்சலி தேவி ஊர்வசி

மாதுரி தேவி கலாவதி

M .பண்டரி பாய் வசந்தா 

M S M பாக்யம் நல்லம்மா 

M. சோமசுந்தரம் தயாரித்து, K ராம்நாத் இயக்கி இருக்கிறார்.

மனைவியை இழந்த மன்னர்; அவருக்கு இரண்டு குழந்தைகள். வெளியூரில் இருந்து வந்த நடனமாடும் ஊர்வசி என்கிற பெண்ணை அவர் மணக்க நினைக்கிறார். முதல் மனைவியின் அண்ணன் புருஷோத்தமன்தான் நாட்டின் தளபதி. அவர், இந்தத் திருமணத்தை எதிர்த்துத் தன் பதவியைவிட்டு நீங்கிச் செல்கிறார். 

திருமணமும் நடக்கிறது. ஊர்வசி, தனது காதலன் தூண்டுதலால் மன்னரைக் கொல்கிறாள். அதோடு நிற்காமல், அரசரின் குழந்தைகள் மற்றும் தளபதியின் மகள் தூங்கிக்கொண்டிருந்த மாளிகைக்கும் தீ வைக்கிறாள். 

ஊர்வசி அரசியாகிறாள். மர்மயோகி ஒருவர், அரசிக்கு வலது கரமாக இருந்து அனைத்து வேலைகளையும் செய்கிறார். அவரது மகன் வீராங்கன்தான் இப்போது தளபதி. அவரது மகள்தான் கலாவதி.

அரண்மனையில் நடைபெற்ற போட்டியிலே கலந்துகொள்ள யார் வேண்டுமானாலும் முன்வரலாம் என்றவுடன் குதிரையில் வந்து இறங்குபவர் கரிகாலன். கரிகாலன் வேறு யாரும் அல்ல; நம் எம்ஜிஆர்தான். அவர்தான் வெல்வார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? வென்ற அவர்,  கொடுங்கோல் புரியும் இவள் தரும் பரிசு வேண்டாம் என உதறித்தள்ளிச் செல்கிறார். 

வசந்தா என்கிற பெண், பைசாச்சியிடம் இருந்து தப்பிக் காட்டிற்குள் ஓடுகிறார். அப்போது எதிரில் வரும் புருஷோத்தமன் மீது, தன் குறுவாளை வேறு வீசுகிறார். அவர் கவசம் இட்டு வந்ததால் தப்பிக்கிறார். கரிகாலன் என்கிற நல்லவரைத் தேடி செல்வதாக வசந்தா புருஷோத்தமனிடம் சொல்கிறார். என் இறந்து போன மகள் உயிரோடு இருந்தால் இந்த வயதில்தான் இருப்பாள்.  வா அம்மா என அன்போடு புருஷோத்தமன் அழைத்துச் செல்கிறார். 

கரிகாலனிடம் வந்த வசந்தா, ஊர்வசி வசந்தாவின் அப்பாவைக் கொண்டு சென்றிருப்பதாகவும் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்றும் சொல்கிறார். கரிகாலன் தனது ஆள்களுடன் சென்று மீட்டு வருகிறார். 

வசந்தாவின் அப்பா ஏற்கெனவே புருஷோத்தமனிடம் அரண்மனையில் வேலை செய்தவர். ‘புருஷோத்தமன், நாடுகடத்தப்பட்ட பின், மன்னர் ஊர்வசியைத் திருமணம் செய்தார்; பின் ஊர்வசி மன்னரைக் கொன்றாள். அவரது பிள்ளைகளைக் கொன்றாள். பின் காதலனையும் கொன்றாள்’ என அவர் சொல்கிறார். புருஷோத்தமனுக்கு இவை தெரியாது என்பது போலத்தான் கதை வருகிறது. 

பின் ஏன், “என் இறந்துபோன மகள் உயிரோடு இருந்தால் இந்த வயதில்தான் இருப்பாள்” எனச் சொல்கிறார்? தன் மகள் இறந்தது எப்படித் தெரிந்தது என்கிற விளக்கம் கதையில் இல்லை.

மக்கள் ஒன்றும் செய்யவில்லையா என அவர் கேட்க, வசந்தாவின் அப்பா, ‘மக்கள் கிளர்ந்தார்கள். ஆனால், எங்கிருந்தோ வந்த மர்ம யோகி, ‘உண்மை தெரியாமல் அவளைக் கொன்றால், பாவம் ஒரு பக்கம் பழி ஒருபக்கம் என ஆகிவிடும் எனச் சொல்லி அவளைக் காப்பாற்றிவிட்டார். இப்போது அவர்தான் அவளுக்கு ஆலோசகர்’ என்கிறார். 

நாட்டை ஊர்வசியிடமிருந்து மீட்க அனைவரும் சூளுரைக்கிறார்கள். புரட்சி நடத்துகிறார்கள். வரி வசூலிப்பவர்களிடம் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். அரசி ஊர்வசி கரிகாலனைப் பிடிக்க உத்தரவிடுகிறாள். வீராங்கன் தன் தங்கை கலாவதியை கரிகாலனிடம் ஒற்று வேலை செய்ய அனுப்புகிறார். இருவரும் காதலிக்கிறார்கள். 

அவ்வப்போது பேய் வந்து அரசி ஊர்வசியைப் பயமுறுத்துகிறது. இறுதியில் அரசி, புரட்சிக்காரர்கள் கையில் சிக்குகிறாள். பேய் வந்து பயமுறுத்த தனது குற்றத்தை ஒப்புக்கொள்கிறாள். அவள் தூக்கிலிடப்படும்போது, வீராங்கனின் படை உள்ளே நுழைந்து அவளைக் காப்பாற்றுகிறது. 

வீராங்கன் இவற்றுக்கெல்லாம் தனது தந்தை உதவியதை அறிந்து மர்மயோகியையும் கைது செய்கிறார். அரசி ஊர்வசி. தனது அரியணைக்குத் திரும்பி, மர்மயோகி, கரிகாலன் முதலான அனைவரையும் தூக்கிலிட உத்தரவிடுகிறாள். 

மர்மயோகி, தான்தான் மன்னர் என்பதை வெளிப்படுத்துகிறார். கரிகாலன் மற்றும் வீராங்கன் தனது பிள்ளைகள் என்றும் கலாவதிதான் புருஷோத்தமன் மகன் என்றும் கூறுகிறார். தண்ணீரில் மூழ்கடித்தபோது, யோகம் கற்று இருந்ததால், மூச்சை அடக்கிப் பிழைத்ததாகக் கூறுகிறார். தான்தான் குழந்தைகளையும் காப்பாற்றியதாகச் சொல்கிறார். 

ஊர்வசி இறக்க, ஆட்சி சிறப்புறுகிறது எனத் திரைப்படம் நிறைவு பெறுகிறது.

எடுத்தவுடன் வசந்தா என்கிற பெண், பைசாச்சியிடம் இருந்து தப்பிக் காட்டிற்குள் ஓடுகிறார். கரிகாலன் என்கிற நல்லவரைத் தேடி செல்வதாக வசந்தா சொல்கிறார். அவரைப் பற்றி புகழ்ந்து தள்ளுகிறார். கரிகாலன் அவருக்கான இவ்விதமான, உரையாடலை  முதலில் எழுதியவர் A S A சாமி என நினைக்கிறேன். எம்ஜிஆர் ஃபார்முலாவின் முதல் படம் எனச் சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை எம்ஜிஆர் ஃபார்முலா திரைப்படங்களில் மிகச் சிறந்த திரைப்படம் எனச் சொல்லலாம். மிகவும் இளம் வயது என்பதால், அவரது உடலும் இணைந்தே ஒத்துழைக்கிறது. மிகவும் இயல்பாக நன்றாக நடித்துள்ளார். சண்டைக்காட்சிகள், அரண்மனையின் உள்ளே இருக்கும் மேல் மாடியில் இருந்து மண்டபத்திற்கு கயிறு பிடித்து இறங்கி வரும் காட்சிகள் எல்லாம் அவ்வளவு அற்புதமாக இருக்கின்றன. வசனம்கூட அவ்வளவு அழகாக இருக்கிறது. அவரது திரையுலக வாழ்வின் மிகச் சிறப்பான திரைப்படங்களுள் இதுவும் ஒன்று.

அஞ்சலி தேவிதான் வில்லி. அப்போதைய முன்னணிக் கதாநாயகிகளுள் ஒருவராக இருந்த அவர், வில்லியாக நடித்திருப்பது வியப்புதான். 

WR சுப்பராவ் தந்திரக் காட்சிகள் அமைத்துள்ளார். அந்தக் காலகட்டத்திற்கு மிகவும் சிறப்பான காட்சியமைப்பாக இருந்திருக்க வேண்டும். பேயாக மன்னர் வரும் காட்சிகளுக்காக இத்திரைப்படம் A சான்றிதழ் பெற்று உள்ளது. 

(தொடரும்)

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.