வசந்தா தனியாக வாழ்ந்துவந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண். மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கும் இந்தச் சமுதாயத்தில் எல்லாராலும் விரும்பப்பட்ட ஒரு கலங்கம் இல்லாத குழந்தை இதயம். அவர்களால் எப்பொழுதும் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. வசந்தாவின் கணவன், இவள் மனநலம் பாதிக்கப்பட்டவள் என்று காரணம் சொல்லி, ஊரை நம்ப வைத்துவிட்டு, இவளின் குழந்தை ஆண் என்பதால், குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு, வேறு ஒரு பெண்ணை மணந்துகொண்டான். வசந்தா, பதினாறு வீடுகள் கொண்ட அடுக்கு மாடியில், ஒரு வீட்டில் தனியாக வாழத் தொடங்கினாள்.

அவளின் கணவன் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வந்து செல்வான். அவன் வரும் பொழுதெல்லாம் வசந்தாவிற்கு மொட்டை அடித்துவிட்டுச் செல்வான். அவள் பொட்டு வைக்க, பூ வைக்க, அலங்காரம் செய்துகொள்ள அனுமதிக்க மாட்டான். காரணம் ஒன்றுதான், அவன் வேறு திருமணம் செய்துகொண்டாலும், இவள் மட்டும் வேறு துணையைத் தேடக் கூடாது. கடைசி வரை அவனின் மாஜி மனைவியாக மட்டுமே வாழ வேண்டும்.அவன் மட்டும் இரண்டாவது மனைவி, இரண்டு பெண் குழந்தைகள், வசந்தாவின் ஆண் குழந்தையுடன் வாழ்ந்துவந்தான்.

வசந்தாவை எல்லோரும் மொட்டை அக்கா என்று ஆசையாக அழைப்பர். மொட்டையின் வலி வசந்தாவிற்கு மட்டும்தான் தெரியும். அவளுக்குத் தன்னை அலங்காரம் செய்துகொள்ள மிகவும் பிடிக்கும். தினமும் தலைவாரி, பவுடர் பூசி, கண்களுக்கு மைதீட்டி, நகைகளை அணிந்துகொண்டு, நேர்த்தியாகப் புடவையையும் அணிந்துகொள்வாள். பூக்காரர் குள்ளக்காவின் மிச்சமான பூக்கள் எல்லாம் வசந்தாவின் மொட்டைத் தலைக்கு மட்டுமே! மொட்டைத் தலையில் எப்படிப் பூவைப்பது, கையில் பிடிக்கும் அளவுக்கு முடி வளர்ந்தால் போதும், நீளமான சவுரி முடியுடன் சேர்த்து வைத்துப் பின்னிக்கொண்டு, தலை நிறைய பூவைத்துக் கொள்வார். ரோஜாக்களை இடையில் சொருகிக்கொண்டு, குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவார். கணவன் வரும் நாட்களில் மட்டும், வெறுமையின் கோலம்.

“ஏய், அனிதா இந்தக் கம்மல், வளையல், நெத்திச் சுட்டி எல்லாம் அழகாக இருக்கு, எங்கடி வாங்கின?.”

“மொட்டையக்கா எங்க அம்மாதான் வாங்கியாந்துச்சி எனக்குத் தெரியாது. மார்கெட்லதான் வாங்கியாந்துச்சு”.

“சரி சரி நா மார்கெட் போய் வாங்கிக்குறேன்.”

“ஏய், அனிதா இங்க பாத்தியா, நா வாங்கிடேன்.”

“எப்படிக்கா வாங்கினே? காசு ஏது?”

“அதான் நம்ம மார்கெட்ல நிறைய கடை இருக்கே, அந்த அண்ணாங்க கொடுத்த சில்லரையில வாங்கினேன். நா போய் கிழவி கடைல இட்லி துண்ணுட்டு வரேன், நாம விளையாடலாம் என்று சொல்லிக்கொண்டே கிழவி கடைக்குச் சென்றாள்.

“இன்னாடி, இன்னைக்கு உன் புருசன் வருவானு சொன்ன, இப்படி அலங்காரம் பண்ணி இருக்க? பாத்தா அடிக்க போறான்டி.”

“அட, போ கிழவி அவன் வரதே அடிக்கத்தான். நா இட்லி துண்ணுட்டு, வூட்டுக்குப் போனதும் எல்லாத்தையும் கழட்டி வெச்சுடுவேன். அழுக்குப் புடவையைக் கட்டிக்கிட்டு ஒரு மூலைல ஒக்காந்துகுவேன்’ என்று பதில் சொல்லிக்கொண்டே கைகளை தட்டிச் சிரித்துக்கொண்டாள்.

“அடி, பைத்தியக்காரி. உப்புக்குக்கூட ஒதவாத புருசன் வரானு சொன்னதும், இந்தப் பைத்தியக்காரி மொட்டைக்குச் சந்தோசத்த பாரு. படிச்சவ, படிக்காதவ, வசதி இருக்கவ, இல்லாதவனு எவளா இருந்தாலும், புருசன்னு சொன்னா ஏந்தான் இந்தப் பொம்பளைங்க இப்படி இருக்கீங்களோ? வாக்கப்பட்டு போற எடத்துல அசிங்கப்பட்டாலும் அவமானப்பட்டாலும் ஒரு வாய் சோத்துக்குக் காத்து இருந்து, அறை வயிறு துண்ணுட்டு, தண்ணியக்கூடப் பாத்து பாத்து குடிச்சி, என் புருசனுக்காக வாழுறேன். என் குழந்தைக்காக வாழுறேனு வாழுற வாழக்கை எல்லாம் ஒரு வாழ்க்கையா? நானும் அப்படித்தான் வாழ்ந்தேன். ஆனா, நீ வாழுற வாழ்க்க ஒரு வாழ்க்கையா? ஒரு வாய் சோறுக்குப் புண்ணியமா? ஒரு புடவைக்குப் புண்ணியமா? சொன்னா உனக்குப் புரியவா போகுது, உனக்கு ஒரு நல்ல துணைய அந்தச் சாமிதான் அனுப்பணும். போடி அவ வந்துடப் போறான்” என்று கிழவி எதையோ புலம்பினாள்.

கிழவியின் வார்த்தைகளை மனதில் வாங்கிக்கொண்டே வீட்டிற்குச் சென்றாள். அலங்காரங்களைக் கலைத்துவிட்டு, ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்தாள்.

“தினமும் காலையில கால் போன போக்குல எங்கேயோ போற, சாயங்காலத்துல குழந்தைங்ககூட விளையாடுறேன், ஆறு மணிக்கு மேல இந்த விளக்குகூடப் பேசுறேன், ராத்திரியில நா என்ன பண்ண, தூக்கமும் வரல. என்ன பொண்ணு பாக்க வந்தப்போ நா கறுப்புனு தெரியலயா? நா அழகாக இல்லனு புரியலயா? ஒரு குழந்த பொறக்குற வரைக்கும் நா உன்னோட கண்ணுக்கு அழகா தெரிஞ்சேனா? செகப்பா ஒருத்திய பாத்ததும், என்ன விட்டுட்டு அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட, என்னோட புள்ளைய ஏண்டா தூக்கிட்டுப் போன? புள்ளைய பிரிஞ்சி நா பைத்தியமா அலையுறேன்; நீதான்டா பைத்தியம்; பைத்தியம்.”

“என்னாடி, பைத்தியம் தனியா பேசுற? என்ன அமாவாசையா? முத்திப் போச்சோ?” என்று உள்ளே வந்தவன் சண்டையைத் தொடங்கினான்.

“வந்து ரொம்ப நாள் ஆச்சோ, முடி நீளமா இருக்கு. பவுடர் அடிச்சியா? ஏது உனக்கு பவுடர் வாங்க காசு, எவன்டி கொடுத்தான்?” என்று கேட்டு அடிக்கத் தொடங்கினான். அவளின் அழுகை சத்தம் மட்டும் வெளியே கேட்கும், பதில் பேச மாட்டாள். “பத்து நாளைக்கு இங்கதான் தங்கப் போறேன், பாக்குறேன் எவ வறானு. ராயபுரம் வூட்டுல வேலை நடக்குது, ஒரு வருசத்துக்கு இங்கதான் நாங்க தங்கப் போறோம். நீ உன்னோட மூட்டை மூடிச்சி எல்லாம் கட்டிக்குட்டு ரெடியா இரு, நாங்க வந்ததும் வெளிய போய்டணும். நீ இங்க இருந்தா, என் ரெண்டாவது பொண்டாடி பத்மா வராது.”

இரண்டு வாரங்கள் முடிந்ததும் அவன் ராயபுரம் சென்றான். மூன்று மாதங்கள் கழித்து அவனின் குடும்பத்துடன் வந்தான். மொட்டையக்கா மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்து, ஆண் குழந்தை பிறக்கும் என்று அவளைத் தங்களுடன் தங்க வைத்துக்கொண்டான். பல வருடங்கள் கழித்து மீண்டும் தன் குழந்தையை உணர்ந்தவள், கையில் குழந்தையைச் சுமந்ததும் மகிழ்ச்சியில் மூழ்கினாள், பிறந்தது பெண் குழந்தை, தன்னைப் போலவே இருந்ததால் மொட்டையக்காவின் ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை.

“கோமதி, கோமதி உனக்குத் தங்கச்சி பாப்பா பொறந்து இருக்காமே? எனக்குக் காட்டுடி, பாக்கணும் போல இருக்கு.”

“பள்ளிக்கூடம் போய்ட்டு வந்து காட்டுறேன்டி. எங்க அப்பா இருக்காரு, அவருக்குப் பாப்பாவ புடிக்கலையாம்.

“ஏன்டி பாப்பா கறுப்பா? சப்ப மூக்கா? பல்லு பெருசா?”

“இல்லடி, பாப்பா பொண்ணு. அதான் அப்பாக்கு புடிக்கல.”

கறுப்பு,வெள்ளை, உயரம், குட்டை, பருமன், ஒல்லி என்று மனிதனுக்குள் எத்தனை எத்தனை உருவ வேறுபாடுகள்! ஐந்தறிவு இருப்பதால்தான் மிருகம் மனிதனாகவும் ஆறறிவு இருப்பதால் மனிதன் மிருகமாகவும் வாழ்கிறான் என்று எண்ணத் தோன்றுகிறது. குழந்தைகளின் மனத்தில் பதியும் இந்த எண்ணங்களே வளரும்போது தாழ்வு மனப்பான்மையாக மாறுகிறது. வளர்ந்த பிறகு, திருமண பந்தத்தில் தனக்கான துணையைத் தேர்வு செய்வதில் தோற்றுவிடுகின்றனர். அழகு என்பது ஒரு மனிதனின் பண்பில் உள்ளது என்பதை எப்பொழுது இந்தச் சமூகம் உணரப் போகிறது?

“கீதா இங்கவாடி, எங்க அப்பா இல்ல, பாப்பா விளையாடுது.”

கீதாவுடன் சேர்ந்து மற்ற குழந்தைகளும் பாப்பாவுடன் விளையாடினார்கள். பாப்பாவைப் பற்றி பேசுவதும் விளையாடுவதுமே வேலையாக இருந்தது இந்தக் குழந்தைகளுக்கு. நாட்கள் நகர்ந்தன.

ஒரு நாள் குழந்தைகள் கண்ணாம்பூச்சி விளையாடிக் கொண்டு இருந்தனர். ஒருத்தி சமையல் அறையில், ஒருத்தி படிக்கட்டின் இடுக்கில், ஒருத்தி கட்டிலின் கீழே, கட்டிலில் தங்கச்சிப் பாப்பா. கட்டிலின் கீழே ஒளிந்த குழந்தையை யாரும் கவனிக்கவில்லை, அவளே வெற்றிப் பெற்றாள். மீண்டும் விளையாட்டு. “ஏய் கீதா, வாடி பாப்பா விளையாடுது, கட்டுலுக்குக் கீழ ஒளிஞ்சிக்கலாம்.”

“இல்லடி நீயே அங்க ஒளிஞ்சுக்கோ, நா மேல போறேன்.”

அழுதுகொண்டே வெளியில் ஒடிவந்த கோமதியை மற்ற குழந்தைகள் விசாரித்தனர்.

“என்னடி விழுந்துட்டியா, அப்பா அடிச்சாரா?”

“இல்லடி, அப்பாவும் அம்மாவும் பெரியம்மாவ அடிக்குறாங்க. பெரியம்மா வேண்டா, வேண்டானு அழுகுறாங்க, தங்கச்சிப் பாப்பா வேற அழுகுது. அப்புறம் பாப்பா அழல, பெரியம்மா மட்டும் அழுகுறாங்க” என்றாள்.

முதல் முறையாக மொட்டையக்கா கத்தினார். தன் கணவனின் சட்டையைப் பிடித்து உலுக்கினார், தன் குழந்தையைத் தன்னோடு அணைத்துக்கொண்டு அலறினார். அவளின் சத்தம் ஊரைக் கூட்டியது.

சத்தம் கேட்டு ஓடிவந்தவர்களிடம், “குழந்தைக்குக் காய்ச்சல், மூச்சுத் திணறி செத்துப் போச்சுங்க, பைத்தியக்காரி ஆஸ்பித்திரிக்குப் போகலாமுனு சொன்னா வரல, புள்ளையையும் கொடுக்கல, என் புள்ளையை கொன்னுட்டா இந்தப் பாவி” என்று கதை சொல்லி முதலைக்கண்ணீர் வடித்தான் அந்த அரக்கன்.

ஏழையின் உண்மை எப்படி உலகிற்குத் தெரியும்? அதுவும் அது ஒரு பெண் என்றால் உலகமே ஊமையாகிவிடும். மொட்டையக்கா அன்று முதல் ஊமையானார்.

சில தினங்களில் வசந்தாவை வெளியே தள்ளிவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு அவன், அவனின் குடும்பத்துடன் தலைமறைவானான். மன அழுத்ததில் இருந்த வசந்தா, மனநலம் பாதிக்கப்பட்டு, தெருவில் சுற்றித் திரிந்தாள். மனம் போல் வாழும் கொடும் மிருகங்கள்கூட, தன் குட்டி இறந்துவிட்டால், பித்துப்பிடித்து, தன் இறந்த குட்டியை வாயில் கவ்விக்கொண்டே காட்டைச் சுற்றித் திரியும் என்றால், ஒரு பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்? இன்றுவரை இதை இந்த ஆண் சமுதாயம் உணர்ந்ததேயில்லை. பெண் சிசுவதை இன்றும் சமுதாயத்தில் வழக்கத்தில் இருப்பது அவலத்தின் உச்சம்.

வசந்தா கிழவியின் அன்பால் சில நேரம் இட்லியை மட்டும் உண்டு வாழ்ந்துவந்தார். சில மாதங்களுக்குப் பிறகு அவரை யாரும் பார்க்கவில்லை.

“யக்கா, யக்கா உனக்குக் கதை தெரியுமா? காணாம போன வசந்தா, ஏதோ ஒரு புள்ளைய வெச்சிகினு திரியுதாமே? அதுவும் ஆம்புள புள்ளையாம். எங்க இருந்து தூக்கியாந்துச்சோ தெரியல, யாரு புள்ளையோ?”

“ஆமாண்டி நானும் பாத்தேன், நல்ல அழகா இருக்கு. பெரிய இடத்து குழந்த மாறி இருக்கு. யாரு புள்ளையோ? இதோ இந்தக் கிழவிய கேட்டா தெரியும். என்னா கிழவி வசந்தா கத உனக்குத் தெரியுமா?”

“நீங்க பேசின பேச்ச கேட்டுட்டுதாண்டி வரேன். உங்களுக்கு எல்லாம் நர்சு வந்து சொன்னா தாண்டி நீங்க பெத்த புள்ள எதுனு உங்களுக்கே தெரியும், ஆனா, பச்ச புள்ளைக்குத் தெரியுமாடி பெத்தவ யாரு, மத்தவ யாருனு? புள்ளையையும் அவளையும் பாத்தா தெரியல அது அவ பெத்த புள்ளனு. போங்கடி போய் பொழப்ப பாருங்க. இந்தக் கலியுகத்துல புத்திபேதலிச்ச பொண்ணுக்குக்கூடப் பாதுகாப்பு இல்ல, நா தண்ணி புடிக்கணும் தள்ளுங்கடி.”

வசந்தாவின் கையில் இருக்கும் குழந்தை, ஆணா பெண்ணா என்று அவளுக்குத் தெரியாது. ஆனால், தனக்குப் புதியதாக ஓர் உறவு கிடைத்து உள்ளது என்பதை அவர் அறிவார். வலது கையால் குழந்தையின் தலையை மெல்ல அழுத்தி, தோளில் சாய்த்து, இடது கையால் குழந்தையின் கால்களைச் சேர்த்து அணைத்துக்கொண்டு, அடி மேல் அடி வைத்து மெல்ல நடந்து வரும்போது, இவர்களையா அவன் பைத்தியம் என்று சொன்னான் என்று தோன்றும். இந்த உலகில் எல்லாரும் ஒரு வகையில் பைத்தியம்தான்!

பல கனவுகளுடன் திருமண பந்தத்தில் இணைந்த வசந்தா இன்று தெருவில் நிற்கின்றார். இவரை உலகம் பைத்தியகாரி என்றது. இவரின் இந்த நிலைக்குக் காரணமாக இருந்தவர்களை என்ன சொல்ல? நிஜத்தில் அவர்கள்தாமே மனநலம் குன்றியவர்கள். வசந்தாவைப் போல் இன்றும் எத்தனை பெண்கள் வாழ்ந்து வருகின்றன்றனரோ, யார் அறிவார்?

இப்பொழுதும் அவர் யாரிடமும் பேசுவது இல்லை.

(தொடரும்)

படைப்பாளர்:

எம்.கே. வனிதா. உயிர்வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பட்டிமன்றங்களிலும் பேசி வருகிறார்.