முன்கதைச் சுருக்கம்

குடும்ப நாவல் உலகத்திற்கு உங்களை அழைத்துச் செல்வதற்கு முன் நான் எப்படி இந்த உலகத்திற்குள் பிரவேசித்தேன் என்று சொல்ல வேண்டாமா? ஆதலால் கொஞ்சம் முன்கதைச் சுருக்கம். அதாவது என் கதைச் சுருக்கம்.

மேட்டுக்குடிப் பெண்கள் மட்டுமே வாசித்துக்கொண்டிருந்த காலமும் எழுதிக்கொண்டிருந்த காலமும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருந்த காலம்.

என்னுடைய பாட்டி கல்வி கற்பதற்காகப் பள்ளி வாசலை மிதிக்காவிட்டாலும் பால்வாடி பிள்ளைகளின் பசியாற்றுவதற்காக மிதித்திருக்கிறார்.

பாட்டியின் வாழ்க்கைக்கு அப்படியே நேரெதிரான வாழ்க்கை என் அம்மாவுடையது. கிராமத்து வாழ்க்கையிலிருந்து நகரத்திற்குக் குடிபெயர்ந்தார். ஆனாலும் பெரும்பான்மையான நடுத்தர பெண்களின் வாழ்க்கை போல வீட்டைப் பராமரித்தல் சமைத்தல் எனச் செக்கு மாட்டு வேலைகள்தாம். ஒண்டுக் குடித்தனங்களிலிருந்த நட்பு வட்டங்கள்கூடச் சொந்த வீட்டிற்கு வந்த பிறகு அம்மாவிற்கு இல்லாமல் போனது.

அந்த நேரத்தில்தான் அம்மாவிற்கு வாசிப்பின் தேவை உண்டானது. ஆனாலும் எழுத்துகளைக் கோத்து வாசித்தலில் அவருக்குக் கொஞ்சம் சிரமமும் இருந்தது. ஆனால், சிரமங்களையும் மீறி புத்தகங்களை வாசிக்க வேண்டுமென்கிற அம்மாவின் ஆர்வத்திற்கு அப்பா ஒரு வழியைக் கண்டறிந்தார்.

அம்மாவிற்கு சினிமா பாடல்கள் கேட்பதில் அலாதியான விருப்பம். அவருக்குப் பிடித்தமான பாடல்கள் எல்லாம் ஒரு வரி விடாமல் மனப்பாடம். ஆதலால் அப்பா தமிழ் எழுத்துகள் அடங்கிய புத்தகம் ஒன்றையும் அம்மாவிற்குப் பிடித்தமான சினிமா பாடல்கள் அடங்கிய புத்தகத்தையும் வாங்கிக் கொடுக்க, அவர் இரண்டையும் ஒன்றாக ஒப்பிட்டு மெதுவாக வாசிக்கப் பழகினார்.

ஒரு வகையில் அம்மாவின் ஆர்வம்தான் அவரை மிக விரைவாகக் கற்றுக்கொள்ள வைத்தது. அங்கிருந்துதான் அம்மாவின் வாசிப்புப் பழக்கமும் ஆரம்பமாயிற்று. ஒரு வகையில் என்னுடையதும்.

தான் வாசித்த நூல்களை எல்லாம் அம்மா அதன் சுவாரசியம் குறையாமல் விவரிப்பார். அப்படிதான் எனக்குப் புத்தக வாசிப்பின் மீது ஆர்வம் பிறந்தது.

அப்போது நான் பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

வி. உஷா, ஆர் சுமதி, ஆர் மணிமாலா, லக்ஷ்மி, அனுராதா ரமணன், சிவசங்கரி, ரமணிசந்திரன், காஞ்சனா ஜெயதிலகர் ஆகியோர் அம்மா அதிகம் வாசிக்கும் எழுத்தாளர்கள். அவரைத் தொடர்ந்து நானும் அந்த வாசிப்புலகில் பிரவேசித்தேன்.

அதே நேரம் வாசிப்பு பழக்கம் உண்டாவதற்கு முன்பாகவே எனக்கு எழுதுதலில் ஆர்வம் இருந்தது. கோபம், அழுகை போன்ற உணர்வுகள் பொங்கும் போதெல்லாம் கவிதையும் சேர்ந்து பொங்கும்.

அதனைத் தொடர்ந்து கல்லூரிகளில் எனது தோழி அஃப்சானாவுடன் கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டேன். அஃப்சனாவிற்கு எல்லாப் போட்டிகளிலும் பரிசு கிடைக்கும். ஆனால், எனக்குக் கிடைக்காது. காரணம் எழுதத் தெரிந்த அளவுக்கு அதனை எனக்கு உரக்க உணர்வுப்பூர்வமாக வாசிக்கத் தெரியாது.

Introvert என்று சொல்வார்களே. அந்த வகையில் சேர்த்தி நான். நாலு பேர்கூட சாதாரணமாகப் பேச முடியாத என்னால், பலர் முன்னிலையில் எழுதிய கவிதையை வாசிப்பது என்பது மிகப் பெரிய சாவல்.

தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்த போதும் எழுதுவதன் மீதான காதல் எனக்குக் குறையவில்லை. அப்படி ஒரு முறை சென்னை துறைமுகம் நடத்திய கவிதைப் போட்டியில் கலந்துகொண்டேன். நல்ல வேளையாக அங்கே வாசிக்கத் தேவை இல்லை.

அப்பாடா தப்பித்தோம் என்று எழுதித் தந்துவிட்டேன். நான் எதிர்பார்க்கவே இல்லை. பல கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்ட அப்போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. முதல் பரிசோ எப்போதும் போல என் தோழி அஃப்சானாவிற்குக் கிடைத்தது.

இந்த நிலையில்தான் என்னுடைய எழுத்துக்கும் சிந்தனைக்கும் ஒரு தேர்ந்த வடிவத்தை வாசிப்பு பழக்கம் கொடுத்தது எனலாம்.

அப்படி நான் வாசித்து இன்னும் மறக்காமல் என் நினைவுகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் சில நாவல்களைப் பற்றி இங்கே உங்களிடம் சொல்லியே ஆக வேண்டும்.

ஐம்பது வயது மதிக்கத்தக்கப் பெண்ணிற்கும் அந்த வீட்டில் குடியிருக்கும் இளைஞருக்கும் தொடர்பு இருப்பதாக அந்த பெண்ணின் கணவர் சந்தேகிப்பது போலக் கதை ஆரம்பிக்கும். ஆரம்ப காட்சியில் அவர் தீவிரமாக இது பற்றி யோசித்துக் கொண்டிருப்பார். அங்கிருந்து கதை பின்னோக்கி நகரும். பிளேஷ் பேக்கில் அந்தப் பெண்ணுக்கு அவர் குடும்பத்திலுள்ள மகன், மகள், கணவன் என்று யாருமே மதிப்பு கொடுக்க மாட்டார்கள். ஒரு மனுஷியாகக்கூட மதிக்க மாட்டார்கள். யாருமே அவரை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காத நேரத்தில்தான் அந்த இளைஞன் அவர்கள் வீட்டிற்குக் குடி வருகிறான். அம்மாவைப் போலப் பாவித்து அவருடன் பழகவும் பேசவும் செய்கிறான். அவரும் அவனை மகனாகப் பாவித்துதான் பழகுகிறார்.

ஆனால், அந்த அன்பு தன் கணவன், பிள்ளைகளை விடவும் அதிகப்படியாக மாறும் போது பிரச்னை துளிர்க்கிறது. அதனால் அவர் குடும்பத்தில் ஏற்படுகிற சிக்கல்கள். பின் அவர்கள் குடும்பத்தினரின் மனமாற்றங்கள். இருப்பினும் அவனுடைய அன்பை விட்டுக் கொடுக்க முடியாமல் அப்பெண் மனதளவில் பாதிக்கப்படும் போது, அந்த இளைஞன் அவரைப் பிரிவதற்காகத் தன்னைத்தானே தப்பானவன் போலக் காட்டிக்கொள்ள, அவர் மகளிடமே தவறாக நடந்துகொள்வான்.

அந்த அம்மா அவனை வெறுத்து வீட்டை விட்டுத் துரத்திவிடுவார். அதன் பின் அவனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டது போலக் கதை முடியும். அந்த முடிவைப் படித்து விட்டு நான் அப்படி அழுதேன். சில நிமிடங்களுக்கு விடாமல் அழுது கொண்டே இருந்தேன். நான் இதுவரையில் வேறு எந்த நாவலுக்கும் அந்தளவு அழுததாக நினைவில்லை.

அந்த சோகமான முடிவுதான் இன்று வரையில் எத்தனையோ நூல்கள் வாசித்தும் என் நினைவில் நிற்கக் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். நாவல் பெயர் மறந்துவிட்டது. ஆனால், எழுதியவர் ஆர். மணிமாலா என்பது மட்டும் நன்றாக நினைவிருக்கிறது.

இதே போல என்னைப் பாதித்த மற்றொரு நாவல். நாயகி ஒரு இருதய நோய் மருத்துவர். விபத்தில் உயிர் பிழைக்க முடியாத நிலையிலிருந்த கணவனின் இதயத்தை வேறொருவனின் உயிரைக் காப்பாற்ற அவரே இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யும் காட்சியிலிருந்து கதை தொடங்கும். அதன் பிறகு தன் கணவனின் இதயத்தை வைத்திருக்கும் நோயாளிக்கு அத்தனை தேவைகளையும் அந்த நாயகி பார்த்துப் பார்த்து கவனித்துக்கொள்வார்.

இதனால் அவன் சுயமாக இருப்பதை விடுத்து, மெதுவாக எல்லாவற்றிற்கும் நாயகியைச் சார்ந்திருக்க ஆரம்பிப்பான். அதனை உடன் பணிபுரியும் சக மருத்துவ நண்பன் நாயகிக்குச் சுட்டிக் காட்டி புரிய வைத்த பிறகே அவனுக்கு உதவி செய்வதை நாயகி நிறுத்துவார். இதற்கிடையில் நாயகியை மறுமணம் செய்துகொள்ள அந்த மருத்துவ நண்பன் விருப்பம் தெரிவிப்பான். நாயகியும் சம்மதிப்பார்.

ஆனால், அவளை மணம்புரிய விரும்புபவன் அவளுடைய குழந்தையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க மாட்டான். அந்த நொடியே அவனை மணக்கும் எண்ணத்தை விட்டுவிடுவார் நாயகி. அந்த அனுபவத்திற்குப் பிறகு நாயகியின் கருணை உள்ளம் கரைந்து காணாமல் போய் அவர் இறுக்கமான பெண்ணாக மாறிவிட்டதாகக் கதை முடியும்.

இந்த நாவலை எழுதியவர் யாரென்று எனக்கு நினைவில்லை. கதையின் பெயர் மறுமணம் என்று பார்த்ததாக நினைவு.

என் நினைவிலிருக்கும் இன்னுமொரு நாவல். கண் தெரியாத பதின்ம வயதுப் பெண். பார்க்க மிகவும் அழகாக இருப்பாள். அந்தப் பார்வையற்ற பெண்ணின் கல்விக்காக அக்கதையின் நடுத்தர வயது நாயகி நிறைய உதவிகள் செய்வாள். அவளை தன் வீட்டிற்கு அழைத்து வந்து பாடம் கற்றுத் தருவாள். அந்த பார்வையற்ற பெண்ணும் நல்ல புத்திசாலியான பெண்தான். ஆனால் வயது பல நேரங்களில் நமது மூளையை மழுங்கடித்து விடுகிறது.

அந்தப் பார்வையற்ற பெண்ணை ஒருவன் பேசி ஏமாற்றி, அவளைக் காதலில் விழவைப்பான். பின்னர் ரகசியமாக அவளைத் திருமணம் செய்து அவளுடன் உறவு வைத்துக் கொண்டுவிட்டு பின் ஏமாற்றிவிடுவான். அவளுக்கோ ஏமாற்றியவன் யாரென்றே தெரியாது. அவன் அவளிடம் சொன்ன பெயர் அடையாளம் அத்தனையும் பொய். அவன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்பதை உணரவே அவளுக்குச் சில நாள்கள் பிடிக்கும்.

பார்வையற்ற பெண்ணாக இருந்தாலும் அவள் புத்திசாலி. அவளும் நாயகியும் சேர்ந்து எப்படியோ அவனைக் கண்டுபிடித்துவிடுவார்கள். அங்கேதான் கதையில் ஒரு பெரிய ட்விஸ்ட். அந்தப் பெண்ணை ஏமாற்றியவன் நாயகி மிகவும் நேசிக்கும் அவளது கணவன். இந்த உண்மை அறிந்த பிறகு நாயகி கணவனை வெறுத்து ஒதுக்கிவிடுவாள். ஆனால், அவனுக்குத் தண்டனை எதுவும் கிடைத்தது போலக் கதையில் குறிப்பிடப்பட்டிருக்காது.

இதெல்லாம் நான் படித்த நாவல்களில் என் நினைவில் பதிந்தவை. இவை எல்லாம் பெண்களின் பிரச்னைகளை வெவ்வேறு கோணங்களில் காட்டிய கதைகள்.

இதே போல என்னை அதிகம் பாதித்த ஆங்கில நாவல் ஒன்று உண்டு.

நம் தமிழ் சினிமாக்கள் மல்டிப்பிள் பெர்சனாலட்டி டிஸ்ஸாடர் என்கிற ஃபர்னிச்சரை உடைப்பதற்கு முன்பாகவே எழுதப்பட்ட நாவல் இது. நாயகி மிகவும் அமைதியான பெண். யாரிடமும் நெருங்கிப் பழக மாட்டாள். தனிமை விரும்பி. மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவியும்கூட.

அப்பெண் எப்படித் தொடர் கொலைகள் செய்கிறாள் என்கிற குழப்பத்துடனே கதை நகரும். இறுதியில்தான் அவளுக்கு மனநல பிரச்னை இருப்பதாகக் கண்டறியப்படும். தன்னிடம் தவறாக நடந்துகொள்ளும் ஒவ்வொருவரையும் அவளுடைய இன்னொரு பெர்சனாலட்டி கொலை செய்யும். அவள் மனநல காப்பகத்தில் சேர்க்கப்படுவாள். சிகிச்சைக்குப் பிறகு சில மாதங்களில் அவள் குணமாகிவிடுவாள்.

மருத்துவமனையில் அவளைப் பார்க்க வந்த தந்தையுடன் அவள் குணமாகிச் செல்வது போலக் கதை முடியும். முடிவில்தான் அவள் ஏன் இப்படியொரு மனநோயில் பாதிக்கப்பட்டால் என்கிற உண்மையை ஆசிரியர் உடைப்பார். சிறு வயதிலிருந்து அவள் தந்தை கொடுத்த பாலியல் தொல்லை காரணமாகவே அவள் இத்தகைய மனநோயினால் பாதிக்கப்பட்டிருப்பாள் என்று தெரியவரும். இறுதியாக அவளுடன் சென்ற தந்தையின் நிலை என்ன என்று சஸ்பென்ஸுடன் கதை முடிவு பெறும்.

ஸிட்னி ஷெல்டனின் ‘டெல் மீ யுவர் ட்ரீம்ஸ்’ கதை இது. இதிலும் எனக்கு எழுத்தாளர் பெயர் மட்டுமே நினைவிருந்தது. நாவல் பெயரை இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தேன்.

துப்பறியும் வகையறாக்களில் இவரின் நாவல்கள் ஒரு முன்னோடி. அதுவும் நாயகி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுவது ஷெல்டன் நாவல்களின் சிறப்பு.

இவர்களைத் தொடர்ந்து சுஜாதா, ராஜேஷ் குமார், இந்திரா சௌந்தராஜன், கல்கி, எண்டமுரி விரேந்திரநாத், தமிழ் நிவேதா, வாஸந்தி, அம்பை போன்றவர்களும் எனது வாசிப்பு பட்டியலில் இணைந்தார்கள்.

நானே நூலகத்திற்குச் செல்ல ஆரம்பித்த பிறகுதான் எனக்கான தேர்வுகளும் வாசிப்புகளின் வகைகளும் மாறின என்று சொல்லலாம். தோலுரிந்து போன சுவர்கள், துருப் பிடித்த ரேக்குகள், சேதமான நிலையில் இருக்கும் அலமாரிகளுக்குள் நிறைய நூல்கள் வைக்க இடம் இல்லாமல் தரையில் கிடந்தன.

என்னுடைய புத்தகமும் அந்த நூலகத்தில் இப்போது வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நூலகத்தின் நிலைமை இன்றும் அதேபோல பாழடைந்த நிலையில்தான் இருக்கிறது.

அந்தக் கிளை நூலகம்தான் என்னுடைய வாசிப்பு உலகத்திற்கான கதவை விசாலமாகத் திறந்துவிட்டது. நாவல்களிலிருந்து நான் கட்டுரைகள் பக்கம் தாவினேன். நிறையப் பெண்ணியக் கட்டுரைகளைத் தேடித் தேடி வாசித்தேன். காந்தியின் சத்திய சோதனை, திகார் போன்ற வாழ்ந்த மனிதர்களின் சுயசரிதைகளைப் படித்தேன்.

ஒவ்வொரு நூலுமே ஒவ்வொரு கதவைத் திறந்தது. அதேநேரம் ஒரு நூலின் கருத்து மற்றொரு நூலின் கருத்துகளுடன் முரண்படவும் செய்தது. சிலவற்றை நிறையக் குழப்பியது. இன்னும் சிலவற்றைப் புது விதமாகச் சிந்திக்கத் தூண்டியது.

அதேநேரம் சமானியப் பெண்களின் உணர்வுகளையும் வலிகளையும் துல்லியமாக அவர்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பெண்கள் எழுதிய நாவல்கள் மீதான எனது ஆர்வம் குன்றவில்லை.

அதேநேரம் நான் படித்த பெரும்பான்மையான நாவல்களில் நாயகி என்பவள் ஓர் இரண்டாம்பட்ச கதாபாத்திரமாகவே படைக்கப்படுகிறாள். ஒரு வேளை ஏதோவொரு நாவலில் அதிசயமாக நாயகியின் கதாபாத்திரம் முக்கியத்துவம் பெற்றாலும் அதில் அவள் பாதிக்கப்பட்ட ஓர் உயிரினமாகப் பரிதாப நிலையில்தான் காட்டப்படுவாள்.

மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை, கணவன் அடித்தல் உதைத்தல், குழந்தைப் பேறு இல்லாமல் உள்ள பெண்ணுக்கு நேரும் அவமதிப்புகள், ஒளிவு மறைவாக நிகழ்ந்து கொண்டிருக்கும் பாலியல் சீண்டல்கள் எனக் குடும்பங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பேசும் எழுத்துகளில் நிறைய சோக முடிவுகளையே காண முடிந்தது.

இருப்பினும் பெண்களின் உலகம் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே வரும் நிலையில், எழுத்துகளும் அவ்வாறு விரிவடைந்து அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டாமா என்கிற எண்ணம்தான் என்னை நாவல்கள் உலகத்திற்குள் இழுத்தது.

எழுதுவது எப்போதுமே எனக்குப் பிடித்தமான ஒன்று. ஆனால், எதை எழுதுவது எனும்போது நான் வாசித்த நூல்கள்தாம் எனக்கான வழிகாட்டியாக இருந்தன. அப்படித்தான் நான் வெகுஜன எழுத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டேன்.

நாவல்கள் எழுதப் போகிறோம். சரி. ஆனால் என்ன எழுதுவது?

If there’s a book that you want to read, but it hasn’t been written yet, then you must write it.

நாம் படிக்க விரும்பும் நூல் இன்னும் எழுதப்படவில்லை என்றால் அதை நாமே எழுத வேண்டும்.

(தொடரும்)

படைப்பாளர்: 

மோனிஷா. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர்.  இன்று வரையில் இணையத்தில் 27 நாவல்களை எழுதி முடித்திருக்கிறார். அவற்றில் இருபது நாவல்கள் புத்தகமாகப் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.   

பெண்ணியம் சார்ந்த கருத்துகளும் சூழலியல் சார்ந்த விழிப்புணர்வுகளும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன.