மங்கம்மா சபதம் 1943 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இன்றும் ‘இவ பெரிய மங்கம்மா பெரிய சபதம் போடுறா!’ என்கிற சொல்லாடலுக்கு உந்துதலாக இருக்கும் திரைப்படம் இது. இதே பெயரில் சுஜாதா நடித்த திரைப்படம் ஒன்று, 1985ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது.

1985ஆம் ஆண்டு திரைப்படத்தில், மகனாக (நாயகனாக) கமல் வருவதால், அது கமல் படம் என்கிற நிலைக்குப் போய்விட்டது. மங்கம்மா பாத்திரத்தின் வலு குறைந்து விட்டது. அப்பா கமல் அப்பாவி என வருகிறது. வில்லன் சத்தியராஜ் என்பதால், கதை கமல் / சத்தியராஜ் இருவரின் படம் எனதான் வருகிறதே அல்லாமல், சுஜாதாவின் படம் என எண்ணத் தோன்றவில்லை.

இதுவே, 1943ஆம் ஆண்டு திரைப்படத்தில், ‘மங்கம்மா’ என்கிற அம்மா பாத்திரம்தான் கதையின் பெரும்பகுதியில் வருகிறது. ‘மங்கம்மா’ பெரும்பகுதியில் இளமையாகவே வருகிறார். மகன் ரஞ்சன், வயதான மங்கம்மா இருவரும் சிறிது நேரம்தான் வருகிறார்கள். அப்பா ரஞ்சன்தான் வில்லன் என்பதால் மங்கம்மாவின் பாத்திரம் மிக வலுவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலில் கதையைப் பார்ப்போம்.

வேளாண்மைத் தொழில் செய்யும் ஒரு தந்தையுடன் வாழ்ந்து வருபவர் மங்கம்மா. ஒருநாள் மங்கம்மா, தான் வளர்க்கும் மாடப்புறா ஒன்றைத் துரத்திக் கொண்டு அரண்மனைக்குள் நுழைகிறார். இளவரசன் சுகுணன், அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயல்கிறார். மங்கம்மா திட்டிவிட்டு வெளியேறுகிறார்.

சுகுணன் மங்கம்மா வீட்டிற்குச் செல்கிறார். உன்னைத் திருமணம் செய்து வாழாவெட்டியாக்கி, உன் திமிரை அடக்குகிறேன் என சுகுணன் சபதம் செய்ய, அப்படி ஒன்று நடந்தால், உன்னுடன் வாழ்ந்தே குழந்தை பெற்று, அதன் மூலம் தனது தந்தையையே அடிக்க வைக்கிறேன் எனப் பதில் சபதம் செய்கிறார் மங்கம்மா.

மங்கம்மாவின் அப்பாவைக் கைது செய்ததால், மங்கம்மா வேறு வழியின்றி, திருமணத்திற்கு உடன்படுகிறார். திருமணமும் நடைபெறுகிறது. நடந்த சண்டைகளை மறந்து விடுவோம் என மங்கம்மா சொல்ல சுகுணன் ஏற்கவில்லை.

சுகுணன் மங்கம்மாவைத் தனிமைச் சிறையில் அடைக்கிறார். முதலில் கலங்கும் மங்கம்மா, பின் சிந்தித்து செயல்படத் தொடங்குகிறார். சிறையில் தன்னைப் பார்க்க வந்த தந்தையிடம் சிறைக்கும், வீட்டுக்கும் ஒரு சுரங்கம் அமைக்கச் செய்கிறார். அருகில் எப்போதும் இருக்கும் கண்காணிப்பாளர்களைப் பேய்க்கதை சொல்லி அருகிலேயே வர விடாமல் ஆக்கிவிடுகிறார்.

கணவனுக்கு, கூத்தில் பெரிய ஈடுபாடு இருந்ததை அறிந்த மங்கம்மா, கழைக்கூத்து கற்கிறார். மாறு வேடத்தில் கணவனிடமே செல்கிறார். ஒரு மகனும் பிறக்கிறான். மகன் வளர்ந்த பின், அவரை வைத்தே, தந்தையை ஒரு சாக்கில் போட்டுக் கட்டி, சபைக்குக் கொண்டு வர வைக்கிறார். மங்கம்மா வந்து உண்மையைச் சொல்கிறார். கணவன் மன்னிப்பு கேட்க, இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள்.

புதையல் கண்டெடுப்பேன்,

தகுந்த புருஷனை மணப்பேன்

புல்லாக்கு அணிந்திடுவேன்

பசுந்தங்க பல்லக்கில் ஏறிடுவேன்

மச்சு வீடு கட்டி வாழுவேன்

வணங்கும் பணிப்பெண்களிடையே

ராணி போல விளங்குவேன்

என வீட்டு வேலைகளைச் செய்து கொண்டே, அறிமுகமாகும் வசுந்தரா தேவி (திரைக்கலைஞர் வைஜயந்தி மாலாவின் அம்மா), மங்கம்மாவாகவே வாழ்ந்திருக்கிறார். அவரின் மிடுக்கான தோற்றம் பாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது.

பட்டு துண்டை அப்பாவின் (பி. ஏ. சுப்பையா) இடுப்பில் மகள் கட்டிவிட, கோயிலுக்கு இருவரும் போகும் காட்சியே அப்பா / மகளின் அன்புக்கு அடையாளமாகிவிடுகிறது. அப்பா, மகள் உறவை அவ்வளவு அழகாகக் காட்டி ‘ஆனந்த யாழை மீட்டி’யிருக்கிறார் இயக்குநர் ஆச்சார்யா.

தனிமைச் சிறையில் கலங்கும் நேரத்தில், “சிறிதும் கவலைப்படாதே” என அவரின் மனசாட்சி பாடுவதாக வரும் பாடலில் இவரது உருவம், கண்ணாடியில் தோன்றும் இரு உருவங்கள் என மூன்று உருவங்கள் ஒரே நேரத்தில் தெரிவது என்பது அன்றைய காலகட்டத்தில் புதிய முயற்சியாக இருந்திருக்கலாம்.

கணவன் மன்னிப்பு கேட்க, இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள் எனப் படம் முடிந்தாலும், அதற்கு முந்தைய காட்சியில், “நானா ஜெயித்தவள்? உலகமறிய தோற்றவள் நான்; வாழ்நாளெல்லாம் வீணாக, பொய்யாக மனம் தடுமாறி பேயைப்போல் வாழ்ந்தேன். இதுவா என் ஜெயம்? இந்த இருபது வருஷ காலமாகத் தனித்தனியாக உலக வாசனையற்று, ஒரு பட்ஷி தனிப்பட்டு கூண்டில் இருப்பது போல் சிறையில் கிடந்து வாடினேன்; இதுவா என் ஜெயம்? கொண்ட புருஷனை அடைய பொய் சொல்லி, இதுவா என் ஜெயம்?” எனக் கேட்பது போலவும் காட்சி அமைத்திருக்கிறார்கள்.

பிற்காலத்தில் வந்த பல திரைப்படங்கள் கணவனை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனைவியையே பெரும்பாலும் காட்டியுள்ளன. குறைந்தபட்சம் தன்னிலை விளக்கத்தையாவது நாயகி சொல்வது சிறப்பு. மிகவும் மனத்தொய்வுடன் குடும்பச் சுழலில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு, சிறிது தன்னம்பிக்கையைக் கொடுக்கும் திரைப்படமாக இதை நான் பார்க்கிறேன்.

ரஞ்சன் நாயகனாகவும் மகனாகவும் இரு வேடங்களில் வந்துள்ளார். மேலும் என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் போன்றோரும் நடித்துள்ளனர்.


(தொடரும்)

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.