அன்புள்ள லட்சுமி டீச்சருக்கு,

உங்கள் மாணவி ரோகிணி எழுதுவது. எனக்கு உங்களுடன் பேச வேண்டும்.

இப்படிக்கு

அன்பு மாணவி

பழுப்பேறிய அரை வெள்ளைத் தாளில் இப்படி இரண்டு வரி எழுதிய ஒரு கடிதத்தை, பத்தாம் வகுப்பு மாணவியான மைதிலி, லட்சுமி டீச்சரிடம் சற்றே தயங்கியபடியே கொடுத்துச் சென்றதை அசை போடுகிறார் லட்சுமி டீச்சர்.

பத்து வருடங்களுக்கு முன்பு தன் வகுப்பில் படித்த சங்கரியைக் குறித்து மற்ற ஆசிரியர்களின் கருத்தும் புறந்தள்ளலுமே அதற்குக் காரணம். சங்கரி அப்போது ஆறாம் வகுப்பில் பயின்று வந்தாள். சிறப்புக் குழந்தைக்கான அனைத்து அறிகுறிகளும் அவளிடம் இருந்தன. ஆனால், இன்றுள்ளது போல கல்வித் துறையில் சிறப்புக் குழந்தைகளுக்கான கவனம் இல்லாத நாட்கள் அவை.

சங்கரி வகுப்பில் மற்ற குழந்தைகள் போல ஓர் இடத்தில் உட்கார்ந்து வகுப்பைக் கவனிக்க மாட்டாள். திடீரென வகுப்பிலுள்ள மற்ற மாணவிகளைக் கடித்துவிடுவாள். அவர்கள் ஆடையை இழுத்து அடிப்பது, எச்சில் துப்புவது என நிறைய பழக்கங்கள். எப்போதாவது என்றால் பரவாயில்லை, எப்போதும் இப்படி ஏதாவது ஒரு சேட்டை இருக்கும் . லட்சுமி டீச்சரிடம் மட்டும் சிரித்த கண்களுடன் புன்னகை ததும்பும் முகத்துடனும் வளைய வரும் சங்கரி. மற்ற ஆசிரியர்களைக் கண்டால் முறைத்துப் பார்க்கும் தன்மையும் கண்களை நேரில் சந்திக்காத தன்மையும் என வேறுபட்டு இருப்பாள். காரணம் லட்சுமி டீச்சர் சங்கரியைச் சிநேகத்துடன் பார்ப்பதும் பேசுவதுமேயன்றி, வேறில்லை.

அவளது கணக்கு நோட்டை மட்டுமல்ல, எந்த நோட்டுகளையும் பார்க்க முடியாத வகையில் கிறுக்கி இருப்பாள். நடுநடுவே கிழித்தும் எறிந்து இருப்பாள். ஆனால், இவற்றை எல்லாம் அவள் அறிந்து செய்யவில்லை என்பதைச் சில வாரங்கள் உற்று நோக்கலுக்குப் பிறகு புரிந்துகொண்ட லட்சுமி டீச்சர், சின்ன மாறுதல்களையாவது சங்கரியிடம் உண்டாக்க வேண்டுமென நினைத்தார்.

அதோடு மட்டுமில்லாமல் தினமும் வகுப்பிற்குச் செல்லும் போது சங்கரியை அழைத்து, இரண்டு மூன்று நிமிடங்கள் பேச்சுக் கொடுப்பார். ஆரம்ப நாட்களில் சங்கரி, லட்சுமி டீச்சரிடம் பிடி கொடுக்கவில்லை. டீச்சர் பேசும் போது எதுவுமே சொல்லாமல் வெளியே ஓடி விடுவதும், கீழே பார்ப்பதும் என வாரக் கணக்கில் சங்கரி போக்குக் காட்டினாள்.

சக ஆசிரியர் தோழமைகள் லட்சுமியை எச்சரித்ததோடு, வேறு வேலை இல்லையா என்று கேலிப் பேசி திட்டினர். மனம் தளராத லட்சுமியின் முயற்சிக்கு ஒரு நாள் பலன் துளிர்விட ஆரம்பித்தது. லட்சுமி டீச்சரை சினேகமாகப் பார்க்க ஆரம்பித்தாள் சங்கரி. இதுவே மிகப்பெரிய வெற்றியாக லட்சுமிக்குத் தெரிந்தது.

சங்கரி குறித்தும் அவள் பெற்றோர், உடன் பிறந்தவர்கள், அவளுக்குப் பிடித்த மனிதர்கள், அவளுக்குப் பிடித்த நிறம், பிடித்த சாப்பாடு எனத் தினமும் சங்கரியிடம் பேசும் போது அவளையும் அறியாமல் ஆசிரியர் மீது நேசம் காட்ட ஆரம்பித்திருந்தாள் சங்கரி.

இப்போதெல்லாம் வகுப்பறையில் அவ்வளவு குறும்பு செய்வதில்லை. எச்சில் துப்புவது இல்லை. அடிப்பதும்கூடக் குறைந்திருக்கிறது. லட்சுமி டீச்சர் வேறு வகுப்புகளுக்குச் செல்லும்போது திடீரென சங்கரி தனது வகுப்பில் இருந்து ஓடிவந்து, லட்சுமி டீச்சரைத் தொட்டுக் கூப்பிட்டுச் சிரிப்பாள்.

எப்போதெல்லாம் டீச்சரின் புடவையைப் பிடித்து இழுக்கிறாளோ அப்போதெல்லாம் அவளுக்கு டீச்சரிடம் பேசுவதற்கு ஏதோ ஒரு தேவையுள்ளது என்று அர்த்தம். டீச்சரும் இரண்டு நிமிடங்களாவது அன்பாகப் பேசிச் செல்வார்.

இப்படியாக சங்கரியின் ஆறாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு வரை தொடர்ந்தது. இடையிடையே அவளுடைய நோட்டுகளை அழகாக வைத்துக்கொள்ள இன்னும் சில முயற்சிகளைச் செய்தார். அதிலும் லட்சுமி டீச்சர் வெற்றி கண்டார்.

அவ்வப்போது ஆசிரியர் அறையில் சங்கரி குறித்துப் பேச்சு வரும்போதெல்லாம் சிறு சலசலப்பும் வரும். சங்கரிக்குப் பரிந்து பேசும் லட்சுமி டீச்சரும், அதை எதிர்த்துச் சண்டையிடுவது போல பேசக்கூடிய வேறு சில ஆசிரியர்களும் என நாட்கள் நகர்ந்தன.

அப்போதெல்லாம் முப்பத்தி ஐந்து மதிப்பெண்கள் வாங்கவில்லை என்றால் தேர்ச்சி இல்லை என்று ஒரு மாணவனை அல்லது மாணவியைப் பள்ளியை விட்டு வெளியேறச் செய்யக்கூடிய முறை இருந்து வந்தது. அதையே குறிக்கோளாகக் கொண்டு மற்ற 4 பாட ஆசிரியர்களும் சங்கரியை ஃபெயில் என்று முத்திரைக் குத்துவார்கள். ஆனால், லட்சுமி டீச்சர் அவளிடம் 35 மதிப்பெண்களுக்குக் குறைவாக இல்லை என்றால் ஃபெயில் கிடையாது. அவளுக்கும் நாம் உள்ளடங்கிய கல்வியைக் கொடுத்தாக வேண்டும் என்று கட்டாயமாகத் தனது பாடத்தில் தேர்ச்சி போடுவார். இதனாலேயே அடுத்தடுத்த வருடங்களில் பள்ளிக்குள் பிரச்னையாக இருந்தது. ஏனென்றால் எல்லோருடைய கவனமும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மட்டுமே. இப்படியே ஒவ்வொரு வகுப்பிலும் இவளைத் தேர்ச்சி என்று போட்டுக்கொண்டே வந்தால், பத்தாம் வகுப்பில் வந்து நாம்தான் கஷ்டப்பட வேண்டும். அரசுக்குப் பதில் சொல்லியாக வேண்டும் என்று பல வாக்குவாதங்கள் நிகழும்.

லட்சுமி டீச்சர் எல்லாக் குழந்தைகளுக்குமே மதிப்பீட்டு முறையில் மாற்றமான ஒரு முறையைத்தான் கடைபிடித்துவந்தார். இப்போது அது தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என்று மாற்றத்திற்கு உட்பட்டு, கடந்த 10 ஆண்டு காலமாக அரசே பின்பற்றிவருகிறது.

லட்சுமி டீச்சர் அவரது பாடத்தில் எடுக்கக்கூடிய மதிப்பெண்களோடு, அவர்களிடம் இருக்கும் தனித்திறமைகளான ஓவியம், பாட்டு, நடிப்பு, செயல் திட்டங்கள் – மரம் வளர்ப்பு, கோலம் போடுதல், வகுப்பறைகளைத் தூய்மையாக வைத்தல், சில ஒழுங்கான செயல்களைச் செய்தல், வகுப்பில் அமைதியாக இருத்தல், நேரத்திற்குப் பள்ளிக்கு வருதல், எல்லா நாளும் விடுப்பு எடுக்காமல் வருதல், புத்தகங்களை வாசித்தல் என்று பலவற்றையும் சேர்த்தே மதிப்பெண் போடும் வழக்கத்தை முறையாக வைத்திருந்தார்.

அவ்வளவு ஏன், அந்த வகுப்பின் வெளியே மாணவர்கள் செருப்பைச் சரியாக அடுக்கி வைத்தாலும், அதைச் செய்யக்கூடிய மாணவனுக்கு அல்லது மாணவிக்கு இரண்டு மதிப்பெண்கள் கொடுப்பது லட்சுமி டீச்சரின் வழக்கம். இப்படியாக ஒரு குறிப்பிட்ட செயலுக்காக, 10 மதிப்பெண் என்ற அளவில் மதிப்பெண்களும் மீதியைக் கேள்வித்தாளில் படித்து தேர்வில் வாங்கக்கூடிய மதிப்பெண்களுடன் எழுதிச் சேர்த்து, அவர்களை அந்த 35க்குக் கொண்டு வந்துவிடுவார். முழு ஆண்டுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் அப்போதெல்லாம் முப்பத்தி ஐந்து என்பதை எல்லாப் பாடங்களிலும் இல்லாமல் ஒரு சில பாடங்களில் குறைவாக வைத்த பரிந்துரைகளும் நடக்கும். அந்தப் பிரிவில் சங்கரியைக் கொண்டு வந்து, அவளை ஃபெயிலாகாமல் பாதுகாத்து வந்தார் லட்சுமி டீச்சர்.

ஒவ்வொரு வருடமும் இது நடந்து சங்கரி ஒன்பதாம் வகுப்பிற்கும் வந்துவிட்டாள். குறும்புப் பார்வையும் துறுதுறு செயல்களும் வகுப்பு மாற மாற சற்றே குறைந்தாலும் அவளது சேட்டைகளைக் குறைத்துக் கொண்டாலும் ஆசிரியர்கள் என்னவோ அவளை ஒன்பதாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புக்கு அனுப்பக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதைவிட உறுதியாக இருந்தார் லட்சுமி டீச்சர். சங்கரி பத்தாம் வகுப்பு வரையாவது இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக்கு வர வேண்டும். ஒரு தையல் மிஷினை அரசு தருவதற்குக்கூட அந்தத் தொழிற்கல்வி பயிலவாவது பத்தாம் வகுப்பு சான்றிதழ் தேவைப்படுமே என்று பிடிவாதம் பிடித்தார். ஆனால், சங்கரி 9ஆம் வகுப்புக்கு வரும் போதே 3 பாடங்களில் தேர்ச்சி பெறும் திறன் பெற்றுவிட்டிருந்தாள். ஆகவே லட்சுமி டீச்சருக்கு இது ஒரு வலிமையான காரணம் அவளைப் பத்தாம் வகுப்பிற்கு அனுப்புவதற்கு.

இது ஒரு புறம், மற்றொரு புறம் வயது உயர உயர உடல் உறுப்புகள் வளர்ச்சி, மன எழுச்சியின் மாற்றம் என சேர்ந்துகொண்டன சங்கரியை. அப்போது கூடுதலாகச் சங்கரிக்கு வழிகாட்டுதல்கள் தேவைப்படுவதை உணர்ந்த லட்சுமி டீச்சர், ஒரு நாள் சங்கரியின் வீட்டுக்குச் சென்று அம்மா, பாட்டி என உறவுகளுடன் பேசி வாரத்தின் இறுதி நாட்களில் சங்கரியைத் தனது வீட்டிற்கு அழைத்து வரச் சொன்னார். ஒராண்டு காலம் தொடர்ச்சியாகச் சங்கரிக்கு புத்தகப் பாடத்துடன் சேர்த்து பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் தன்னைக் தற்காத்துக்கொள்வது பற்றியும் பட விளக்கங்களுடன் சொல்லிப் புரிய வைத்தார். சங்கரியை முழுமையான ஒரு புரிதலுக்கு உட்படுத்திய லட்சுமி டீச்சர், திடீரென பணி மாறுதல் வந்ததால் வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டார்.

சில வருடங்கள் கழித்து மீண்டும் பழைய பள்ளிக்கு வந்தபோது, லட்சுமி டீச்சருக்குப் பல நினைவுகளுடன் சங்கரியும் நினைவுக்கு வந்தாள். அவளைப் பற்றி விசாரித்த போது, பத்தாம் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுவிட்டதாகவும் தொடர்ந்து மேல்நிலைக் கல்வியும் பெற்று, தற்போது கல்லூரியில் நுழையக் காத்திருப்பதாகவும் சொல்வதைக் கேட்ட லட்சுமி டீச்சரின் கண்களில் நீர் வழிந்தது. நெகிழ்ச்சியின் உச்சம் அது. அந்தத் தருணத்தைத் தான் ரோகிணியின் கடிதத்தை வாசிக்கும் போது நினைவுகளில் மீட்டெடுத்தார் லட்சுமி டீச்சர். ரோகிணியைப் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம் .

என்ன செய்யலாம்?

பள்ளிகளில் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பல நிலைகளில் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பயில்கின்றனர். உடல் குறைபாடுகள், உள்ளக் குறைபாடுகள், உணர்வுக் குறைபாடுகள் என மருத்துவ ரீதியாக இருபதுக்கும் மேற்பட்ட பெயர்கள் கொண்டவையாக அவை இருக்கின்றன. கல்வித் துறையில் சிறப்பாசிரியர்கள் மிகச் சிறிய எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டு இயங்கி வருகின்றனர். ஆனால், கணக்கு காட்ட, பதிவேடு தயாரிக்க என அவர்கள் சந்திக்கும் நேரத்தைத் தவிர, மற்ற நேரத்தில் அவர்களால் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு வேறு எதுவும் செய்யமுடிவதில்லை.

.இத்தகைய குழந்தைகளுக்கு உள்ளடங்கிய கல்வி (Inclusive Education) தருவதாகக் கூறி, இயல்பான வகுப்பறைகளில் தான் அமர வைக்கிறோம். எனில் இவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் அணுகுமுறையிலும் அக்கறை செலுத்துவதிலும் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வதோடு, துறை ரீதியாகச் சரியான வழிவகையில் பயிற்சியும் தரப்பட்டவர்களாக இருத்தலே சிறந்தது. நுட்பமான வகைகளில் பிரச்னைகளை உற்று நோக்குபவராகவும், இப்படியான குழந்தைகளுக்குத் தங்கள் நேரத்தையும் உழைப்பையும் சற்றுக் கூடுதலாகவே தரத் தயாராக இருக்க வேண்டும். இல்லை என்றால் சங்கரி ஆறாம் வகுப்பிலேயே இடைநிற்றல் (drop out) ஆகியிருக்க வாய்ப்புண்டு. பெண் குழந்தைகளைக் கல்வி கற்க வைப்பது நம் சமூகங்களில் அவ்வளவு எளிதன்று. ஆகவே எல்லாவற்றையும் யோசித்து, பெண் குழந்தைகளுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதுடன் அவர்களைச் சமூகத்தில் வாழத் தகுதியானவராக மாற்றும் பொறுப்பு ஆசிரிய்ர்களுடையது தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

(தொடரும்)

படைப்பாளர்:

சு உமாமகேஸ்வரி

உமாமகேஸ்வரி , அரசுப் பள்ளியில் ஆசிரியர் , கல்வி முறை குறித்தும் வகுப்பறை செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர். பாடப்புத்தகம், பாடத்திட்டம் ஆகியவற்றைத் தாண்டி குழந்தைகளது மன உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் மதித்து, அதற்கு ஏற்புடைய சூழலை அமைத்துத் தர முயற்சி மேற்கொள்பவர்.