சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை நம் முயற்சியால் அழித்தொழிக்க முடியும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், உண்மையில் எந்த ஒரு பாகுபாடும் முற்றிலுமாக அகற்றப்பட முடியாததாகவே இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல், பாகுபாடு என்பது வெவ்வேறு வடிவத்திற்கு மாறக்கூடியதாகவும் உள்ளது. சமூகத்தில் நிலவும் ஒரு வகையான பாகுபாடு, வெவ்வேறு காலக்கட்டத்தில் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைப் பற்றி வரலாற்றில் பின்நோக்கிச் சென்று அறிவதன் மூலம், பாகுபாடு மாறுதலுக்கு உட்பட்டதா இல்லையா என்று அறியலாம். இந்தக் கருதுகோளை வரதட்சணை முறையைப் பயன்படுத்தி சிறப்பாக விளக்க முடியும்.
குறிப்பாக, வரலாற்று பார்வையோடு சேர்த்து, மானிடவியல் பார்வையும் இந்தக் கருதுகோளை அணுகுவதற்கு தேவைப்படுக்கிறது. இந்தக் கட்டுரையின் மூலம், காலம் மாற மாற ஒரு தரப்பினர் மீது வேறொரு தரப்பினர் காட்டும் பாகுபாடானது எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைகிறது என்பதை அறியலாம்.
வரதட்சணை என்பது நம் இந்தியச் சமூகத்தில் மிகவும் சாதாரணமாக விவாதிக்கப்படும் ஒரு தலைப்பு. இதற்கு மிக நீண்ட வரலாறு உண்டு. காலப்போக்கில், வரதட்சணை வாங்குவதை வெளிப்படையாக ஆதரிப்பதில் இருந்து தொடங்கி மறைமுகமாக ஆதரிப்பது வரை, வரதட்சணையைப் பற்றிய இந்திய மக்களின் கண்ணோட்டம் மாறியுள்ளது. மக்களின் பார்வையில் இந்த மாற்றம் குறுகிய காலத்தில் ஏற்பட்டதல்ல. இது பல தசாப்தங்களாக ஏற்பட்ட மெதுவான மற்றும் படிப்படியான மாற்றம். வரதட்சணை முறைக்கு எதிராகப் பல ஆண்டுகளாக அரசாங்கம் மற்றும் வெகுஜன ஊடகப் பிரச்சாரத்திற்குப் பிறகும், கடுமையான சட்டங்கள் மற்றும் தண்டனைகள் வாயிலாகவும், மணப்பெண்ணின் குடும்பத்தினரிடம் வரதட்சணை கேட்பது வெட்கக்கேடானது மற்றும் அவமானகரமானது என்று இப்போது இந்தியச் சமூகத்தால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. காலப்போக்கில் வரதட்சணை பற்றிய இந்திய மக்களின் பார்வை எப்படி மாறியதோ, அதே போல வரதட்சணை முறையின் செயல்பாடும் காலப்போக்கில் மாறியது.
பல சமூகங்களில், திருமணமானது சில குறியீடாக முக்கியமான பொருட்களின் பரிமாற்றத்துடன் சேர்ந்துள்ளது. மானுடவியலாளர்கள் திருமணப் பொருள் பரிமாற்றங்களில் இரண்டு முக்கிய வகைகளை அடையாளம் கண்டுள்ளனர், அவை மணமகள் செல்வம் (bridewealth) மற்றும் வரதட்சணை (dowry) என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு வகைகளில், வரதட்சணை பற்றி அனைவரும் அறிவர். ஆனால், மணமகள் செல்வம் தரும் பழக்கம் தமிழ்ச் சமூகத்தில் இருந்தாலும், அது பற்றிப் பலருக்குத் தெரியாது. எனவே, முதலில், மணமகள் செல்வ அமைப்பு பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
மணமகள் செல்வம் என்பது, மணமகன் அல்லது அவரின் குடும்பத்தினர் அவர் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணின் குடும்பத்திற்குச் செலுத்தும் பணம், சொத்து அல்லது பிற வகையான செல்வம். மேம்போக்காகப் பார்க்கும்போது இந்த மணமகள் செல்வம் தரும் பழக்கம் முற்போக்காகவும் பெண்களுக்குச் சாதகமாகவும் தெரியலாம். ஆனால், உண்மையில் இந்த அமைப்பு ஆணாதிக்கச் சமூகத்தில் நிலவிவரும் பெண்களைப் பண்டமாகப் பாவிக்கும் மனநிலையையே வெளிப்படுத்துகிறது. இந்த அமைப்பு, ஆணாதிக்கச் சமூகங்களாக இருக்கும் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு சமூகத்தின் திருமண அமைப்பின் அங்கமாகப் பரவலாக இருந்து வருகிறது. இந்த அமைப்பு மற்ற சமூகங்களிலும் காணப்படுகிறது. ஒவ்வொரு சமூகத்திலும் இந்த முறை செயல்படும் விதம் மாறினாலும் அடிப்படை வடிவம் ஒற்றைத் தன்மை உடையது.
மணப்பெண் செல்வம் தரும் அமைப்பின் பொதுவான அம்சங்கள்:
மணமகள் செல்வமாகப் பரிமாறப்படும் பொருட்கள், சம்பந்தப்பட்ட மக்களுக்குக் குறிப்பிடத்தக்க குறியீட்டு மதிப்பைக் கொண்டுள்ளதாக இருக்கும். கடல் ஓடு ஆபரணங்கள், தந்தங்கள், பித்தளை கூம்புகள், பறவை இறகுகள், பருத்தி துணி, விலங்குகள் ஆகியவை அடங்கும். பணமும் பயன்படுத்தப்படலாம். கால்நடைகளை மணமகள் செல்வமாகத் தரும் வழக்கம் கிழக்கு, தென் ஆப்பிரிக்காவில் பரவலாக உள்ளது. அங்கு கால்நடைகள் மிகவும் ஆழமான குறியீட்டு மற்றும் பொருளாதார மதிப்பைக் கொண்டுள்ளன. இந்தச் சமூகங்களில், ஓர் ஆணின் தந்தையும் பெரும்பாலும் அவனுடைய முழுப் பரம்பரையும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கால்நடைகளை (பெரும்பாலும் தவணைகளில்) ஆணின் மணப்பெண்ணின் பரம்பரைக்குக் கொடுக்கிறார்கள்.
மணமகள் செல்வம் தரும் பழக்கம் ஆப்பிரிக்க இனக்குழுக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள விவசாயம் மற்றும் கால் நடை சமூகங்கள் மத்தியிலும் பரிசம் போடுதல் என்ற பெயரில் காணப்படுகிறது. பரிசம் போடும் பழக்கம் வெவ்வேறு சமூக (சாதி) மக்களால் வெவ்வேறு வகையில் பின்பற்றப்படுகிறது. சில சமூகத்தில் திருமணத்திற்கு முன் பெண்ணுக்கு அல்லது பெண் வீட்டாருக்கு நகையையோ அல்லது பணத்தையோ பரிசாகக் கொடுப்பார்கள். சில சமூகத்தில், திருமணத்திற்கு முன் மணமகன் வீட்டார் மணப்பெண்ணுக்குப் பூ வைத்துவிட்டுச் செல்வதையும் பரிசம் போடுவதாகக் கருதப்படுகிறது. காலப்போக்கில், இந்தப் பரிசம் போடும் முறை மருவி நிச்சயம் செய்யும் முறையாக மாறியுள்ளது. இந்த முறையைப் பற்றிய ஆழமான புரிதலுக்கு மானிடவியல் பார்வை மிக அவசியமானது.
மானுடவியலாளர்கள் மணமகளின் செல்வத்தை மணமகளின் உறவினர்களுக்கு அவரது உழைப்பு மற்றும் குழந்தை பிறக்கும் திறன் இழப்புக்கு ஈடுசெய்யும் ஒரு வழியாகக் கருதுகின்றனர். மணமகள் வீட்டை விட்டு வெளியேறியதும், அவள் கணவனுடனும் அவனது பரம்பரையினருடனும் வாழச் செல்கிறாள். அவள் கணவனின் வீட்டில் வேலை செய்து அவனுடைய பரம்பரைக்கு மக்கள் செல்வத்தை (குழந்தை பெறுதல்) உருவாக்குவாளே தவிர, அவளுடைய பிறந்த வீட்டு உறவுகளுக்காக அல்ல. குழந்தை பெறுவதை மக்கள் செல்வம் என்று குறிப்பிடுவதில் ஒரு காரணம் உள்ளது. நிலவுடமை சமூகத்தில் விவசாயம் சார்ந்த மக்களுக்கு மனித வளம் மிக முக்கியமான வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. எனவே, மக்கள் செல்வம் தரக்கூடிய ஒரு வளத்தை (பெண்ணை) மணப்பெண் வீட்டார் இழப்பதினால் அதை ஈடுகட்டும் விதமாக மணமகன் பெண்வீட்டாருக்குக் கொடுக்கும் விலை தான் இந்த மணமகள் செல்வம் எனப்படுவது.
இதற்கு நேர்மாறாக, வரதட்சணை என்பது பொதுவாகப் பெற்றோரிடமிருந்து அவர்களின் மகளுக்கு, அவள் திருமணத்தின் போது குடும்பச் செல்வத்தை மாற்றுவதாகும். சில சமூகங்களில், வரதட்சணை பெண்களுக்குத் தரப்படும் சொத்தாகக் கருதப்படுகிறது. வரதட்சணையில் சேர்க்கப்படும் பொருட்கள் வெவ்வேறு சமூகங்களில் மாறப்படும். பெரும்பாலும் கணவரிடம் அசையா சொத்துகள் இருப்பதினால், வரதட்சணையாகப் பெண்களுக்கு அசையும் சொத்துகளான நகையும் பணமும் கொடுத்தனுப்பப்படுகிறது. இருப்பினும், வரதட்சணை போதுமானதாக இல்லை எனக் கருதப்படும் போது எழும் சில எண்ணங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற சோகமான முடிவுகளுக்கு வழிவகுக்கும். அடுக்கடுக்கான சமூகங்களில் ஒரு பெண்ணின் வரதட்சணையின் அளவு, அவள் திருமண வாழ்க்கையின் சுக துக்கத்தை உறுதி செய்கிறது.
மணமகள் செல்வம் மற்றும் வரதட்சணை முறைகளை ஒப்பிட்டு பார்க்கும் போது, பொருள் பரிமாற்றம் யாரிடம் இருந்து யாரிடம் செல்கிறது என்பதில் வேறுபடுகிறதே தவிர, மற்றபடி இரண்டு முறையுமே ஆணாதிக்கச் சமூகத்தின் பெண்ணடிமைத்தனத்தையே வெளிப்படுத்துகிறது. மணமகள் செல்வம் அமைப்பு பெண்களை ஒரு பண்டமாகப் பாவிக்கிறது; வரதட்சணை அமைப்பு பெண்களைப் பல்வேறு வகையில் சுரண்டுகிறது. மொத்தத்தில், திருமணத்தின் போது செய்யப்படும் இரண்டு வகை பொருட்கள் பரிமாற்ற அமைப்பும் பெண்களைச் சிறுமைப்படுத்துகிறது. அதுமட்டும் இன்றி, இவ்விரு முறைகளுக்கும் இடையே சில முக்கியமான ஒற்றுமைகளைக் காணலாம்.
மணமகளின் செல்வப் பரிவர்த்தனைக்குப் பின் மனைவியின் உறவினர்களுக்கும் கணவரின் உறவினர்களுக்கும் இடையே உள்ள உறவு முடிவடைகிறது. இதன் மூலம், இந்த அமைப்பில் பெண்கள் திருமணத்திற்குப் பிறகு அவர்கள் பிறந்த வீட்டாரை நிரந்தரமாகப் பிரிக்கிறார்கள் என்று அறியமுடிகிறது. மனைவியின் உறவினர்கள், தாங்கள் பெறும் மணமகளின் செல்வத்தைப் பயன்படுத்தி, மற்றோர் உறவினர் குழுவில் மனைவியின் சகோதரனுக்கு மணமகளைத் தேடலாம். இதனால்தான் ’மணமகள் மற்றும் வரதட்சணை’ என்ற புத்தகத்தில், மானிடவியலாளர்கள் ஜேக் கூடி மற்றும் ஸ்டான்லி தம்பையா மணமகள் செல்வத்தைச் சுழற்சி முறையில் வளம் வரும் ஒரு சமூக நிதி என்று விவரிக்கின்றனர். இந்த செல்வச் சுழற்சியை வரதட்சணை முறையிலும் காணமுடிகிறது. பெண் கொண்டுவரும் வரதட்சணையைக் கணவனின் சகோதரிக்கு வரதட்சணையாகக் கொடுத்தனுப்பும் பழக்கமும் நம் சமூகத்தில் நிலவியது.
இவ்விரு முறைகளையும் வரலாற்று ரீதியாக அணுகும்போது, தமிழ் சமூகத்தில் பரிசம் போடும் முறையில் இருந்து வரதட்சணை வாங்கும் முறைக்கு மாறியதைக் காணமுடிகிறது. பெரும்பான்மையான தமிழ் சமூகத்தில், பரிசம் போடும் முறை வழக்கொழிந்திருந்தாலும் நிச்சயம் செய்யும் வழக்கத்தில் பரிசம் போடுவது ஒரு சடங்காகச் செயல்படுத்தப்படுகிறது. பரிசம் போடும் முறையை இன்றும் கைவிடாமல் இருக்கும் சில சமூகங்கள் வரதட்சணை முறையையும் சேர்த்து கடைப்பிடிக்கின்றனர். இதனால், இந்தச் சமூகங்களில் பெண்கள் இரண்டு வகையிலும் சிறுமைப் படுத்தப்படுகிறார்கள்.
இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டது போலவே, பல தசாப்தங்களாக வரதட்சணை முறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அணைத்து அரசாங்கம் மற்றும் தனியார் சீர்திருத்த நடவடிக்கை மூலம், மணப்பெண்ணின் குடும்பத்தினரிடம் வரதட்சணை கேட்பது வெட்கக்கேடானது, அவமானகரமானது என்று இப்போது இந்தியச் சமூகத்தால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரதட்சணை மெல்ல மெல்ல அழிந்துவருகிறது என்று பொதுப்படையாக நம்பப்படுகிறது. ஆனால், உண்மையில் அது அழிவை நோக்கிப் பயணிக்கவில்லை என்பதுதான் நிஜம். வரதட்சணை வாங்கும் முறை சற்றுப் பரிணாம வளர்ச்சி அடைந்து, பெண்ணிடம் நகை, பணம் போன்ற பொருட்களைக் கேட்பதை விடுத்து நல்ல வருமானம் ஈட்டக்கூடிய பிடிப்பைக் கேட்கிறார்கள். மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்தப் பரிணாம வளர்ச்சி முற்போக்காகத் தோன்றலாம். ஆனால், நுட்பமாகப் பார்க்கும் போது இந்த எதிர்பார்ப்பிற்குப் பின்னால் இருக்கும் நவீன சுரண்டல் தென்படுகிறது.
இன்றைய சூழலில், பெரும்பாலும் திருமணமாகி வரும் பெண்ணிடமிருந்து ஒரே தவணையாக வரும் செல்வம் (வரதட்சணை) எளிதில் கரையக்கூடியதாக இருக்கிறது. அதோடு, கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றால் தான் சுமூகமான வாழ்க்கையை வழிநடத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, ஒரே தவணையாக வரும் வரதட்சணையைவிடப் படித்த பெண் வேலைக்குச் செல்வதினால் மாதம் தோறும் தவணை முறையில் வரும் வரதட்சணை ஆண் வீட்டாருக்குப் பல மடங்கு லாபம் தரக்கூடியதாக இருப்பதினால் பெண் படித்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. திருமணத்திற்குப் பிறகு பெண் வேலைக்குச் செல்வதென்பது முற்போக்கான செயல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், பெரும்பாலான வீடுகளில் பெண்ணின் சம்பாத்தியத்தை அவளுடைய பிறந்த வீட்டுச் சொந்தங்களுக்குச் செலவழிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, வரதட்சணையின் இந்தப் பரிணாம வளர்ச்சியைப் பெண்ணை நவீன முறையில் சுரண்டுகிறதே தவிர, வேறெந்த வகையிலும் பெண்ணின் வளர்ச்சிக்கு நேரடி உறுதுணையாக இல்லை. இன்றைய சூழலில், வேலைக்குச் செல்லும் ஆணும் பெண்ணும் சேர்ந்து அவர் அவர் பெற்றோரைப் பார்த்துக்கொள்ளும் நிலையே உண்மையான முற்போக்காக இருக்கும்.
வரதட்சணை எனும் பெண்களுக்கு எதிரான பாகுபாடு காட்டும் அமைப்பு, வெவ்வேறு காலகட்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்து, பெண்களை மென்மேலும் ஒடுக்குகிறதே தவிர, சமூகத்தில் இருந்து முற்றிலுமாக அழிக்கப்படவில்லை. எனவே, ஒரு பாகுபாடு முன் இருந்த வகையில் இப்போது இல்லை என்பதினாலேயே அது முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று கூற முடியாது. பாகுபாடு மாறுதல் அடைந்து வேறு வடிவில் சமூகத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. தொடர்ந்து இது போன்ற பாகுபாடுகளைப் பற்றிப் பேசி விழிப்புணர்வு மேற்கொள்வதன் மூலம் தான் அவற்றை நாம் முற்றிலுமாக அழித்தொழிக்கமுடியும்.
படைப்பாளர்:
தீபிகா தீனதயாளன் மேகலா
தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா, தற்போது கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். தான் கற்றுவரும் மானுடவியல் கோட்பாடுகளை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிர பற்று கொண்டவர். இவரது யூடியூப் செய்தி சேனலின் சுட்டி: https://www.youtube.com/channel/UCyNXWPShwgZG4IsyjP7BnAQ