“பொன், பெண், மண்” என்ற பெயரில் பெண்ணும் பொருளோடு பொருளாக, தவிர்க்க முடியாத ஆசையின் வித்தாக பார்க்கப்படுகிறாள். ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு உரிமை மாறி தாரை வார்த்து கொடுக்கப்படும் பொருளாகிறாள். இதனோடு வரதட்சணை என்ற பெயரில், பெரும் பொருள் நஷ்டம் உருவாக்கும் செலவாகவும் அவள் நடத்தப்படுகிறாள். 

அதே சமயம் ஒரு பெண்ணை வீட்டுக்கு ‘மகாலட்சுமி’ என்று அழைக்கும் வழக்கம் இருக்கிறது. மகாலட்சுமியை செல்வத்துக்கான கடவுளாக போற்றுகிறது மதம்.

நடைமுறையில் பெண்ணுக்கும் பொருளுக்குமான உறவு எப்படி இருக்கிறது?

பெண் வீட்டில் செய்யும் வேலைகளுக்கான பொருளாதார மதிப்பை எந்த குடும்பமும் கணக்கெடுப்பதில்லை. பெண்ணின் வீட்டு வேலைகள் மதிக்கப்படாத பங்களிப்பாகவே போகின்றன.

பெண் வேலைக்கு சென்றோ, தொழில் செய்தோ பொருள் ஈட்டுவது நம் சமூகத்தில் சில ஆண்டுகள் முன் வரை ஒவ்வாததாகவே கருதப்பட்டது. வெளிநாடுகளும் இந்த நடைமுறைக்கு விதிவிலக்கில்லை. சமீபத்தில் கூட ஒரு நண்பரின் தங்கை கணவர் தவறியதாக கேள்வியுற்று, குடும்பம் என்னாகும் என்ற பதற்றத்தோடு , “உங்கள் தங்கை என்ன செய்கிறார்? ஏதும் வேலைக்கு சொல்கிறாரா?”, என்று கேட்டோம். “எங்கள் குடும்பங்களில் பெண்கள் வேலைக்குப் போவதில்லை”, என்று அந்த சூழலிலும் பெருமையாக நண்பர் சொன்னார்.

மாறி வரும் சமூகச் சூழலில் பெண் பணம் ஈட்டுவது பரவலாகி வருகிறது. என்னதான் பெண் பொருள் ஈட்டினாலும், அந்த பணத்தின் பொறுப்பு பெரும்பாலும் அவள் குடும்பத்தின் ஆணிடமே இருக்கிறது. ஈட்டுவதோடு சரி, அந்த பணத்தை கணக்கிட்டு செலவு செய்வது, முதலீடுகள், சொத்து வாங்குதல், விற்றல் ஆகியவற்றில் பெண்களின் பங்கு மிகக் குறைவாகவே இருக்கிறது.

உலகத்தின் மொத்த அசையா சொத்துக்களில் 20%க்கும் குறைவாகவே பெண்களின் பெயரில் இருப்பதாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன. பினாமியாக வாங்கப்படும் சொத்துக்களும் சேர்த்தே இந்த லட்சணம்தான். 

லட்சத்தைத் தொடும் சம்பளம் வாங்கியும் ஏடிஎம் அட்டைகளைக் கணவர்களிடம் கொடுத்து, பேருந்துக்கு கணக்காக பணம் வாங்கி வரும் பெண்களை நிறைய பார்த்திருக்கிறேன். ஒரு நாள் அவசரம் என்றால் ஒரு பொருள் வாங்கிக்கொள்ளக்கூட அவர்களிடம் பணம் சற்று கூடுதலாக இருப்பதில்லை. “நான் தான் எல்லாம் வாங்கித்தருகிறேனே”, “அவளுக்கு எதற்கு சிரமம்?”, “அவளை எளிதாக ஏமாற்றி விடுவார்கள்”, என்று சொல்லப்படும் சாக்குகள் ஏராளம்.

இத்தனைக்கும் பெரும்பாலான பெண்கள் தங்கள் தாய் வீட்டுக்குக்கூட பணம் எதுவும் கொடுப்பதில்லை. தனக்குத் தேவையான பொருட்களும், குடும்பத்துக்குத் தேவையான பொருட்களும் மட்டும்தான் வாங்குகிறார்கள்.

ஆண்கள் தேநீருக்கும் பொழுதுபோக்குக்கும் செலவு செய்யும் பணத்தின் அளவுக்கு ஆடைகள் வாங்கும் பெண்ணை, “புடவைப்பைத்தியம்” என்று பட்டிமன்ற பொண்டாட்டி ஜோக்குகள் தொடர்ந்து முத்திரை குத்துகின்றன.

பெண்களும், வீட்டு வேலைகளில் ஆணின் பங்கு குறைவாக இருப்பதால், மனதளவிலும் உடலளவிலும் அதிகம் பொறுப்புகளை சுமக்க வேண்டியிருப்பதால், பணப்பொறுப்பை ஆணிடம் விட மறுப்பதில்லை. மற்ற பொறுப்புகளில் கிடைக்கும் அதிகாரத்தைவிட பணப்பொறுப்பில் கிடைக்கும் அதிகாரம் அதிகம் என்பதால், ஆணும் அதை பகிர  விரும்புவதில்லை. 

சமீபத்தில் விவாகரத்தான ஒரு நடிகை தனக்கு ஜீவனாம்சம் வேண்டாம் என்று சொன்னதைக் கேட்டு சில்லறையை சிதற விட்டவர்கள், பெண்ணின் உழைப்புச் சுரண்டலை, பொருளாதார அதிகாரப் பகிர்வின்மையைக் கணக்கில் கொள்வதில்லை. 

நடைமுறையில் “பொருளாதாரத்தில் சரிபாதி பொறுப்பு” என்பதை குடும்பங்கள் எப்படி அமல்படுத்துவது ?

பொருளாதார தற்சார்பு:

Photo by cottonbro: https://www.pexels.com/photo/smiling-woman-in-fur-coat-posing-5922465/

ஒவ்வொரு பெண்ணும் பொருளாதார ரீதியாக தற்சார்போடு இருப்பதற்கு தொடர்ந்து முயலவேண்டும். முழு நேரப் பணியை குடும்பத்திற்காக விடும் சூழல் பல பெண்களுக்கு ஏற்படுகிறது. அத்தகைய சூழலை முடிந்த அளவு தவிர்க்க முயற்சி செய்யலாம். மீறி பணியை விட நேர்ந்தால், மீண்டும் பணியில் சேர ஒரு நல்ல வாய்ப்பை எதிர்நோக்கி இருத்தல் நல்லது. தன் செலவுகளுக்கு யாரையும் சாராமல் இருக்கும் அளவுக்காவது, சிறு பகுதி நேர வேலைகளை எடுத்துச் செய்யலாம். பெண் தொழில் முனைவோர் அதிகம் வரவேண்டியது வீட்டுக்கும் நாட்டுக்கும் அவசியம். 

அறிதல்/விழிப்புணர்வு:

தங்கள் குடும்பத்தின் வரவு, செலவு எவ்வளவு? செலவுகள் என்ன? முதலீடுகள் என்ன? ஒவ்வொரு முதலீட்டின் இலக்கு என்ன? வங்கிக்கணக்குகள், லாக்கர் எண்கள், காப்பீடு, கடன் விவரங்கள் என அனைத்தும் குடும்பத்தில் ஆண், பெண் இருவருக்கும் தெரிந்திருப்பது அவசியம். ஆன்லைனில் பெரும்பாலான கணக்குகள் இருக்கும் நிலையில், அதன் கடவுச்சொற்கள் இருவருக்கும் பொதுவான ஒரு கோப்பில் சேமித்து வைக்கப்படவேண்டும். தம்பதியரில் ஒருவர் அறியாமல் மற்றொருவர் செய்யும் செலவுக்கென ஒரு அதிகபட்ச அளவை இருவரும் சேர்ந்து நிர்ணயிக்க வேண்டும். 

குடும்பம் தாண்டி, அரசு பெண்களுக்கென்று சேமிப்பு, முதலீடு, தொழில் திட்டங்கள் ஆகியவற்றை கொண்டு வந்திருக்கிறது. அதை பற்றி விரிவாக அறிந்து அதன் மூலம் பெண்கள் பலர் பயன்பெற வேண்டும்.

‘பெண்களுக்கு பொருளாதாரத்தைப் பற்றி தெரிவதில்லை’, என்ற ஒரு பொது குற்றச்சாட்டு இருக்கிறது. அதை உடைக்க பெண்கள் முன்வரவேண்டும். தனக்கு சுத்தமாக தெரியாத சமையல், குழந்தை வளர்ப்பு தொடர்பான பல விஷயங்களை ஆன்லைனில் பார்த்து கற்றுக் கொள்ளும் நாம், பொருளாதாரத்திற்கும் முக்கியத்துவம் தரத் தொடங்க வேண்டும்.

பெரும்பாலான குழந்தைகள் தாயை முன்மாதிரியாகக் கொண்டு வளர்கின்றனர். தாய்மார்கள் பொருளாதார அறிவுடன் இருப்பது குழந்தைகளை வழிநடத்தவும், சிறு வயதிலிருந்தே பணம் பற்றிய தெளிவுடன் வளர்க்கவும் உதவும்.

“பணம் தான் முக்கியமா?” என்ற கேள்வி இங்கு பெண்களைப் பார்த்தே அதிகம் கேட்கப்படுகிறது.  பணம் ‘எல்லாம்’ கிடையாது, ஆனால் வாழ்வில் பணம் முக்கிய அங்கம் வகிக்கிறது என்பதை பெண்கள் புரிந்துகொண்டு, தங்களைப் பொருளாதாரம் சார்ந்து வளப்படுத்திக் கொள்வது அவசியம்.

முடிவெடுத்தல்:

எந்த செலவுகளை தவிர்க்கலாம், எதை எப்போது செய்யலாம், எவற்றில் முதலீடு செய்யலாம் என்பது போன்ற முடிவுகளில் ஆணுக்கு இணையான உரிமை பெண்ணுக்கும் இருக்க வேண்டும். பெண்கள் செலவைத் தவிர கவலைப்படுவது சேமிப்பு குறித்துதான். சேமிப்பு மட்டும் போதாது, முதலீடும் அவசியம். வட்டி விகிதம், பணவீக்கம் போன்ற விஷயங்களைத் தேடி அறிந்து பெண்கள் கற்க வேண்டும்.

ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக சேமிப்பும், முதலீடும் அவசியமாக இருக்கிறது. பெண்களுக்கு சராசரி வாழ்நாள் அதிகமாக இருப்பதால், அதிகமாக முதலீடு செய்து வைத்தால்தான், ஓய்வுக்கு பின்னான செலவுகளுக்கு பயன்படும்.

முடிவுகளில் சில சமயம் தவறுகள் நிகழ்வது சகஜம், அதை ஆண்கள் எளிதாகக் கடப்பது போல பெண்களால் கடக்க முடிவதில்லை. அவர் சார்ந்த குடும்பம் அவரைத் தொடர்ந்து குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. சில தவறுகள் செய்யாமல் எந்த விஷயத்தையும் கற்க முடியாது என்பதை நமக்கு நாமே தொடர்ந்து சொல்லிக்கொள்ள வேண்டிருக்கிறது.

சொத்துரிமை:

பாரம்பரியமாக அசையும் சொத்துகள் பெண்களுக்கு, அசையா சொத்து ஆணுக்கு என்ற நடைமுறை இங்கு இருந்து வந்துள்ளது. இன்றும் பல பெண்கள் உறவுக்காக உரிமையைக் கேட்டுப்பெறுவதில்லை. வரதட்சணையை தவிர்த்து, சொத்தாக தன் உரிமையைப் பெற பெண்களும் அவர்கள் குடும்பங்களும் முன்வர வேண்டும். 

ஊதிய சமநிலை:

ஒரே வேலையை செய்யும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே ஊதியம் என்ற நிலையை அடைய தொடர்ந்து போராட வேண்டும். இது சமூக ரீதியாக நடக்க வேண்டிய மாற்றம்.

இவை எல்லாம் பின்பற்றப்படும் போது பெண்களின் முழு திறனும் வெளிப்பட்டு, நாடும் வீடும் தழைக்க முடியும். 

தொடர்வோம்…

தொடரின் முந்தைய பகுதியை வாசிக்க:

படைப்பு:

கயல்விழி கார்த்திகேயன்

திருவண்ணாமலையைச் சேர்ந்த கயல்விழி, சென்னையில் பெருநிறுவனம் ஒன்றில் மேலாண்மை நிர்வாகியாகப் பணியாற்றுகிறார். வாசிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவர்.