கயல் எழுத்து -2

நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும் போதானாலும் சரி, திருமணம் போன்ற நிகழ்வுகளில் சந்தித்தாலும் சரி, நீண்ட நாளைக்குப்  பிறகு ஒரு மூத்தவரும் இளையவரும் சந்தித்தால், சில உரையாடல்கள் சம்பிரதாயம் ஆகிவிட்டன. பரஸ்பர நலம் விசாரித்தலுக்குப் பின், இளையவரின் வயதும் நிலையும் பொறுத்து கேள்விக்கணைகள் பாயும். 

படிக்கும் வரை – “என்ன மார்க் வாங்கறே? இதெல்லாம் போதுமா?”

படித்து முடிப்பதற்குள் – “வேலைக்கு போக ஆரம்பிச்சாச்சா? என்ன சம்பளம்?”

வேலைக்குப் போனதும் – “எப்போ கல்யாணம்? அதெல்லாம் காலா காலத்துல நடக்கணும் இல்லையா?”

திருமணம் ஆன ஓரிரு மாதங்களிலேயே – “ஒண்ணும் விசேஷம் இல்லையா?”

குழந்தைக்கு ஒரு வயதானால் – “அடுத்தது எப்போ? ஒன்னோட நிறுத்தினா பிள்ளை ஏங்கி போய்டும்ல?”

இதற்கு நடுவில் – “வீடு வாங்கலையா?”

அடுத்தது – “கார் வாங்கலையா?” என இந்தப் பட்டியல் நீளும். 

இவை எல்லாம் சரியான வரிசையில் நடப்பதுதான் முந்தின தலைமுறைகளைப் பொறுத்த வரையில் சரியான வாழ்க்கை பாதை, ஒவ்வொன்றிற்கும் அதற்கான வயது என்று பொதுவிதி நிர்ணயித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை செய்யாமல் இருப்பதோ, மாற்றி செய்வதோ, காலம் தாழ்த்திச் செய்வதோ தோல்வி, குறை என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. 

இதில் வேலை, சம்பளம் ஆகியவற்றில் ஆண்களும், குழந்தை விஷயத்தில் பெண்களும் அதிகமாக கேள்வி கேட்கப்படுகிறார்கள். 

உண்மையிலேயே அக்கறையுடன் கேட்கப் படும் கேள்விகள் இவை; ஆனாலும் பல இளையவர்களை இந்தக் கேள்விகள் புண்படுத்துகின்றன.

வெளி உலக அனுபவமும், வெவ்வேறு கனவுகளும் காண முடிகிற தலைமுறையாக இன்றைய தலைமுறை வளர்ந்திருக்கிறது. சிலர் திருமணம் வேண்டாம் என்று நினைக்கிறார்கள், சிலர் பல்வேறு காரணங்களுக்காக குழந்தைப்பேற்றைத் தள்ளிப் போடுகிறார்கள். சிலருக்கு குடும்ப, பொருளாதார, உடல்நிலை சார்ந்த பிரச்சனைகளால் அடுத்தடுத்த கட்டத்தை அடைவதில் சிரமம் ஏற்பட்டிருக்கலாம். அவை எல்லாவற்றையும் நம்மிடம், அதுவும் ஒரு பொது வெளியில் போகிற போக்கில் பகிர தயாரான மன நிலையில் அடுத்தவர் இல்லாமல் இருக்கலாம்.

நாம் என்னதான் சமூக விலங்காக வாழ்ந்தாலும், சில தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பதே நலம்!

குழந்தைகளாக இருந்தால், “என்ன பாடம் பிடிக்கும்?”, “உன் நண்பர்கள் யார்?”, “என்ன விளையாடப் பிடிக்கும்?” என்று பிரச்னை இல்லாமல் எதையோ கேட்கலாம். வளர்ந்தவர்களிடம் என்ன பேசுவது?

இந்த குழப்பத்தைத் தீர்க்க இருபதிலிருந்து  முப்பது வயது வரை இருக்கிற சிலரிடம் கேட்டோம் – உங்களை நீண்ட நாள் கழித்து சந்திக்கும் நண்பர்கள்/ உறவினர்கள் உங்களிடம் என்ன கேட்டால் மகிழ்ச்சி அடைவீர்கள் என்று… அவர்கள் சொன்ன பதில்களைத் தொகுத்திருக்கிறோம். இது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, நம் வயதொத்தவர்களுடன் உரையாடுவதற்கும் ஒரு வழிகாட்டியாக அனைவருக்குமே பயன்படலாம்.

Photo by Vladislav Klapin on Unsplash


தவிர்க்க வேண்டிய கேள்விகள்:

1. ஒருவரின் தனிப்பட்ட விவரங்களைக் கேட்பதைத் தவிர்க்கவும்.

இதைத்தானே சம்பளமும், வயதும் கேட்கக்கூடாது என்றார்கள்? – அவற்றோடு திருமண தகுதி, குழந்தை, சொத்து வாங்குதல் போன்ற விஷயங்களையும் சேர்த்துக் கொள்ளவும். உங்களுக்கு நன்றாக தெரிந்து ஒருவர் ஏற்கனவே அந்த வாழ்க்கைக் கட்டத்தை கடந்திருந்தால் அதைப்பற்றி கேட்கலாம். குழந்தை கையில் வைத்திருப்பவரை, “குழந்தை என்ன செய்கிறது? நலமா?” என்று கேட்கலாம்.

2. தானோ தன்னைச் சார்ந்தவர்களோ குறைவானவர் என்று நினைக்க வாய்ப்பு இருக்கும்படியான கேள்விகளைத் தவிர்க்கவும்.

உடல் எடை, நிறம், பணம் என்று எல்லாமே இதில் அடக்கம். மேலுள்ள குழந்தை எடுத்துக்காட்டில், “குழந்தை பேச ஆரம்பித்து விட்டதா?” போன்ற கேள்விகளைத் தவிர்க்கவும். ஒருவேளை குழந்தை பேச ஆரம்பிக்கவில்லை என்றால் பெற்றோரின் மனம் புண்படலாம். ஒருவேளை குழந்தை பேச ஆரம்பிக்கவில்லை, அதற்கான மருத்துவ அல்லது அனுபவ ரீதியான அறிவுரை தேவைப்பட்டால் அவர்களாகப் பகிர்வார்கள். அப்போது சொல்லிக் கொள்ளலாம்.

3. ஜோதிடம், பரிகாரம், கோவில், குளம் பரிந்துரைப்பது, மருத்துவமனைகள் பரிந்துரைப்பது ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.

தவிர்க்க வேண்டியவற்றைப் பற்றி பார்த்தோம்.

பேச/கேட்கக் கூடியவை இனி:

1. புகழுரைகளை விரும்பாத மனிதரே இல்லை எனலாம். இயல்பாக எதிரில் இருப்பவருக்கு ஏதேனும் சின்ன புகழுரை அல்லது பாராட்டு தெரிவிக்கலாம். அவர் அணிந்திருக்கும் உடையோ, அவர் செய்த ஏதோ ஒரு விஷயமோ, உங்களுக்கு மனதாறப் பிடித்திருந்தால் அதை வாய் திறந்து பாராட்டலாம்.

2. ஏதேனும் உதவி மற்றவருக்கு தேவைப்பட்டு உங்களால் செய்ய முடியுமென்றால் அதை நேரடியாக சொல்லலாம். செயலாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. தகவல், வழிகாட்டுதல் போன்ற எதுவாக இருந்தாலும். “இதைப்பற்றி நான் உங்களுக்கு சொல்ல முடியும், தேவை என்றால் கேளுங்கள்” என்று சொல்வது நலம்.

3. உடல்நலன், மனநலன் எப்படி இருக்கிறது என்பது பற்றி விசாரிப்பதை பலரும் விரும்புகிறார்கள். முன் தலைமுறைகளை விட மனநலத்தைப் பற்றி அதிகமாக பேசும் தலைமுறை உருவாகி இருக்கிறது. முன் தலைமுறையிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால், “எனக்கென்ன? பைத்தியமா பிடித்திருக்கிறது?” என்று கேட்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் தற்போதைய சூழலில் பலருக்கும் மனநலம் பற்றிய அக்கறையான விசாரிப்பு நிறைவைத் தருகிறது. 

4. வேலைக்கு போகிற வயதில் இருக்கும் இளைஞர்கள் பலரும் தங்கள் பணியைப் பற்றி கேட்டால், மகிழ்வதாகச் சொல்கிறார்கள். பணி தவிர வெளியில் அவர்கள் செய்யும் விஷயங்கள் என்ன? அவர்களின் ரசனைகள், அவர்கள் பார்த்த படங்கள், சீரிஸ் என பொதுவான விஷயங்கள் பற்றிப் பேச விரும்புகிறார்கள். 

5 . தங்கள் கடந்த காலத்தைப் பற்றி பேசும் போதெல்லாம் “நாங்கல்லாம் அந்த காலத்துல” என்று பெருமை மட்டும் பேசாமல், நல்ல அனுபவங்கள், ரசித்த விஷயங்கள், அதிலிருந்து கற்ற விஷயங்கள் என்று லேசான விஷயங்களை பகிர்வதைப் பலரும் விரும்புகிறார்கள். அது ஒரு எம். ஜி.ஆர் படமோ, பாடலோ, கடிதமோ, காதலோ – அனைத்தையும் கேட்க இளைஞர்கள் தயார். 

இப்படியான விஷயங்களை பேசுவதன் மூலம் சம்பிரதாய பேச்சுக்களும், விசாரிப்புகளும் தாண்டிய லேசான அதே சமயம் அக்கறை மிகுந்த ஒரு உரையாடலை, யார் மனமும் புண்படாமல்  அமைக்க முடியும். 

தொடர்வோம்…

தொடரின் முந்தைய பகுதி:

https://herstories.xyz/womens-day-kayalvizhi/

படைப்பு:

கயல்விழி கார்த்திகேயன்

திருவண்ணாமலையைச் சேர்ந்த கயல்விழி, சென்னையில் பெருநிறுவனம் ஒன்றில் மேலாண்மை நிர்வாகியாகப் பணியாற்றுகிறார். வாசிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவர்.