தமிழ்நாட்டிலிருந்து கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் செல்லுவதற்கு வானூர்திகள் உள்ளன. செவ்வாய் தவிர மற்ற நாள்களில் யாழ்ப்பாணத்திற்கு நாகப்பட்டினத்திலிருந்து படகுப் போக்குவரத்தும் உள்ளது.
மதுரை தான் எங்கள் ஊரிலிருந்து பக்கம் என்றாலும், எங்களுக்குச் சென்னை செல்லும் தேவை இருந்ததால் சென்னையைத் தேர்ந்தெடுத்தோம். சென்னையிலிருந்து கொழும்பு சென்று, யாழ்ப்பாணத்திலிருந்து சென்னை வருவதாகத் திட்டம். நாங்கள் இண்டிகோ வானூர்தியைத் தேர்ந்தெடுத்தோம். கையில் ஏழு கிலோ கொண்டு செல்லலாம். மேலும் பதினைந்து கிலோ எடையுள்ள பெட்டி ஒன்றை அனுமதிக்கிறார்கள், பயணத்தின் போது, உணவு கொடுக்கவில்லை. தேவையென்றால் முதலிலேயே பதிவு செய்ய வேண்டும். ஏறக்குறைய ஒரு மணிநேரப் பயணம் தான் என்பதால் தேவையும் இருக்கவில்லை. பயணக்கட்டணம் போகவர ஏறக்குறைய பதினைந்தாயிரம் இந்திய ரூபாய்.

இப்போதெல்லாம் சென்னை அண்ணா வானூர்தி நிலைய அலுவலர்கள் மிகவும் அன்பாகவும், மரியாதையாகவும் இயல்பாகவும் நம்முடன் பழகுவதை உணர முடிகிறது. “காலை உணவாகக் கிழங்கு கொண்டு வந்திருக்கிறேன். வாங்க சாப்பிடலாம்” என்னுமளவிற்கு எங்கள் அதிகாரி இருந்தார். வெளியிலிருந்து உள்ளே வரும் இடம் ஒரு அழகு என்றால் (வரும்போது பார்க்கலாம்) உள்ளே இருந்து வெளி நாட்டிற்குச் செல்லும் இடம் வேறொரு அழகு. பல கலைப்பொருள்கள் வைத்திருக்கிறார்கள். கடவுள்கள் எனப் பார்த்தால் முருகரும், நாட்டார் கடவுள்களும் ஆங்காங்கே இருந்தாலும் குழலூதும் கண்ணன் தான் நீக்கமற நிறைந்திருக்கிறார். பெரிய பெரிய கொப்பரை போன்ற பல பழங்காலப் பொருள்களை ஆங்காங்கே வைத்திருக்கிறார்கள். மிகத்தூய்மையான கழிவறை, சிறு சிறு கடைகள் உணவகங்கள் என ஆர்ப்பாட்டமில்லா அழகுடன் வானூர்தி நிலையம் இருக்கிறது.



எங்களுடன் பயணித்த பயணிகள் எனப் பார்த்தால் தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். தமிழர்கள் வேறு இடங்களிலிருந்து செல்கிறார்களா எனத் தெரியவில்லை. வானூர்தியில் எங்களுக்குச் சன்னலோர இடம் கிடைக்கவில்லை. அதில் இலங்கை நாட்டைச் சார்ந்தவர் ஒருவர் இருந்தார். சிறிது நேரத்தில் அவரே முன்வந்து பேசினார். தந்தை சிங்கள பௌத்தர். தாய் தமிழ் இந்து. மனைவி சிங்கள கிறிஸ்தவர். அதனால், இரு மொழிகள் மூன்று பண்பாடு என வாழ்வதாகத் தம்மை அறிமுகம் செய்தார். இயல்பான தமிழில் பேசினார். இலங்கைத் தமிழ் போன்று இல்லையே எனக் கேட்டதற்கு, “‘யாழ்ப்பாணம் தமிழ்’ தான் நீங்கள் சொல்லும் ‘இலங்கைத் தமிழ். மற்றபடி ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொருவித மொழிநடை உண்டு” என்றார். நாங்கள் அங்குப் பயணம் செய்த பன்னிரண்டு நாள்களில் இதை உணர முடிந்தது.
ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் அவர் வேலை செய்கிறார். அதன்பொருட்டு கொல்கொத்தா வந்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். கொல்கொத்தா தூய்மையில்லா நகரம் என்பது போன்று குறைபட்டுக் கொண்டார். “இலங்கை தூய்மையாக இருக்கும்” என்றார். எங்கள் அனுபவம் என்னவென்று பிறகு சொல்கிறேன்.
ஏதாவது தேவை என்றால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் என அவரது எண்ணைக் கொடுத்தார்.கொழும்பு சென்று இறங்கிய பின்னும், சில உதவிகள் செய்து விட்டுத்தான் சென்றார். ‘எல்லோரும் நல்லவரே!’
கொழும்பு நகரின் பழமையான ‘ரத்மலானை வானூர்தி நிலையம்; உள் நாட்டு வானூர்தி நிலையமாகச் செயல்படுகிறது. நவம்பர் 27, 1935 அன்று முதலாவது வானூர்தி சென்னையிலிருந்து தபால்களுடன் வந்த ‘டி ஹாவிலண்ட் புஸ் மோத்’ (De Havilland Puss Moth) என்ற வானூர்தி இங்கு வந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது இது ஜப்பானிற்கெதிரான தாக்குதல்களுக்குப் பயன்பட்டது. 1960-களில் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையம் உருவாவதற்கு முன்பு வரை, ரத்மலானையே இலங்கையின் முதன்மை சர்வதேச வானூர்தி நிலையமாக விளங்கியது. தற்போது இது பெரும்பாலும் உள்நாட்டுப் போக்குவரத்து, வணிக ரீதியான தனியார் வானூர்தி, மற்றும் இலங்கை வானூர்திப்படையின் பயிற்சித் தளமாகச் செயல்பட்டு வருகிறது.
நாங்கள் இறங்கிய பண்டாரநாயக்க நிலையம் (Bandaranaike International Airport) பன்னாட்டு வானூர்தி நிலையமாகச் செயல்படுகிறது. இது 1944: ‘ராயல் ஏர் ஃபோர்ஸ் நெகம்போ’ (RAF Negombo) என்று தொடங்கப்பட்டது. 1957: பிரிட்டிஷ் படைகளிடமிருந்து இலங்கை வசம் வந்தபோது ‘கட்டுநாயக்க’ என அழைக்கப்பட்டது. 1970 இல் பண்டாரநாயக்காவின் பெயரிடப்பட்டது. பண்டாரநாயக்கா, இலங்கையின் நான்காவது பிரதமர். இது 1977 இல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் (ஆட்சி மாறியதும்) என முதலில் இருந்த பெயரே மாற்றப் பட்டது. 1977 ஜே.ஆர்.
ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் மீண்டும் ‘கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்’ என மாற்றப்பட்டது. 1995 இல் பண்டாரநாயக்க வானூர்தி நிலையமாக (ஆட்சி மாறியதும்) மாற்றப்பட்டது. காட்டு நாயக்கர் என்பது தான் கட்டுநாயக்கே என மாறியதா என்று தெரியவில்லை. சிங்கள மொழியில் ‘கட்டு’ (Katu) என்பது முட்கள் அல்லது வேலிகளைக் குறிக்கும் ஒரு சொல்; அதிலிருந்து வந்திருக்கலாம் என்றும் கருதப் படுகிறது. வானூர்தி நிலையம் இருக்கும் சிறு பகுதிக்கே கட்டு நாயக்கே என்று தான் பெயர். மீனம்பாக்கம் வானூர்தி நிலையம் இப்போது காமராஜர், அண்ணா பெயர்களைத் தாங்கியிருப்பது போல என்று எடுத்துக் கொள்ளலாம்.

இப்படி ஆட்சிகள், காட்சிகள் பல கண்ட இந்த வானூர்தி நிலையத்தில் இறங்கியதும் ‘மலசலக் கூடம்’ ‘இடைத்தங்கல்- transfer’ போன்ற தனித்துவமான தமிழ்ப் பெயர்ப்பலகைகள் ஆங்காங்கே தென்பட்டன.
வானோடல் சேவைகள் Aviation Services
தவிசாளர் Chairman
தீர்வையற்ற- Duty Free
திகதி
கம்பனி
பிரகனப்படுத்தப் படவேண்டிய
வண்டித்தரிப்பிடம்- car park
கூலிவண்டி- Taxi
இப்படி நல்ல தமிழ் சொற்கள், வடமொழிச்சொற்கள் எல்லாம் விரவிக்கிடக்கின்றன. இப்போது வானூர்தி நிலையத்தை விட்டு வெளியில் வருவோம். வெளியில் வருமுன், ஒரு சிம் கார்ட் வாங்கிக் கொண்டோம். பணத்தை மாற்றிக் கொண்டோம்.
நாங்கள் கொஞ்சம் பணம் மட்டுமே இங்கு மாற்றினோம். ஒரே ஒரு சிம் கார்ட் மட்டும் வாங்கிக் கொண்டும். ஆனால் ஊருக்குள் பணம் மாற்றுவது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. இந்தியப் பணத்தை விட வளர்ந்த நாடுகளின் பணத்தை விரும்பிக் கேட்கிறார்கள். ஆங்காங்கே ஏமாற்ற நினைக்கிறார்களோ என்ற எண்ணம் ஏற்பட்டது. அது சரியான எண்ணம் தானா? இல்லை நாங்கள் தான் தவறாகப் புரிந்து கொண்டோமா? எனத் தெரியவில்லை. ஒரு இளநீர் கடையில் ஒருவர் உட்கார்ந்து கொண்டு, “இந்தியப் பணத்திற்கு இலங்கை ரூபாய் தருகிறேன்” என வற்புறுத்தினார். வேண்டாம் என மறுதலித்தபின், இளநீர் விற்ற பெண், இந்திய நூறு ரூபாயைக் கொண்டு வந்து தந்து இலங்கை ரூபாய் கொடுங்கள் என்றார். தேவை என்றால் அங்கு இருந்தவரிடம் கொடுத்து மாற்றியிருக்கலாமே! இப்படிப் பல கேள்விகள் உள்ளன. முடிந்தவரை வானூர்தி நிலையத்தில் மாற்றிக் கொள்வது சிறப்பு.
அது போலவே சிம் கார்ட் இலங்கை அடையாள அட்டையில்லாமல் வாங்குவதும் சிரமம்தான். அதனால், வானூர்தி நிலையத்தில் வாங்கிக் கொள்வது சிறப்பு.
கோட்டை நோக்கியப் பயணம்
நாங்கள் அறை எடுத்திருந்த கோட்டை பகுதிக்குச் செல்லவேண்டும். ஏறக்குறைவு 30 கிலோ மீட்டர். வெளியில் வந்தால் ஒரு வேன் நின்றது. கோட்டை என்றதும் ஏறச்சொன்னார்கள். ஏறி அமர்ந்தோம். இங்கு இந்த வேனைத்தான் தான் ‘ஏசி பஸ்’ என்கிறார்கள். நம் ஊர் போன்ற குளிரூட்டப்பட்ட பேருந்துகள் உள்ளனவா என்று தெரியவில்லை. கட்டணம் ரூபாய் 300. இனி ரூபாய் எனச் சொல்லுவதெல்லாம் இலங்கை ரூபாய். இன்று 300 இலங்கை ரூபாய் என்றால் 87.48. இந்திய ரூபாய். இப்படிக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். சராசரியாக நம் 30 ரூபாய் அவர்களின் 100 ரூபாய்.
இலங்கையில் மூன்றுவகையான பொதுப்போக்குவரத்துப் பேருந்துகளை நாங்கள் பயன்படுத்தினோம். ஒன்று இந்த ‘ஏசி பஸ்’. இதில் கட்டணம் கூடுதல். இரண்டாவது தனியார் பேருந்துகள். இவை பின்பக்கம் பெட்டி போன்றவை வைக்கக் கூடிய வசதியுடன் உள்ளன. இடமிருந்தால் ஓட்டுநர் அருகிலும் வைத்துக் கொள்ளலாம். உள்ளே பொருள் வைக்க என மேலே கம்பிகள் கொண்ட அமைப்பு உள்ளது. ஆனால் அதன் உயரம் ஒரு சாண்தான் இருக்கும். தண்ணீர் பாட்டல்கள் தான் பெரும்பாலும் கிடக்கின்றன. பேருந்து, நல்ல வண்ணங்கள் அடித்துப் பார்க்கக் கண்ணிற்குக் கவர்ச்சியாக இருக்கின்றன. பாடல்கள் ஒலிக்கப் பயணம் இருக்கிறது. இதன் கட்டணம் ‘ஏசி பஸ்’ஸை விடக் குறைவு. இலங்கை போக்குவரத்து சபையின் நிர்வாகத்திலும் பேருந்துகள் இயங்குகின்றன. இதன் கட்டணம் மிக மிகக் குறைவு. மூன்றிற்கும் ஒரு ஒற்றுமை. சொன்ன நேரத்தில் எடுக்கிறார்கள்; கேட்ட இடத்திலெல்லாம் நிறுத்துகிறார்கள்.
நாங்கள் ஏறிய வேன் புறப்பட்டு, கட்டு நாயக்கே பேருந்து நிலையத்தில் வந்து நின்றது. இங்கிருந்து மூன்று வகைப் பேருந்துகளும் இயங்குகின்றன. தூரமும் வானூர்தி நிலையத்திலிருந்து பெரிதாக இல்லை. ஆனால், கையில் பொருள்களை வைத்துக் கொண்டு இருந்தால், உள்ளே ஏறிக் கொள்வதே வசதி. உள்ளே, வாகனங்கள் வாடகைக்கும் கிடைக்கும். அதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
நாங்கள் இலங்கையில் ஆட்டோ மட்டுமே வாடகைக்கு எடுத்தோம். அதனால் கார் குறித்துத் தெரியாது. ஊபர் போன்றவையும் உண்டு. ஆட்டோக்களில் மீட்டர் உள்ள ஆட்டோக்கள் கொழும்புவில் மட்டும் ஓடுகின்றன. அவற்றில் ஏறினால் தப்பித்தோம். இல்லையா தாளித்து விடுகிறார்கள். மிக நல்ல, மகனைப் போன்று இன்றும் தொடர்பில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களும் உண்டு. மறுப்பதற்கில்லை. பொதுவாக ஒரு கிலோமீட்டருக்கு 100 ரூபாய் வாங்குகிறார்கள். இப்படி நாம் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
இங்கு, பேருந்துகள் பெரும்பாலும் லங்கா அசோக் லைலாண்ட் பேருந்துகள் தான். ஆட்டோக்கள் அனைத்தும் நமது சிறியவகை பஜாஜ் ஆட்டோக்கள். இப்படி வாகனங்கள் அனைத்தும் இந்தியாவிலிருந்து தான் இறக்குமதியாகின்றன. ஆனால் விலை இரண்டரை மூன்று மடங்கு என்கிறார்கள்.

கட்டு நாயக்கே பேருந்து நிலையம் 70-80 களில் பணகுடி பேருந்து நிலையம் எப்படி இருந்ததோ அதே போன்று உள்ளது. பேருந்துகள் உள்ளே சென்று வெளியில் வருகின்றன. தலைநகரின் பேருந்து நிலையம் என்று தோன்றவே இல்லை. ஒரு அரசமரம்; அதன் கீழ் ஒரு புத்தர்; ஆங்காங்கே சில கடைகள் என பேருந்து நிலையம் மிகவும் சிறியதாகவே உள்ளது.
மக்கள் ஏறுவதும் இறங்குவதும், சிறு சிறு பொருள்களை விற்பதுவும் என 70களின் பேருந்து நிலையத்தையே அது நினைவு படுத்தியது. நிலக்கடலை (கச்சான் என இங்குச் சொல்லுகிறார்கள்), பழங்கள், வடை… இப்படிப் பல பொருள்கள் வருகின்றன.

பேருந்தில் பயணம் செய்யும்போதும் தலைநகரில் பயணம் செய்யும் உணர்வே வரவில்லை. அப்படி ஒரு அமைதியான சாலை. ஒலி எழுப்பவே தேவையில்லாத அளவில் வாகனகள் செல்கின்றன. சாலையோரங்களில் ஆங்காங்கே புத்தர் அமைதியாக அமர்ந்திருக்கிறார். தாமரைக் கோபுரம் தெரியத் தொடங்கியபின் தான் உயரமான கட்டிடங்களைக் காண முடிகிறது.

பயணத்தின்போது அருகிலிருந்த ஒருவரின் ஆட்டோ கட்டணம் எவ்வளவு இருக்குமெனக் கேட்டோம். 300-400 இருக்கும் என்றார். கீழே இறங்கி ஒரு ஆட்டோகாரரிடம் அணுக, அவரும் 400 கேட்டார். சரி எனச் சென்று இடத்தையடைந்தோம். பெயர் Grand Oriental. ஒரு காலத்தில் எலிசபெத் அரசி தங்கிச் சென்ற இடம். வரவேற்பறை அரண்மனை போன்றே உள்ளது.
உள்ளே எப்படி? பிறகு பார்ப்போமா?
தொடரும்
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா ? – 1, 2 & 3’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கின்றன. இவை தவிர ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’, ‘நகர்தல் என்றும் நன்று’, ‘கேட்டல் என்றும் நன்று’, ‘ஒரு தாய் மக்கள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து இந்து தமிழ் திசை உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதிவருகிறார். இவரது நூல்கள் கவிதை உறவு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளன. ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.





